அனு அகா 
சிறப்புப்பக்கங்கள்

நாம் ஏன் கம் பேக் கதைகளை விரும்புகிறோம்?

அசோகன்

இந்திய அளவில் தொழில்துறையில் முன்னணியில் இருக்கும்போது சிரமங்களை எதிர்கொண்டு மீண்டுவந்தவர்கள் யார் என்று நண்பர்களுடன் ஒரு விவாதம் வந்தது. சட்டென்று நினைவுக்கு வந்த பெயர் அனு அகா.

1996-இல் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரோஹிங்டன், ஸ்ட்ரோக் காரணமாக மரணமடைந்தார். அவரது மனைவி அனு அகா தெர்மாக்ஸ் நிறுவனத்தில் கணவருக்கு உதவியாக மனித வளத்துறையில் பணிபுரிந்துவந்தார். அதுவரை குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டிவந்தவரான ரோஹிங்க்டனின் மனைவி அனு அகா, அடுத்த 48 மணி நேரத்தில் நிறுவனத்தின் தலைவராக்கப் படுகிறார். அச்சமயத்தில் இந்திய பொருளாதார நெருக்கடியால் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 400 ரூபாயில் இருந்து 36 ரூபாயாக வீழ்ச்சி அடைகிறது. தனிப்பட்ட துயரம், சரிவில் இருக்கும் நிறுவனம் இரண்டு பிரச்னைகள் அவருக்கு. துணிச்சலுடன் எதிர்கொண்டு நிறுவனத்தை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுவந்தார். இது இன்றும் இந்திய பெருநிறுவனங்களின் முக்கியமான கம் பேக் கதைகளில் ஒன்றாக இடம் பெற்று வருகிறது. 2004-இல் அவர் தலைமைப் பதவியில் இருந்து விலகியபோது நிறுவனத்தின் மொத்த வருமானம் 1281கோடிகள்.

28 வயதில் பெற்றோரை இழந்தாயிற்று. திருமணமும் முறிந்துவிட்டது. இரு குழந்தைகளை ஒற்றைப் பெற்றோராக வளர்க்கவேண்டிய நிலை. ஆண்டுகள் கழிந்தன. தன் 45 ஆம் வயதில் அப்பெண்மணி இயற்கையான முறையில் சோப்புகள் செய்யும் நிறுவனம் ஒன்றை இரண்டு லட்ச ரூபாய் முதலீட்டில் இரு ஊழியர்களுடன் ஆரம்பித்தார். சோப்பின் விலை மிக அதிகம். யார் வாங்குவார்கள் என்ற சந்தேகமும் இருந்தது. பாரஸ்ட் எசன்ஷியல்ஸ் என்ற அந்த நிறுவனத்தின் இன்றைய பிராண்ட் மதிப்பு 8000 கோடி. அப்பெண்மணியின் பெயர் மீரா குல்கர்னி.

தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் பின்னால் வலிமையுடன் எழுந்து வருகிறவர்களை வரலாறு அழுத்தமாக நினைவில் கொள்கிறது.

உலகின் மிகப்பெரிய காவியங்கள் எல்லாம் ‘கம் பேக்’ கதைகள் என்று சொல்லமுடியும் என்று நண்பர் ஒருவர் சொன்னபோது சற்று யோசிக்கத் தோன்றியது. ராமாயணத்தை எடுத்துக்கொண்டால் அயோத்தியின் இளவரசனான ராமன், சீதையை மணம் செய்து அயோத்திக்கு மன்னராகும் நிலையில் அனைத்தையும் இழந்து காட்டுக்குச் செல்கிறான். அங்கே மனைவியையும் இழக்கிறான். அனைத்தையும் இழந்து அவற்றை மீண்டும் பெறுவதே அக்கதை.

மகாபாரதத்தை எடுத்தாலும் அதே கதைதான். மண்ணை, மகுடத்தை இழந்து காட்டுக்குப் போய் திரும்பிவந்து சண்டையிட்டு இழந்ததைப் பெறுவதுதான் கதை.

தற்போது கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி கவனம் பெற்றிருக்கும் ஒடிசி படத்தின் மூல காவியத்தின் கதையும் இதுதான். டிராய் போருக்குப் பின்னர் ஊர் திரும்புகையில் அனைத்தையும் இழந்து பத்தாண்டுகள் கழித்து ஊர்வந்து ராஜ்யத்தைத் திரும்பப் பெறுகிறான்.

இந்த மாபெரும் காவியங்கள் ஏன் வெற்றிகரமான மறுவருகையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளன?

பொதுவாக உயிர்களின் வாழ்க்கை அச்சத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அச்சமே அவற்றின் செயல்களை, வாழ்க்கை முறைகளைத் தீர்மானிக்கிறது. கிடைக்கும்போது புல்லை மேயும் பசு, தன் முன் இரைப்பையில் சேமித்து வைத்து பின் அசைபோட்டுக்கொள்கிறது. எதிர்காலத்தில் எதுவும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமே மனிதன் செல்வ சேகரிப்புக்காக உழைப்பதற்கான காரணம். இருப்பதை இழந்துவிடுவோமோ என்பது ஆதிகாலத்து அச்சம்; அடிமனதில் உறங்கிக் கொண்டிருக்கிறது. எனவே எல்லாவற்றையும் இழந்து ஒருவன் மீள்வதைப் பார்ப்பதும் கேட்பதும் நம்பிக்கையைத் தந்துகொண்டே இருக்கிறது. தனக்கான அன்றாட நம்பிக்கையை அந்த காவியங்களில் இருந்து பெறுவதை மானுடம் விரும்புவதால் அதையே தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விளங்கிக்கொள்ளலாம்.

நம் திரை நாயகர்களும் அப்படித்தான் கட்டமைக்கப்படுகிறார்கள். வில்லனிடம் நன்கு அடிவாங்கி விழுந்தபின் திருப்பி அடிப்பதையே ரசிக்கிறோம்.

மீரா குல்கர்னி

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஹீரோயிசக் கதைகள் அனைத்தும் மீள்வருகையின் மீது கட்டப்பட்டப்பட்டவையே என்று சொல்லிவிடலாம்.

பழைய படம் ஒன்றிலிருந்து உதாரணம் காட்டினால் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவனில் அடிமையாக கப்பலில் ஏற்றி அனுப்பப்படுகிறார் அவர். அதிலிருந்து மீள்வதுதான் கதை.

தற்காலப் படங்களில் உதாரணம் காட்டவேண்டுமெனில் விஜய் படமான மாஸ்டரில் குடிக்கும் அடிமையாகக் காட்டப்படும் மாஸ்டர் விஜயின் மறுவருகை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அவர் எதிர்கொள்ளும் வில்லன் விஜய்சேதுபதியை எதிர்கொள்ளும்போது நிகழ்கிறது.

பா. ரஞ்சித்தின் கபாலியும் சார்பட்டா பரம்பரையும் அழகிய மீள்வருகைப் படங்கள். கபாலி படத்தில் வரும் கபாலி, எதிரிகளால் 25 ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்படுகிறான். மீண்டு வந்து துவம்சம் செய்கிறான். சார்பட்டா பரம்பரையில் சாதாரண மூட்டை தூக்குபவனாக வரும் கபிலன், மிகப்பெரிய குத்துச்சண்டை வீரனான வேம்புலியை வெற்றி கொள்கிறான். ஆனால் சந்தர்ப்ப சூழலில் குடிக்கு அடிமையாகிப் பாதை மாறிச் செல்கிறான். அவனது மீள் வருகையின் ஆரம்பத்தில் ஏற்கெனவே தன்னால் தோற்கடிக்கப்பட்ட ராமனிடம் பலத்த அடிவாங்கித் தோற்றபின் தன்னைச் சீரமைத்து மீண்டும் வேம்புலியை வெல்கிறான். அச்சுஅசலான மீள்வருகைக் கதை. இதுபோல் ஏராளமான உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்!

இந்த இதழ் சிறப்புப் பக்கங்களில் சில மீள் வருகைகளை அலசி இருக்கிறோம். வாசகர்களும் தாங்கள் கண்ட சில மீள்வருகை நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். தகுதியானவற்றைப் பிரசுரிக்கக் காத்திருக்கிறோம்!.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram