சங்கரி சுதர் 
சிறப்புப்பக்கங்கள்

'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' - சங்கரி சுதர்

ம.தினோவிகா

பொதுவாக ஒருநாள் தொடங்கும் முன்பே தன் பணிகளை தொடங்கி, காலை முதல் மாலை வரை சோர்வின்றி செயல்படுபவர்கள் பெண்கள்.

குடும்பச் சூழலையும் அனுசரித்து, தன் கனவுகளையும் தேடி தொய்வின்றி பயணிக்கும் பெண்கள் ஓரிடத்தில் கனவுகளை பூட்டிவைத்து விட்டு குடும்பத்தை கவனிக்க வேண்டிய சூழல் உருவாகிறது.

இவ்வாறு திருமணம் அல்லது குழந்தைப்பேறுக்கு பிறகு இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள், ஒரு கட்டத்திற்கு பின்னர் தன் அடையாளத்தை நிறுத்த வேண்டும், தனக்கென ஒரு தனிப்பாதையை உருவாக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

ஆனால், ஒரு இடைவேளிக்குப் பிறகு கனவுகளை சரியான முறையில் தொடங்கமுடியாமல், முனைப்புடன் இருக்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு, வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்கிறார் சங்கரி சுதர்.

இவர் திருமணத்திற்குப் பிறகு இல்லதரசியாக இருக்கும் பல பெண்களுக்கு 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' என்ற இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பை பெற்று தருகிறார்.

வாழ்வில் விளிம்பில் இருந்து வெளியேற வாய்ப்புகளை உருவாக்கி ஏராளமான பெண்களின் வாழ்வில், தன்னம்பிக்கையை விதைத்து வரும் சங்கரி சுதர் உடனான நேர்காணல்.

'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானது எப்படி ?

என்னுடைய வாழ்வில் நடந்தவற்றை வைத்துதான் இந்த 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்'ஐ தொடங்கினேன். நான் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் என்னுடைய பட்டப்படிப்பை முடித்தேன். பின்னர் 8 வருடம் ஐ.டி. துறையில் வேலை பார்த்து வந்தேன்.

அப்போது எனக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் வீடு, வேலை இரண்டையும் சமாளிக்க எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால், வேலையை விட முடிவெடுத்தேன். ஒன்றை வருடம் நான் ஹோம்மேக்கராக இருந்தேன்.

அந்த நாள்களில் என்னுடைய தன்னம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. சில காலங்களுக்குப் பிறகு என் வேலையை தொடரலாம் என்று தேடும்போது, வீட்டையும் பார்த்துக்கொண்டு வேலை செய்யும் வகையிலான வேலைகள் குறைவாகவே இருந்தன.

குறைந்தது 10 முதல் 12 மணிநேரம் வரை கட்டாயம் பணிபுரிய வேண்டிய சூழல்களில் தான் நிறைய வாய்ப்புகள் அமைந்தன.

நமக்கேற்ற வகையில், சில வேலைவாய்ப்புகள் இருந்தாலும், அவை நம்பகத்தன்மையுடன் இல்லை.

அந்த நேரத்தில் தான் என்னைப் போலவே ஏராளமான நன்கு படித்தப் பெண்கள், திருமணம், குழந்தைப்பேறு போன்ற இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வேலைக்குத் திரும்புவது எப்படி என்று தெரியாமல் இருக்கும் பெண்களை கண்டேன்.

அதேப்போல, நிறைய ஸ்டார்ட் அப், சிறிய தொழில் நிறுவனங்களுக்கு நன்கு படித்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களின் தேவை இருந்தது.

இதை கவனித்தப் பிறகு தான், ஏன் இவர்களை இணைத்து நமக்கு ஏற்ற வகையில் பணிபுரியும் பெண்களுக்கான ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க நினைத்தேன்.

அப்போது உருவானதுதான் இந்த 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்'. ஆகஸ்ட் 15, 2022ஆம் ஆண்டு இந்த தளத்தை உருவாக்கினோம்.

'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்'ஐ வரவேற்கும் செக்டராக எது உள்ளது ?

கார்பரேட் நிறுவனங்கள் ஓரளவிற்கு வரவேற்கின்றன. கார்பரேட் நிறுவனங்களை விட நிறைய ஸ்டார்ட் அப், சிறிய-நடுத்தர நிறுவனங்கள் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கார்பரேட் நிறுவனங்களுக்குள் செல்லும்போது அந்த சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இடைவேளைக்குப் பிறகு திரும்பும் பெண்களை பணியமர்த்த முயலும்போது எது மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்?

நல்ல பட்டப்படிப்புகளுடன் இருக்கும் பெண்கள், தன்னுடைய திறன்களை மேம்படுத்தாமலும், கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளாமலும் இருப்பது தான் மிகப்பெரிய சவாலாக தற்போது இருக்கிறது.

அதேபோல அனுபவமே இல்லாதவர்களுக்கு வேலை தேடும்போது சிரமம் ஏற்படுகிறது. குறைந்தபட்ச அனுபவத்தையாவது பல்வேறு நிறுவனங்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதேபோல இடைவேளியில் இருந்து வரும் பெண்கள், கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளாமல், தனக்கென ஒரு வரையறையை வகுத்துக்கொள்கிறா்கள். அதிலிருந்து பெண்கள் முதலில் வெளிவர வேண்டும்.

அதுமட்டுமின்றி, மீண்டும் வேலையில் சேரும் பெண்கள் சில காரணங்களால் இடையில் நின்றுவிடுகிறார்கள்; வேலையை தொடரும் பெண்களும் அடுத்த நிலைக்குச் செல்ல தயங்குகிறார்கள். அவ்வாறு அடுத்த நிலைக்கு கொண்டுச் சென்றால் குடும்ப பொறுப்புகளை கவனிக்க முடியாதோ என்று அச்சப்படுகிறார்கள்.

அதனால்தான், தற்போது நாங்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகிறோம். முதலில் வேலைவாய்ப்பை பெற்று தருகிறோம், பின்னர் அவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேவையான திறன்களை வளர்த்து வருகிறோம்.

தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள், மேலும் பலப் பெண்களுக்கு உதவுவார்கள். அதனால் பணிபுரியும் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு முன்னேறத் தேவையான திறன்களை வளர்க்க உதவி வருகிறோம்.

'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' எவ்வாறு செயல்படுகிறது?

இது ஒரு பிளாட்ஃபாம். இதில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவோ, அவர்களின் திறன்களை வளர்ப்பதற்காகவோ எந்த கட்டணமும் நாங்கள் பெண்களிடம் வசூலிப்பதில்லை. நிறுவனங்களிடம் மட்டுமே கட்டணங்களை வசூலிக்கிறோம்.

இந்த தளத்தில் பதவிடுபவர்களின் தகவல்களை எங்கள் குழு சரிபார்க்கும். பின்னர் உண்மையிலேயே மீண்டும் பணிபுரிய வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் பெண்களை தேர்ந்தெடுத்து, நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்போம்.

நிறுவனங்களை பொறுத்தவரை ரூ. 7,000 முதல் சப்ஸ்கிரைப் செய்யத் தொடங்கலாம். இதன் மூலம் வேலைக்கு விண்ணப்பித்தவர்களில், 150 பேரின் விவரங்களை பார்க்க முடியும். அதிலிருந்து அவர்களுக்கு தேவையான எத்தனை பேரை வேண்டுமானாலும், வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

அதே நேரத்தில் மறுபக்கம், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் நடந்துக்கொண்டே இருக்கும். தேவைபடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' பயணத்தில் கண்ட வெற்றிக் கதைகளைப் பற்றி கூறுங்கள்.

முதலில் என் மனதிற்கு மிகவும் உருக்கமான கதையைச் சொல்கிறேன். தன்னுைடைய 30ஆவது வயது வரை வேலை செய்த பிறகு, தனது இரண்டு பெண்குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், வேலையிலிருந்து அந்தப் பெண் நின்றுவிட்டார்.

எதிர்பாராதவிதமாக, கொரோனா காலத்தில் அவரின் கணவர் தவறிவிட்டார்.இதனால் தன் குடும்பச் செலவுகளை சமாளிக்க 20 வருட இடைவேளைக்குப் பின்னர், தனது 50ஆவது வயதில் வேலையில் சேர விரும்பினார்.

அவருக்கு இந்த 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' தளம் வேலைவாய்ப்பை பெற்று தந்திருக்கிறது.

இன்னொரு கதையில், கல்லூரி படிக்கும்போதே தனது 19 வயதில் திருமணம் நடந்துவிட்டது. கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே தாய்மை அடைந்துவிட்டார். இடைவேளியுடன் தான் கல்லூரிப் படிப்பையே முடித்தார். ஒரு வருடம் வேலை செய்த அனுபவம் அவருக்கு இருந்தது. பின்னர் 5 வருட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் தற்போது வேலையில் சேர்ந்துள்ளனர்.

மற்றொரு கதையில், சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற பிறகு, கிராமத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அது 15 பேர் கொண்ட கூட்டுக்குடும்பம். ஆனால், அவருக்கு எப்படியாவது வேலை செய்ய வேண்டும் என்ற முனைப்பு இருந்தது.

இப்போது, எங்கள் தளத்தின் உதவியுடன் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார். சென்னையில் பண்புரிந்தபோது சம்பாரித்ததை விட 3 முதல் 4 மடங்கு சம்பளம் அதிகமாக பெறுகிறார்.

சில கதைகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா - மகள், அக்கா - தங்கை இருவரும் வேலைப் பெற்றிருக்கிறார்கள்.

நாங்கள் அதிகமாக வீட்டில் இருந்து வேலைசெய்யும் வாய்ப்பைதான் வாங்கித் தருகிறோம். சில நேரங்களில் தான் ஹைபிரிட் வேலைவாய்ப்பை பெற்றுத் தருகிறோம்.

'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' தளத்தை முன்னெடுக்கும் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்?

என்னுடைய குடும்பத்தில் தொழில்முனைவோராக அடியெடுத்து வைக்கும் முதல் பெண் நான். ஒரு நல்ல வேலையில் இருந்துவிட்டு, தற்போது நானே ஒரு தொழிலை தொடங்குகி, அதை முழுமையாக சமாளித்து லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்கு என் மனநிலையை தயார்படுத்துவதே என்னுடைய முதல் சவாலாக இருந்தது.

என் குழந்தைக்கு இப்போது தான் ஐந்து வயதாகிறது. இதைத் தொடங்கும்போது ஒன்றரை வயதுதான் ஆனது. அவருடன் பயணிப்பது சில நேரங்களில் சவாலாக இருக்கும். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில்முனைவோருக்கு வழகாட்டும் நிகழ்வுகளை ஐ.ஐ.எம் பெங்களூரு, ஐ.ஐ.எம் விசாகப்பட்டினத்தில் கலந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற நேரங்களில் 3 நாள் வீட்டிலிருந்து தொலைவில் இருக்க வேண்டும். அப்போது சற்று சிரமமாக இருக்கும்.

'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' முக்கிய நோக்கத்தை குறிப்பிடுகிறீர்களா?

ஒரு எக்ஸ்ட்ரா மைல் எடுத்துவைத்தால், நமக்கான விசன் நம்மிடம் வந்து சேரும். தனிஒருவரால், கோடிக்கணக்கான பேருக்கு உதவ முடியாது. அதனால் தான் எங்கள் குழுவில், பணியில் இருக்கும் பெண்களையும் சேர்த்துக்கொள்கிறோம். அவர்களின் திறன்களை ஊக்குவித்து, அதிகாரத்திற்கு கொண்டு வருகிறோம்.

இதனால்,ஒரு பெண் பலருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு வளரத் தேவையான திறன்களை வளர்க்கவும், பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம்.

இப்போதைய சூழலுக்கு தேவையான திறன்களை வளர்ப்பதற்கான வழிகளை தேடுவதுதான் சவாலாக உள்ளது.

'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' மூலம் வேலைப்பெற்றவர்களிடம் இருந்து வந்த கருத்துகளை பகிர்ந்துக்கொள்கிறீர்களா...

எங்கள் தளத்தின் உதவியுடன் வேலைப்பெற்றவர்கள் கூறுவது, எங்கள் வாழ்வில் மூடிய கதவுகளை திறந்துவிட்டீர்கள். எங்களிடம் ஆனந்தம் மிகுந்த நன்றியை தெரிவிக்கிறார்கள். அவர்களின் உண்மை கதைகளை நாங்கள் பலருக்கு எடுத்துச் சொல்கிறோம். இதனால், மேலும் பலர் முனைப்புடன் வேலையில் சேர முன்வருவார்கள்.

நீங்கள் 'ஓவர் குவாலிஃபைட் ஹவுஸ்வைவ்ஸ்' தளத்தை தொடங்கியபோதும், தற்போதும் வேலைக்கு பெண்களை எடுத்துக்கொள்ளும் நிறுவனங்களிடம் ஏதேனும் மாற்றங்களைப் பார்க்கிறீர்களா?

கண்டிப்பாக. ஏஐ வந்தப் பிறகு ஏராளமான மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. தற்போதைய சூழலில், பெண்கள் செய்யும் 23% வேலைகளை ஏஐ செய்து முடிப்பதாக பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஏனெனில், ரீப்பிடெட் செயல்களை ஏஐ சுலபமாக முடித்துவிடுகிறது.

இதனால் வெறும் படிப்பறிவு மட்டுமல்லாமல், தொழில்நுட்ப பயன்பாடு, வாழ்க்கை அறிவு, சூழலுக்கு ஏற்ப நம்மை பொருத்திக்கொள்ளும் திறன் ஆகியவற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வேலையில் ஏற்பட்ட இடைவேளையினால், தன்னம்பிக்கையை இழந்தவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கேரியர் பிரேக் என்பது பலவீனம் இல்லை. அந்த இடைவேளி எடுத்ததற்கான முக்கிய காரணம் நம் குடும்பத்தை மேம்படுத்த, குழந்தைகளை பார்த்துக்கொள்வது. அதைவிட முக்கியமான வேலை எதுவும் இல்லை.

அதனால், இடைவேளியில் இதை தான் கற்றுக்கொண்டேன், அடுத்து இதை செய்யப்போகிறேன் என்ற இலக்குடன் தைரியமாக பயணிக்க தொடங்க வேண்டும்.

உலகில் கடினமான வேலை தாயாக இருப்பது. அதையே நாம் செய்து விட்டோம். அதனால் நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.