இயக்குநரே நடிகராய், நடிகரே இயக்குநராய் என்கிற இரட்டைக் குதிரை சவாரி சினிமா தொடங்கிய காலத்திலிருந்து தொன்றுதொட்டு தொடர்கிற கதைதான்.
இது 2000ஆம் தொடங்கி இன்று ஜென் ஸி காலத்தில் வெற்றிக்கொடி கட்டி நிற்கும் பிரதீப் ரங்கநாதன், கென் கருணாஸ் வகையறா வரையிலான பார்வை.
இக்கால கட்டத்தை நிச்சயம் சேரனிலிருந்துதான் தொடங்கவேண்டும். 2001இல் ‘பாண்டவர் பூமி’ என்கிற சுமாரான வெற்றிப்படத்தைக் கொடுக்கும் சேரன் அடுத்து ‘ஆட்டோகிராஃப்’ என்கிற திரைக்கதையை எழுதி முடித்து சில நடிகர்களை நோக்கி, இரண்டு ஆண்டுகள் வரை, நடையாய் நடக்கிறார். அலைகள் ஓய்ந்த கார்த்திக் தொடங்கி நடனப்புயல் பிரபுதேவா வரை ஒருவரும் அக்கதைக்கு ஓ.கே. சொல்லவில்லை.
அப்பயணத்தின் இறுதியாய் அவர் வந்து சேர்ந்த இடம் நடிகர் ’ரோஜாக்கூட்டம்’ காந்தின் இல்லம். யின் குடும்பமே உட்கார்ந்து கதை கேட்கிறது.
கதையில் ஹீரோயிஸமே இல்லை என்று ஒட்டுமொத்த குடும்பமும் நிராகரித்ததோடு நடிகரின் அம்மா கொஞ்சம் நக்கலாக ‘தம்பி அந்த கேரக்டர்ல பேசாம நீங்களே நடிச்சிர வேண்டியதுதானே?’ என்றார்.
அதன் பின்னர் சேரன் ஒரு நடிகரையும் தேடிப்போகவில்லை. 2004 பிப்ரவரி 19 அன்று ரிலீசான முதல் காட்சியிலேயே சேரன் இயக்குநராக வென்றது மட்டுமன்றி முதன்மை நடிகர்களில் ஒருவராகவும் மாறிவிட்டார். இக்கதைக்கு சேரனை விட பொருத்தமான நடிகர் வேறு யாருமே இல்லை என்று விமர்சகர்கள் தீர்ப்பு எழுதி தங்கள் பேனாவை முறித்துக்கொண்டார்கள்.
இதே வெற்றி மிதப்போடு சேரன் தானே நாயகனாக நடித்த ‘மாயக்கண்ணாடி, ‘பொக்கிஷம்’, ’திருமணம்’ ஆகிய படங்கள் படுதோல்வியைத் தழுவின. ராஜ்கிரண் முக்கிய பாத்திரத்தில் நடித்து சேரன் அவரது மகனாக நடித்த ‘தவமாய் தவமிருந்து’ மட்டுமே அடுத்து அவர் நடித்து இயக்கியதில் தப்பிப் பிழைத்த படம்.
சேரனுக்குப்பின்னர் அடுத்த முக்கிய வரவு சசிக்குமார். இவரே இயக்கி நடித்து, 2006இல் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய படம் என்றுதான் சொல்லவேண்டும். இப்படத்துக்குப் பின்னர், தான் நடிக்காமல் ‘ஈசன்’ என்றொரு படத்தை மட்டும் இயக்கிய சசி, பின்னர் தன் பொருளாதாரப் பள்ளத்தை மேடாக்குவதற்காக மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிகராக மட்டும் தொடர்ந்து பாலாவின் ‘தாரை தப்பட்டை’, அதன்பின்னும் பல படங்கள், சமீபத்தில் அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் ஃபேமலிவரை நடித்து இன்றும் தேடப்படுகிற கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். மதுரைக்கார பயலுகளை மையமாக வைத்து, நட்பு எனப்படுவது யாதெனில் என்று கதை எழுதுகிற அத்தனை இயக்குநர்களின் முதல் சாய்ஸ் சசிதான்.
இயக்குநர்களே நடிகர்களான ஹிஸ்டரியில்… ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்காமல் வெறுப்பாகி தானே அந்த கேரக்டரில் நடிக்கத் தொடங்கிய கதைகள் தான் அதிகம் இருக்கும். அப்படி நடிகரானவர்களில் ஒருவர் ராம்.
ஜீவாவை நாயகனாக வைத்து ‘கற்றது தமிழ்’ படத்துக்குப் பின்னர் ’தங்க மீன்கள்’ படம் மூலம் ராம் தானே ஹீரோவாக ஆனதும் அப்படித்தான்.
அவரது கற்றது தமிழ் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட அளவுக்கு வசூலில் வெற்றிபெறவில்லை. எனவே அடுத்த கதைக்கு ஹீரோவைத் தேடி மிகவும் அலையவேண்டி வந்தது. படத்தின் தயாரிப்பாளர் கவுதம் வாசுதேவ மேனன். ‘கதையையும் உங்களையும் நம்பித்தான் படம் தயாரிக்கிறேன்’ என கவுதம் உற்சாகம் கொடுக்க ராமே தங்கமீன்களின் நாயகனானார்.
அப்படமும் ‘ஆபரேசன் சக்சஸ்… நோயாளி காலி’ ஸ்டைலில் வசூலில் தோற்கவே ’தரமணி’, ’பேரன்பு’, ’பறந்துபோ’ தற்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் ‘ஏழு கடல் ஏழு மழை’ போன்ற படங்களுக்கு நடிகர்களை நோக்கி நகர்ந்தார் ராம்.
அடுத்த ஆக்சிடென்டல் ஹீரோ மிஸ்டர் மிஸ்கின். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ ஆகிய அஞ்சாத படங்களுக்குப் பிறகு ‘நந்தலாலா’வில் தானே ஹீரோவானார். அடுத்து ‘யுத்தம் செய்’, ‘முகமூடி’ படங்களுக்கு சேரனிடமும், ஜீவாவிடமும் போய் மறுபடியும் ‘ஓநாய் ஆட்டுக்குட்டிகளுடன் மீண்டும் ஹீரோவாக நடித்து தற்போது முன்னணி குணச்சித்திர நடிகர்களுல் ஒருவர்.
இக்கால கட்டங்களின் இன்னொரு முக்கியமான இயக்குநர் கமல். முன்னரே அவ்வை சண்முகியின் இந்திப்பதிப்பான ‘சாச்சி420’ யை இயக்கியிருந்தாலும் தமிழில் இயக்குநராக அவர் முத்திரை பதித்த படம் ‘ஹே ராம்’. வியாபாரரீதியாக இப்படம் வெற்றிபெறவில்லையென்றாலும் தமிழின் முக்கியமான படம். இதே சூட்டோடு அடுத்து கமல் இயக்கிய விருமாண்டி ஹே ராம் தந்த தோல்வியிலிருந்து கமலை மீட்டு, அவரை வெற்றிகரமான இயக்குநராகவும் மாற்றியது.
நடுவே இயக்குநர் அவதாரம் எடுத்த இன்னொரு முக்கிய நடிகர் தனுஷ். நடிகராக படுபிசியாக இருந்தபோதிலும் 2017ல் ராஜ்கிரணை முதன்மை பாத்திரத்தில் நடிக்க வைத்து ‘பவர் பாண்டி’ என்றொரு வெற்றிப்படத்தை இயக்கினார். அடுத்து 2024ல் தானே ஹீரோவாக நடித்த ‘ராயன்’ படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் தனது மருமகன் பவிஷை நாயகனாக அறிமுகம் செய்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்றொரு படத்தை இயக்கி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார்.
மாநகரம் படத்தை இயக்கி அறிமுகமான லொகேஷ் கனகராஜ் எட்டிய உயரம் மிகப் பெரியது. கைதி, மாஸ்டர், விக்ரம், லியோம் கூலி என பிரமாண்டமான படங்கள். அவருக்கும் நாயகனாக நடிக்க ஆசை வந்ததில் பிறந்ததுதான் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த டீசி. லோகேஷ் இன்னும் பல படங்களில் நடிக்கக்கூடும்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி, இசை ஆர்வத்தை மட்டும் விதையாகக் கொண்டு வளர்ந்துவந்தவர். முதல் படமே நடித்து இயக்கிய மீசைய முறுக்கு. படம் ஹிட் ஆனதில் சிவகுமாரின் சபதம், கடைசி உலகப்போர் என மேலும் இரு படங்கள் இயக்கிவிட்டார். இப்போது மீசைய முறுக்கு-2- ம் வெளியாகி இருக்கிறது. நட்பே துணை, அன்பறிவு, வீரன் என சில படங்களின் ஹீரோ மெட்டீரியலாகவும் தோன்றியிருக்கிறார்.
பாரி இளவழகன் இந்த வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர். ஜமா என்றதொரு நல்ல படத்தில் இயக்கி நடித்திருந்தவர், அடுத்துக் கொடுத்த படம் அன்பே டயனா.
அடுத்தவர் அபிஷன் ஜிவிந்த், தான் இயக்கி ஹிட்டித்த டூரிஸ்ட் ஃபேமலியின் ஒரு குடிகாரக் கதாபாத்திரத்தில் வந்து, "ஓ இவர்தான் இந்தப் பட டைரக்டா?" என்று கேட்க வைத்தவர், அடுத்து தன் உதவி இயக்குநர் இயக்கிய வித் லவ் படத்தின் நாயகனாகப் பரிமளித்தார்.
இந்தப் பட்டியலில் மூத்தவர்களான சுந்தர்.சி, எஸ்.ஜே.சூர்யா, ரா.பார்த்திபன், செல்வராகவன், சிம்பு, சமுத்திரக்கனி, ராகவா லாரன்ஸ் என்று இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்றாலும் இறுதி சில வருடங்களில் கவனம் ஈர்த்தவர்களாக மூன்று பேரைச் சொல்லி இக்கட்டுரைக்கு எண்ட் கார்டு போடலாம்.
அவர்களில் முதல் நபர் பிரதீப் ரங்கநாதன். முதல் படமான ‘கோமாளி’யை ஜெயம்ம் ரவியை வைத்து இயக்கியவர். அடுத்த படமான ‘லவ் டுடே’வின் தானே ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.
ஒல்லிப்பிச்சான் உருவம், வழக்கமான நாயக முகத்தோற்றம் இல்லாத இவரது வெற்றி கோடம்பாக்கத்தை வியப்பிலாழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக அவரது உதவியாளர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்த ‘டூட்’ படமும் 100 கோடி வசூலைத்தாண்டி ரெகுலர் ஹீரோக்களை நெர்வஸ் ஆக்கியது.
இதையும் தாண்டிய ஆச்சரிய வரவு கென் கருணாஸ். ஜஸ்ட் 25 வயதே ஆன இளைஞர். உதவி இயக்குநராக முன் அனுபவம் இல்லாதவர். திடீரென ‘யூத்’ படத்தை இயக்கி நடித்து ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இவரது தந்தை கருணாஸ் 25 ஆண்டுகாலமாக நடித்து சம்பாதித்த மொத்தப் பணத்தையும் விட அதிகமாக கென்னுக்கு ஒரே படத்துக்குக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
மூன்றாவது முக்கியஸ்தர் ராஜா கருப்பசாமி. கடந்த மாதம் ரிலீஸான ‘மொத ராத்திரி’ பட இயக்குநர் மற்றும் நடிகர். படம் அப்படியே பாக்கியராஜின் சாயலில் இருந்தது என்று சொல்லப்பட்டாலும் ராஜா கருப்பசாமி நடிகராக சம்பவம் செய்திருந்தார்.
கடைசிகளில் கவனம் ஈர்த்திருக்கும் மூவருமே ரெகுலர் நடிகர்களின் லட்சணங்கள் இல்லாத கருப்புசாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
“வெற்றிமாறன் போட்டுக்கொடுத்த வெற்றிப்பாதை”
- கென் கருணாஸ்
யூத்’ படம் மூலம் எனக்குக் கிடைத்த வெற்றி என்பது நிச்சயம் இயக்குநர் வெற்றிமாறனால் அடைந்ததுதான் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
அப்பாவின் நெருங்கிய நண்பராக எனக்கு சிறு வயதிலிருந்தே நெருங்கிய பழக்கம். முன்பே குழந்தை நட்சத்திரமாக ‘ரகளைபுரம்’,’நெடுஞ்சாலை’ , ‘அழகு குட்டி செல்லம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் எனக்கு அழுத்தமான அடையாளம் தந்த படம்’அசுரன்’தான்.
அப்படத்தில் வெற்றிமாறன் சார் என்னை நடிக்கவைக்க முடிவெடுத்தபோது பலரும் அவரை டிஸ்கரேஜ் செய்தார்கள். ஆனால் அவர் தன்மேலும் என்மேலும் நம்பிக்கை வைத்து அப்பாத்திரத்தில் நடிக்க வைத்து என்னை ஒரு ஒளிரும் நட்சத்திரமாக்கினார்.
நடிகனாக மட்டுமின்றி, இன்று ஒரு இயக்குநராகவும் ‘யூத்’ படத்தில் வென்றிருக்கிறேனென்றால் அதுவும் போட்டுக்கொடுத்த பாதையால்தான். படம் இயக்கும் எண்ணம் எனக்கு இருப்பதைத் தெரிந்துகொண்ட அவர் தன் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்ற அனுமதித்ததோடு, வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஒரு வாத்தியாராக எனக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டேயிருந்தார்.
என்னை இப்படி உற்சாகப்படுத்திய இன்னொரு முக்கியமான நபர் நடிகர் தனுஷ். படம் இயக்கப்போகிறேன் என்று சொன்னதும் ‘தைரியமா வா கென். நான் இருக்கேன்’ என்று முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்.
இப்போது மறுபடியும் வெற்றிமாறன் சார் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறேன். இன்னொரு பக்கம் நான் இயக்கி நடிகவிருக்கும் அடுத்த படத்தின் கதை, விவாதமும் நடந்து வருகிறது.
அப்பாவுக்கும் என் குருநாதர் வெற்றிமாறனுக்கும் பெருமை சேர்க்கும்படி நடிகனாகவும் இயக்குநராகவும் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே என் ஆசை.
“நடிகனாய் தொடர்வேனா?”
-ராஜா கருப்பசாமி
மொதராத்திரி படத்தை திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் ஓ.டி.டி தளத்தில் பார்த்து கொண்டாடித் தீர்ப்பதில் மகிழ்ச்சிதான். முன்னரே சில படங்களில் நடித்திருந்தாலும் என் கதாநாயகன் ரிஷிகாந்தும் என்னைப்போலவே ஒரு புதுமுகம்தான். இன்று என்னையும் ரிஷியையும் மக்கள் நடிகர்களாக ஏற்றுக்கொண்டதை நன்றி உணர்வோடு பார்க்கிறேன்.
படம் துவங்கும் சமயம் அந்த காதலன் கேரக்டரில் நடிக்கும் துணிச்சல் நிச்சயமாக எனக்கு இருக்கவில்லை. அந்த கேரக்டருக்காக சிலரை அப்ரோச் செய்தபோது, கொஞ்சம் கிறுக்குத்தனமான கேரக்டர் என்பதால் நடிக்க தயக்கம் காட்டினார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு, படப்பிடிப்பு தேதிகள் நெருங்கியதால் ‘நாமே நடித்தால் என்ன?’ என்று யோசிக்கத் தொடங்கியபோது ரிஷியும் தயாரிப்பாளரும் எனது உதவி இயக்குநர்களும் மிகவும் உற்சாகப்படுத்தியதால் நடித்தேன்.
ரிலீஸ் தேதி நெருங்கியபோது படுநெர்வஸாக இருந்தது. வேறு யாரையாவது நடிக்கவைத்திருக்கலாம். தப்புப் பண்ணிவிட்டோம்’ என்று உள்மனது சொல்லிக்கொண்டே இருந்தது. பத்திரிகையாளர்களுக்கான பிரிவியூ காட்சி முடிந்தபிறகுதான் என் பயம் போனது. பட இடைவேளையிலேயே தேடி வந்த பத்திரிகையாளர்களில் பலரும் படத்தை பாராட்டிய அளவுக்கு என் நடிப்பையும் பாராட்டினார்கள்.
ஆனால் அதற்காக தொடர்ந்து நடிகனாக என்னை முன் நிறுத்துவேன் என்று சொல்ல முடியாது. கேரக்டர் பொருந்தி வந்தால் மட்டுமே நடிப்பேன். இப்படம் நம் பெருமைக்குரிய இயக்குநர், திரைக்கதை மன்னர் பாக்கியராஜை நினைவூட்டுவதாக பெரும்பாலானோர் சொல்கிறார்கள். அதில் எனக்கு பெருமையும் சந்தோஷமும் உண்டு. ஓர் இயக்குநராக இன்னும் பல நல்ல படங்கள் கொடுக்கவேண்டும் என்பதே இப்போதைக்கு எனது லட்சியம்.