பொறுமை என்பது ஒரு தவம். பொறுமை என்பது எல்லோராலும் எல்லா கட்டங்களிலும் கடைப்பிடிக்க முடியுமா? எதுவரை பொறுமை காட்டுவது என்ற அளவு உண்டா?
புத்தரின் கொள்கைகளை பரப்ப ஒரு சீடர் புறப்படுகிறார். அவர் செல்கிற ஊர் மூடநம்பிக்கைகளின் மூழ்கியிருக்கும் பகுதி. “அங்கே செல்கிறாயே அந்த மக்கள் உன்னைத் தாக்கினால்?” என்று கேட்டார் புத்தர். “தாங்கிக் கொள்வேன்” – சீடர்.
“உன் காலை உடைப்பேன் என்றால்”. “சரி என்பேன்.” “தலையைச் சீவிவிடுவேன் என்றால்?’’.
“உயிர்போகட்டும் ஒருவனாவது திடுக்கிட்டு திருந்தமாட்டானா….? அவனால் வேறு சிலரும் திருந்தலாம் அல்லவா?”
“பொறுமையும் அகிம்சையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்று படித்தது உண்டு. அதுமட்டுமல்ல பொறுமைக்கு பயம் என்கிற பேயை நம்மிடமிருந்து விரட்டி அடிக்கும் சக்தி உண்டு. நமது சிந்தனைகளில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தும்.
காந்தியடிகளை நினைத்துப் பாருங்கள். பொறுமையின் விஸ்வரூபம் புரியும். சுயமரியாதை பாதிக்கும்போது பயத்தில் அடங்கிப் பேசாமல் இருப்பது பொறுமை இல்லை. உண்மையில் பொறுமை, போராடப் பிறந்தவர்களை உருவாக்கும். தென்னாப்பிரிக்காவில் காந்தி கொடிய சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் அவரை அடிஅடி என்று அடித்திருக்கிறார்கள். அப்படியும் ரத்தம் ஒழுக அவர் தவழ்ந்து சென்று அந்த சட்ட தாள்களை எரிக்க முயற்சிக்கிறார்.
நம் காலத்தில் மண்டேலா! வாழ்க்கை முழுவதும் பூட்டிய சிறையில்! காந்தியிடம் அவர் கற்ற பொறுமை – பொறுத்தார் பூமி ஆண்டார்,. மியான்மாரில் அந்த பெண்மணி… ஆன் சான் சுகி சிறையில் வாடிக் கொண்டே இருக்கிறார். ஒருநாள் வெற்றி பெறுவார் என்பதில் என்ன சந்தேகம்?
அம்பேத்கரை எண்ணிப் பாருங்கள். சாதிப்பற்று உள்ளவர்கள் அவரை படுத்திய பாடு என்ன? எல்லாவற்றையும் மீறி அவர் படித்து அறிவுக்களஞ்சியமாக இந்திய அரசியல் சட்டத்தையே உருவாக்கும் மாமனிதர் ஆனாரே… அவருடைய கொள்கைகளால் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டதை மறக்க முடியாதல்லவா. உயர்சாதி என்று மார்தட்டிக் கொள்வது மடத்தனம் என்று உணர்த்தினாரே….
தமிழ்நாட்டில் பெரியார்… பெரும் தளைகளாக இருக்கும் சாதி, சமய, சடங்குகளை எதிர்க்க, கடைசி நாள் வரை போராடியவர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் காந்தியடிகளை நேரில் சந்தித்தார். ‘அவர் சொன்னதில் நியாயம் இருக்கிறது’ என்று சொன்னார் காந்தி. பெரியார் தன் போராட்டம் வன்முறை வடிவம் எடுக்காமல் பார்த்துக் கொண்டார். அவரது போராட்டம் புதுமையாகவும் இருந்தது. சாதி மறுப்பு திருமணம் நடத்திக் காட்டினார். அதுவும் ராகு காலத்தில் நடத்தினார். தான் தலைமை வகிக்க கட்டணத்தில் சலுகை தந்தார். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்கள். சைக்கிள் ரிக்ஷாவில் அவர் சென்றபோது செருப்பு வீசப்பட்டது. ஒரு செருப்பு தானே விழுந்தது, இன்னொரு செருப்பு விழந்தால் நல்லது, பயன்படுத்தலாம் என்று காத்திருந்தார். இதன் பெயர் தான் பொறுமை.
பெரியாரின் சீடர்கள் அத்தனை பேருக்கும் பேச்சாற்றல் இருந்தது. அவர்களுக்கு பெரும் கூட்டம் கூடியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பகுத்தறிவுக் கொள்கையைப் புரிந்து கொண்டார்கள். யாரும் வன்முறையை மூளையில் ஏற்றிக் கொள்ளவில்லை. திராவிட இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திய அறிஞர் அண்ணாவும் பொறுமையின் சிகரமாக திகழ்ந்தார். ஓயாத பொதுக்கூட்டங்கள். எழுதியும் குவித்தவர். தமிழக சட்டமன்றத்தில் அவர் வெற்றி பெற்று மன்ற அரங்கில் நுழைந்தபோது, ஆளுங்கட்சி சற்று பயந்தது உண்மை. அதைப் பற்றி அண்ணாவே எழுதியிருக்கிறார். ஆனால், வாதங்களை முன்வைத்து பேசி ஜனநாயகத்தை மெருகேற்றினார். ஆட்சி அவரிடம் வந்து சேர்ந்தது.
இன்றைய அரசியல்வாதிகள் அவற்றை எல்லாம் தேடிப் படித்தால் நல்லது. திராவிட நாடு அவசியம் என்பது பற்றியும் அவர் சட்டமன்றத்திலேயே பேசியது உண்டு. அவை அமைதியாகக் கேட்டது. நிதியமைச்சரும் அவை முன்னவருமான சி.எஸ். அதற்கு பதில் கொடுத்தார். இருவருக்கும் இடையில் சூடான வாதங்கள் நிகழ்ந்தன. பொறுமைக்கு உதாரணமாகத் திகழ்ந்த வாதங்கள் அவை!
“தெற்கு தேய்கிறது” என்ற அவரது வாதம் தமிழக மக்களால் புரிந்து கொள்ளப்பட்டதால்தான் அவர் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார் எனலாம். அவர் தனது கொள்கைகளை ஜனநாயக முறையில் நிறைவேற்றிக் காட்டினார். நீண்ட பொறுமையான போராட்டம் அண்ணாவை அரியணையில் ஏற்றியது.
ஏதோ வாய்ச் சண்டையில் பதிலுக்கு பதில் பேசாமல் இருப்பது பொறுமை அல்ல. பொறுமை- தவம் போன்றது!