அனைத்த அடுத்த நொடி நடந்து விட வேண்டும் என்கிற எண்ணப் போக்கு அதிகமாக பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறேன்.
இந்தப் போக்கு திரைப்பட உலகில் அதிகமாக விளைந்திருக்கிறது. பொறுமை என்கிற வார்த்தை ஏன் இவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
பொறுமை என்றால் தாமதம் என்று பொருள் அல்ல. பொறுமை என்றால் நிதானம்.
ஒருமுறை பள்ளிக்கரணையில் தங்கியிருந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது கேட்டேன்.
“நீங்கள் ஏன் நேரடியாக இயக்குநராக ஆகாமல் பத்திரிகையாளராக, பிறகு தங்கப்பதக்கம் போன்ற படங்களில் திரைப்பட வசனகர்த்தாவாக இருந்தபின் திரைப் பட இயக்குநராக மாறினீர்கள் அவ்வளவு காலம் வேண்டுமா ? தாமதம் இல்லையா? இப்போதெல்லாம் சாதாரணமாக யூட்யூபில் பார்த்து கற்றுக் கொண்டு நேரடியாக படம் எடுக்க முடிகிறது என்றெல்லாம் சொல்கிறார்களே, ‘’ என்று கேட்டேன்.
சிறிது நேர யோசனைக்குப் பின் என்னை நிமிர்ந்து பார்த்து கேட்டார் .
"ராசி… குழந்தை பிறக்கிறதுக்கு அம்மா வயிற்றில் 10 மாசம் காத்திருக்கணுமா என்ன? விதைக்குள்ளே மரம் இருக்கே, ஏன் மண்ணுக்குள்ள போட்டதும் உடனே அது முளைச்சு வளர்ந்து காய் , பழம் தந்து இருக்கக் கூடாது . சீக்கிரமா பலன் கிடைச்சா என்ன? நம் ஏன் பொறுமையா காத்து இருக்கணும்? இப்படி எல்லாம் நாம இயற்கைய பார்க்க முடியுமா? எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கு. இன்னும் சொல்லப்போனா பொறுமையின்றாங்கல்ல அது சரியான தருணம். பொறுமைங்கிறது திட்டமிட்ட அறிவியல் காத்திருப்பு. அல்லது செயல்படும் தன்மையை எதிர்நோக்கும் ஒரு விளைவுப் பயணம்.
எனக்கு தமிழ் திரைப் படங்கள் மேல் அதிக கோபம் இருந்தது.
திரைப்படம் என்பது பேச்சுப் பட்டறை அல்லவே. வாழ்க்கையின் உணர்வுகளை, பார்ப்பவர்களின் மனதில் புகுந்து ஒரு உணர்வை உண்டாக்கி வெற்றி பெறச் செய்கிற சாதனம்தான் திரைப்படம். ஆனால் அதில் ஏன் வெறும் வசனங்களே உள்ளன? நாடகத்தன்மை இருக்கிறது. இது மாற வேண்டுமே?
திரை மொழி என்பது புதிதாக இருக்க வேண்டுமே என்று நான் ஆசைப் பட்டேன். ஆனால் அது உடனே நடந்து விடவில்லை. பல ஆண்டுகள் கழித்து, என் வசம் திரைப்படம் வருகிற போது நான் முள்ளும் மலரும், உதிரிப்பூக்களில் வசனங்களைக் குறைத்து புதிய திரை மொழியை உருவாக்கினேன். அவசரப்பட்டால் என்ன ஆகி இருக்கும்? பத்தோடு பதினொன்றாக மாறி இருப்பேன்.வெறும் பணம் மட்டும் சம்பாதித்திருப்பேன். ஆனால் என் கனவு நிறைவேறி இருக்காது. அதற்கு நான் பொறுமையாகத் தான் இருக்க வேண்டி இருந்தது,’’ என்றார்.
இவர் இப்படி சொல்கிறாரே எப்படி சரியாக இருக்கும்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படியா? அவருடைய வெற்றியே வேகம் தானே. தடால் புடால் என்று ஆக்சனில் அதிரி புதிரி காட்டி எல்லோரையும் கவர்ந்து வேகமாக வந்தவர் தானே! பொறுமையாக நினைத்து இருந்தால் இந்த வேகமான வெற்றியை அடைந்திருக்க முடியுமா?
ரஜினியின் நண்பர் விட்டல். அவரும் நடிகர் தான். சிரித்துக்கொண்டே சொன்னார்.
“நீங்கள் சினிமாவில் வருகிற ரஜினியை சொல்கிறீர்கள். ஆனால் அவர் அந்த இடத்திற்கு வருவதற்கு ராயப்பேட்டையில் சிறிய அறையில் தங்கியிருந்து, படாத பாடுபட்டு கேபி இடம் வந்து வில்லனாக ஆரம்பித்து பிறகு படிப்படியாக கதாநாயகனாக வளர்ந்து தன்னுடைய தனித்துவத்தில் பொறுமையாக பல அவமானங்களைச் சந்தித்ததால் அந்த இடத்தைப் பிடித்தார் என்பதை யாரிடம் போய் சொல்வது?’’ என்றார்.
உண்மைதான். இன்றும் மிக உயர்ந்த இடத்தில் இருந்தும் கூட கல்லடியும் சொல்லடியும் விழத்தான் செய்கிறது. அதையெல்லாம் அவர் தாங்கிக்கொண்டு தன்னுடைய அடுத்த தலைமுறைக்கான திரைப்படங்களை எதிர்நோக்கி பொறுமையாக தேர்வு செய்து நகர்வதை பார்க்கத் தானே முடிகிறது.
சென்னையில் மாநிலக் கல்லூரியில் படித்து முடித்தபின் நான் சந்தித்த மிகப்பெரிய ஆளுமை எடிட்டர் இயக்குநர் பி லெனின்.
ஏராளமான திரைப்படங்களை தன் எடிட்டிங்கால் வெற்றிப் படங்களாக மாற்றிக்கொடுத்தவர். மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் வலம் வந்தார். இன்று பலரை உயர்த்தி விட்டு வேண்டாம் சலித்து போய்விட்டது ஒரே மாதிரியான திரைப்படங்களை நான் பணியாற்ற விரும்பவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார்.
அப்படி என்றால் சினிமாவிலேயே அவர் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்?
அப்படியெல்லாம் கிடையாது. அவர் புதிய இளைஞர்களுக்கு வழிகாட்டிக் கொண்டு படங்களை எடிட்டிங் செய்து கொண்டிருக்கிறார். சும்மா அல்ல.
அவர் இயக்குநராகவும் மாறினார். ஐந்து முறை தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். தமிழக அரசின் விருதுகளும் பலப்பல. ஆனால் அமைதியாக இருக்கிறார். விருதுகளையும் புகழையும் தலையில் ஏற்றிக் கொண்டு அவஸ்தைப்படவில்லை. எளிமையாக தனது எழுபத்தெட்டு வயதிலும், திறமையாளர்களை உருவாக்கும் வாழ்வை மேற்கொள்கிறார்.
பதற்றமில்லை. மிதமான காற்றின் பயணமாக வாழ்க்கையைப் பொறுமையாக அனுபவித்துப் பயணிக்கிறார். இன்னும் சொல்லப் போனால் ஷார்ட் பிலிம் என்கிற ஒரு உலகத்தையே அவர்தான் அறிமுகப்படுத்தினார்.
இன்று பலருக்கு தெரியுமோ என்னமோ? ‘நாக் அவுட் ’ என்ற ஒரு படத்தை அவர்தான் உருவாக்கி வெளியிட்டார். சினிமா எடுப்பதை விட்டு இது என்ன வேலை என்று திரை உலகம் அன்று கேலி பேசியது. இன்று கொண்டாடுகிறது.
தென்னிந்திய சினிமாவின் முதல் பெண் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பதோடு மட்டுமல்லாமல், டி.பி. ராஜலட்சுமி தமிழ் திரைப்படங்களின் முதல் கதாநாயகி.
தென்னிந்தியாவின் முதல் பேசும் படம் காளிதாஸ் படத்தின் கதாநாயகி. காளிதாஸ் திரைப்பட ரீலை சென்னையில் உள்ள தமிழ் பார்வையாளர்கள் ஊர்வலமாக திரையரங்குகளுக்கு கொண்டுவந்தனர். வழியெங்கும், மக்கள் அகர்பத்தி ஏற்றி தேங்காய் உடைத்து, பேசும் படத்தின் ரீலை வரவேற்றனர்.
ராஜலட்சுமி கதாநாயகியாக மாறுவதற்கு முன், ஆண் நடிகர்கள் பெண் நடிகர்களாக மாறுவேடமிட்டு கதாநாயகி வேடங்களில் திரைப்படங்களில் நடித்தனர்.
திருவையாற்றில் சாதாரண பிராமணர் குடும்பத்தில் பிறந்த ராஜலட்சுமி தன்னுடைய குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகத் தான் தன்னுடைய ஊரை விட்டு கிளம்பி நாடகத்தில் சேர்ந்தார். அவரை ஏசியும் பேசியும் வந்த ஊர் மத்தியில் தான் யார் என்று காட்ட வேண்டும் என்பதற்காக திரைப்படத்தில் மெதுவாக நுழைந்து ஆடிப் பாடி தயாரித்து இயக்கி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் .
திருமணம் செய்து கொண்டார். அது தோல்வியில் முடிந்தது. வேறென்ன செய்வது என்று அவர் ஒதுங்கி இருக்காமல் தன் வாழ்க்கையை “மிஸ் கமலா’’ என்று ஒரு நாவலாக எழுதினார். காலம் வரட்டும் என்று காத்திருந்து அவரே அந்த நாவலை திரைப்படமாக தயாரித்து, இயக்கியும், வெளியிட்டும் சாதனை புரிந்தார்.
தான் வாழ்க்கையில் என்னவாக ஆக வேண்டும் என்ற நிலையை தான் மட்டுமே உருவாக்க முடியும் என்று கடைசி வரை பொறுமையாக, நிதானமாக இருந்து தனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வெற்றியும் கண்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை இன்னும் மோசமான தொடக்கம். தடாலடியாக ஓடிவந்து ஒட்டிக்கொண்ட உயர்வு வாழ்க்கை அவருக்கு இல்லை. பராசக்தி திரைப்படம் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. முதலில் சிறிது படம் எடுத்துவிட்டு போட்டுப் பார்த்து இவர் சரிவர மாட்டார் என்று ஏவிஎம் மெய்யப்பன் அவர்களே முடிவு செய்தார். ஆனால் இவர் தான் வேண்டும் என்று அடம்பிடித்தார் பண முதலீடு செய்த பிஏ பெருமாள் முதலியார்.வரலாறு என்ன செய்தது தெரியுமா?
கன்னம் ஒட்டி பசியோடு இருந்த இந்த முகத்தை யார் வரவேற்பார்கள் என்று சொன்ன உலகத்தில் இவர் தான் மிகச்சிறந்த நடிகர் திலகம் என்று காலம் சொன்னது. இதற்கு சிவாஜி கணேசன் எத்தனை பொறுமையாக காத்திருந்தார் என்பது யாருக்கு தெரியும்?
என்னை திரைப்பட துறையில் உதவி இயக்குநராக அறிமுகம் செய்த கமலஹாசன் வாழ்க்கை மட்டும் சும்மாவா?
சிறு வயதில் களத்தூர் கண்ணம்மாவில் பிரகாசமான குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கைதட்டல்களை ஏராளம் பெற்றார். ஆனால் பதினைந்து வயது இரண்டாம் கெட்டான் வயதில் என்ன ஆயிற்று? ஒல்லியாக இருக்கிறாய் உனக்கு என்ன வேடம் தருவது என்று புறந்தள்ளியது தமிழ் உலகம்.
மலையாளத்திற்குச் சென்றார். கை கொடுத்தது. பிறகு மீண்டும் தமிழில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ஓரிடத்தை பிடிப்பதற்கு அவருக்கு அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமா நஞ்சமா?
ஓரளவு மக்களுக்கு தெரிந்த பிறகும் ஏவிஎம் வடபழனி ஸ்டுடியோவில் இருந்து ஆழ்வார்ப்பேட்டை வீடு வரை இரவில் நான் நடந்தே வந்திருக்கிறேன். கார் கதவு எனக்கு திறந்தபாடில்லை என்று அவர் வேதனையோடு சொன்ன அனுபவங்களை நான் உணர்ந்து கேட்டிருக்கிறேன்.
கமல்ஹாசன் காத்திருக்கப் பழகினார். ஆனால் அதற்கு அவர் காத்திருந்தது எத்தனை வருடங்கள்? எத்தனை வருடங்கள்?
நூறு படங்களை இயக்கி சாதனை புரிந்த ராமநாராயணன் வீட்டில் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது கேட்டேன். “எல்லோரும் பிரபல நடிகர்களை வைத்து இயக்குகிறார்கள் .நீங்கள் பிரபலம் ஆகாத முன்னேறி வருகிறவர்களை வைத்து ஆடு மாடு என்று விலங்குகளை வைத்து எல்லாம் படம் எடுக்கிறீர்களே உங்களை கேலி பேசுகிறார்களே?’’ என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் “ எல்லோருக்கும் ஒரு வழி என்றால் எனக்கு எனக்கான வழி. அதில் நான் வெற்றி பெறுவேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வதல்ல. நம்முடைய சக்தி, திறமை என்ன? எதிர்பார்ப்பு என்ன? என்பதை அறிந்துகொண்டு பயணப்படுவதே சிறந்தது. பொறுமையாக நம் வழியைத் தேர்ந்தெடுப்பது தான் வாழ்க்கையில் முக்கியம்,” என்றார்.
திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ராமநாராயணன் பிறகு தயாரித்தும் இயக்கியும் வாழ்வை நிறைவு செய்தார் என்பதில் ஒரு உண்மையான சூட்சுமம் தெரிகிறது அல்லவா?
இதைப் புரிந்துகொள்ள நமக்கு நிதானம் வேண்டும். நிதானம் என்றால் பொறுமை தானே? இப்படியாக உதாரணங்களை ஏராளம் சொல்லலாம்.
வாழ்க்கையில் நான் நிறைய பார்த்திருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன் என் வாழ்க்கை முதலில் ஒரு பத்திரிகையாளராக ஆரம்பித்து பேச்சாளராகவும் பிறகு கவிஞனாக, எழுத்தாளராக கமல்ஹாசன் அவர்கள் மூலம் மையம் பத்திரிகை துணையாசிரியராக பிறகு ஆசிரியராக, திரைப்பட உதவி இயக்குநராக என்று மாறிக்கொண்டே இருந்தேன். பல படங்கள் நான் பணிபுரிந்த பிற்பாடு வெளியே வந்து தேவராஜ் திரைப்படத்தை இயக்கி முடித்த பிற்பாடு அந்தத் திரைப்படம் வெளியாகாமல் நீண்ட காலம் இருந்தது .
பிறகு எல்ஐசி ஏஜென்ட் வேலை பார்த்தேன். ஒரு நண்பர் அப்படி என்னை திசை திருப்பி விட்டார் .அப்படியே ஓடிக் கொண்டிருந்தேன் பிறகு எழுதினேன் பேசினேன்; பிறகு சில காலம் கழித்து பொறுமையாக நான் யார் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை பொறுமையாக யோசித்தேன்.
எனக்கே என் மேல் கோபம் வந்தது.
ஒரு வாழ்க்கைக்காக பணத்திற்காக இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறேன் என்று யோசித்து நம்மால் என்ன இயலும் என்பதை புரிந்து கொண்டு ஒரு சிறிய கதையை எழுதி நானே தயாரிப்பாளராக மாறி வீட்டை அடமானம் வைத்து, அங்கு இங்கே என்று கடன் வாங்கி வண்ணத்துப்பூச்சி என்ற திரைப்படத்தை இயக்கினேன். அது என்னை கைவிட்டு விடவில்லை. அந்தப் படம் வெளிவந்து குழந்தைகள் திரைப்படத்தில் எனக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது
நமக்கான இடம். நமக்கான பயணம் . நமக்கான வழி எப்போதும் காத்திருக்கும் என்பதை நான் மறந்துவிடவில்லை.
அதைத்தான் இந்தச் சொல் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது.
பொறுமை.
பொறுமை என்பது வெற்றுச் சொல்லல்ல.
அதற்குள் ஒரு ஞானம் இருக்கிறது.