தமிழர்கள் தங்கள் பெயர்களை எப்படி எழுதினார்கள் என்று பார்க்கத் தொடங்கினால் சங்கப்பாடல்களை எழுதிய புலவர்களின் பெயர்களில் இருந்து தொடங்கலாம்.
தொல்காப்பியர், கபிலர், ஔவை என ஒற்றைப் பெயர்களும் உண்டு. கணியன் பூங்குன்றனார், கணக்காயன் தத்தனார், ஆசிரியன் பெருங்கண்ணன் எனத் தொழிற்பெயரைச் சேர்த்தவர்களும் உண்டு. ஆயினும் மாங்குடி மருதன், ஐயூர் மூலங்கிழார், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என ஊர்ப்பெயரை தன்பெயருடன் சேர்த்தவர்களே மிகுதி. மதுரையைச் சேர்த்துக்கொண்டவர்கள் 38 பேர். உறையூர்க் கார புலவர்களே எட்டு பேர் உண்டு. காவிரிப் பூம்பட்டினத்தார் ஐவர் இருக்கிறார்கள். ஊர், தொழில் ஆகியவற்றை தங்கள் பெயருடன் சேர்த்துக் கொண்டனர். இன்னார் மகனெனக் காட்ட தந்தை பெயரை சேர்க்கும் வழக்கமும் இருந்தது. (பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார், மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்).
வேளிர்கள் காலம் முடிந்து பெரும் அரசுகள் உருவான காலத்தில் அரசுகள் அளித்த பட்டங்களும் சேர்ந்துகொண்டன. சோழ அரசும் சமூகமும் என்ற எ.சுப்பராயலு எழுதிய நூலில் சோழர்காலத்தில் ஆள்பெயர்களும் சமூகமும் என்ற தலைப்பிலான கட்டுரையில் அக்காலப் பெயர்களைப் பற்றி ஆராயப்படுகிறது.
9600 ஆள் பெயர்கள் சோழர்கால கல்வெட்டுகளில் கிடைத்துள்ளதாகவும் அப்பெயர்களில் ஒன்று முதல் ஐந்து பகுதிகள் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த நீளமான பெயர்களை எடுத்துக்கொண்டால் இவற்றில் ஒரு பகுதி பெற்றோர் இட்ட பெயர். மற்றவை முறையே ஊர், கோத்திரம் அல்லது குடி, தந்தை பெயர், பட்டப்பெயர் எனவும் இருப்பதாக சுப்பராயலு கூறுகிறார். சோழர்காலப் பெயர்கள் பெரும்பாலும் தந்தை பெயரை முதலில் வைத்து பின்னர் மகன் பெயரைக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளன. (அந்த வழக்கம்தான் தற்போது தொடர்கிறது). பெண்கள் பெயர்களும் அப்படியே எழுதப்பட்டன. திருமணமான பின் கணவன் பெயரைச் சேர்த்துக் கொள்வது இல்லை. அரசியர் மட்டும் மாதேவி என்ற பட்டம் பெற்றனர்.
இந்நிலைதான் பின்னர் காலப்போக்கில் சாதிப்பெயர்களைப் பின்னொட்டாகச் சேர்த்துக்கொள்வதாக காணக்கிடைக்கிறது. எல்லோரும் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயர்களைப் போட்டுக்கொள்வார்கள். அப்படி அழைக்கப்படுவதே கௌரவமாக இருந்தது.
“காலனிய ஆட்சிக்காலத்தில் சாதிப்பெயர் சேர்க்காமல் பெயரை மட்டும் கையெழுத்தாகப் போடும் போக்கும் இருந்தது. உதாரணத்துக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று பெயரை எழுதினாலும் அவர் கையெழுத்திடும்போது வ.உ.சிதம்பரம் என்றுதான் கையெழுத்திடுவார். சி.சுப்ரமணிய பாரதி என்றுதான் பாரதியார் தன் தந்தையின் முன்னொட்டைச் சேர்த்து கையெழுத்திட்டுள்ளார்,’’ எனச் சுட்டிக்காட்டுகிறார் வரலாற்று ஆய்வாளர் ஆ. இரா.வேங்கடாசலபதி.
இந்நிலையில்தான் சுயமரியாதை இயக்கத்தை பெரியார் 1924-இல் தொடங்குகிறார். சாதி ஒழிப்பை இலக்காகக் கொண்டு அவர் மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் முதல்படியாக சாதிப் பின்னொட்டுகளைச் சேர்த்துக்கொள்ளுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறார். அவர் 18.12.1927 குடி அரசு மலர் வரையில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று எழுதி வந்ததை மாற்றி 25.12.1927 முதல் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி என்று மட்டும் குறிப்பிட ஆரம்பித்தார். (தகவல்:பெரியார் ஈவேரா சிந்தனைகள், வே.ஆனைமுத்து)
1929 பிப்ரவரி மாதம் 17,18 தேதிகளில் செங்கல்பட்டில் நடந்த சென்னை மாகாண முதலாவது சுயமரியாதை மாநாடு, தமிழ்நாட்டில் சாதிப்பின்னொட்டுகளை சமூகமே முன்வந்து நீக்கிக் கொள்வதற்கு வழி வகுத்த நிகழ்வு எனக் கூறலாம்.
”சாதிப் பட்டங்களை விட்டுவிட்டால் ஆள்களை அடையாளம் காட்டுவது எப்படி இப்படிக் கேட்டவர்களோ அந்த நாளில் மிகப் புகழ்பெற்றவர்கள். பொதுமக்களோ அஞ்சவில்லை. சாதி வால்களை வெட்டக் கோரும் முடிவுக்குப் பேராதரவு தந்தார்கள்,” இவ்வாறு கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு தன்னுடைய நினைவலைகள் நூலில் குறிப்பிடுகிறார். பள்ளிகளில் எல்லா சாதியைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து வேறுபாடு இன்றி படிப்பதற்கு இத்தீர்மானத்தின் விளைவுகள் உதவிகரமாக இருந்ததாகவும் இந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”இதன் பின்னர் சமூகத்தில் பெரிய மதிப்புப் பெற்றிருந்த தலைவர்கள் அனைவரும் தங்கள் சாதிப்பின்னொட்டுகளைத் துறக்கிறார்கள். 1925 ஆம் ஆண்டு குடியரசு இதழ் ஒன்றில் வெளியான கடிதம் ஒன்றில் கி ஆ.பெ விசுவநாதன் தன்னுடைய பின்னொட்டாக பிள்ளை என்று குறிப்பிட்டு எழுதுகிறார். சுயமரியாதை இயக்கத்துடனான தொடர்புக்குப் பின்னர் அவர் பின்னொட்டு இல்லாமல் எழுதத் தொடங்குகிறார். அறிஞர் அண்ணா அவர்களின் திருமணப் பத்திரிகையிலேயே சாதிப்பெயரைப் பார்க்க முடியும். 1934-இல் பெரியாரை திருப்பூரில் நடந்த செங்குந்தர் வாலிபர் மாநாட்டில் சந்தித்த பின்னர் அண்ணாவும் சுயமரியாதை இயக்கத்தில் சேர்கிறார். பெரும் அளவிலான இளைஞர்கள் பெரியாரின் இயக்கத்தில் சேர்கையில் தங்கள் சாதிப்பின்னொட்டுகளைத் துறக்கிறார்கள். அதுவே சமூக வழக்கமாக மாறி சாதிப்பெயர்களைப் போட்டுக் கொள்வது இழிவு என அனைவரும் கருதத்தலைப்பட்டனர்” எனக் குறிப்பிடுகிறார் திராவிட இயக்க ஆய்வாளரும் செயல்பாட்டாளருமான வாலாசா வல்லவன்.
1931-ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பு நடந்தபோது நாம் சாதிப்பெயரைக் கொடுக்கக்கூடாது என்று குடியரசு இதழில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் பெரியார். அந்த அளவுக்குத் தீவிரமாக இருந்திருக்கிறது அந்த இயக்கம். பிற்காலத்தில் சாதிவாரி இடஒதுக்கீடு என்ற நிலை உருவானபோது சாதிப்பெயர்களைக் குறிப்பிட்டு சாதிச் சான்றிதழ்களைப் பெறத்தான் நேர்ந்தது. இட ஒதுக்கீடு என்பதற்கு சாதிச் சான்றிதழ்கள் அவசியமாகின என்பது எதார்த்தம்.
“ஆனாலும் இப்போது சாதியும் இல்லை; மதமும் இல்லை என தம் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்போர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வித இட ஒதுக்கீடும் கிடைப்பதில்லை. அவர்களை ஊக்குவிக்க 2% சதவீத இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகிறது,’’ என்று சொல்கிறார் வாலாசா வல்லவன்.
சுயமரியாதை இயக்கம் பெண்ணுரிமையைப் பற்றி மிகவும் முற்போக்கான கருத்துகளை முன்வைத்தது என்பதை அறிவோம். அது இந்த பெயர்களை எழுதும் விதத்திலும் எதிரொலித்தது. “ திராவிடர் கழக ஆளுமையான குத்தூசி குருசாமி- குஞ்சிதம் இணையரின் மகள் இரஷ்யா, தம் தாய் தந்தையரின் பெயர்கள் இரண்டையும் சேர்த்து கு.கு.இரஷ்யா என எழுதத் தொடங்கினார். அதுபோன்று பெரும்பாலான திராவிட இயக்கத்தின் வாரிசுகள் தங்கள் தாயின் பெயரையும் முதலெழுத்தாக எழுதினர்.” என்கிற வாலாசா வல்லவன் ஊர்ப் பெயரை முதலெழுத்தாகக் கொள்ளும் வழக்கம் இருந்ததையும் சுட்டிக் காட்டினார்.
“ 1953-இல் உழைப்பாளர் கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆற்காடு கஜபதி நாயக்கர். அவர் தன் இனிஷியலாக ஆற்காடு என்பதைக் குறிக்கும் ஏ என்ற ஆங்கில எழுத்தைக் குறிப்பிடுவார்.
திரு.வி.க. என்ற பெயரில் இருக்கும் திரு என்பது திருவாரூர் என்பதை நாம் அறிவோம்.’ எனப் பெயரெழுதும் பல்வேறு போக்குகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் அவர்.
18.09.1978 அன்று தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டபோது அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டின் சாலைகள், தெருக்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும் என அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து 03.10.1978 அன்று அதற்கெனத் தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றையும் வெளியிட்டது (Rural Development and Local Administration Department – Government Order (Standing) No.1531 Date : 03.10.1978).
அந்த அரசாணையின் விளைவாகத் தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்களின் பெயர்களிலிருந்து சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன.
“1967-இல் சாதி, மத அடையாளம் இல்லாத ஓர் அரசை அறிஞர் அண்ணா நிர்மாணம் செய்தார். அதை கலைஞர் தலைமையிலான அரசும் பின்பற்றியது. சட்டத்தின் மூலம் இல்லாமல் மக்களே சாதிப்பெயர்களைத் துறந்த நிகழ்வு இங்கே நடந்திருக்கிறது. ஆனால் நண்பர்கள் சிலர் என்னிடம் சாதிப் பின்னொட்டுகளைத் துறந்தீர்களே.. சாதியை ஒழித்துவிட்டீர்களா என்று கேட்பதுண்டு. இந்த நிகழ்வு ஓர் அரை நூற்றாண்டில் நடந்த ஒன்று. சாதியோ ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. அதை ஒழிக்க நீங்களும் நானும் சேர்ந்துதான் இன்னும் உழைக்கவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு என்னுடைய பதில்,’’எனச் சொல்கிறார் ஓவியரும் செயல்பாட்டாளருமான டிராட்ஸ்கி மருது.
சாதிப்பெயர்கள் நீக்கம் செய்தது என்பது திராவிட இயக்கப் பிரச்சாரங்களின் மூலமாக நிகழ்ந்த ஒன்று. அதை எல்லா தரப்பாரும் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில் முதலெழுத்துகள் போடுவதில் சிக்கல் எழுந்தபோது அரசுகள் தலையிட்டன.
தந்தை பெயரைத் தான் முதலெழுத்தாகப் போடவேண்டும் என்று பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும்போது வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்த பெண்களுக்கும் சிரமங்கள் ஏற்பட்டன. 2003-இல் முதல்வர் ஜெயலலிதா அப்பா, அம்மா யாருடைய பெயரையும் முதலெழுத்தாகப் போடலாம்; அல்லது இருவர் முதலெழுத்தையும் போடலாம் என பள்ளிக் கல்வித்துறை மூலமாக ஆணை பிறப்பிப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த ஆணை மூலமாக பெண்களின் உரிமை நிலைநாட்டப்படுவதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்ல பெண் மக்கள் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் பதவி ஏற்கும்போது உறுதியேற்பு வாசகத்தில் குடிமகன் என்று மட்டுமே இருந்ததாகவும் அதில் குடிமகள் என்ற சொல்லையும் சேர்த்து தன்னைப் போன்ற பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் களைந்திருப்பதாக அவர் அறிவித்தார்.
பள்ளி, கல்லூரி சான்றிதழ்களிலும் அரசு ஆவணங்களிலும் பெயர்களின் முதலெழுத்து தமிழில் தான் எழுதப்படவேண்டும் என 2021-இல் திமுக ஆட்சியில் ஓர் அரசாணை (எண் 140) தமிழ் வளர்ச்சித் துறையால் பிறப்பிக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு இதை சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தற்போது தந்தையின் பெயரை பின்னொட்டாகச் சேர்த்துக் கொள்வதைப் போல் தாயின் பெயரையும் பின்னொட்டாகச் சேர்த்துக் கொள்வதையும் காண்கிறோம். பிரபல உதாரணம்: சிறை பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.
ஆனால் சாதிப்பெயரைப் போட்டுக்கொள்வதற்கு எதிராக 1929-இல் தொடங்கிய அறைகூவல் இன்று நூற்றாண்டை எட்ட இருக்கும் நிலையில் சுத்தமாக ஒழிந்துவிட்டதா?
முழுமையாக இல்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. திருமண அழைப்பிதழ்களிலும் மரண அறிவித்தல்களிலும் ஆங்காங்கே சாதிப்பின்னொட்டுகளை விடாது சிலர் பிடித்துக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இது தொடர்பாக சிந்தித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகும்.
மற்றபடிக்கு சாதிப்பின்னொட்டைத் துறந்ததன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு ஓர் அதிசயமாகவே தமிழ்நாடு உள்ளது. இதுபற்றி பல்வேறு கோணங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த இதழின் சிறப்புப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல் வாசகர்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறோம்.