நேற்றுப் போல இருக்கிறது இந்த நூற்றாண்டின் ஆரம்பமும், Y2K என்னும் `மில்லினியம் பக்’ பிரச்னையால் என்னென்ன விளைவுகள் நேருமோ என்று கலங்கிக் கொண்டிருந்ததும். இருபத்தி நாலு ஆண்டுகள் ஓடிவிட்டன. அன்று போதுமான முன்னேற்பாடுகள் எடுத்துக் கொண்டாயிற்று என்று அறிக்கைகள் கூறினாலும் பல துறைகளிலும், குறிப்பாக வங்கியில், விமானப் போக்குவரத்தில் என்னென்ன பிரச்னைகளை உண்டு பண்ணுமோ என்று உள்ளூர ஒரு பயம் இருந்தது.
இது நம் அறிவியல் கண்டுபிடிப்புக்களே நமக்கு ஆபத்தாய் முடிகிற, காலகாலத்துக்கும் தொடர்கிற பயம். புதுப் பொருளாதாரக் கொள்கைகள், டிஜிட்டல் வர்த்தகம், கணிணியின் அசுர வளர்ச்சியால் தகவல் பரிமாற்ற வேகம்,பன்னாட்டு நிறுவனங்கள், சமீபமாக உருவாகும் செயற்கை நுண்ணறிவு எனப் பல விஷயங்கள், புது விதமான அந்நியமாதலை(neo alienation) இன்றையக் கவிஞர்களுக்குத் தந்து கொண்டிருக்கிறது.
மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடாது என்பது போல, இந்தப் புதுப் புது விதமான சமூக நெருக்கடிகள், கவிஞர்களைச் சும்மா இருக்க விடாது. இதன் பாதிப்புக்கள் பிரக்ஞை பூர்வமாகவோ, நனவிலியாகவோ கவிஞர்கள் மத்தியில் காணக் கிடைக்கிறது. அவர்களது நனவிலும் நனைவிலியிலும் கனவுகளின் மாயத்தன்மையைக் கலந்து வித்தியாசமான தொனியில் ஒரு fantasyயாக இயங்கியல் நீதிக்கேற்ப கவிதைகளில் இறங்குகிறது.
இந்தக் கால கட்டத்தின் கவிதைத் தொகுப்புகளிலும் கவிதைகளிலும் கோட்பாட்டு வகைமை தாண்டி உணரப்பட்டோ உணரப்படாமலோ ஒரு புதிய அரூபத்தன்மை காணப்படுகிறது. நிறைய மொழி பெயர்ப்புக் கவிதைகள் வருவதன் தாக்கமாயிருக்கலாம். இப்போது கணிசமான மொழிபெயர்ப்புகளை, எம்.டி.எம், சமயவேல், மோகனரங்கன் போன்றோர் நன்கு செய்து வருகிறார்கள். ஆனாலும் புதிய கவிதைகளில் எப்போதுமான வெளிப்படையான குரல்களும் ஒலிக்காமல் இல்லை. கிளாஸிசத்திற்கு ஒரு நாளும் அழிவில்லை என்று இது உணர்த்துவதாக உள்ளது.
இதற்கு முன்பிருந்ததைப் போல சற்று கதை கலந்த பாங்கும் கவிதைகளில் இல்லாமல் இல்லை. ``போலியான படிம இறுக்கங்கள், அபத்தமான மொழித்திருகல்கள், வெறும் தட்டை மொழிக் கவிதைகளுக்கு” மத்தியில் இறுக்கமான நடையுடன் புதிய வார்த்தை அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. பாலின அடையாளமின்றி ஏறக்குறைய ஐம்பதிற்கும் மேற்பட்ட கூட்டியக்கமில்லாத, பல கவிஞர்கள் இதற்குப் பெரும் பங்களிக்கிறார்கள். கவிதை பற்றிய உரையாடல்களும் தொடர்ந்து காத்திரமாக வெளிப்பட்டு வருகிறது. உதாரணமாக சமீபத்தில் ‘உயிர்மை’ இதழில் வந்த சில கவிஞர்களின் பேட்டிகளையும், https://www.kavithaigal.in, https://akazhonline.com/ போன்ற பல இணைய இதழ்களையும் குறிப்பிடலாம். இந்தப் பி ஓ டி (Print on Demand) யுகத்தில் கவிதைப் புத்தகங்களுக்கும், கவிஞர்களுக்கும் குறைவே இல்லை. அது தவிர நிறைய இணைய இதழ்களும் அவர்களுக்கு உதவிகரமாக உள்ளன.
``யாருமில்லா கிரகத்தை
சுற்றிவரும் ஒரு துணைக்கோளின்
மௌனம் என……”
இந்தத் துணைக் கோள்களின் கால கட்டத்தைப் பிரதிபலிக்கிற கவிதைகளும் வராமலில்லை. கால தேச வர்த்தமானங்களைக் கடந்ததே கவிதை என்ற வாக்கினைப் பொய்ப்பிக்காமல் இந்த இருபத்தி நான்கு வருடங்களில், நம்பிக்கை அளிக்கிற விதமாய்க் கவிதைகள் வருவதையும், வந்து கொண்டே இருப்பதையும் நல்ல அடையாளமாகவே கொள்ள வேண்டும்.