தேர்தல் என்று வந்துவிட்டாலே அதனுடன் வெற்றிகளும் தோல்விகளும் சகஜமானவை. வெற்றியை ருசிப்பவர்கள் தோல்விகளுக்கும் தயாராகவே இருக்கவேண்டும். அதற்கான மனவலிமை இல்லாதவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்கள். ஒருதேர்தலில் மக்களால் வெறுக்கப்பட்டு ஓர் இடம் கூட வெல்ல இயலாத நிலைக்குத்தள்ளப்பட்ட கட்சி அடுத்த ஐந்தாண்டுகளில் தன்னை சீரமைத்து கூட்டணிகளை கட்டமைத்து வெற்றிகளை ஈட்டுவதை பலமுறை கண்டிருக்கிறோம். அதில் சில நிகழ்வுகள் இங்கே:
கம்பேக் கழகம்!
தேர்தல் அரசியலில் எந்தக் கட்சியும் வெற்றி தோல்வி என்ற இரண்டையுமே சந்திக்காமல் இருக்க முடியாது. ஆனால் படுதோல்வியில் விழும் ஓர் இயக்கம் மீண்டு எழுவது என்பது அதன் உறுதியான தலைமையாலும் , தன்னலமற்ற தொண்டர்களாலும் அவர்கள் நம்பும் கொள்கைப் பிடிப்பாலும் மட்டுமே சாத்தியம்! அப்படி கொள்கைகளால் கட்டமைக்கப்பட்ட இயக்கமாக திமுக இருப்பதால்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் படுதோல்விகளுக்குப் பிறகும் மீண்டு எழும் இயக்கங்களில் முதல் இடத்தில் திமுக இருக்கிறது. நாட்டில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டு மிசா சட்டத்தின் கீழ் பல்வேறு கட்சியினர் நாடெங்கும் கைது செய்யப்பட்ட “இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலத்தை” முதல் ஆளாக எதிர்த்த காரணத்தால் திமுக ஆட்சி 1975-இல் கலைக்கப்பட்டது.
கலைஞரின் இல்லத்தில் பணியாளர்களாக இருந்தவர்களைக்கூட போலீஸார் மிரட்டிய காரணத்தால் அத்தனை பேரும் பயந்து வேலைக்கு கூட வரவில்லை. தலைவர் கலைஞரின் ஓட்டுநர்கூட பணியில் இருந்து நின்று விட்ட நிலையில் மு.கண்ணப்பன் போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள் கலைஞருக்கு கார் ஓட்டிய நிகழ்வெல்லாம் நடந்தது.
தனது உடன்பிறப்புகள் எல்லாம் சிறைக்குச் சென்ற நிலையில் கிட்டத்தட்ட தனி நபராக தலைவர் கலைஞர் பணிபுரியும் சூழல். அவரது எழுத்துகள் சென்சார் செய்யப்பட்டதால் எதையும் வெளியில் வெளிப்படையாக சொல்ல முடியாத சூழலில் தான் எழுதிய அறிக்கையை நகல் எடுத்து சென்னை அண்ணா சாலையில் தனியாக நடந்துசென்று கண்ணில் படுபவர்களிடமெல்லாம் நோட்டீஸாக விநியோகித்தார்.
இயக்கத்தவர் அத்தனை பேரும் சிறையில் கலைஞரோ தனி மரம். இனி திமுக அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்த நிலையில் மிசா காலம் முடிந்த போது “திமுக அப்படியே கட்டுக்குலையாமல் இருந்ததோடு” பெரும் எழுச்சி பெற்று அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்துக்கு சென்றது.
அதிலிருந்து அடுத்து வந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவே ஆளும் கட்சியான சூழலில் இனி ஒரு போதும் திமுக ஆட்சிக்கு வராது என்ற எண்ணமே பலருக்கும் இருந்தது. ஆனால் தொடர்ந்து மூன்று முறை தோல்வியைச் சந்தித்தாலும் இரண்டாம் கட்டத் தலைவர்களோ அல்லது தொண்டர்களோ எவரும் திமுகவை விட்டு விலகாது இருந்ததோடு ஆளும் கட்சியான எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் இருந்து நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்றோர் எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்தது கலைஞரின் உறுதியான தலைமையைப் பறை சாற்றியது!!
இந்த உறுதியான தலைமைப் பண்பினால்தான் கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1989 இல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது! ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் போலியான காரணங்கள் கூறி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த 1991 தேர்தலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பழி திமுக மீது சுமத்தப்பட தலைவர் கலைஞரைத் தவிர திமுகவில் நின்ற அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாகத் தோல்வியடைந்தனர். அதற்கும் சிகரம் வைத்தாற்போல 1993 இல் வைகோ திமுகவை உடைத்து தனிக்கட்சி கண்டார். கட்சி நிர்வாக ரீதியாக சரிபாதியாக பிளவு கண்ட நிலையில் 1996 தேர்தலைச் சந்தித்த திமுக முழுமையான வெற்றியைக் கண்டு “ஸ்வீப்” அடித்த அதிசயமும் நடந்தது!
அதே திமுக 2011 ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சியாகக் கூட வரவில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. எதிர்க்கட்சியாகக் கூட வர இயலாத திமுக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்வந்த 2016 ஆண்டு தேர்தலில் 89 இடங்களில் வென்றது. தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு எதிர்க் கட்சியும் இத்தனை இடங்களைப் பெற்றதில்லை என்ற சாதனையையும் செய்தது.
அதன் தொடர்ச்சியாக கலைஞரும் காலமான நிலையில் தலைமைப் பொறுப்பிற்கு வந்தார் மு.க.ஸ்டாலின். ஐம்பது ஆண்டுகள் கோலோச்சிய கலைஞரும் இல்லை, ஆளும் கட்சியும் இல்லை என்ற நிலையில் 2021 தேர்தலில் வென்று பத்து ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தது திமுக!
வெற்றியும் தோல்வியும்தான் ஜனநாயகம். அதில் திமுகவின் டிஎன்ஏவில் இருப்பது
சிஎன்ஏ… அதாவது சி என் அண்ணாதுரை! தோல்வியில் இருந்து மீண்டு எழுந்து வெற்றிக்கான போராட்டத்தை நடத்தும் வித்தையை அன்று அண்ணா தன் தம்பிகளுக்குக் கற்றுத் தந்தார். தலைமுறைகள் கடந்தும் அந்த வித்தை திமுகவினருக்கு வழி வழியாகக் கடத்தப்படுகிறது. அதனால் என்றும் போராடி வெல்லும் இயக்கமாக திமுக இருக்கிறது.
- எம்.எம். அப்துல்லா, திமுக மேனாள் எம்பி.
அஞ்சாமையால் மீண்டு வந்த அரியணை..
இந்தியப் பிரதமர்களில் மிக உறுதி வாய்ந்த ஒருவர் யார் என்று கேட்டால் தயக்கமில்லாமல் இந்திரா காந்தியைச் சொல்ல முடியும். அஞ்சாமை இந்திராவின் உடைமையடா என்று பாடினாலும் தவறில்லை. தீர்மானமான முடிவு, ஆளுமை, தன்னம்பிக்கை, அபார துணிச்சல் ஆகிய அவரது குணாதிசியங்களே அவரை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றன. அதே சமயத்தில் வீழ்ச்சிக்கும் சோதனைக்கும் அவைதான் காரணிகளாக இருந்தன.
1964 மே 27-ம் தேதி நேரு காலமானார். பின்னர் பிரதமர் பதவியேற்ற லால்பகதூர் சாஸ்திரி 1966 ஜனவரி 10ஆம் காலமானார்.
அதன்பின்னர் மூத்தவராக இருந்த மொரார்ஜி தேசாயுடன் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்திரா காந்தி பிரதமர் வேட்பாளராக தேர்வு பெற்றார்.
ஆட்சியிலும் கட்சியிலும் சர்வ வல்லமை படைத்தவராக தன்னை நிலை நாட்டிக் கொள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றினார்.
1972 ஆம் ஆண்டில் தான் மக்களவைத் தேர்தல் முறைப்படி நடக்க வேண்டும். ஆனால் அதற்கு ஓராண்டு முன்னரே தேர்தலைச் சந்திக்க இந்திரா முடிவு செய்து அமோக வெற்றியையும் ஈட்டினார்.
வங்கதேசத்தை முன்னிறுத்தி நடந்த இந்தியா- பாக் போரில் 13 நாட்களில் பாகிஸ்தான் படையைச் சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் சரணடைந்தனர். பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக இருந்த வாஜ்பாய் இந்திராவை துர்க்கையின் அவதாரம் என்று பாராட்டினார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அதாவது 342 இடங்கள் இருந்ததால் சட்ட திருத்தங்களைச் செய்து அதிகாரங்களை குவித்தார். இந்திராவின் அதிகார ஆசை நாடாளுமன்றத்தைத் தாண்டி உச்சநீதிமன்றம் வரை சென்றது மூன்று சீனியர் நீதிபதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனக்கு ஆதரவாக தீர்ப்பளித்த ஏ.என்.ரேவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தார். இதனால் எதிர்ப்பு அதிகரித்தது
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி, பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழுப் புரட்சி போராட்டம், அகில இந்திய ரயில்வே ஸ்ட்ரைக் ஆகியவை மிகப்பெரிய சவால்கள். ஆனால் இந்திரா காந்தி எதற்கும் அஞ்சவில்லை.
ஆனால் அவருக்கான அச்சுறுத்தல் வேறு வடிவில் வந்தது.
1971-ல் ரேபரேலி தொகுதியில் இந்திராவை எதிர்த்து போட்டியிட்ட ராஜ் நாராயணன் தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் இந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக் மோகன் லால் சின்ஹா உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தில் வி. ஆர். கிருஷ்ணய்யர் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து இந்திரா பதவி விலகக் கோரி போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது மூலம் அரசியலமைப்புச் சட்டம் 352-வது பிரிவின் கீழ் "உள்நாட்டில் நிலவும் அசாதாரண குழப்ப நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக நெருக்கடி நிலை உத்தரவு பிறப்பிக்க வைத்தார். அச்சமயம் நாடே அராஜகத்தில் ஆழ்ந்தது.
17 மாதங்கள் கழித்து எமர்ஜென்சி உத்தரவு வாபஸ் பெறப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்திரா ரேபரேலி தொகுதியில் 55,202 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜ் நாராயணனிடம் தோற்றார். சஞ்சய் காந்தி அமேதியில் தோற்கடிக்கப்பட்டார். ஜனதா ஆட்சி அமைந்தது. அவ்வளவுதான் இந்திராவின் கதை என பலர் நினைத்தார்கள்.
ஆனால் தோற்றாலும் இந்திரா சோர்வடைந்து உட்கார்ந்து விடவில்லை 1977 மே மாதத்தில் பீகார் மாநிலம் பெல்ச்சியில் நடந்த 11 தலித்துகள் படுகொலையை அடுத்து அங்கு தனது பயணத்தை மேற்கொண்டார். மழை காரணமாக சாலைகள் அடித்துச் செல்லப்பட்டிருந்தன. அரசாங்கமும் போக்குவரத்துக்கு தடைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்திரா காந்தி பெல்ச்சி கிராமத்தை அடைய யானையின் மீது அமர்ந்து பயணம் செய்தார். மீண்டு எழுவேன் என்பதை அறிவிக்கும் பயணம் அது. சிக்மகளூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.
ஷா கமிஷன் முன்பு ஆஜரானவர்கள் அளித்த சாட்சியங்களை ஆதாரமாகக் கொண்டு இந்திராவை கைது செய்ய உள்துறை அமைச்சராக இருந்த சரண்சிங் முடிவெடுத்தார். அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த நடவடிக்கையால் இந்திரா காந்தி கைதாகவில்லை. பல்வேறு உட்கட்சிக் குழப்பங்களால் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது.
நிலையான ஆட்சி தரமுடியாத ஜனதா கட்சியினர் பல பிரிவுகளாக பிரிந்து நின்று 1980 மக்களவைத் தேர்தலை சந்தித்தனர். இந்திராவை ஒடுக்க, சிறையில் அடைக்க முயற்சி போன்றவற்றால் இந்திரா மீது மக்கள் அனுதாபம் கொண்டனர். நெருக்கடி நிலை அடக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி கூட இந்திராவுடன் கூட்டணி அமைத்தார். "நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக" என்ற கோஷத்தை முன்வைத்தார்.
1971-ஐ விட கூடுதலாக அதாவது 353 இடங்களில் இந்திரா வென்று பிரதமர் ஆனார். வீரம் நிறைந்த போராட்டக் குணமே அவர் மீண்டெழக் காரணமாக இருந்தது.
தி.சிகாமணி, பத்திரிகையாளர்
சிறைச்சாலையில் இருந்து பிறந்த பீனிக்ஸ் பறவை!
அது 1996 சட்டமன்றத் தேர்தல். திமுக, தமாக கூட்டணி, ரஜினியின் வாய்ஸ் என்று பலமான எதிர்வினைகளுடன் தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. முன்னதாக வளர்ப்பு மகன் திருமணம், ஊழல் குற்றச்சாட்டுகள் என பல சர்ச்சைகளுக்கு அவர் ஆட்சி உள்ளாகி இருந்தது. தேர்தல் முடிவுகள் வந்தபோது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றார். அதிமுக- காங்கிரஸ் கூட்டணி நான்கு இடங்களில் மட்டும்தான் வெல்ல முடிந்தது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் அவரைப் புறக்கணித்தார்கள். 21.47% சதவீத வாக்குகளை மட்டுமே அதிமுக பெற்றது. இவ்வளவு படுதோல்விக்குப் பின் ஜெயலலிதா மீதான வழக்குகள் சூடுபிடித்தன. அவரது போயஸ் இல்ல வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டு அவரது உடமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையிலும் அடைக்கப்பட்டார். பொதுமக்கள், கட்சிக்காரர்களின் கோபத்தை அடுத்து சில நாட்கள் உடன் பிறவா சகோதரி சசிகலாவைக் கூட போயஸ் தோட்ட இல்லத்தை விட்டு விலக்கி வைத்தார்.
“ஜெயலலிதாவின் ஐந்தாண்டு காலத் தவறுகளுக்கு மக்கள் கொடுத்த தண்டனை தேர்தல் தோல்வி. திமுக அரசு தனக்கே உரிய ஓவர்கில் அணுகுமுறையால் 30 வழக்குகளை போட்டு 27 நாட்கள் சிறையில் அடைத்து, அவர் இல்லாத வீட்டில் டீவி கேமராவுடன் சோதனை நடத்தி சிறுமைப்படுத்தியது. அது மக்களைக் கோபப்படுத்தியது. ஜெயா தோழியை ஒதுக்கி வைத்து, தன்னை சூழ்நிலைக் கைதியாக முன்னிறுத்தினார். அரசின் அம்பு பூமராங் ஆனது. பின்வந்த தேர்தலில் அவர் அமைத்த மகா கூட்டணியும் ஓட்டுச் சிதறலை தடுத்து மீண்டும் வெல்வதற்கு உதவியது,’’ என அந்திமழையிடம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல்.
முதல் ஆட்சிக்காலத்தில் செய்திருந்த தவறுகளால் டான்சி வழக்கு, ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு என பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. நீதிமன்ற வாயில்கள் அவருக்கு அத்துப்படியாகியிருந்தன. பல சட்டப்புத்தகங்களைப் படித்து அவரே பெரும் சட்டநிபுணர் ஆகியிருந்தார் என்று கூடச் சொன்னார்கள். இவ்வளவுக்கும் நடுவில் அவர் அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற அமைதியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தார். எந்த இடத்திலும் திமுக மீதான தாக்குதலைக் குறைக்கவில்லை. கட்சியில் தன் வழக்கமான இரும்புப் பிடியையும் தளர்த்தவே இல்லை. அதிமுக தொண்டர்களிடையே இருந்த தன் செல்வாக்கின் மீது அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார்.
இடையில் டெல்லி அரசியலில் தனக்கு இருந்த எம்பிக்களின் எண்ணிக்கையைக் கொண்டு இஷ்டத்துக்கு வாஜ்பாய் அரசை ஆட்டிப்படைக்கவும் தயங்கவில்லை. இவ்வளவு சட்ட நெருக்கடியிலும் அவர் எப்படி தன் இயல்பில் மாறாமல் வளைந்துகொடுக்காமல் இருக்கிறார் என்று பார்க்கும் அளவில்தான் அவர் நடவடிக்கை இருந்தது.
2001 தேர்தலின் போது அவர் டான்சி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தபடியால் நான்கு தொகுதிகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தும் அனைத்து தொகுதிகளிலும் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ‘சட்டம் தன் கடமையைச் செய்தது’ என்று கருணாநிதி கூறினார். ஆனால் இந்த நிராகரிப்பையே தான் பழிவாங்கப்படுவதாக முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தார் அவர். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது. அதன்பின்னர் அவர் முதலமைச்சர் ஆகவும் தடைகள் இருந்தன. பின்னர் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, சட்டரீதியான தடைகளைக் கடந்து முதல்வர் நாற்காலில் அமர்ந்துகாட்டினார் ஜெ. 1996 தேர்தல் தோல்விக்குப் பின்னால் அவர் எழுந்துவந்த வேகம் மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதோடு, தமிழகமே கொண்டாடும் தலைவராகவும் ஆக்கியது. அதன் பிறகு தேர்தல் தோல்விகளை அவர் சந்தித்தாலும் மக்கள் செல்வாக்கில் என்றுமே பின்தங்கி இருக்கவில்லை!
-முத்துமாறன்
10 முறை பாஸ்!
செங்கோட்டையன்
எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியின் முதல் செட் ஆட்களில் ஈரோடு மாவட்டம் கோபி, குள்ளம்பாளையம் கிராமத்தின் செங்கோட்டையனும் ஒருவர். சத்திய மங்கலத்திலிருந்து 1977இல் சட்டப்பேரவை உறுப்பினராக ஆனவர், அடுத்து எட்டு முறை கோபி ச்செட்டிபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ.ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தாவது முறையாக இப்போதும் சட்டமன்ற உறுப்பினராக ஆகியுள்ள செங்கோட்டையனுக்கு, அரசியலில் இது ஒரு பிரமாண்டமான மறுவருகை!
2011இல் ஜெயலலிதா ஆட்சியில் வேளாண்மைத் துறை அமைச்சரானவர், பின்னர் தகவல் நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார். அடுத்த ஆண்டே புகார் காரணமாக அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு ஜெயலலிதா இறக்கும்வரை அவருக்கு சரிவுதான். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு 2017இல் பள்ளிக்கல்வித் துறைக்கு அமைச்சராக ஆக்கப்பட்டார். ஆனாலும் ஒதுங்கிய நிலையிலேயே இருந்தார். ஒரு கட்டத்தில் கட்சியைவிட்டே நீக்கப்பட்டார். அதையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் விஜய் கட்சியில் சேர்ந்தபோது மிகுந்த ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது! ஆனால் தவெகவில் இப்போது மூத்த அமைச்சராகவும் சட்டப்பேரவை அவை முன்னவராகவும் நட்சத்திர இடத்தைப் பிடித்துள்ளார். இது உண்மையில் நம்பமுடியாத மறுவருகைதான்.
மீண்டும் வெளிச்சத்துக்கு!
ஜேசிடி பிரபாகர்
லயோலா கல்லூரியின் மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜேசிடி பிரபாகரை, அ.தி.மு.க.வில் சேர்த்த எம்.ஜி.ஆர். இளைஞரணித் தலைவர் பதவியில் அமர்த்தினார்.
1980ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் வாய்ப்பு வழங்கிய எம்ஜிஆர், பிரபாகரைப் பாராட்டியும் தனக்கு பெண் இருந்தால் பிரபாகருக்குதான் கட்டிக்கொடுப்பேன் என்றும் பேசியது, பிரச்சாரத்தில் தூக்கல். அதுவே அவரின் வெற்றியையும் உறுதிசெய்தது. ஆனால், அடுத்த தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஎம் தலைவர் வி.பி.சிந்தனிடம் தோற்றுப்போனார். எம்ஜிஆர் மறைவை யடுத்து ஜானகி அணியில் சேர்ந்தார். 89ஆம் ஆண்டு தேர்தலில் அதே சிபிஎம் கட்சியின் இன்னொரு தலைவர் உ.ரா.வரதராசனிடமும் தோல்வியைக் கண்டார்.
இடைப்பட்ட காலத்தில் கருப்பையா மூப்பனாருடன் இணைக்கமாக இருந்தார்.
மீண்டும் 2011இல் ஜெயலலிதாவைச் சந்தித்து அதி.மு.க.வில் சேர்ந்து, வில்லிவாக்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் க.அன்பழகனைத் தோற்கடித்தார். கடந்த தேர்தலில் அதே அன்பழகனின் பேரனிடம் தோற்றுப்போனார். அதற்குமுன் 2016இல் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினிடமும் தோல்வியைத் தழுவினார்.
வெற்றி, தோல்வி என மாறிமாறி வந்தபோதும், பீனிக்ஸ் பறவையைப்போல 73 வயதிலும் த.வெ.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராகி சட்டப்பேரவைத் தலைவராகவும் கம்பேக் கொடுத்துள்ளார், பிரபாகர்.
கழகம் முதல் காங்கிரஸ் வரை
சு.திருநாவுக்கரசர்
எம்.ஜி.ஆர். ஆட்சியின் துடிப்புமிக்க அமைச்சர்களில் ஒருவராக வலம்வந்த அறந்தாங்கி திருநாவுக்கரசு, அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில் நின்றார்... இல்லையில்லை, ஜெயலலிதாவையே காத்துநின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அது ரொம்ப காலத்துக்கு நீடிக்கவில்லை. நெடுஞ்செழியன் முதலியவர்களுடன் நால்வர் அணியாக ஜெயலலிதாவுக்கு எதிராக இயங்கினார்.
1991-96 ஜெயலலிதா ஆட்சி கடுமையான எதிர்ப்பில் முடிவுற்றபோது, மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார். ஆனால் அது சிறிது காலம்தான் நீடித்தது.
ஏற்கெனவே நால்வர் அணியிலிருந்து பிரிந்து, அண்ணா புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, கலைத்தவர், மீண்டும் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற இன்னொரு கட்சியைத் தொடங்கினார். அதையும் பா.ஜ.க.வுடன் இணைத்துவிட்டார். ஆனால், 1999இல் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் வென்று எம்.பி. ஆனார். வாஜ்பாய் அமைச்சரவையில் 2004ஆம் ஆண்டுவரை மத்திய இணை அமைச்சராகப் பதவிவகித்தார். அந்தக் காலகட்டத்தில்தான் எண்ணியல்படி தன் பெயரை மாற்றி திருநாவுக்கரசர் ஆனார்.
பின்னர், ஜெயலலிதா மீண்டும் பா.ஜ.க.வுடன் சேர்ந்தபோது திருநாவுக்கரசருக்கு தேர்தல் வாய்ப்பு தரவிடாமல் பா.ஜ.க.வுக்கு நிபந்தனை விதித்தார். அவரை மத்தியபிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக ஆக்கியது, பா.ஜ.க. தலைமை.
பிறகு, 2009இல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவியவர், அங்கு 2016இல் மாநிலத் தலைவராகவும் ஆனார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அளவில் தலைவர்களில் ஒருவராக மீண்டும் வலம்வநது கம் பேக் கொடுத்தார். 2019இல் திருச்சி தொகுதியில் எம்.பி.யாகவும் ஆனார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தன் மகன் ராமச்சந்திரனை அரசியலில் நுழைத்துவிட்டவர் இப்போது அமைதியாக இருந்தாலும் அடுத்த கம்பேக்கை எப்போதும் நிகழ்த்தக்கூடும்!