திரையரங்கில் வெளியாகும் தமிழ்ப் படங்களில் பலவிதமான அரசியல் கருத்துகள் இருக்கின்றன. ஆனால் நேரடியாக அரசியலைத் தொட்டு நேர்மையுடன் பேச முயற்சி செய்யும் படங்கள் குறைவே. தமிழ்ச்சூழலில் நிலவும் பல நெருக்கடிகள் அதற்குக் காரணமாக அமைகின்றன. இங்கே பிரபலமான அதே சமயம் முக்கியமான ஒருசில அரசியல் படங்களைப் பார்ப்போம்.
திரையில் நிமிர்ந்த மனிதன்: மாமன்னன்
திரையரங்கில் அந்தக் காட்சி வந்தபோது ஒரு விசித்திரமான அமைதி உருவானது. பெரிய வசனம் இல்லை. பின்னணி இசை இல்லை. சட்டமன்ற இருக்கையில் ஒருவன் அமைதியாக அமர்ந்திருக்கிறான். அவன் எதையும் செய்யவில்லை. எதையும் பேசவில்லை. ஆனால் அரங்கில் பலத்த கவனம்.
மக்கள் காட்சியைப் பார்க்கவில்லை; ஒருவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நிமிடத்தில் கதையை நாம் பின்தொடரவில்லை; ஒரு மனிதன் திரையில் இருப்பதை அனுமதித்தோம். அந்த அனுமதிதான் இந்தப் படத்தின் முதல் அரசியல். அங்கிருந்தே மாமன்னன் தொடங்குகிறது.
தமிழ் சினிமா அரசியலைப் பற்றி பேசுகிறது என்று நாம் பெருமையாகச் சொல்வோம். உண்மையில் அது நீண்ட காலம் அதிகாரத்தைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தது; மனிதனைப் பற்றி அல்ல. ஓர் எளிய கேள்வி எழுகிறது: யார் திரையைப் பார்க்கிறார்கள், யாரை திரையில் பார்க்கச் செய்கிறார்கள்? கேமரா யாரை மனிதனாக ஏற்கிறது என்பதே ஒரு திரைப்படத்தின் முதல் அரசியல்.
தமிழ் சினிமாவின் மரபான ஒழுங்கில் கீழ்த்தட்டு மனிதன் பின்னணியில் நிற்கும் உடலாக இருந்தான்; மேல்தட்டு மனிதனுக்கு மட்டும் நெருக்கக் காட்சி. அவனுக்கு முகம் உண்டு, தனி உணர்ச்சி உண்டு. அதிகாரம் தனிமனிதனாகக் காட்டப்படுகிறது; கீழ்த்தட்டு மனிதன் பொதுமனிதனாகக் காட்டப்படுகிறது. சினிமா கதை சொல்லும் கலை மட்டும் அல்ல; பார்வையாளரை எங்கு நிறுத்துகிறது என்பதைக் கூறும் அரசியல் கருவி.
மாரி செல்வராஜ் இந்த இலக்கணத்தை உடைக்க சத்தம் போடவில்லை; அதை மெதுவாக மாற்றுகிறார். மாமன்னன் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் காட்சிகளை நினைவில் கொள்ளுங்கள். பின்னணி இசை இல்லை. பெரிய வசனம் இல்லை. அவர் பேசவில்லை. ஆனால் காட்சி நீள்கிறது. கேமரா அவரை விட்டு நகர மறுக்கிறது. இதுவே மரியாதையின் தொடக்கம். வசனம் மரியாதை தரவில்லை; நேரம் தருகிறது. ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படும் திரைநேரம்கூட அரசியல் ஆகிறது.
அதே நேரத்தில் ரத்னவேல் அமைதியாக இருப்பதில்லை. அவசரமான காட்சிகள். முனைந்து வரும் உடல். இடைவிடாத இயக்கம். அதிகாரம் எப்போதும் சத்தமாக இருக்க விரும்புகிறது. தன்னை நிரூபிக்கத் தொடர்ந்து அசைந்துகொண்டே இருக்கிறது. மாமன்னன் அமைதியான இருப்பு; ரத்னவேல் சத்தமான ஆற்றல். நாம் யாரை நீண்ட நேரம் பார்க்கத் தயார் ஆகிறோமோ அங்கேயே அதிகார மாற்றம் ஆரம்பமாகிறது.
இந்தப் படத்தில் மீண்டும் மீண்டும் முன் வருவது நாய். ரத்னவேல் அதை நேசிக்கிறான். அந்த நேசிப்பு அவனைக் கேட்கிறது — கட்டுப்படுத்தப்பட்ட வன்முறை. ஒழுங்கு, மரியாதை என்ற பெயரில் அடக்கப்பட்ட தாக்குதல். வன்முறை அவனிடம் செல்லப்பிராணியாகி விட்டது.
மாமன்னன் அந்த நாயைக் கண்டு பயப்படுகிறார். அவர் அந்த நாயை விலங்காக மட்டும் காணவில்லை; வரலாற்றைக் காண்கிறார். பதவி கிடைத்துவிட்டது. நாற்காலி கிடைத்துவிட்டது. ஆனால் அவரது உடல் இன்னும் பழைய உலகத்தில் இருக்கிறது. தலையைக் குனிகிறார். பேசாமல் இருக்கிறார். இடம் விட்டு விலகுகிறார். இது குணம் அல்ல; கற்றுக்கொண்ட உடல் மொழி. ஜனநாயகம் சட்டத்தில் இருக்கிறது; மனதில் இன்னும் வரவில்லை என்பதற்கான காட்சிப்பதிவு இது.
இங்கே மகன் அதிவீரன் எதிர்க்கிறான், மோதுகிறான்; தந்தை மாமன்னன் அமைதியை ஏற்கிறார். இது இரண்டு மனிதர்களின் மோதல் மட்டும் அல்ல; இரண்டு தலைமுறைகளின் மனநிலை. தந்தை சமரச தலைமுறை — அவமானத்தைத் தாங்கி வாழ கற்ற தலைமுறை. மகன் உரிமை கேட்பது தவறல்ல என்று நம்புகிறவன். அவன் கோபம் தனிப்பட்டது அல்ல; திரையரங்கில் அமர்ந்திருக்கும் பலரின் அடக்கப்பட்ட உணர்ச்சி.
வடிவேலு நடிப்பு “காட்டாத” வழியில்தான் பெரியதாகிறது. அவர் உணர்ச்சிகளை வெளியில் பரப்பவில்லை; உணர்ச்சி உருவாகும் அமைதியை மட்டும் பிரேமில் வைக்கிறார். அவர் நம் கவனத்தை கவர முயலவில்லை — பாத்திரத்தின் வாழ்வு தானாகவே அவரிடம் தங்கி வெளிப்படுகிறது. அதனால் அது ‘நடிப்பு’ போலத் தெரியவில்லை; திரையில் ஒரு மனிதன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற உணர்வைத் தருகிறது.
அதிவீரன் பாத்திரத்தை வேறு நடிகர் நடித்திருந்தாலும் கதைக்கு அர்த்தம் இருந்திருக்கும். ஆனால் உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பதால் அது கூடுதல் அரசியல் அடுக்கைப் பெறுகிறது.
கிளைமாக்ஸில் மோதல் வருகிறது. அது அரசியல் தீர்வு அல்ல; வாழ்வில் சொல்ல முடியாத அவமானத்துக்கு கற்பனையில் கிடைக்கும் பதில். இந்தப் படம் நம்மை யாரிடமும் நிறுத்தவில்லை; நம்மை நம்மிடமே நிறுத்துகிறது. மாமன்னன் பேசாமல் அமர்ந்திருக்கும் நீண்ட தருணங்களில் பார்வையாளர் தன்னையே கவனிக்கத் தொடங்குகிறார். நாம் தினசரி வாழ்க்கையில் பேசாமல் விலகிய தருணங்கள் நினைவிற்கு வருகிறது. அவை பெரிய அரசியல் சம்பவங்கள் அல்ல; ஆனால் மனிதனுக்கு மரியாதை மெதுவாகக் குறையும் இடங்கள். அந்தச் சிறிய மௌனங்களின் தொகுப்புதான் சமூக நினைவு. படம் அந்த நினைவைக் கிளறுகிறது.
அதனால் இந்த மாற்றம் வெறும் தனிப்பட்ட வெற்றி அல்ல. மாமன்னன் குரல் எழுப்பும் தருணம் முக்கியமல்ல; அவர் அமைதியாக இருந்த காலம் முக்கியம். அந்த அமைதி வெடிக்கும் போது பார்வையாளர் கைதட்டுவது திரைக்காக இல்லை; தன் வாழ்க்கையில் ஒருநாள் சொல்ல முடியாமல் விட்ட வார்த்தைக்காக.
சினிமா சில நேரங்களில் நமக்கே தெரிந்த வாழ்க்கையைப் புதிய வெளிச்சத்தில் காட்டுகிறது. ஒரு மனிதன் நாற்காலியில் அமர்ந்து நேராகப் பார்ப்பது சாதாரண செயல். ஆனால் அந்தச் சாதாரணம் பலருக்கு எவ்வளவு அரிது என்பதை படம் உணர்த்துகிறது.
ஒரு திரைப்படம் முடிந்தபின் கதைக்களம் மறைந்து விடும்; வசனங்கள் விலகிவிடும். ஆனால் பார்வை தங்கும். இந்தப் படத்துக்குப் பிறகு நாம் வழக்கமாக கவனிக்காமல் கடந்து செல்வோரை ஒரு நொடிக்கு நிறுத்திப் பார்க்கத் தொடங்குகிறோம். சமூக மாற்றம் மனிதன் மற்றொரு மனிதனை கவனமாகப் பார்க்கும் அந்தச் சிறிய தருணத்தில்தான் தொடங்குகிறது.
இதனால் மாமன்னன் மூன்று அடுக்குகள் கொண்ட படம்:
முதலில் பார்வை மாறுகிறது — காணப்படாத மனிதர் திரையில் நிற்கிறார். அடுத்து மனநிலை வெளிப்படுகிறது — பயம் இன்னும் அவரது உடலில் வாழ்கிறது. இறுதியில் கற்பனை நீதிமன்றம் உருவாகிறது — நிஜத்தில் கிடைக்காத மரியாதை திரையில் அனுபவிக்கப்படுகிறது.
அரசியல் உரைகள் சமத்துவத்தை அறிவிக்கின்றன. சட்டங்கள் சமத்துவத்தை உறுதி செய்கின்றன. ஆனால் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை நேராகப் பார்த்து மரியாதை கொடுக்கும் அந்தச் சிறிய தருணம்தான் உண்மையான மாற்றம். படம் முடிந்தபின் உலகம் அதேபோல இருக்கும்; ஆனால் பார்வையாளன் சற்றே நேராக நிமிர்ந்து நடக்கத் தயாராகிறான். அந்த நிமிர்வுதான் இந்தப் படத்தின் உண்மையான கிளைமாக்ஸ்
- சோழன் வாலறிவன்
ஓர் ஓட்டின் மதிப்பு: மண்டேலா
எந்தவொரு கலை வடிவத்திற்கும் பொருந்தும் மிக முக்கிமான அம்சமென்பது சமூகத்தைக் கண்ணாடி போல் பிரதிபலிப்பதாகும். அப்படியாகச் சமூகத்தில் நிலவி வரும் ஓட்டரசியலின் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டியது 2021 இல் வெளியான 'மண்டேலா' திரைப்படம்.
இப்படத்திற்காகச் சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த திரைக்கதை எழுத்துக்கான தேசிய விருதுகளை வென்றார் மடோன் அஷ்வின். தேசிய விருதுகளைப் போல் மாநில அரசின் விருதுகளுக்கும் மிகத் தகுதியுடையப் படமாக இருந்தும், தமிழ்நாட்டில் யாரும் பேசத் துணியாப் பேசுபொருளைத் தொட்டதற்காகவோ என்னவோ மாநில அரசின் விருதுப் பட்டியலில் இடம்பெறாமல் போய்விட்டது மண்டேலா.
கொள்கைப் பிடிப்பு கொண்ட ஊர்த்தலைவராக கருணாகரன் இருந்தும், சூரங்குடி எனும் ஊரில் அவரால் ஒரு சின்ன நல்லதைக்கூடச் செய்யமுடியவில்லை. காரணம், சாதியரீதியாக ஊர் இரண்டாகப் பிளவுப்பட்டுள்ளது. ஊர்த்தலைவரின் ஒரு கையெழுத்துக்கு ஐந்து கோடி ரூபாய் பணம் லஞ்சமாகக் கிடைக்கும் என்றறிந்ததும், கருணாகரனின் மகன்களான ரத்தினமும் மதியும் அப்பதவிக்குப் போட்டியிடுகின்றனர். அதற்குத் தூபம் போட்டவண்ணம் இருக்கிறார் கமிஷன் பணத்திற்காகக் காத்திருக்கும் எம்எல்ஏ.! ரத்தினத்தின் பின் ஒரு சமூகமும், மதியின் பின் வேறொரு சமூகமும் சரிசமமாகப் பிரிந்து நிற்கின்றன.
நம் சமகாலக் கட்சி அரசியலின் போதாமைகளை மிகத் துல்லியமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் மடோன் அஸ்வின். சாதிப் பாகுபாடில்லாத ஊராகச் சூரங்குடி திகழவேண்டும் எனக் கருதுகிறார் கருணாகரன். சமூகநீதிக்காகச் செலவழிக்கப்பட்ட அவரது இளமைக் காலம்தான் அவரை அதுநாள் வரை ஊர்த்தலைவராகப் பதவியில் இருக்க உதவுகிறது. ஆனால், அவர் நம்பும் கொள்கைகளை, அடுத்த தலைமுறையினருக்குக் கடத்த அவர் தவறிவிடுகிறார். அவருடைய மகன்களில் ஒருவரான ரத்தினம் குடிநீர் கேன் தொழிலிலும், இன்னொரு மகனான மதி டாஸ்மாக் பாரை எடுத்தும் நடத்துகின்றனர். முன்னேராக இருப்பவரின் அரசியலைப் பின்பற்றிச் செல்ல வேண்டியவர்கள், அதிகாரத்தையும் பணத்தையும் ருசி பார்ப்பவர்களாக மாறிவிடுகின்றனர். சமூக நீதி இரண்டாம் பட்சமாகி, அதிகாரத்தைத் தக்க வைக்கும் வழிகளில் சிதறுண்டு போகின்றனர். ஊருக்கு நல்லது நினைக்கும் மனோபாவத்தையே பழமைவாதம் என எள்ளி நகையாடுகிறார் கமிஷன் பணத்தின் மீது குறியாக இருக்கும் எம்எல்ஏ. அரசியலுக்கு நகர்ந்த பின், சமூக நீதியை நிலைநாட்ட உதவிய மிகப் பெரும் சித்தாந்தம் மெல்ல மங்கத் தொடங்கி, அதிகாரமும் பணமுமே முதன்மை லட்சியங்களாக மாறிவிடுகின்றன. இச்சூழலை, கறை படிந்த வேட்டியோடு கருணாகரனை அறிமுகம் செய்து மிக அழகாக உருவகப்படுத்தியிருப்பார் இயக்குநர்.
வெற்றிக்குத் தேவை ஓர் ஓட்டு என்ற நிலையில், ஊராரால் இளிச்சவாயனாகப் பார்க்கப்படும் சிகையலங்கார நிபுணரான நெல்சன் மண்டேலாவிற்குப் புதிய வாக்காளர் அடையாள அட்டை வந்து சேருகிறது. அவரது அந்த ஓர் ஓட்டின் மதிப்பு கோடிக்கு எகிறுவதோடு, அவரது உயிருக்கும் அச்சுறுத்தலாய் மாறுகிறது. பணம் கொடுப்தையும் வாங்குவதையும் சமூகம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இயல்பானதாக ஏற்றுக் கொண்டுவிட்டது என்பது இன்றைய அரசியலின் மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.
சூரங்குடி மண்டேலா தனது ஒற்றை ஓட்டைச் சூரங்குடியின் நலனுக்காகப் பயன்படுத்துகிறார். சாதியின் பெயரால் எந்த வளர்ச்சிக்கு ரத்தினமும் மதியும் தடையாக இருந்தார்களோ, அவற்றையெல்லாம் ஒற்றை ஓட்டின் பொருட்டு ஊருக்கு அமைத்துத் தருகிறார்கள். ஒரு நெருக்கடியினின்று, இந்தியக் குடிமகன் என்ற அடையாளமே இல்லாத நெல்சன் மண்டேலா ஊருக்கு உபகாரம் செய்பவராக மாறுகிறார். பெரும் நெருக்கடிகள் அற்ற சமூகம், ‘வாழ்தல்’ போதும் என்ற சுகமான தேக்கநிலையை நோக்கி நகர்ந்து விடுவதால், எல்லா அலட்சியங்களும் விதிமீறல்களும் ஊழல்களும் இயல்பானதே என விமர்சனங்களின்றி ஒருமித்தமாக ஏற்றுக் கொள்கிறது.
தற்கால அரசியல் மீது காத்திரமான விமர்சனங்களை முன் வைத்தாலும், ஆபத்துக் காலத்தில் நெருக்கடிகளைச் சமாளிக்கச் சாமானியனுக்குப் பக்கத்துணையாக எஞ்சியிருப்பதும் திராவிடச் சித்தாந்தம் மட்டுமே என்பதைப் படத்தின் முடிவில் வலியுறுத்தியிருப்பார். மண்டேலாவின் உயிரைக் காப்பாற்ற சக்கர நாற்காலியில் முதலாளாக வருவார் கருணாகரன் பெரியார். வாழ்தல் எனும் தேக்கநிலையில் தமிழ்நாட்டு மக்கள் திளைத்திருந்தாலும், தக்க சமயத்தில் பெரியாரின் பின் ஊரே கூடும் என்று மடோன் அஷ்வின் படத்தை முடித்திருப்பதாகக் கொள்ளலாம்.
- தினேஷ் ராம்
அமாவாசைக்கு அழிவில்லை: அமைதிப்படை
அமைதிப்படை வெளியான போது அப்படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதைக் காது குளிர ‘கேட்கும்’ வாய்ப்புதான் கிட்டியது. படம் வெளியான 1994இல் நான் ஆரம்பப் பள்ளி மாணவன். கோவை பேரூரில் ஊர்த்திருவிழாவுக்கு மைக்செட் கட்டினால் பத்து நாளைக்கு திரைப்படங்கள் ஒலிச்சித்திரங்களாக ராத்திரி பகலாக தெருவுக்கு தெரு ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
கல்வியா செல்வா வீரமா, மாம்பழம் எனக்குத்தான், பாண்டிய நாடே என் பாட்டுக்கு அடிமை என முருகனும் நாரதரும் சிவபெருமானும் இடையறாது பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி அந்த ஆண்டு கடவுள்களோடு இணைந்து அமாவாசையும் மணியனும் தீவிர அரசியல் பேசினார்கள். அனேகமாக கோயில் திருவிழாக்களில் பராசக்திக்கு பிறகு ஒலிக்கிற அரசியல் திரைப்படமாக அமைதிப்படைதான் இருந்திருக்கும். இப்போதும் கூட எங்காவது ஒலித்துக்கொண்டிருக்கும்.
தாயை ஏமாற்றி கைவிட்டுப்போன தீய தந்தையை பழிவாங்கும் நல்ல மகன் என்கிற கடல்மீன்கள், மிஸ்டர் பாரத் முதலான எண்பதுகளின் டெம்ப்ளேட் கதைதான். படம் நெடுக கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத காட்சிகள், சுமாரான மேக்கிங், போர் அடிக்கிற லவ் ட்ராக் என எல்லாமே இருந்தும் படம் காலம் கடந்து நிற்க காரணம் அது பேசிய அரசியல்தான். தான் பேச விரும்புகிற அரசியலை எந்த சமரசங்களும் இல்லாமல் பேசி இருப்பார் இயக்குநர் மணிவண்ணன்.
அவர் சொல்ல விரும்பிய அரசியல் திராவிடக்கட்சிகளின் மீதான நேரடியான விமர்சனமாக இருந்தது. மணிவண்ணன் பெரியாரியமும் கம்யூனிஸமும் தமிழ்த்தேசியமும் இணைந்த அரசியல் பார்வையை கொண்டிருந்தவர்.
அதனாலேயே இப்படத்தின் டைட்டில் பாடலில் தமிழ் உணர்வும் இருக்கும் வர்க்க அரசியலும் இருக்கும்படி எழுதப்பட்டிருக்கும். ஆனால் படம் தமிழ் உணர்வு பற்றியதோ வர்க்க அரசியல் பற்றியதோ அல்ல. அப்போது ஈழப்போர் நடந்துகொண்டிருந்த இலங்கைக்கு இந்தியா அனுப்பிய ராணுவத்தின் பெயர்தான் அமைதிப்படை, அதைப்பற்றியும் படம் பேசி இருக்காது. இந்தப்பெயரை வைத்துக்கொண்டு திராவிடக்கட்சிகளின் மீதான விமர்சனமாகவே எடுக்கப்பட்டிருந்தது.
படம் வெளியான காலகட்டம் மிகமுக்கியமானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 1994ல் ஊழலும் அதிகார துஷ்பிரயோகங்களும் மலிந்திருந்த காலகட்டம். கும்பகோணம் மரணங்கள் அப்போதுதான் நிகழ்ந்திருந்தன. (படத்திலும் அது குறித்த வசனங்கள் நேரடியாகவே இடம்பெறுகிறது) சுடுகாட்டுக்கொட்டகையில் கூட ஊழல் நடந்துகொண்டிருந்தது. இன்னொரு பக்கம் சாதிய மோதல்கள் படுகொலைகள் என தென்மாவட்டங்கள் எப்போதும் தகித்துக்கொண்டிருந்தன.
இதே காலகட்டத்தில் வைகோ திமுகவிலிருந்து வெளியேறி மதிமுகவை தொடங்குகிறார். இந்த இரு கட்சிகளையும் தீவிரமாக வைகோ விமர்சித்துக்கொண்டிருந்தார். தன்னை ஒரு மாற்றாக முன்வைத்தார். மணிவண்ணன் வைகோவுக்கு நெருக்கமானவர் என்பதும் இங்கே முக்கியமானது. வைகோ கட்சி தொடங்கிய 1994ல்தான் அமைதிப்படை வெளியாகிறது.
அமாவாசை என்கிற நாகராஜசோழன் அன்றைய கால அரசியல்வாதிகளின் பிரதிநிதியென படைக்கப்பட்டிருந்தார். இன்ன தலைவர் என்று நேரடியாக யாரையும் சுட்டிக்காட்டிவிடுகிற மாதிரி இல்லாமல் எல்லா தலைவர்களிலும் கொஞ்சம் கொஞ்சம் ஒரு ஒரு ஸ்பூன் எடுத்து போட்டு உருவாக்கிய பாத்திரமாக நாகராஜசோழன் படைக்கப்பட்டிருந்தார்.
படத்தில் அமாவாசை அரசியல் மேடையில் அண்ணா, பெரியார், கலைஞர், கொள்கைகளை அவர்களைப்போலவே மிமிக்ரியில் பேசி மக்களிடம் நன்மதிப்பை பெறுவதிலிருந்துதான் அவனுடைய அரசியல் பயணமே ஆரம்பிக்கும். அவன் அண்ணா அண்ணா என்று மணிவண்ணனை அழைத்துதான் கட்சியில் முன்னேறுகிறான். அங்கிருந்து எப்படி படிப்படியாக முன்னேறி நாட்டை ஆளுகிற மக்கள் பிரதிநிதி ஆகிறான் என்பதிலிருந்தே படம் தொடங்குகிறது.
மேடையில் என்ன கொள்கை பேசினாலும் அவனுடைய ஒரே கொள்கை ‘’நாம முன்னேறணும்னா நாய் என்னங்க மனுஷன் என்னங்க… கொன்னுபோட்டு போய்ட்டே இருக்கவேண்டியதுதான்’’ என்பது மட்டும்தான். படம் நெடுக தனக்கு பிரச்னையாக இருப்பவர்களைக் கொலை செய்வதை சொல்லிலும் செயலிலும் காட்டிக்கொண்டே இருக்கிறான். ‘அழகான பொண்ணுக்கு அம்மா இருக்கக்கூடாதுங்க கொன்னுரலாம்ங்க’ என்பதில் தொடங்கி… ‘இமேஜை காப்பாத்திக்க கொலை பண்ணாமயும் இருக்க தெரியும் கொலைய பண்ணிட்டு அதுல ஒரு இமேஜை உருவாக்கிக்கவும் தெரியும்’ என்கிறான்.
அல்லக்கையாக அண்டிப்பிழைத்து ஏற்றிவிட்டவனையே காலிபண்ணுகிற தந்திரம். கொள்கை என்று எதுவுமே இல்லாமல் நாற்காலிக்காக கட்சிதாவிக் கொண்டே இருக்கிற சுயநலம். பதவிக்காக காலில் விழவும் காலை வாறவும் தயங்காத சாமர்த்தியம், விசுவாசிகள் என்ற பெயரில் காலில் விழுந்து எல்லாவற்றுக்கும் சிந்திக்காமல் வாழ்க சொல்லும் கலாச்சாரம். சாதி மற்றும் மதம் இரண்டையும் வைத்துக்கொண்டு மக்களை தூண்டிவிட்டு பகடை ஆடுகிற அரசியல் சூழ்ச்சி, தன்னுடைய இமேஜை காத்துக்கொள்ள யாரையும் கொலை பண்ணவும் துணிகிற மனநிலை என அமாவாசையின் பாத்திரப்படைப்பு கச்சிதமாக எழுதப்பட்டிருந்தது. வெளியே ஒரு முகம் உள்ளே இன்னொரு முகம் என்கிற அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருப்பார். ஏன்டா எங்க போனாலும் ஜே போடறீங்க என்று சொல்லிவிட்டு நான் அப்படிதான் சொல்லுவேன் நீங்க போடுங்கடா என்று சொல்லுகிற குணவார்ப்புதான் அமாவாசை.
அந்த பாத்திரத்துக்கு பக்கபலமாக வசனங்கள் அமைந்திருந்தன. ‘கோயில் வேண்டாம்னு சொன்ன யாருமே கோயிலை இடிச்சதில்ல, கோயில் வேணும்னு சொல்வறவன்தான் கோயிலை இடிக்கிறான்’, ‘ஜனங்களுக்குள்ள நாமளே சண்டைய மூட்டியுட்டோம்னா நாம பண்ண தப்பையெல்லாம் மறந்து நமக்கே ஓட்டுபோட்ருவானுங்க’, ‘சாதியாவும் மதமாவும் மக்கள் பிரிஞ்சு கெடக்குறவரை நம்மள மாதிரி அரசியல்வாதிங்க குதரை ஏறிட்டே இருக்க வேண்டியதுதான்..’சாதிய மந்திரம் ஓதறவங்க கண்டுபுடிச்சாங்க மந்திரிமாருங்க அத கெட்டியா புடிச்சிடானுங்க’ என மணிவண்ணன் தான் பேச நினைக்கிற எல்லா அரசியலையும் நாகராஜகுரலில் சொல்லி இருப்பார்.
அரசியல் சரி தவறுகளை முன்னிறுத்துகிற அதை நையாண்டி பண்ணுகிற இப்படத்தில் நாயகனின் பெயர் அமாவாசை என்பது சற்று நெருடல். இப்பெயர் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே வைக்கிற பெயராக இருந்தது நம் வரலாறு. அவர்களுக்கெல்லாம் நற்றமிழ் பெயர்களை சூட்டி அவர்களுக்கு சால்வையும் மேடையும் தந்து அவர்களே அவர்களே என்கிற மரியாதையையும் பெற்றுத்தந்து அதிகாரத்தில் சம உரிமையை பகிர்ந்தளித்தது மணிவண்ணன் பகடி பண்ணிய அதே திராவிட இயக்கம்தான். உண்மையான வில்லன்களான ஆண்டைகளை அதுவரை தின்று கொழுத்த மணியன்களை பாவப்பட்ட அப்பாவிகளாகவும் ஏமாளிகளாகவும் காட்டிவிட்டு ஒடுக்கப்பட்ட கூட்டத்தில் இருந்து வரும் ஒருவனை இத்தனை வில்லனாக்கி ஊழல்வாதியாக காட்சி படுத்தியதும் அவனுடைய வளர்ச்சியை விமர்சனத்துக்கு உட்படுத்தியதும் மிகப்பெரிய அரசியல் சறுக்கலே என இதை வேறு கோணத்திலும் விமர்சிக்கமுடியும்.
- அதிஷா வினோத்
வெற்று சாகசம்: முதல்வன்
ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான். 1999இல் வெளியான ‘முதல்வன்’ திரைப்படத்துக்கு அப்படியொரு வாய்ப்பு அமைய ‘ஒரு நாள் முதல்வன்’ என்ற கதையும், அப்போதிருந்த அரசியல் சூழலுமே காரணம்.
சென்னையில் Q தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் புகழேந்திக்கு (அர்ஜுன்) முதலமைச்சர் அரங்கநாதரை (ரகுவரன்) பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரின் கிடுக்குப்பிடி கேள்வியால் கோபம் தலைக்கேறி, “ஒரு நாள் நீ சி.எம்மாக இருந்து பார்…!” என சவால் விடுவார் ரகுவரன். “இது சாத்தியம்னா… தயார்” என்பார் 28 வயதான புகழேந்தி.
பதவியேற்பு விழா நடந்தபிறகு, அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க, தேர்தலில் ‘பழம் தின்னு கொட்டை போட்ட’ அரசியல்வாதிகள் மண்ணைக் கவ்வுவார்கள். பிறகு புகழேந்தி ஆட்சியில் நாடு (படத்தில் மாநிலம் என்ற வார்த்தையைப் பெரும்பாலும் பயன்படுத்தவில்லை) வளம் பெறுகிறது.
படத்தலைப்பிலேயே இயக்குநர் ஷங்கரின் படைப்புத்திறன் வெளிப்பட்டிருக்கும். U.K.வின் கொடி முதலிலும், பிறகு மற்ற நாடுகளின் கொடிகளும் கூட்டாகச் சேர்ந்து ‘முதல்வன்’ என்று தலைப்பு திரையில் விரியும். கதை, திரைக்கதை, கதாபாத்திர உருவாக்கம், பிரமாண்டம் என எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்த இயக்குநர், படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களையும் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கும் விதமாக எடுத்திருப்பார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையும், கே.வி. ஆனந்தின் ஒளிப்பதிவும் எப்படி இருக்கும் என வாசகர்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
ஊடக நேர்காணல் பரவலாகாத காலத்திலேயே செய்தியாளர் புகழேந்தி, முதலமைச்சர் அரங்கநாதனை ‘நேருக்கு நேராக’ எடுக்கும் அந்த நீளமான நேர்காணல் தமிழ்த் திரையுலகில் வெகு அபூர்வம். ஒரு வணிக திரைப்படத்தில் 13 நிமிடத்திற்குச் சுவாரசியம் குறையாமல் காட்சியாக வைப்பது மிகவும் சவாலான சோதனை. இதை எழுத்தாளர் சுஜாதாவும் இயக்குநர் ஷங்கரும் படத்தொகுப்பாளர்கள் லெனினும் வி.டி.விஜயனும், பின்னணி இசையில் ஏ. ஆர். ரஹ்மானும் சேர்ந்து உடைத்திருப்பார்கள்.
ஒருநாளுக்கு மட்டும் முதலமைச்சராக புகழேந்தி பதவியேற்றதும் படம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். “நம்ம நாடு முன்னேறாமல் இருக்க மூன்று பேர் காரணம். ஒன்னு, அவங்கவங்க கடமையை செய்யாதவங்க. இரண்டு, கடமையை செய்யும்போது குறுக்கிடறவங்க. மூணு அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்றவங்க..” என தனது கன்னிப்பேச்சில் கூறும் புகழேந்தி, நேராக குடிசைப்பகுதிக்குச் செல்வார். அவருடன் வரும் தலைமைச்செயலாளரான மணிவண்ணன், “என்ன சார்... நீங்களும் சேரிக்கு வந்துட்டீங்க... நீங்களும் மத்தவங்க மாதிரி இலவச அரிசி, வேட்டி சேலை பல்பொடிலாம் கொடுக்கப்போறீங்களா..?” என கேட்க.
“அது இல்லை… நம் நாட்ல குடிசைங்களே இருக்கக் கூடாதுனு நினைக்கிறேன்.” என்பார் அர்ஜுன். உடனே மணிவண்ணன், “நம்ம அரசியல்வாதிகளும் அதையே நினைச்சுதான் அடிக்கடி தீ வச்சிடுறாங்க...” என்பார். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் குடிசை பகுதிகள் அடிக்கடி தீ பற்றி எரிந்ததை வசனத்தில் கொண்டுவந்திருப்பார் சுஜாதா. இப்படி யோசித்து வியக்கவைக்கும் வசனங்கள் படத்தில் ஏராளம்.
இந்த லட்சியவாத படத்தின் மீது விமர்சனம் இல்லையா என்றால் இருக்கிறது. லாஜிக்கையெல்லாம் தூக்கி மூலையில் வைத்துவிட்டு ஜாலியாகப் பார்க்கக் கூடிய படமல்ல முதல்வன்.
அரசியல்வாதிகள் என்றாலே தந்திரக்காரர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், சாதியை மூலதனமாக கொண்டவர்கள், மனசாட்சி இல்லாமல் கொள்ளையடிப்பவர்கள், அறிவு இல்லாதவர்கள் என்ற பாமரத்தனமான கருத்தையே படம் முன்வைக்கிறது.
இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட நான்கு முதலமைச்சர்கள் சினிமாவிலிருந்து வந்தவர்கள். அதிலும் திராவிடக் கருத்தியலைப் பின்புலமாக கொண்டவர்கள். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்வரிசையில் இருக்க அவர்களும், அவர்கள் கொண்டுவந்த திட்டங்களுமே காரணம். இவை எதையுமே படம் பேசாமல், புகழேந்தியின் சாகச நடவடிக்கைகளும், நடைமுறைக்கு ஒத்துவராதவற்றையுமே படம் தீர்வாக முன்வைக்கிறது. அது அரசியல் என்றாலே மோசம் என்று விலகி நிற்கும் படித்த நடுத்தரவர்க்கத்தின் பார்வையிலிருந்து எடுக்கப்பட்ட படம்.
உதாரணமாக, சென்னையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட குடிசைப்பகுதி மக்களின் உண்மையான பிரச்னைகள் என்னவென்று தெரியாமல் “மொட்டைத் தாத்தன் குட்டையில் விழுந்த கதை"யாக படம் ஒரு தீர்வைச் சொல்கிறது. அவர்களே விரும்பி சென்னைக்கு வெளியே போவது போன்று காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
மேலும், சாதியை ஒழிக்க புகழேந்தி ஒரு வழி சொல்வார். “தமிழ்நாட்டில் மொத்தம் 300 சாதிகள் உள்ளன. ஆனால் என்னுடைய ஆட்சியில் இதை நான்காக மாற்றப்போகிறேன். காலப்போக்கில் இது இரண்டு ஆக மாறும். பிறகு காணாமல் போகும்” என்பார். சாதியின் தோற்றம், அதன் இயங்கியலை புறம்தள்ளும் ஒருவரால் தான் இப்படியான ஒரு வசனத்தை எழுத முடியும்.
அதேபோல், மொழிப்போராட்டத்தில் உயிர்நீத்த கீழப்பழுவூர் சின்னசாமி, அரங்கநாதன் ஆகியோரின் பெயரை எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு வைத்திருப்பதும், புகழேந்தி அறிமுகப்படுத்தும் புகார் பெட்டியில் மனுநீதி சோழனிடம் நீதி கேட்கும் பசுமாடும் ஆராய்ச்சி மணியும் இடம்பெற்றிருப்பது எதேச்சையானதாகத் தோன்றவில்லை!
- தா. பிரகாஷ்