சிறப்புப்பக்கங்கள்

பொறுத்தவர் கையில் உலகம்!

Staff Writer

பொறுமை கசப்பானது. அது தரும் கனியோ இனிப்பானது. - அரிஸ்டாட்டில்

எல்லா போர்வீரர்களையும்விட வலிமையானது இவ்விரண்டும்தான் – ஒன்று காலம்;
இன்னொன்று பொறுமை – லியோ டால்ஸ்டாய்

பொறுமையை இழப்பது போர்க்களத்தை இழப்பதுபோன்றது. - மகாத்மா காந்தி

ஏன் பொறுமை முக்கியமானது? ஏனெனில் அதுதான் நம்மை கவனம் செலுத்த வைக்கிறது
- பாலோ கொய்லோ

பொறுமையாக இரு… இந்த சொற்களைக் கேட்காமல் யாரும் இருக்கவே முடியாது. ஆனால் கடைப்பிடிப்பதுதான் சிரமம். அதுவும் எங்காவது வரிசையில் நிற்கவேண்டி நேர்ந்தால்போதும்; பொறுமை இழந்து புலம்பித்தள்ளுகிறவர்களைப் பார்க்கிறோம். சிக்னலில் பச்சை விளக்கு போட்டவுடன் முன்னே இருக்கும் வண்டி நகர ஒரு நொடி தாமதமாவதைக்கூட யாரும் பொறுப்பதில்லை. ஹாரனை ஒலிக்கவிடுகிறோம். யாருக்கும் பொறுமை இல்லையா?

1831-இல் சார்லஸ் டார்வின் பீகிள் கப்பலில் ஏறிப் புறப்பட்டார். 1835 –இல் தான் கலபகாஸ் தீவுகளுக்குச் சென்றடைந்தார். அங்கு தன் பரிணாமக் கோட்பாடுகளை கண்டடைய ஆரம்பித்தார். 1859-இல் அதாவது 28 ஆண்டுகள் கழித்துத்தான் தன் பரிணாமக் கொள்கையை விளக்கும் நூலை வெளியிட்டார்.

அசாம் மாநிலத்தில் பிரமபுத்திரா நதிக்கரையில் வெள்ளத்தின் போது அடித்துவரப்படும் பாம்புகள்  மணலில் மரங்களே இல்லாத நிலையில் வெப்பத்தில் செத்துவிழுவதை 16 வயதான இளைஞனான ஜாதவ் கண்டார். அந்த மணற்கரையில் முதலில் 20  மூங்கில்களை ஊன்றி வளர்த்தார்.  தொடர்ந்து அவரே மரங்களை நட ஆரம்பித்தார், ஒன்றன் பின் ஒன்றாக 40 ஆண்டுகள். பெருங்காடு உருவானது. புலிகள், காண்டாமிருங்கள்,  மான்கள், முயல்கள் என விலங்குகள் கூட்டமே அவ்விடத்தை தம் வசிப்பிடமாகக் கொண்டன. ஜாதவ் இந்தியாவின் ’வன மனிதர்’ எனப் புகழப்படுகிறார். 1300 ஏக்கர் பரப்பிலான அந்த காடு அவரது பொறுமையால் உருவானது.

1964-இல் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவில் சிறைக்கு அனுப்பப்பட்டார். 27 ஆண்டுகள் கழித்து 1990 இல் வெளிவந்தார். இனவெறி அரசுக்கு முடிவுகட்டி அங்கே ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். புதிய அரசியலமைப்பு சட்டம் கொணர்ந்தார். நோபல் பரிசு பெற்றார். பொறுத்தார் பூமியாள்வார் என்ற பழமொழிக்கு உதாரணம் அவர்தான்!

தசரத் மாஞ்சி, பீகாரில் நிலமற்ற ஒரு விவசாயி. அவரது ஊர் மக்கள், அவசரத்துக்கு மருத்துவமனைக்குச்  செல்ல 70 கிமீ தொலைவு சுற்றிச் செல்லவேண்டி இருந்தது. ஒரு மலை அவர்களுக்குக் குறுக்காக இருந்தது. மாஞ்சியின் மனைவி பால்குனி தேவிக்கு உடல் நலமற்றுப் போனபோது, மருத்துவமனைக்குச் செல்ல நேரம் ஆனதால் அவர் இறந்துபோனார். இது நடந்தது 1959. மலையின் குறுக்கே பாதை இருந்தால் எவ்வளவு எளிதாக இருந்திருக்கும் என மாஞ்சி யோசித்தார். உளியையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு மலையை நோக்கிப் புறப்பட்டார். மலையை உடைத்து பாதை அமைக்க முற்பட்டார். சக கிராமவாசிகள் நகைத்தனர். 22 ஆண்டுகள் இரவும் பகலுமாக பொறுமையாக வேலை செய்தார். 380 அடி நீளம், 25 அடி ஆழமான பாதை உருவானது. 70கிமீ சுற்றிச் செல்லவேண்டிய தொலைவு இப்போது ஒரு கிமீ எனச் சுருங்கியது. மலை மனிதன் என்று இவர் அறியப்பட்டார். 2007-இல் தன்னுடைய 73 வது வயதில் இவர் இறந்தார். அவரது வரலாறு திரைப்படமானது. பீகார் அரசு அவர் மரணத்தின் போது அரசு மரியாதை செய்வித்தது. எறும்பு ஊரக் கல்லும் தேயும். ஒற்றை ஆள் உழைப்புக்கு மலையும் நகர்ந்துகொடுத்தது! பொறுமையாக மன உறுதியுடன் ஒவ்வோர் அடியையும் அவர் அடித்தார்!

1930. மகாத்மா காந்தி தண்டி நோக்கிய தன் யாத்திரையைத் தொடங்கினார்.  உப்பு சத்தியாகிரகம் என்று அவர் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கிய யாத்திரையை முதல்நாளே அன்றைய ஆங்கில அரசாங்கம் நினைத்திருந்தால் கைது செய்து முடித்து வைத்திருக்கலாம். இதனால் என்ன ஆகப்போகிறது? நடை பயணம்தானே என விட்டுவிட்டது. 24 நாள்கள் காந்தி தன் அறுபதுகளில் இருந்தவர் மெல்ல நடந்தார். பொறுமையாக ஒவ்வோர் அடியையும் கிராமங்களில் எடுத்து வைத்தார். 240 மைல் அந்த வயதில் நடந்தார். அவரது பயணம் பற்றிய செய்தி உலகமெல்லாம் பரவியது. தண்டியில் அவர் உப்பை அள்ளியபோது 50,000 பேர் திரண்டிருந்தார்கள். அடுத்த சில மாதங்களில் இந்த போராட்டம் நாடெங்கும் பரவியது. 60000 பேர் சிறைப்பட்டார்கள். பொறுமையும் அகிம்சையும் கலந்ததுதான் காந்தியின் போராட்ட வழி.

பொறுமை எல்லா விஷயங்களிலும் தேவைப்படுகிறது. தொழில், குழந்தை வளர்ப்பு, தாய்மை, கலைகள் என்று வாழ்வின் பல கூறுகளில் அது தேவையாக இருக்கிறது. அதுவும் நொடியில் மலையளவு வேலைகளைச் செய்துவிடும் ஏ.ஐ. தொழில்நுட்ப காலத்தில்தான் அதன் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இல்லாத ஒன்றுக்குத்தானே தேவை அதிகரிக்கும்? என்ன சொல்கிறீர்கள்?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram