சிறப்புப்பக்கங்கள்

ரெபெக்கா அத்தை

பிரபு தர்மராஜ்

என்னுடைய தாத்தா ஒருமுறை சொன்னார், “உத்தரத்துல சுத்துக காத்தாடிக்கி கரண்டுதாங் காரணம்னு கைய காட்டிறலாம்! அந்தரத்துல அலையித பேய எதக்கொண்டு கண்ணுல காட்டுவ?”. அதாவது “எளிதாக நிரூபித்துவிட முடிகிற அறிவியலை விட எப்போதுமே நிரூபிக்க முடியாத அமானுஷ்யமே விந்தையும், ஆச்சர்யமும் நிறைந்தது!” என்பதன் சாராம்சமே அது.  

எங்களது அம்மாவின் பெற்றோருடைய சொந்த கிராமத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் குடியிருந்தோம். சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்து ஒரு தீவுபோலக் காட்சியளிக்கும் அந்த ஊருக்குள் நுழைய ஒரேயொரு மண்சாலை மாத்திரமே உண்டு. தகவல், அறிவியல் தொழில்நுட்பங்கள் தங்களுடைய பால்யகாலத்தில் தவழ்ந்த காலமது. ஊரிலுள்ள முப்பது வீடுகளில் எங்கள் வீட்டில் கலர் டீவியும், மேலும் இரண்டு வீடுகளில் கருப்பு வெள்ளை டீவியும் இருந்தன. மொத்தம் மூன்றே தெருக்கள் கொண்ட அந்த ஊர்முகப்பிலிருந்த அம்மன்கோவிலில் சந்தனமாரியம்மன் வடதிசை பார்த்தும், அதற்கு கிழக்குப்பக்கத்தில் இருந்த மாடன் கிழக்குபார்த்தும் நின்றார்கள். மேலத்தெருவில் ஒரு சிறிய தேவாலயம் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாகக் குடியிருந்தார்கள்.   

அந்த ஊரில் இளவயதுக்காரர்கள் யாரேனும் அகால மரணமடைந்தால் அவர்களது பிணத்தை எரித்து அல்லது அடக்கம் செய்துவிட்டு அவர்களது சொந்தக்காரர்கள் சுடுகாட்டிலிருந்து வீடுதிரும்பும் வழியில் கடுகு விதைப்பதுண்டு. இறந்தவரது ஆத்துமா தன்னுடைய உறவினர்களைத் தேடி வீட்டுக்குத் திரும்ப வரத்துடிக்குமாம். அப்படி வருகையில் வழியில் இறைந்து கிடக்கும் கடுகுகளைத் தாண்டி வரமுடியாமல் அவை ஒவ்வொன்றாய்ப் பொறுக்குகையில் விடிந்து விடுமாம். வெளிச்சம் வந்த காரணத்தால் அந்த ஆத்துமாக்கள் மீண்டும் தங்களுடைய கல்லறைக்குத் திரும்பி உறங்கிவிடும் என்பது அங்குள்ள நம்பிக்கை. கடுகு விதைப்பதில் இந்துக்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை... ஆனால் கிறிஸ்தவர்களுக்கு இருந்தது. அது தங்களுடைய மதத்திற்கு எதிரானது என்று நம்பினார்களாகையால் அவர்கள் அந்தக்கடுகு விதைப்புக் காரியத்துக்கு எதிர்நின்றார்கள். 

ஊரில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலான வீடுகளில் மாத்திரமே அப்போது மின்சாரவசதி இருந்தது. மீதமுள்ள வீடுகளில் அரிக்லாம்பும், சிம்னி விளக்குகளும் மாத்திரமே ஒளியைப் பரப்பிக் கொண்டிருக்கும். மாலைப்பொழுது சாய்ந்தால் தெருக்களில் மக்கள் வைக்கோல் போரைப்பரப்பி அதன்மேல் சாக்குகளை விரித்துப் படுத்துக்கொண்டே பேட்டரியில் இயங்கும் ரேடியோப் பெட்டிகளில் பாடல்கள், செய்திகள் கேட்பதுமாகப் பொழுதைப் போக்குவார்கள். குழந்தைகளும் சிறுவர்களும் ஆங்காங்கே அமர்ந்து வயதான பாட்டி தாத்தாக்களிடம் கதை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதிலுமே பெரும்பாலும் பேய்க்கதைகளுமே நிறைந்திருக்கும். 

ஊரின் பின்பக்கமிருந்த தோப்பிலுள்ள மொட்டைக் கிணற்றில் குடித்துவிட்டு தலைகுப்புற விழுந்து மரித்துப்போன போன பீடிராசாவின் ஆத்துமா அந்தக் கிணற்றுக்குள் இருந்து திங்கள்கிழமைதோறும் மேலே எழுந்துவந்து கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவதாகவும் கதைகள் அமைந்து போயின. பின்பொருநாள் லெச்சுமிக் கிழவியின் பசு கோமதி அந்தக் கிணற்றில் ஒரு திங்கள்கிழமையன்று விழுந்து மரித்தது. முன்பொருநாள் கோமதி பீடிராசாவை கோயில்பெருமாளின் வயல்வரப்பில் வைத்து முட்டி சகதிக்குள் வீசியிருந்தது. அதற்குப் பழிவாங்கும் விதமாக பீடிராசாவின் ஆவிதான் கோமதியின் கால்களைப் பிடித்து கிணற்றுக்குள் வீசியடித்தது என்றும் பேசிக் கொண்டார்கள். 

திருடன் ஒருவனைத் துரத்தி வந்து அந்தக் கிணற்றுக்குள் விழுந்த போலீஸ் எஸ்.ஐ ஒருவரும் இருட்டுக்குள் கண் தெரியாமல் கிணற்றுக்குள் விழுந்து சுதாரித்துத் தப்பியதையடுத்து அந்தக்காரியம் பீடிராசாவின் ஆவியுடைய மகுடத்தில் இன்னொரு இறகாக சேர்ந்தது, ஏனெனில் ஒரு மாம்பாட்டைக் கேசில் பீடிராசாவைக் கொண்டுபோய்ப் பிளந்ததில் அந்த எஸ்.ஐ.யின் பங்கு அளப்பற்கரியது. இப்படியாக அந்த ஊரில் பேய்களின் சேட்டைகள் அளவில்லாமல் போன காரியத்தில் பூசாரி முருகேசன் கழுத்தில் தங்கச்சங்கிலி போடுமளவுக்கு வளர்ந்திருந்தான். 

அந்த சமயத்தில் ரெபேக்கா என்றொரு அத்தை தன்னுடைய முப்பத்தைந்தாவது வயதில் மஞ்சள்காமாலை வந்து மரித்தாள். அடக்கமுடிவில் போகும் வழிமீது கடுகுவிதைக்க சபையோர் ஒப்புக்கொள்ளவில்லை. வெறுமனே ஆட்கள் கால்களைக் கழுவிவிட்டு வீட்டுக்கு வந்தார்கள். அதன்பின்பாக ஊருக்குள் ரெபேக்கா பேயாய் அலைவதாக செய்திகள் கடுமையாகப் பரவிவந்தன. “எனக்க கூரைய நடுராத்திரில பிரிச்சி மண்ண அள்ளி வீசிட்டா மக்கா அந்த ரெவேக்கா கெடந்தவ!” என்றும், “ராத்திரி மாடுக ரெண்டும் தொழுவத்துக்கக் கெடந்து வெரவுனதக் காணணுமே? எம்மோ! அந்தக் கழுத்து மச்சத்த எனக்க ரெண்டு கண்ணாலயுங் கண்டெம்லா?”,என்றும் “தட்டுல துணி காயப்போடும்ப தெருவுக்குள்ள ஜல்லு ஜல்லுன்னு ஒரே சத்தக்காடு! ஜன்னல தொறந்து எட்டிப்பாத்தா வாயி நெறைய கங்கு நெறச்சிக்கிட்டு நடந்து போனா அந்த ரெபேக்கா\! எதுக்குதான் இந்த வரத்து வாராளோ?” என்றும் ஆளாளுக்கு ரெபேக்காவின் வருகை குறித்து அதிர்ந்து திரிந்தார்கள். 

ரெபேக்கா அத்தையின் கழுத்தில் நாலணா சைஸில் ஒரு கருத்தமச்சம் ஒன்று உண்டு பலரும் அதை வைத்துதான் ரெபேக்காவை அடையாளம் கண்டார்கள். அதன் பின்னரெல்லாம் மாலை ஆறுமணியானால் ஊரே அடங்கத் துவங்கியது. அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வடசேரியில் ஒரு வாத்தியாரிடம் கணக்கு டியூஷன் படித்தேன். நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் நடக்கும். அதன்பின்னர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்துவிடுவேன். அன்றொருநாள் டியூஷன் வாத்தியாருக்கு என்ன கொள்ளையோ வெளியே போனவர் திரும்பி வரும்போது மணி எட்டு. எனக்கோ கலக்கம், ‘ரெபேக்கா பற்றி சொன்னால் மாத்திரம் வாத்தியான் நம்பவா போகிறான்?’

அப்போதெல்லாம் சாலையில் வாகனங்கள் பெரியஅளவில் போக்குவரத்து இருக்காது. ஒழுகினசேரி மேம்பாலத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் கீழிறங்கி பழையாற்றுப் பாலத்தைக் கடந்து வலது பக்கமிறங்கினால் ஆற்றங்கரை வழியாக ஊருக்குள் போய்விடலாம். அந்த இடத்தில் அப்போது ஒளிவிளக்குகள் கிடையாது. கும்மிருட்டாக இருக்கும். போதாக்குறைக்கு வழியில் ஒரு உக்கிரமான இசக்கியம்மை உண்டு. எனக்கு உதறலெடுத்தது. மெதுவாக மேம்பாலத்தில் ஏறியபோதுதான் அது நடந்தது. மூன்றடி உயரத்தில் ஒரு கருத்தநாய் ஒன்று என்முன்னே வந்து நின்றது. நான் மயங்காத குறை. திடீரென அந்த நாய் எனக்கு முன்பாக மெதுவாக நடக்கத் துவங்கியது. நான் அதன்பின்னே மெதுவாக சைக்கிளை மிதிக்கத் துவங்கினேன். ஆற்றுப்பாலம் வரைக்கும் என்முன் சென்று கொண்டிருந்த அந்த நாய் பாலம் முடியுமிடத்தில் மாயமாய் மறைந்தது. அதற்குப்பின்னர் ஆற்றங்கரைப் பகுதியில் வீடுகள் உண்டு. அங்குள்ள ஆட்கள் சாலையில் பாயை விரித்துப் படுத்திருந்தார்கள். எனக்கு தைரியம் வந்தது. அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம்.

மெதுவாக சைக்கிளை மிதித்து ஊருக்குள் திரும்பினால் எதிர்ப்பில் இருந்த கால்வாயின் திண்டு ஒன்றில் ஒரு பெண்மணி தூரமாக அமர்ந்திருந்தாள். ‘மணி எட்டரைதானே? வழியில்தான் ஆட்கள் இருக்கிறார்களே?’ என்று எனக்கு மீண்டும் தைரியம் வந்தது. அந்தப் பெண்மணியின் அருகில் வந்தபோது ஆளை ஏறிட்டுப்பார்த்தேன். கழுத்தில் நாலணா சைசில் ஒருமச்சமும் வலதுபுருவத்தில் ஒரு வெட்டுத்தழும்பும் கிடந்தது. சைக்கிளைப் போட்டுவிட்டு அப்படி ஒரு ஓட்டமெடுத்து திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த தாத்தாவின் மேலே வந்து விழுந்தேன். தாத்தா திடுக்கிட்டு எழுந்து ரெபேக்காவைக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டே என்னுடைய சைக்கிளை எடுத்து வந்தார். அடுத்த நான்கு நாட்களாக நான் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். பூசாரி முருகேசன் வந்து விபூதி அடித்துக் கொண்டே என்னிடம் கேட்டார், “கழுத்து மச்சத்தக் கண்டியே... எந்தப் பக்கம்? எடத்தோட்டா வலத்தோட்டா?”. எனக்கு நினைவிலில்லை. 

நாட்கள் நகரவே வள்ளி என்றொரு அக்கா குளத்தில் குளிக்கப் போனவளை ஆட்டமும் துள்ளலுமாக பூசாரி முருகேசனிடம் தூக்கி வந்தார்கள். “தேரூர்ல தூங்கிச் செத்த காளியம்மைக்க வேலைதான் இது!” என்று துடைப்பக் கட்டையை எடுத்து நாலு சாத்து சாத்தி அப்போதைக்கு அனுப்பி வைக்கவே, செத்துப்போன காளியம்மை அடிக்கடி வள்ளியை வந்து சந்தித்து துடைப்பக்கட்டை அடி வாங்கிப் போவதை வழக்கமாக் கொண்டிருந்தாள். அந்தசமயத்தில் ஒருநாள் இரவு தன்னுடைய காதலியைச் சந்திக்கப்போன இடத்தில் பூசாரி முருகேசனை நள்ளிரவில் கோட்டார் ஊர்க்காரர்கள் கையும் கோவணமுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்துக் கடிமணத்திற்குப் பரிந்துரைத்து மறுநாள் காலையில் தாலியும் கையுமாக தம்பதி சமேதராய் ஊர்வந்து சேர்ந்தார்கள். அந்தப் பதினாறு வயதுப் பெண்ணின் பெயர் தமயந்தி வலது புருவத்தில் ஒரு வெட்டுத்தழும்பு கிடந்ததை நான் கவனித்தேன். கழுத்தில் மச்சமில்லை. 

அதே சமயத்தில் வள்ளி அக்காவுக்கு வலிப்பு வந்தது. ‘பேய்வந்தால் பூசாரி ஓட்டுவார், வலிப்புக்கு வைத்தியரிடம்தானே செல்ல வேண்டும்?’ என்ற கணக்கில் மணிஆசானிடம் தூக்கிக் கொண்டு போனார்கள். நாடியைப் பிடித்துப் பார்த்த ஆசான் சொன்னார், “பிள்ளைக்கி நாலு மாசம் வயித்துல, ஆளு யாருன்னு பாத்து சட்டுபுட்டுன்னு கலியாணத்த முடியுங்கோ!” என்று சொல்ல வள்ளியின் தாயார் செருப்பாலேயே “யாது கூயாவுள்ளைட்டீ அது?” என்று வள்ளியைத் தடவ வள்ளியின் ஆட்காட்டி விரல் முருகேசனை நோக்கி நீண்டது. வேறுவழியின்றி முருகேசனும் ஒப்புக் கொண்டு வள்ளியின் கழுத்திலும் ஒரு தாலியைக் கட்டி பூசாரி முருகேசன் அப்பன் முருகனானான். 

சிலநாட்கள் கழித்து மீனாட்சிபுரத்திலுள்ள ஃபேன்சி ஸ்டோர் ஒன்றில் பணியாற்றிய முத்தப்பன், சற்றுநாட்களுக்கு முன்பாக முருகேசன் தங்கள் கடையில் வந்து ஒரு ஐடெக்ஸ் கண்மை பென்சில் ஒன்றை வாங்கிய காரியத்தை ஊருக்குள் நிறுவினான். அந்தப் பென்சிலானது போலி ரெபேக்காவான தமயந்தி கழுத்தில் வரையப்பட்ட போலி மச்சமாகவும் இருக்கலாம் என்பது பின்பொருநாள் எனக்குப் புரிந்தது. அறிவியலை விடவும் அமானுஷ்யம் மிகப்பெரியது என்பதும்...

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram