சாலையில் எதிர்ப்பட்ட
என் பழைய சிநேகிதி ஒருத்தி
மாலை வணக்கம் சொல்வதற்குப் பதில்
*நீ எனக்கு வேண்டாம்" என்றாள்
வழியிலிருந்த மசூதியிலிருந்து
தொழுகைக்கு பாங்கொலியால் அழைத்தார்கள்
'நீ எனக்கு வேண்டாம் 'என ஒரு வாக்கியம்
அந்த அழைப்பினூடே கேட்டது
யாரிடமோ
உன் வீடு இருக்கும் தெருவுக்கு
வழி கேட்டேன்
*நீ எனக்கு வேண்டாம்’’
எனச் சொல்லி விட்டு
இருளில் மறைந்து விட்டார்கள்
----------
----------
----------
எதை நான் கேட்க வேண்டும்
என்று விரும்பினாயோ
எதை நான் கேட்டு விடக்கூடாது என
நீண்ட தூரம் ஓடினேனோ
அது மட்டுமே இப்போது கேட்டுக்கொண்டிருக்கிறது
தலைக்குள் இருந்து கேட்கும் குரல்கள்
தலையோடுதான் போகுமா?
-மனுஷ்ய புத்திரனின் கவிதையிலிருந்து
பிரபல சமூக ஊடகம் ஒன்றில் பிரேக் அப் அனுபவங்களைப் பகிருங்களேன் எனக் கேட்டிருந்தார்கள். அடையாளம் பகிர வேண்டியதில்லை என்பதால் ஏராளமான பேர் தங்கள் அனுபவங்களைக் கொட்டி இருந்தார்கள். இன்னும் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லோரும் 16-இலிருந்து 26 வயதுக்குள் இருப்பவர்கள். இரண்டாண்டு உறவு, ஐந்தாண்டு உறவு, ஏழாண்டு உறவு எனச் சொல்லி பிரித்துக்கொண்டு போன துணையைப் பற்றி எழுதி இருந்தார்கள்.
ட்ரெக்கிங் போய் மலை உச்சியில் தங்கி இருந்தோம். காலையில் எழுந்து கூடாரத்தில் காபி குடித்தோம். அடுத்த நிமிடம் எனக்கும் உனக்கும் இனி ஒத்துவராது என அறிவித்துவிட்டு அவன் என்னை மலை உச்சியில் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டான் என ஒரு பெண் எழுதி இருந்தார்.
வேலைபார்த்துவரும் களைப்பில் இருந்தாலும் கூட அவனுக்காக சமைத்து, என்னவெல்லாமோ செய்திருக்கிறேன். அது போதவில்லை. என்னை மிகவும் நெகட்டிவாக இருப்பதாக சொல்ல ஆரம்பித்தான். பொருத்தங்கள் இல்லை என்றான். கடைசியில் பிரிவதாக முடிவெடுத்துவிட்டேன். சமீபத்தில் அவனை இன்னொரு பெண்ணுடன் பார்த்தேன். சமூக ஊடகத்தில் தேடியபோது எனக்குத் தெரியாத பல விஷயங்கள் தெரியவந்தன. இனி யாரையும் என்னால் இந்த அளவுக்கு நேசிக்க முடியாது எனத் தோன்றியது. ஆனால் நான் யோசித்ததில் இந்த அனுபவத்திலிருந்து முதிர்ச்சி பெற்றுள்ளேன் எனத் தோன்றியது. முக்கியமான விசயம் அடுத்தவர்களைக் காதலிக்கும்போது நம்மை நாம் இழந்துவிடக்கூடாது என்பது... என இன்னொரு பெண்ணின் கருத்து கண்ணில் பட்டது.
‘நிபந்தனையற்ற காதல் என்று எதுவும் இல்லை. என் காதலுக்கு நிபந்தனைகள் உண்டு. என் துணை என்னிடம் தவறாக நடந்துகொள்ளக் கூடாது. என்னிடம் திருடக்கூடாது. என்னிடம் பொய் சொல்லக்கூடாது. என்னிடம் ஏமாற்றக் கூடாது.!’ என்று ஒருவர் கூறுகிறார்.
’மூன்றாண்டு உறவு ஒன்று ஆறு மாதத்துக்கு முன் முறிந்துவிட்டது. அந்த துயரில் இருந்து வெளியேற அப்போது நடந்த சம்பவங்களை எல்லாம் எழுதி வைத்தேன். ஆரம்பத்தில் என் கண்களை நீர் மறைக்கும் அளவுக்குத் துயராக இருந்தது. எழுத எழுத என் துயரம் குறைந்துவிட்டது’ என்று சொல்கிறார் இன்னொருவர். இது ஒருவேளை பிரேக் அப் துயரங்களைத் தாங்கும் நல்லதொரு வழியாக இருக்கலாம்!
இதைப் படித்த இன்னொருவர் அங்கே எழுதுகிறார்: ‘ஆமா… 2.5 மாதங்களுக்கு முன்னால் நானும் 11 ஆண்டு உறவில் இருந்து கைவிடப்பட்டேன். சுமார் 400 பக்கங்களுக்கு எதையும் சென்சார் செய்யாமல் எழுதிவிட்டேன்!’
இன்னொரு கமெண்ட் கவர்ந்தது: ‘ பல பிரச்னைகள் பேசினாலே தீர்ந்துவிடக் கூடியவை. அதைச் செய்யாமல் இருப்பதால் பெரும்பாலான ப்ரேக் அப்கள் நடக்கின்றன. ஆனால் இருவருமே பேசித் தீர்க்க தயாராக இருக்கவேண்டும். ஆனால் ஒருவர் பேசவும் இன்னொருவர் விலகிச் செல்லவும் விரும்பினால் எதுவும் விளங்காது”
உண்மைதான். ஆனால் பேசித் தீர்க்கக் கூடிய பிரச்னையாக இருக்கும் வரை அது சரிப்பட்டுவரும். அதையும் தாண்டிவிட்டால் பிரேக் அப் மட்டுமே ஒரே வழி. இந்த காலத்தில் பிரேக் அப்களைத்தாண்டி வரும் ஆணும் பெண்ணும் மேலும் உறவுகளைப் பற்றிய முதிர்ச்சியைப் பெற்றிருப்பார்கள் என்றே கருதத் தோன்றுகிறது.
தேவதாஸ் காலத்திலிருந்து ரஜினி கமல் டிராஜேந்தர், இளையராஜா எனக் கடந்து தனுஷ், அனிருத், பிரதீப் ரங்கநாதன் கால சினிமாவைக் கடந்து வந்துள்ள ஒரு பூமராக, உறவுகள் மீதான அணுகுமுறைகள் மாறுவதைக் கண்டிருப்பதை உணரமுடிகிறது.
நாட்டில் விவாகரத்துகள் அதிகரிப்பதாக பத்தாண்டுகளுக்கு முன்பு செய்திக் கட்டுரைகள் படித்து அதிர்ந்தோம். இப்போது அந்த அதிர்ச்சிகளைத் தாண்டி கல்யாணமே பண்ண விரும்பாத இளசுகள் என்ற கட்டுரைகள் தரும் அதிர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த மாறிவரும் உறவுச் சூழ்நிலையில் என்றும் மாறாதிருப்பது மனிதர்களுக்கு இடையே இருக்கும் அன்புதான். ஒருமுறை முறிந்தால் மறுமுறை முளைத்துவிடும்! இண்டர் ஸ்டெல்லார் படத்தில் டாக்டர் ப்ராண்ட் சொல்வதுபோல்,‘காலம் வெளி ஆகிய பரிமாணங்களைத் தாண்டி நாம் உணரக்கூடிய ஒன்று அன்பு மட்டும்தான்!’
அது பிரேக் அப்களையும் எளிதாகத் தாண்டக் கூடியது!