எத்தனையோ விதமான தின்பண்டங்கள் என் வாழ்வில் குறுக்கிட்டிருந்தாலும் சாத்தூர் சேவு போல என்றென்றும் என்னை ஆக்கிரமித்த பண்டம் வேறில்லை.” – சாத்தூர் மு.செ. சண்முக நாடார் மிட்டாய் கடையின் சேவைப்பற்றி எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் எழுதியது (சாப்பாடு ராமனின் நினைவலைகள்) இது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மு.செ. சண்முக நாடார் மிட்டாய் கடைக்கு வயது நூறு. இந்த கடையின் சேவு, கருப்பட்டி மிட்டாய், வெல்லம் மிட்டாய், சீனி மிட்டாய் மிகப்பிரபலம்! கடையின் உரிமையாளர் ஆறுமுகசாமியிடம் பேசினோம்:
“1914ஆம் ஆண்டு தாத்தா மு. செ. சண்முக நாடார் ஆரம்பித்த கடை இது. அவருடைய உழைப்புதான் இன்றைக்கும் எங்களுக்கு சோறு போடுகிறது. அந்தக் காலத்தில் எங்கள் சமூகத்து ஆள் ஒருவர் கடை நடத்துவது என்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. எங்கள் கையில் சாமான்கள் வாங்குவதையே கௌரவக் குறைச்சலாக நினைத்த நேரம் அது. ஆரம்பத்திலே ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் கடை நடத்தியிருக்கிறார் தாத்தா. அவருக்கு அஞ்சு பெண் பிள்ளைகள், அதிலே எங்க அம்மாவும் ஒருவர். எங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணி வீட்டுக்கு மாப்பிள்ளையாக வந்தவர்தான் எங்கப்பா. சேவுக்கடை இவருக்குப் பங்காக வந்த பிறகு, தாத்தா மாதிரியே எங்க அப்பாவும் உழைத்தார். கடுமையான உழைப்பாளி. அவர்கள் பட்டபாடுதான் எங்க கடையோடு பேர் இன்றைக்கும் நிலைத்து நிற்கக் காரணம்.
எங்க அய்யா பழனிச்சாமி நாடார், ஸ்தாபன காங்கிரஸில் இருந்தார்கள். அந்த காலத்தில் எங்கள் வீட்டுக்குப் பெருந்தலைவர் காமராஜர் வந்திருக்கிறார். அய்யாவின் காலத்தில் கடையின் புகழ் ஊர் தாண்டி மாநிலம் தாண்டி, பரவத் தொடங்கியது என்றால் மிகையில்லை.
முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நடேசன் பால்ராஜ், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா என்று இந்தக்கடையின் வாடிக்கையாளர்கள் பிரபலங்கள் பட்டியல் ரொம்ப நீளமானது.
பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்த்த மாதிரி என்று பழமொழி சொல்வார்கள். ஆனால் பட்டணத்து ஆட்களுக்கு இந்த மிட்டாய் அதிசயம்தான். குற்றாலம், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், சபரிமலை என்று ஊருக்குச் செல்பவர்கள் சேவு, மிட்டாய் வாங்கிட்டு போவார்கள். இந்தப்பக்கம் படப்பிடிப்புக்கு வரும் நடிகர்கள், கடைக்கே வந்து வாங்கிப் போவார்கள். அவ்வளவு ருசி சாத்தூர் சேவுக்கு.
அந்த சேவில் சேர்க்கிற கொடைக்கானல் மலைப் பூண்டு, பெருங்காயம், நல்ல செரிமானம் ஆகும். சேவு தயாரிக்கப் பயன்படும் கடலை எண்ணெய் மிகவும் சுத்தமாக இருப்பதால் சேவு, மிகவும் ருசியாகவும் உடம்புக்கு நல்லதாகவும் இருக்கும். மாசி மாதம் தென் மாவட்டங்களில் உள்ள குலதெய்வக் கோவிலுக்கு வருபவர்கள் காரச்சேவை வாங்கி பிரசாதம் மாதிரி கொண்டு போவார்கள்.
தற்போது கடையை அதாவது என் தந்தையின் மறைவுக்குப் பின், நானும் என் முருகதாஸ் அண்ணனும் கவனித்து வருகிறோம். எங்களுக்குத் தோளோடு தோளாக ராம் ஹரிபிரசாத்தும், சண்முகநாதனும் உடன் இருந்து வருகிறார்கள்.
2015ஆம் ஆண்டு முதல் மக்களின் வசதிக்காகத் தங்க நாற்கரச் சாலையில் சின்ன ஓடைப்பட்டி அருகே ஒரு புதிய கடை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். நேரில் வந்து வாங்க முடியாதவர்களுக்காக இணையதளம் கடை ஒன்றை என் மகன் எல்.பி.ஏ. சண்முகநாதன் திறம்பட நடத்தி வருகிறார்.
கடந்த 2021இல் எங்களுடைய மூன்றாவது கடை தாயில்பட்டி விலக்கு அருகே ஆரம்பிக்கப்பட்டது. மதுரை, தென்காசி, சிவகாசி, சென்னை போன்ற இடங்களிலும் குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்களில் எங்கள் பண்டங்கள் கிடைக்கின்றன,’ எனப் பகிர்ந்துகொள்கிறார் ஆறுமுகசாமி.