சந்தர்ப்பவாதம் என்பதற்கு இலக்கணம் தேவையில்லை. அதீத சுயநல விழைவு, தற்காப்புத் தந்திரம், சுரண்டல் மனப்பான்மை என்றெல்லாம் அறியப்படும் இப்பண்பு காத்திருந்து தனக்கு சாதகமாக வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சட்டென நிறம் மாறும் பச்சோந்தி மனிதர்களின் ஆயுதம்.
நாம் எல்லோருமே சில நேரங்களில் சந்தர்ப்பவாதியாக இருந்துதான் ஆகவேண்டும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்த சுயகாப்பு அல்லது வாழ்தலின் பொருட்டு என எடுத்தாளும் இக்குணம் கூடுதலாகும்போது மனம் சர்வகாலமும் மீனுக்குக் காத்திருக்கும் கொக்கின் அலகைப் போல ஒரே திசையில் சாயும். புத்தியைத் தீட்டி அடுத்தவரை வீழ்த்தவே காத்திருக்கும். எப்போதும் விழிப்பு என்பது பதற்றமாக, தந்திர மயக்கமாக உருப்பெறும். உரிய நேரத்தில் எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிட்டாவிடில் பொறுமையிழந்து வலிய வாய்ப்புகளை உருவாக்க மனத்திரிபு (Manipulation) சூழ்ச்சியைப் பிறர் மீது செலுத்திக் குழப்பம் விளைவிக்கத் தொடங்கும். ஆம். நம் சந்தர்ப்பவாதங்களைக் கட்டுக்குள் வைக்காவிடில் அவை ஆளுமைசார் மனக்கோளாறுகளாக உருவெடுக்கக் கூடும். ஏனெனில், சுயதொழுகையாளர், நச்சு மனிதர் எனப்படும் NPD (Narcissistic Personality Disorder), சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Anti social Personality Disorder) போன்ற தீவிர மனநலக் கோளாறுகளுக்கு அடிப்படையான காரணிகளோடு, ஆரம்ப காலத்தில் அவர்கள் இயல்பெனப் பழக்கப்படுத்திக் கொண்ட சந்தர்ப்பவாதப்போக்கு நேரடியான தொடர்புடையது.
எனவே, "காற்றுள்ள போதே தூற்றிக் கொள், எவரையும் கண்டுகொள்ளாதே, உன் சுய முன்னேற்றத்தை மட்டும் பார், காரியத்தில் கண்ணாக இரு " என்றெல்லாம் பிழைப்புவாதத்தை யாரேனும் மிக வலியுறுத்தும்போது சற்றே விழித்துக் கொள்ளுங்கள். அது வாழைப்பழத்தின் மேல் கத்தியாக உங்கள் மென்மனத்தின்மேல் எய்யப்படும் அறிவுரைக்கத்தி. பிறரை முற்றிலுமாகச் சாய்த்து ஒதுக்கிவிட்டு மேற்கொள்ளும் சுய முன்னேற்றச் செயல்பாடுகள் ஒருபோதும் நீண்ட கால நிம்மதியையோ, நிரந்தர வெற்றியையோ தேடித் தராது. அது மேற்குறிப்பிட்ட மனநல பாதிப்புகளுக்கு ஆளாக்கவே வாய்ப்புகள் உண்டு.
பள்ளிப் பருவத்தில் நாம் படித்து ஏறக்குறைய மறந்துவிட்ட உலக வரலாற்றில் சந்தர்ப்பவாதப் பரவலை திருப்பிப் பார்ப்போம். இரண்டாம் உலகப் போரை ஒட்டி ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லரும், சோவியத் யூனியன் ஜோசஃப் ஸ்டாலினும் தங்களுக்குள் போரிட மாட்டோம் என்று ஒப்பந்தமிட்டுக்கொண்ட சந்தர்ப்பவாதத்தை நினைவு கூறலாம். இதன் விளைவு ஹிட்லர் போலந்து மீது போர் தொடுக்கவும், தன் ஒப்பந்தத்தையே மீறி வெற்றியின் வெறியில் சோவியத் யூனியன் மீதே படையெடுத்தார் என்றும் அறிகிறோம்.
முதலாம், இரண்டாம் உலகப் போர் கூட்டணிகள், 19 ஆம் நூற்றாண்டின் சீனா மீதான அபினிப் போர், நான்காவது சிலுவை போர், கான்ஸ்டான்டிநோபில் வீழ்ச்சி, போபால் விஷவாயு விபத்து, பிளாசிப் போர், இந்தியாவில் சுமார் 200 ஆண்டுகாலம் நீடித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி, வங்காளப் பஞ்சம் என உலகை ஆட்டிப் படைத்த உயிர்ச்சேதங்கள், தேசங்களின் வீழ்ச்சி போன்றவற்றின் வேர்களை விரிவாக ஆராய்ந்தால், தொடர்கதையாக மனிதகுலத்தின் அமைதிக்குத் தீங்கு செய்யும் சந்தர்ப்பவாதத்தின் தீவிரம் புரியும். எனவே, ஒரு சிறிய தற்காப்புப் பண்பு என்று சந்தர்ப்பவாதத்தைக் கடந்து விடலாகாது. "விளைவுகளைப் பாருங்கள்.. எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்" என்ற திரைப்பட வசனத்தை உள்ளே சொல்லிக் கொள்ள வேண்டிய காலமிது.
மற்றொரு பக்கம் ஒரு பெரிய நன்மையைப் பெறுவதற்காக சிறுசிறு தீமைகளைச் செய்வது ஒன்றும் புதிதோ, அத்தனைக் கொடுமையானதோ இல்லை, பெரும்பான்மையினருக்கு வருங்காலத்தில் கிடைக்கும் பெருநன்மைக்காக சிறு சிறு தீமைகள் அல்லது தற்கால இழப்புகளை நியாயப்படுத்தலாம் எனும் பயனுடைமைவாதம் (Utilitarianism) பல இடங்களில் சந்தர்ப்பவாதத்தை ஆதரிக்கின்றது. அமைதி காத்து, திட்டமிட்டு, சந்தர்ப்பம் பார்த்து வீழ்த்துதல், பெரிய பதவி /அதிகாரத்தைப் பெற்று உயர்தல் , அதன்பின் நினைத்தவற்றைச் செயல்படுத்துதல் போன்ற ராஜ தந்திரங்களை நாம் நன்கறிவோம். இதனை உளவியலில் Machiavellinism என்பார்கள். இத்தகையோர் பெரும்பாலும் உணர்வுகள் மங்கிய நிலையிலும் (Emotional numbness), எல்லோரும் தன்னைப் போலவே நேர்மைக்கு எதிராக சுயநலமாக இருப்பதாகவும் கருதிக் கொள்கிறார்கள் என்பது மனவியல் குறிப்பு.
இத்தகு ராஜதந்திரச் சந்தர்ப்பவாதங்களை இந்தியத் திரைப்படங்கள் RRR, துரந்தர் என பலவாறு கதைகளாகவும், நேரடி அனுபவங்களாகவும் அறிந்து வைத்திருக்கிறோம். “போகிற வழி தவறாக இருக்கலாம். போய்ச் சேருமிடம் கோயிலாக இருக்க வேண்டும்” என்பதாக, எதிர்கால நன்மைக்காக என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பவாதச் செயல்பாடுகளினால் இறுதி நோக்கத்தை காப்பாற்ற வேண்டிய தீவிர சுமையின் அழுத்தம், எதிரெதிர் நிலையின் மனப்போராட்டக் குழப்பங்கள், மெல்லிய நுண் உணர்வுகளை அடக்கிவைத்த சுயகாயங்கள், உணர்வியல் ஆதரவுக்கும் தர்க்கவியல் நிலைப்பாட்டிற்குமிடையேயான குழப்பங்கள் என ஒருவரின் வாழ்வு அடையாளம் இழந்து நிலை குலையக் கூடும்.
ஆனால், நமது பண்டைய வரலாறுகளும், அரசியல் தத்துவங்களும், சில நேரம் அறிவியலும்கூட பயனுடைமை வாதத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி நம்மில் பலரை எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி சந்தர்ப்பவாதிகளாக வார்த்தெடுத்திருக்கின்றன. சந்தர்ப்ப வாதத்தின் சுய பலன்கள், பொருளாதார அதிகாரப் பயன்களின் தற்காலிக மகிழ்வில் சிறு சிறு தீமைகளை அனுமதிக்கத் தொடங்கினால் அதுவே பெருந்தீமைகளுக்கு வழி வகுத்து விடும் அபாயமும், அற நெறிச் சிதைவும் நேரக்கூடும் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறோம்.
1976 ஆம் ஆண்டு பொருளாதாரப் பிரிவில் நோபல் பரிசினைப் பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மில்டன் ஃப்ரைட்மன் (Milton Friedman) " ஒரு மனிதனின் சந்தர்ப்பவாதம் இன்னொரு மனிதனின் ராஜதந்திரம்" என்கிறார். இக்கருத்து, அரசியலிலும் பொதுவாழ்விலும் நல்லெண்ணமும், சுய நலமும் பார்க்கிறவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்து மாறுகின்றன என்றும் வலியுறுத்துகிறது.
இருப்பினும், எப்போதெல்லாம் சந்தர்ப்பவாதம் என்பது விவாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், எது பெரிய நன்மை? யாருக்குப் பெரிய நன்மை? எது தீமை? எவ்வளவு தீமை? என்ற கேள்விகளோடு சந்தர்ப்பவாதத்தை மதிப்பிடத் தொடங்க வேண்டும். அத்தகு நன்மதிப்பீட்டின், நெடுங்காலப் பலன்களின் அடிப்படையில் தொடங்கப்படும் சந்தர்ப்பவாதங்களே பெரும்பான்மையோருக்குத் தீய விளைவுகளைக் கொடுக்காமல் நெருக்கடி மேலாண்மைக்கும், தகவமைப்புத் திறனுக்கும் உதவும். இதுவே விளைவுகளை விட அதனை அடையும் ஒழுக்கவிதிகளை முன்நிறுத்தும் நெறிமுறைவாதமாக (Denotology) பயனுடைவாதத்திற்கு எதிராக வைக்கப்படுகிறது.
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய தத்துவவாதி இம்மானுவேல் காண்ட் (Immanuel Kant) இந்த நெறிமுறைவாதத்தை உறுதியாகக் கட்டமைத்தவர். அவரின் கூற்றுப்படி ஒழுக்கநெறிகளை, பிரபஞ்ச விதிகளைக் கடைபிடிப்பது மனிதர்களின் கடமையாகும். பொய் பேசுதல், பிறரை அவமதித்தல், ஏமாற்றுதல், மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்வது போன்றவற்றை எப்போதும், எவரும் செய்யக்கூடாது.
அதாவது, காண்ட் எக்காலத்திலும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தீமை என்பது தீமையே என்றார். நாளைய நன்மையை நோக்கமாகக் கொண்டு செய்யும் இன்றைய சிறு தீமையும் பெரும் தவறுதான் என்பதே இதன் நியதி. இது நடைமுறையில் சாத்தியமா, இக்கொள்கையை ஏற்றுக் கொள்வதா ஒதுக்குவதா என்பது அவரவர் சுயமதிப்பு, வாழ்வின் நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது.
நடைமுறை வாழ்வில் ஒரு நோயாளியைக் காப்பாற்ற மருத்துவர் உடலைக் கிழிப்பதும், வலி தரும் மருந்துகளை கொடுப்பதும் பயனுடைமைவாதமாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும் இல்லையா? தேசப் பாதுகாப்பு, பொது மக்கள் உயிர் பேணுதல் போன்றவற்றுக்காக ராணுவமும், சட்டமும் முன்னெடுக்கும் செயல்களுக்கும்கூட மற்றொரு பக்கம் இது சந்தர்ப்பவாதம் என எதிர்க்குரல்கள் எழுந்து கொண்டேதான் இருக்கும். ஏனெனில், மனித மனம் அத்தகையது. உளவியலாளர் சிக்மன்ட் ஃராய்ட் இதையே, " மனிதன், போராட்டம், துன்பம், சுய அழிவு போன்ற எதிர்மறை விஷயங்களின் மேல் பெரும் ஈர்ப்பு கொண்டிருக்கிறான். ஆழ் மனத்தில் இறப்பு என்ற பெரும் எதிர்மறை நிகழ்வுதான் மனித வாழ்வின் நோக்கமென்ற பதிவு இருக்க, அடிப்படையாகவே மனிதன் தன் பயத்தைப் போக்க மீண்டும் மீண்டும் காயப்படுத்துபவற்றையே செய்ய விரும்புகிறான்" என்று குறிப்பிடுகிறார்.
வரலாற்றிலும், அரசியலிலும் மட்டுமா நடைமுறை வாழ்வில் உறவுகளில் எத்தனை சந்தர்ப்பவாதங்களைச் சந்திக்க நேரிடுகிறது? சில உதாரணங்களைப் பார்ப்போம்.
ஒரு பெண்மணி திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் தன் கணவர், அவரின் தாய் மற்றும் சகோதரிகளுக்காக பெரும் பொருளாதாரச் செலவுகளை மேற்கொண்டதைப் பார்த்து வருந்தினார். தன்னையும் தன் குழந்தைகளையும் அவர் கவனிக்கவில்லை என்று கோபமுற்றார். மிகவும் போராடி கணவருக்கு, மனைவியும், குழந்தைகளுமே முதன்மை என்று எடுத்துச் சொன்னார். அதில் வெற்றியும் கண்டார். தற்போது கணவர் இறந்து விட்டார். நல்ல இடத்தில் திருமணமாகிவிட்ட மகள், கைநிறைய சம்பாதிக்கும் மகன் என்ற நிறைவான வாழ்க்கை. இங்கேதான் அவரது சந்தர்ப்பவாதம் தலை தூக்கியது. 37 வயதாகியும் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்காமல், "இந்தக் காலத்துப் பெண்கள் எங்களைப் போல் இல்லை. திருமணமானால் என்னையும் என் மகளையும் அவன் கவனிக்க மாட்டான். மருமகள் அப்படி ஆக்கி விடுவார்' என்று வருகின்ற வரன்களை எல்லாம் தட்டிக் கழிக்கிறார். எப்பேர்ப்பட்ட சுயநலமிது?
இதே போல, தன் மகன் தன்னை வயதான காலத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு தந்தை எதிர்பார்க்கிறார். இது இயல்பானதுதானே? ஆனால், திருமணம் ஆனாலும் கூட என்னைக் கவனிப்பது உன் முதன்மையான கடமை என்று மகனுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுவும் நியாயம்தானே என்று தோன்றுகிறது. ஆனால், இதில் சற்றே பின்னோக்கிப் பார்த்தபோது அந்தத் தந்தை அவருடைய வாழ்வில் அவர் பெற்றோர்களை ஒருபோதும் பராமரித்ததேயில்லை என்ற உண்மை தெரிகிறது. நல்ல வேலை, சம்பளம் இருந்தும் தன் கடமையைப் புறக்கணித்து, தந்தையான நீங்கள்தான் மகனுக்குச் செய்ய வேண்டும் என்று அவர் வாதிட்டுக் கொண்டிருந்தவர். வயது மாற்றமும், சார்பு நிலையும் ஒருவரை எப்படி சந்தர்ப்பவாதியாக மாற்றி விட்டது பார்த்தீர்களா ?
15 ஆண்டுகளுக்குமுன் தன் சகோதரனின் திருமணத்தில் புதுப்பெண்ணின் குதிரைவால் கொண்டை சிகையலங்காரலத்திற்கும், நவீனபாணி உடைக்கும் முகம் சுளித்துப் பேசி குடும்பச் சண்டையை உருவாக்கிய பெண்மணியை அறிவேன். சமீபத்தில் அவரது மகளின் திருமணத்தின்போது விரித்த கூந்தலோடு, அதி நவீன சல்லடை ஆடையோடு அவர் மகள் நிற்க " பெண்ணின் மகிழ்ச்சிதான் குடும்பத்திற்கு முக்கியம் இல்லையா? எனவே எல்லாம் அவளின் விருப்பம்" என்று பெருந்தன்மைபோல கூறியதைக் கேட்டேன். இவ்வாறு எது சந்தர்ப்பவாதம் என்பதே தெரியாத அளவுக்கு நெறிமுறைகளின் மறதி ஆட்டிப்படைத்து பலரை சந்தர்ப்பவாதிகளாக மாற்றியுள்ளது.
"காரியம் ஆகும்வரை காலைப் பிடி.. காரியம் ஆனவுடன் கழுத்தைப் பிடி" என்பார்களே.. அப்படி குறிப்பிட்ட தேவைகளுக்காக ஓர் உறவை நம்பிக்கை கொடுத்துப் பழகிவிட்டு, மற்றொரு உறவு கிடைத்தவுடன் தூக்கி எறியும் உறவு துரோகங்களும் பெருகி விட்டன. இப்படி வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு தரத்தில் சந்தர்ப்பவாதச் சீர்கெடுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இங்கே உற்று கவனிக்க வேண்டியது பிறரின் சந்தர்ப்பவாதம் என்று கேட்டால் உக்கிரமாக அடுக்கும் நம் மனமானது, சுய சந்தர்ப்பவாத நடத்தைகளை மூளையின் தற்காப்பு ஆணையின்படி சாதகமாக மறந்து விடுகிறது. அல்லது சாதுர்யமாக மறுத்து, மறைத்தும் விடுகிறது. இவ்வாறு நம்மோடு பழகிக் கலந்துவிட்ட சந்தர்ப்பவாதம் உறவுகளைப் போலியாக்குகிறது. எவரையும் நம்ப முடியாத வேதனைக்குத் தள்ளுகிறது.
உறவுகளைக் கட்டுப்படுத்தவும், தன் அகந்தையை நிலை நாட்டவும், தனக்கு நெருக்கமானவரின் மகிழ்ச்சிக்காகவும், பொருளாதார நலனுக்காகவும் தொடர்ந்து சந்தர்ப்பவாதிகள் அறிந்தோ அறியாமலோ எளிய மனங்களை, தான் அறியாத நல்லோரை வீழ்த்திக் கொண்டே போகிறார்கள். இவர்கள் அறிவியலின் நல்லாற்றலின் விளைவுகளை ஏற்காதவர்கள். நல்லெண்ணச் சிந்தனைகளின் நேர்மறை சக்தியினை உணராமல் இருப்பவர்கள் எனலாம். நன்மை செய்தால் நன்மை, தீமை செய்தால் தீமை எனும் ஆன்மீக நம்பிக்கையும் அற்றவர்கள்.
ஒருமுறை அடைந்துவிட்ட சந்தர்ப்பவாதத்தின் வெற்றி, தோட்டக்காரன் கண் அசரும் நேரம் மாங்காய் பறிப்பதுபோன்ற அலாதி சுவை கொண்டது. இன்னொருவரின் வாய்ப்பை, பொருளைத் தட்டிப் பறிக்கும் போதை, மேலும் தொடர்ந்து சந்தர்ப்பவாதத் திட்டங்களைத் தீட்ட மூளைக்கு ஆணையிடும். ஏனெனில், திருட்டு மாங்காயின் ருசி தருவது ஆபத்தை மேற்கொள்ளும் சாகச நிறைவு. அப்போது பரிசாக மூளை வெளியிடும் டோப்பமைன்
( Dopamine) தரும் புதிய சக்தியானது, நம்மை மீண்டும் மீண்டும் வேண்டுமென கேட்கத் தூண்டும். ஆக சந்தர்ப்பவாதக் காற்று முடிவற்ற தன்னலப் புயலாகக்கூடும்.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு போன்ற தனிநபர் வளர்ச்சிக்காகவும், உயிர் வாழ்தலின் பொருட்டும் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பவாத நிர்ப்பந்தங்களை கட்டுக்குள் வைத்துக் கொள்வது ஒன்றே இதற்கான தீர்வு. பிறர் கோணத்திலான உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்வதும் மிக அவசியம். பிறகு நம்முடைய சுய முன்னேற்றச் சந்தர்ப்பவாத நடத்தையை மேற்கொள்வதா வேண்டாமா என முடிவு செய்யலாம். ஏனெனில், நாம் எல்லோருமே மனிதச் சங்கிலியின் அழகான கண்ணிகள். தனிநபரின் பாதைப் பிறழ்வு மனித குலத்திற்கே நசிவாக மாறும் என்று பொறுப்புணர்வோடு செயலாற்றுவோம்.
புகழ் பெற்ற அமெரிக்கத் தொழிலதிபரும் ஊடகப் பிரபலமுமான லோரி கிரீனர் (Lori Greiner) "அன்பின் நம்பிக்கையாளர்களே, அவநம்பிக்கையாளர்களே, யதார்த்தவாதிகளே நீங்கள் எல்லோரும் ஒரு கோப்பை திராட்சைரசத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் நான் அதைப் பருகிவிட்டேன் - இப்படிக்கு உண்மையான சந்தர்ப்பவாதி" என்று சந்தர்ப்பவாதத்தை நேர்மறையான செயலூக்கச் சக்தியாக, நேர விரயத்தின் சாடலாகக் குறிப்பிடுகிறார். "யோசிச்சுட்டு இருந்தல்ல.. எந்திரிச்சுப் போ" என்று செந்திலின் தேநீரை கவுண்டமணி குடித்துவிடும் நகைச்சுவைக் காட்சியின் சூத்திரம்தான் இது. தகுதி உடையவர் நேரம் கடத்தி, மெத்தனமாக இருப்பின் தன்னல / தீய விழைவு கொண்ட சந்தர்ப்பவாதிகள் உங்கள் கோப்பையை பருகிச் சென்று விடுவார்கள்தான். இருப்பினும், அக்கோப்பையில் பல்லிகூட விழுந்திருக்கலாம் எனும் புரிதலோடு சந்தர்ப்பவாதத்தை அணுகுவோம்.
தீவிர சந்தர்ப்பவாதம் எனும் தந்திரச்சுழலில் நம்மை நாமே புகுத்திக்கொண்டால் அதில் மூழ்கப் போவது நாமும்தான் என உணர்வோம். (ஜெயஸ்ரீ கண்ணன், மனநல ஆலோசகர்)