காந்தி 
சிறப்புப்பக்கங்கள்

சந்தர்ப்பவாத அரசியல்: அந்த நாள் முதல் இந்த நாள் வரை...

மாலன்

”அரசியல் என்பது சாத்திய மானதைச் சாதிக்கும் கலை; கிடைக்கக்கூடியதை அடையும் திறன் — அடுத்த சிறந்ததை உருவாக்கும் கலை.” இதைச் சொன்னவர் ஜெர்மனியின் இரும்பு மனிதர் ஆட்டோ வான் பிஸ்மார்க். இந்த நீள வாக்கியத்தை அலங்காரங்களை உதிர்த்து மெருகு நீக்கி ஒரு வார்த்தையாகச் சுருக்கினால் கிடைக்கும் சொல்: சந்தர்ப்பவாதம்.

சுதந்திர இந்தியாவின் 79 வருட அரசியலைச் சுருக்கினாலும் கிடைக்கும் வார்த்தையும் அதுதான். கட்சி வித்தியாசம் இல்லாமல், மாநில அரசியல், தில்லி அரசியல் என்ற வேறுபாடு இல்லாமல் இந்திய அரசியலைச் செலுத்தி வந்திருக்கும் விசை சந்தர்ப்பவாதம்தான். அந்த விசையை முடுக்கும் சுவிட்ச் பதவிஆசை.

இன்னும் சொல்லப்போனால், நம்முடைய அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள் ஏற்க மறுத்தாலும் தமிழக அரசியல் கட்சிகளின் பயணத்தைச் செலுத்தியதும், பாதையை அமைத்ததும் தில்லி அரசியலும் அதைச் சார்ந்த சந்தர்ப்பவாதம்தான்.

அதைக் குறித்து ஒரு பி.எச்டி தீஸிஸே எழுதலாம். எனக்கு பி.எச்டியில் ஆர்வமோ ஆசையோ இல்லை என்பதாலும் அந்திமழையின் பக்க வரம்பைக் கருதியும் சில முக்கிய தடங்களை மட்டும் இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.

1948

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து காந்தியின் எண்ணங்களை ஒரு தீர்மானமாக எழுதித் தருமாறும் அந்த வரைவுத் தீர்மானத்தை அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் விவாதித்து நிறைவேற்றலாம் என்றும் 1948ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று, காங்கிரஸ், காந்தியிடம் கேட்டுக் கொண்டது. ஜனவரி 30ஆம் தேதிக்குள் எழுதிக் கொடுப்பதாக காந்தி சொல்லியிருந்தார். அவர் கொலையாவதற்கு ஒரு நாள் முன்னதாக, 1948ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி, காந்தி தனது எண்ணத்தைத் தீர்மானமாக வடிவமைத்துக் கொடுத்தார். அதைக் கண்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி! காரணம் “சுதந்திரம் என்ற நோக்கம் நிறைவேறி விட்டதால் காங்கிரஸ் இனி அரசியல் கட்சியாகச் செயல்படுவதற்கான தேவை முடிந்து விட்டது. எனவே காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடலாம். ஆனால் இந்தியாவில் உள்ள 700 கிராமங்கள் சமூக, பொருளாதார, தார்மீக சுதந்திரத்தை இன்னும் அடையவில்லை என்பதால் காங்கிரஸ் ஒரு சமூக சேவை இயக்கமாகச் செயல்படலாம்” என அவர் தெரிவித்திருந்தார்.

காந்தி மறைந்த சில தினங்களுக்குப் பின் அவரது ஹரிஜன் பத்திரிகை, காந்தியின் மரண சாசனம் என்று தலைப்பிட்டு அந்த வரைவுத் தீர்மானத்தைப் பிரசுரித்தது. இப்போதும் அந்தத் தீர்மானத்தை காந்தி எழுதியவற்றின் தொகுதி 98ல் (Collected Works of Mahatma Gandhi, Volume 98) காணலாம்.

ஆனால் தன்னுடைய தலைவர், வழிகாட்டி, தந்தை என்றெல்லாம் காந்தியைக் கொண்டாடும் காங்கிரஸ் அவரது மறைவுக்குப் பின் அந்தத் தீர்மானத்தை விவாதத்திற்கே எடுத்துக் கொள்ளவில்லை. அவரது மரண சாசனம், இறுதி விருப்பம் பரிசீலிக்கப்படவே இல்லை. காங்கிரஸ் கட்சி கலைக்கப்படவில்லை. மாறாக -

1947 முதல் 1996 வரை ஏறத்தாழ அரை நூற்றாண்டு் காலம் (இடையில் இரு ஆண்டுகள் நீங்கலாக) காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்தது. நேருவும் அவரது வாரிசுகளும் மத்திய அரசிற்குத் தலைமையேற்று பல காலம் ஆண்டார்கள். மத்தியில் மட்டுமன்றி பல மாநிலங்களிலும் அது பல காலம் ஆட்சி செய்தது. இப்போதும் அரசியல் கட்சியாகத் தேர்தல்களில் போட்டியிடுகிறது.

ஒருமுறை சட்டமன்றத்தில் கே.பி. முனுசாமி காங்கிரஸைக் கலைக்குமாறு காந்தி சொன்னார் என்று பேசியபோது காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இது குறித்த காந்தியின் ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.

1952

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் தமிழகத்தில், 1952ஆம் ஆண்டு ஜனவரி 2 தொடங்கி ஜனவரி 25 வரை, ஒன்பது கட்டங்களாக நடந்தது. முடிவுகள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டன. ஆனால் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது சென்னை ராஜதானியின் சட்டமன்றத்தில் 375 உறுப்பினர்கள். ஆட்சி அமைக்க 188 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் 152 இடங்களைப் பெற்று தனிப் பெரும் கட்சியாகத் தேர்வாகியிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 62 இடங்களைப் பெற்று இரண்டாமிடத்தில் இருந்தது.

அவர்கள் 35 இடங்களில் வென்று மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்த, டி.பிரகாசத்தைத் தலைவராகக் கொண்ட, ‘கிசான், மஸ்தூர் பிரஜா பார்ட்டி (KMPP) தலைமையில் ‘ஐக்கிய ஜனநாயக முன்னணி’ என்ற ஒரு கூட்டணியை அமைத்தனர். கம்யூனிஸ்ட்கள் 70, KMPP 36, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19. காமன்வீல் கட்சி 6 மற்ற சிறிய கட்சிகள், சுயேட்சைகள் 35 என 166 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகவும் தாங்கள்தான் தனிப்பெரும் குழு என்றும் கவர்னருக்குக் கடிதம் எழுதினார்கள்.

ராஜாஜி

கம்யூனிஸ்ட்கள் அதிகாரம் பெறுவதை விரும்பாத காங்கிரஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ராஜாஜியை “எப்படியாவது” காங்கிரஸ் ஆட்சியை அமைக்குமாறு சொல்லியது. இந்தியாவின் உச்ச பதவியான கவர்னர் ஜெனரல் பதவியை வகித்திருந்த ராஜாஜி, கெளரவம் பார்க்காமல் ஒரு மாநில முதல்வராகப் பொறுப்பேற்க இசைந்தார். கவர்னர் அவரை மேலவைக்கு உறுப்பினராக நியமித்து அரசமைக்க அழைத்தார். ராஜாஜி களம் இறங்கினார். 1952ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு, ராஜாஜி நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வந்து 200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 152 எப்படி 200 ஆனது?. ஐக்கிய ஜனநாயக முன்னணி உடைக்கப்பட்டது. குதிரை பேரம் நடந்தது. ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு அளிப்பதாகச் சொல்லியிருந்த பல்வேறு கட்சியினரும் சுயேச்சைகளும் அமைச்சர்களானார்கள்.

1963

திராவிடநாடு என்ற கருத்தியல் 1938ல் உருவானது. 1938ல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் லண்டனில் உள்ள ஆங்கில அரசின் இந்தியா அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழர்களுக்கு இறையாண்மை கொண்ட தனி நாடு அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு திராவிட நாடு என்று பெயர் கொடுத்தவர் பெரியார். அவர் 1939ஆம் ஆண்டு டிசம்பர் 17ல் கூட்டிய மாநாட்டில் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை எழுப்பினார். 1949ல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை உருவாக்கிவிட்ட போதிலும் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை தீவிரமாக முன்னெடுத்தார். சம்பத், வி.பி. ராமன் போன்றவர்கள் திராவிட நாடு கொள்கையோடு முரண்பட்ட நேரத்திலும், 60களில் பெரியார் தனது விடுதலை இதழின் முகப்பில் திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை தமிழ்நாடு தமிழருக்கே என்று மாற்றிவிட்ட போதிலும், அண்ணா திராவிட நாடு கோரிக்கையில் முனைப்பாக இருந்தார். 1962ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி மாநிலங்களவையில் அவர் நிகழ்த்திய முதல் பேச்சில் திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். இன்பத் திராவிடமே எங்கள் லட்சியம், (எல்லாவற்றையும் இழந்து) திண்ணையில் இருக்க நேர்ந்தாலும் திராவிடநாடு வாங்குவோம், அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு, என்ற முழக்கங்களை அண்ணாவும் அவரது கட்சியினரும் எழுப்பி வந்தார்கள்.

ஆனால் 1963ஆம் ஆண்டு நாடாளுமன்றம், பிரிவினை பேசும் கட்சிகள், இயக்கங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற அரசமைப்புச் சட்டத்தின் 16ஆவது திருத்தத்தை ஏகமனதாக நிறைவேறிய பின்னர் திமுகவின் நிலைப்பாடு மாறியது.

1963 நவம்பர் 3ஆம் தேதி சீனப்படையெடுப்பைக் காரணம் காட்டி அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாகக் கூறினார். வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும், நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டிற்கே ஆபத்து வந்திருக்கும் போது பிரிவினை கேட்பது அயலானுக்கு இடம் கொடுத்து விடும் என்று சொன்னார். உண்மையில் போர்தான் காரணம் என்றால் தனிநாடு கோரிக்கையைத் தற்காலிகமாக போர் முடியும் வரை வலியுறுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை அண்ணா எடுத்திருக்கலாம். ஆனால் அவர் நிரந்தரமாகக் கைவிட முடிவெடுத்தார்.

திராவிடர் கழகத்தாரும் காங்கிரஸ்காரர்களும், ''சட்டம் வருகிறதென்பதால் பயந்து பிரிவினையைக் கைவிட்டார்கள்” என்று மேடைகளில் விமர்சித்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக “ ''கழகத்தை அழிக்க சட்டம் கொணர்ந்தனர். சட்டத்தைத் திருத்தி கழகத்தைக் காத்தோம். 'சூட்சுமம்' புரிகிறதா தம்பி?" என்று திமுக சுவரொட்டி ஒன்று வெளியிட்டது.

கட்சியைக் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பில்லை என்று எம்.ஜி.ஆர், அண்ணா ஒரு தீர்க்கதரிசி என்ற கட்டுரையில் (அண்ணா பவழ விழா மலர்) தெரிவிக்கிறார்.” கழகத் தோழர்கள் யாரையும் கலந்து பேசாமல் அறிஞர் அண்ணா அவர்கள் இப்படி அறிவிக்கலாமா என்று நம்மிலே எவரும் கேட்கவில்லை. கழகத்தின் உயிர்க் கொள்கையான ஒன்றை எப்படி ஒரு கணத்தில் விட்டுவிடலாம் என்றும் நாம் வீண் பழி போடவில்லை” என்று அவர் எழுதுகிறார்.

ஆனால் 1962க்கு முன்னரே திராவிட நாடு கோரிக்கை நடைமுறையில் கைவிடப்பட்டுவிட்டது என்று முரசொலி மாறன் தெரிவித்ததாக பேராசிரியர் ராபர்ட் ஹார்ட்கிரேவ் ஒரு கட்டுரையில் தெரிவிக்கிறார். [Maran explained that there was not really enough support for Dravida Nadu in Tamil Nadu at the time, and it was concluded that there was no use pursuing the demand. He declared "I am Tamil first but I am also an Indian. Both can exist together provided there is space for cultural nationalism." - Hardgrave, Robert L. Jr. "The DMK and the Politics of Tamil Nationalism". Pacific Affairs. 37 University of British Columbia: 1971] திராவிட நாடு கொள்கைக்கு உண்மையில் தமிழ்நாட்டில் போதிய ஆதரவு இல்லை என்பதால் தேர்தல் அரசியலில் வெற்றிகளை ருசிக்கத் தொடங்கியிருந்த திமுக அந்தக் கொள்கையைக் கைவிட எண்ணியிருந்த நேரத்தில் வந்த சீனப் போர் அதற்கு உதவியது. அதன் கணிப்பு தவறவில்லை. 1962இல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அது பிரிவினை கோரிக்கையைக் கைவிட்ட பின் 1967இல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது

1971

1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றுப் போன ராஜ்நாராயண் என்ற சோஷலிஸ்ட் கட்சி வேட்பாளர் இந்திராவிற்கு எதிராகத் தேர்தல் வழக்கொன்றை தாக்கல் செய்தார். 1975ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திராவின் வெற்றி செல்லாது என்றும் அவர் ஆறாண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கமுடியாது என்றும் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் இந்திரா. ஜூன் 24ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர் கிருஷ்ணய்யர் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார். தீர்ப்பு வந்த மறுநாள் ஜூன் 25 1975 நள்ளிரவில் இந்திரா அவசர நிலையை அறிவித்தார். அந்த இரவில் எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவசரநிலையை பிரகடனம் செய்வது என்ற முடிவு அமைச்சரவையில் கூட எடுக்கப்படவில்லை. (பின்னர் அமைச்சரவை அதை ஏற்றுக் கொண்டது) முன்னணி அரசியல் தலைவர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். அரசமைப்புச் சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பத்திரிகைகள் தணிக்கைக்குள்ளாயின.

இந்திரா காந்தி

முழுமையான சுதந்திரம் கோரியும், பிரிட்டீஷாரின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடிய வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால் அதே காங்கிரஸ் ஆட்சியில்தான் சுதந்திர இந்தியாவில் அடக்குமுறைகளையும் பத்திரிகைத் தணிக்கையையும் நடைமுறைப்படுத்திய எமர்ஜென்சியும் அறிவிக்கப்பட்டது. காரணம் பதவியைப் பாதுகாத்துக் கொள்ளல்.

1977

1977 ஜனவரி 18 அன்று எமெர்ஜென்சி தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அந்தத் தருணத்தில் உதயமானது ஜனதா கட்சி. அது ஒரு கூட்டணி அல்ல. பல்வேறு அரசியல்கட்சிகள் தங்கள் பெயரை, அடையாளத்தை, தேர்தல் சின்னத்தைக் கைவிட்டு, ஒருங்கிணைந்து, உருவான புதிய அரசியல் கட்சி.

மொரார்ஜி தேசாய்

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சிங்கத்தின் தலையும் குதிரையின் வாலும், மாட்டின் காலும், மயிலின் கழுத்தும், பருந்தின் இறக்கைகளும் கொண்ட ஓர் அடையாளமற்ற வினோத விலங்கு. மொர்ராஜி தேசாய் போன்ற வலதுசாரிகளும் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் போன்ற சோஷலிஸ்ட்களும், மதச்சார்பின்மை பேசியவர்களும் இந்துத்வ நம்பிக்கையாளர்களும் ஒன்றிணைந்தார்கள். தேர்தலில் வென்று இந்திராவை வீழ்த்தி ஆட்சி அமைத்தார்கள். ஆனால் ஊதிப் பெருக்கப்பட்ட ஈகோக்களால் ஒற்றுமை சிதைந்து சின்னபின்னமாகியது. பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள கட்சியைக் காவு கொடுத்தவர்கள் என்று அவர்களை வரலாறு பதிவு செய்து கொள்கிறது

1980

எமெர்ஜென்சியின் போது பெருந்துயரங்களுக்குள்ளான கட்சி திமுக. அதன் தலைவர்கள், கருணாநிதியைத் தவிர, கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்கள். சிறை வைக்கப்பட்டது மட்டுல்ல, சிறைக்குள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டார்கள். ஆனால் ஜனதா ஆட்சி மூன்றாண்டுகளில் முடிந்து 1980ல் மக்களவைத் தேர்தல் வந்தபோது எந்தக் காங்கிரஸ் கட்சி தங்கள் மீது அடக்குமுறைகளை ஏவியதோ அதே காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி கண்டது. எந்த இந்திரா எமர்ஜென்சியை அறிவித்தாரோ அதே இந்திராவை “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக” என்று கடற்கரைக் கூட்டத்தில் கருணாநிதி வரவேற்றார். சில ஆண்டுகளுக்கு முன் பாசிஸ்டாக சர்வாதிகாரியாக இருந்தவர் இப்போது ஜனநாயகத்தைக் காப்பவராக மாறிவிட்டார் என்றது திமுக.

இந்திராவுடன் மு.க.

இந்த சந்தர்ப்பவாதத்திற்கு அல்லது சரணாகதிக்கு அரசியல் ஆய்வாளர்கள் சில காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றில் ஒன்று எம்.ஜி.ஆருடன் இருந்த அரசியல் பகை. திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கி, 1977இல் திமுகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்திருந்தார்.சினிமா கவர்ச்சியினால் ஆட்சியைப் பிடித்துவிட்டார் என்று (இப்போது விஜயின் வெற்றியைச் சொல்வதைப் போல) திமுக பலமாக நம்பியது. அரசியல் ரீதியாக எம்ஜிஆரை வீழ்த்த, 1980 ஜனவரியில், வந்த இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பு. ஜனதா கட்சியின் கந்தல் கோலமான ஆட்சியினால் அதன் மீது வெறுப்புற்று காங்கிரசை நோக்கித் திரும்பியிருந்த மக்களின் ஆதரவைத் தாங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அரசியல் கணக்கு ஒரு காரணம். அதன் கணக்குத் தவறவில்ல. ஜனவரியில் நடந்த அந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் படுதோல்வி அடைந்தார்.

மே மாதம் அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்த போதிலும் ஜனவரியில் தோற்ற எம்.ஜி.ஆர் மே மாதத்தில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். 1971 சட்டமன்றத் தேர்தலில் (இந்திரா) காங்கிரசிற்கு ஓர் இடம் கூடக் கொடுக்க மறுத்த திமுக இந்தத் தேர்தலில் 114 இடங்களை (தன்னை விடக் கூடுதலாக இரண்டு இடங்கள்) ஒதுக்கியது.அதைக் காரணமாகச் சொல்லி திமுக தன்னைத் தேற்றிக் கொண்டது.

1996

1991ல் மகத்தான வெற்றியைப் பெற்ற ஜெயலலிதா ஐந்தாண்டுகளில் லஞ்சம் ஊழல், அதீத ஆடம்பரம், அதிகாரக் கெடுபிடிகள் காரணமாக செல்வாக்கிழந்திருந்தார். காங்கிரஸ் தலைமை 1996 தேர்தலிலும் அவரோடு கூட்டணி சேர விரும்பியது. தமிழகக் காங்கிரசில் எதிர்ப்பு எழுந்தது.

மூப்பனார்

மூப்பனார் தலைமையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் தோன்றியது எந்தக் காரணத்தைச் சொல்லி காங்கிரசிலிருந்து வெளியேறி மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரசைத் தோற்று வித்தாரோ, அதே தமிழ் மாநில காங்கிரஸ் அதே ஜெயலலிதாவுடன் அடுத்த தேர்தலில் (2001இல்) கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்தது.

1999

காங்கிரஸின் உறவை முறித்துக் கொண்டு பாஜகவுடன் சேர்ந்து வாஜ்பாயை பிரதமர் நாற்காலியில் அமரச் செய்த ஜெயலலிதா ஓராண்டில் ஆதரவை விலக்கிக் கொள்ள, (அவர் மீதான வழக்குகளை மத்திய அரசு விலக்கிக் கொள்ள மறுத்ததுதான் காரணம் எனப் பத்திரிகைகள் எழுதின) வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

வாஜ்பாயியுடன் கருணாநிதி

அடுத்து வந்த தேர்தலில் ஜெயலலிதா காலிசெய்த இடத்தை திமுக நிரப்பியது. பண்டாரம் பரதேசிக் கட்சி என்று அதுநாள்வரை விமர்சித்து வந்த பாஜகவுடன் அது கூட்டணி கண்டது. தேர்தல் வெற்றிக்குப் பின் அமைந்த வாஜ்பாய் அரசிலும் பங்கேற்றது. முரசொலி மாறன், டி.ஆர்.பாலு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

2001

திராவிடப் பெரும் கட்சிகளுக்கும் பாமகவிற்கும் உள்ள உறவு சக்கர ராட்டினம் போல் ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அதற்குக் காரணம் பதவிக்கான பேரம்.

2001 பிப்ரவரி 5-ம் தேதி திடீரென, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பா.ம.க விலகுவதாக அறிவித்தார் ராமதாஸ். பா.ம.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் சண்முகமும், பொன்னுசாமியும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அடுத்த நாள், அதாவது 2001 பிப்ரவரி 6-ம் தேதி, போயஸ் கார்டனுக்குப்போய், கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார் ராமதாஸ்.

அ.தி.மு.க கூட்டணியில் பாமக சேர்ந்த போது அதுவரை தமிழகம் கண்டிராத ஒப்பந்தம் உருவானது. இன்று அதிகம் பேசப்படும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை அன்றே முன் வைத்தவர் ராமதாஸ்.

ஜெ.வுடன் ராமதாஸ்

`புதுச்சேரியில் சுழற்சி முறை ஆட்சி நடைபெறும். அதில் முதல் இரண்டரை ஆண்டு பா.ம.க. ஆட்சி செலுத்தும்' என ஒப்பந்தம் போட்டு ஜெயலலிதாவும் ராமதாஸும் அதில் கையெழுத்திட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பா.ம.கவின் ஆட்சிப் பங்கீட்டைக் ஏற்க மறுத்து கூட்டணியிலிருந்து, வெளியேறியது. தேர்தல் முடிவுகள் வந்த போது பாமகவின் ‘அத்தைக்கு மீசை முளைத்தால்’ என்ற இந்த ஒப்பந்தம் அர்த்தமற்றுப் போனது. ஏனெனில் தமிழகத்தில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்ற பா.ம.க., புதுச்சேரியில் போட்டியிட்ட 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. காங்கிரஸ் 11, த.மா.கா 2 எனக் காங்கிரஸ் - த.மா.கா கூட்டணி 13 இடங்களில் வென்றது. எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அ.தி.மு.க-விடம் காங்கிரஸ் ஆதரவு கேட்டது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய நிபந்தனையற்ற ஆதரவை அளித்தார் ஜெயலலிதா.

அதன் பிறகு புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இன்றுவரை பாமக இறங்கவில்லை

2015

அதுவரையில் திமுக, அதிமுக ஆகியவற்றின் தலைமையை ஏற்று அந்தக் கூட்டணிகளில் இடம் பெற்று வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தலைமையை ஏற்க மறுத்து 2015 அக்டோபரில் ஏற்படுத்திய அரசியல் கூட்டணி மக்கள் நலக் கூட்டணி.

மக்கள் நலக்கூட்டணி

2016 தேர்தலில் விஜயகாந்தை முதல்வராக அறிவித்து தேர்தலைச் சந்தித்த அந்தக் கூட்டணி எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அடுத்த தேர்தலுக்கு அவை திமுகவிடமே திரும்பின. அப்போது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, திமுக 25 கோடி ரூபாய் தேர்தல் நிதியாகக் கொடுத்தது என்று செய்திகள் வெளியாயின.

2026

யாரும் எதிர்பாராத வகையில் இருபெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி தவெக தனிப் பெரும் கட்சியாக சட்டமன்றத்தில் நுழைந்தது. ஒன்பதாண்டுகளுக்கு மேல் திமுக கூட்டணியிலிருந்து தேர்தலைச் சந்தித்த கட்சிகள் தேர்தல் முடிவு வந்த சில நாள்களிலேயே இடம் பெயர்ந்து ஆதரவளிக்க அது ஆட்சி அமைத்தது. அரை நூற்றாண்டுக்கு மேல் எதிரெதிராக நின்று ஒருவரை ஒருவர் விமர்சித்து, வழக்காடி, தலைவர்களை சிறைக்கனுப்பிய திமுகவும் அதிமுகவும் கூட்டணி உறவு கொண்டு ஆட்சி அமைக்க முயன்றதாகச் செய்திகள் வெளியாகின.

முதல்வராக விஜய்

இதையெல்லாம் கண்டு என் நண்பர்களில் சிலர் திகைக்கவும் வியக்கவும் செய்தனர். சரியென்றும் தவறென்றும் கட்சி கட்டி காமன் பண்டிகை கொண்டாடினர். ஏதோ அதுவரை நடக்காதது நடந்து விட்டது போல, அறச் சீறமும், அரைச்சீற்றமுமாக தொலைக்காட்சிகளிலும் யூ டியூப்களிலும் விவாதங்கள் நடந்தன. எனக்கு அது குறித்து ஆச்சரியம் ஏதுமில்லை. காரணம்?

முதல் பத்தியை மறுபடி படியுங்கள்.

சமரசம் உலாவும் இடம்

1952இல் கம்யூனிஸ்ட்கள் என் முதல் எதிரி என்று சொன்ன ராஜாஜி 1967இல் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். காங்கிரசை எதிர்த்து வெளியேறி, காங்கிரசை ஒழிப்பதற்காக சுயமரியாதை இயக்கம் தோன்றியது என்று தனது மரண சாசனத்தில் குறிப்பிட்ட பெரியார் 1967இல் காங்கிரசை ஆதரித்தார்.

எந்தக் காங்கிரசை தோற்கடிக்க 1967இல் அண்ணா கூட்டணி கண்டாரோ அந்தக் காங்கிரசோடு 1971இல் கருணாநிதி கூட்டணி கண்டார். காங்கிரசின் இரு துருவங்கள் என்றறியப்பட்ட ராஜாஜியும் காமராஜரும் 1971இல் கூட்டணி கண்டனர். இந்திராவோடு கூட்டணி வைத்த கருணாநிதி ராஜீவிற்கு எதிராக போபர்ஸ் பீரங்கிகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்தார்.

இந்துத்துவ வாஜ்பாய்க்கும் திராவிடச் சூரியன் கருணாநிதிக்கும் தேர்தல் உறவு உண்டு. ஜெயலலிதாவால் சிறைக்கு அனுப்பப் பட்ட வைகோவும், ராமதாசும் அதிமுகவோடு கூட்டணி வைத்துக் கொண்டனர். அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தபோது விமர்சித்த எடப்பாடி பழனிசாமியோடு பாஜக தேர்தல் உறவு கொண்டது. எடப்பாடியால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தினகரனோடு அதிமுக கூட்டணி கண்டது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தரப் பகையும் இல்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram