சிறப்புப்பக்கங்கள்

சிங்கம்நிகர் எஸ்.எஸ்.வாசன்!

ராவ்

அப்போது பதினெட்டு வயது இருக்கும். அது 1957 என்று நினைவு. ‘ஆனந்த விகடனில்’ செய்யப்பட்ட பெரும் மாறுதல்களை புதிய பகுதிகளை வரவேற்று, வியந்து அதன் ஆசிரியருக்கு கடிதம் எழுதியிருந்தேன். ‘ஜெமினி ஸ்டூடியோவில் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அடுத்த நாளே எஸ். எஸ். வாசன் அவர்களிடமிருந்து பதில் வந்தது!

நேரம் தவறாமை கடைபிடிக்கும் பழக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. குறித்த நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே போய் காத்திருப்பேன். ஜெமினி ஸ்டூடியோவுக்கு சற்று முன்பே போய், பி.பி. நம்பியார் என்கிற வாசனின் செயலாளர் அறையில் காத்திருந்தேன். உள்ளே கண்ணாடி அறையினுள் எஸ்.எஸ். வாஸன் தெரிந்தார். ஒரு வெள்ளைக்காரருடன் பேசிக் கொண்டிருந்தவர், என்னை சந்திக்கும் நேரம் வந்தவுடன் திரும்பிப் பார்த்தார். டெலிபோனை எடுத்து நம்பியாரிடம் அழைத்து ‘அந்த இளைஞன் வந்திருக்கிறார்... பத்துநிமிஷம் காத்திருக்க சொல்லவும்’ என்றார்!

அவர் அறையில் நுழைந்தபோது, சோபாவில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவரது உருவப் பொலிவு – ஒரு சிங்கம் அம்ர்ந்திருந்தது போலிருந்தது. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்! பிறகு ஏதோ சொல்ல ஆரம்பித்தேன். “கொஞ்சம் இரு! முதலில் நீ உட்கார்! அப்புறம் உன்னுடைய தமிழ் படிக்க ரொம்ப கவர்ச்சியாக இருந்தது வித்தியாசமாக இருந்தது. அது தஞ்சாவூர் தமிழ் இல்ல. நெல்லை தமிழும் இல்ல... அது என்ன தமிழ்?’ என்றார்.

அரைப்பக்க கடிதத்தில் இவர் எப்படி எழுத்து நடையை கண்டறிந்தார் என்பது இன்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அன்று அந்த வியப்பு மேலிடாமல் போனதற்கு இளமை காரணம் போலும்! உடனே பதில்தான் கூறினேன். “நாங்கள் தமிழ் மீது பற்று கொண்ட இளைஞர்கள். திரு.வி.க, டாக்டர் மு.வ எழுத்து நடையை அப்படியே பின்பற்றுவோம்” என்றேன். ‘நீங்கள் சிங்கம் போல் எனக்கு காட்சி தருகிறீர்கள்’ என்று கூடவே சொன்னபோது அவர் அதை கேட்டதாகவே தெரியவில்லை. டாக்டர் மு.வ, தமிழ்வாணன் என்று அன்றைய இளைஞர்களை கவர்ந்தவர்களைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டவாறு இருந்தார். ஒரு மணி நேரம் அவருடன்! அன்றைய அந்த அறிமுகம் பின்னர் தொடர்ந்தது, அது தனிக்கதை.

எஸ். எஸ். வாசன், ஜி.டி.நாயுடு, கருமுத்து தியாகராசன் செட்டியார் போன்ற மேதைகளை சந்திக்கும் போது எனக்கு பரவசம் ஏற்படும். அவர்களைப் பற்றி நிறைய செய்திகளை ஆவலுடன் தேடித் தேடி அறிந்துகொண்டேன்.

வாசன் அவர்களைப்பற்றியும் அப்படியே. அவரது மறைவுக்கு பின் ‘எங்கள் ஆசிரியர்’ என்ற பகுதிக்கு பல பேரை சந்தித்து பேட்டி எடுத்து எழுதும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. அப்போது நிறைய செய்திகள் அறிந்தேன். ஒரு சமயம் கொத்தமங்கலம் சுப்பு அவர்களுடன் இரண்டு நாட்கள் தொடர்ந்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பல உருக்கமான தகவல்களை கூறியிருக்கிறார்.

வாசன் திருச்சியிலிருந்து சென்னைக்கு சைக்கிளில் வந்து தனது முயற்சிகளை தொடங்க சரியான இடம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்திருக்கிறார்.

 சாதாரணமாக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பக்கம் தான் போவார்கள். ஆனால் வாசன் உழைப்பு உதிர்ந்து கிடக்கும் பிராட்வே தான் தகுந்த இடம் என்று முடிவுக்கு வந்தார் என்றால் அப்போதே அவர் சவால்களைச் சந்திக்க தயாரான எண்ணத்தில் இருந்திருக்கிறார்!

ஒரு ரூபாய்க்கு 144 பொருட்கள், புத்தக விற்பனை இவற்றோடு பெரியாரின் ‘குடியரசு’ இதழுக்கு விளம்பரம் சேகரித்து கொடுப்பவராக- இப்படி தேனீ போல் ஆரம்பத்தில் பொருள் ஈட்டினார் அவர். வெற்றிப் படிகளில் ஒவ்வொரு படியாக ஆனால் மிக வேகமாக ஏறினார். ஒரு விஷயம். அவருடைய எல்லா

முயற்சிக்கும் தாயாரின் கருணையுடன் கூடிய அனுமதி கிடைத்தது. உறவினர்கள் கைவிட்ட நிலையில், இட்லி விற்று தன்னைக் காத்த தாயாரிடம் அவர் கொண்டிருந்த பக்தியே தெய்வசக்தியாகும். தன் மகன் அவையத்து முந்தி நிற்பான் என்கிற அசாத்திய நம்பிக்கை தாயாருக்கு உண்டு.

பூதூர் வைத்தியநாதய்யர் நடத்தி வந்த ‘ஆனந்த விகடன்’ இதழில் வாசன் தன் விளம்பரங்களை கொடுத்துவந்தார். அந்த இதழ் நடுவில் வரவில்லை. விசாரிக்கச் சென்றவர் அந்த இதழையே இருநூறு ரூபாய் கொடுத்து வாங்கினார் – தாயார் அனுமதியுடன்! அதே போல் சினிமாவில் நுழைய முடிவு செய்து, ஜெமினி ஸ்டூடியோ வாங்குவது என்ற முடிவுக்கும் தாயாரிடம் அனுமதி பெற்றார்! அவர் உழைப்புக்கு அஞ்சாதவர் என்பதை புரிந்து கொண்ட காலம், அவருக்குப் பின்னர் வெற்றிகளை வாரிவழங்க ஆரம்பித்தது.

ஜெமினியின் சாதனையை உலகம் முழுதும் அறியச் செய்தது சந்திரலேகா. வடக்கே தமிழ் சினிமாவை காலடி எடுத்துவைக்கச் செய்த பெருமை இவருக்கே உரியது. சந்திரலேகாவில் சர்க்கஸ் அழகிகள், டிரம் டான்ஸ் கலைஞர்களைக் கண்டு  திரைப்பட ரசிகர்கள் திரண்டு ஆதரவு தந்தனர். அன்று நாற்பது லட்ச ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மாபெரும் படம் அது! இன்றைய மதிப்பு ஐம்பது கோடிகளைத் தாண்டும். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் தரும் என்று நம்பினார். இந்தியிலும்  எடுத்தால்தான் அது சாத்தியம் என்று இந்தியிலும் எடுத்தார்.

இடையில் பணத்தட்டுப்பாடு வந்தது. தாயார் நம்பிக்கையோடு தன் அத்தனை தங்க நகைகளையும் கழற்றி கொடுத்தார். வாசன் கண்கள் பனித்தன. சந்திரலேகா வசூல் ஒரு கோடியை தாண்டியது. இரட்டிப்பு நகைகள் வாங்கி தாயார் காலடியில் சமர்ப்பித்தார் என்று சொல்லவும் வேண்டுமா?

‘இன்சானியட்’ என்கிற இந்தி படத்தில் நடிக்க ‘ஜிப்பி’ என்கிற குரங்கை வரவழைத்தார் . அதனிடம் அவர் தனித்த அன்பு காட்டினார். அப்படி அன்பு காட்டினால்தான் அது சொல்லி கொடுப்பது போல் நடிக்கும் என்பதுதான் காரணம். சினிமா என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற சில எண்ணங்கள் அவருக்கு இருந்தன. வீண் கட்டுப்பாடுகள் பிடிக்காது. ஒருமுறை மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்தபோது பிலிம்ரோல் வேஸ்ட் ஆவதைத் தடுப்பதாகக் கூறி படம் இத்தனை அடிதான் இருக்கவேண்டும் என்று விதி கொண்டுவந்தார். வாசன் ஏற்க மறுத்து தனிநபர் உரிமையின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து அந்த விதியை ரத்து செய்யவைத்தார்.  பிறகு ஒருமுறை தேசாய் சென்னை வந்தபோது விருந்து வைத்து மரியாதை செய்தார்!

ஞானசௌந்தரி என்ற படத்தை சிடாடெல் நிறுவனமும் ஜெமினி நிறுவனமும் ஒரே நேரத்தில் எடுத்தார்கள். வெளிவந்தபோது ஜெமினியின் ஞானசௌந்தரி சரியாக ஓடவில்லை. தியேட்டர்காரர்கள் ஜெமினி படமாயிற்றே என்று தயங்கினார்கள். விஷயம் அறிந்த வாசன் அனைத்து ப்ரிண்ட்களையும் திருப்பி வாங்கினார். அவற்றை தீயிட்டுக் கொளுத்திவிட்டார்! வெற்றியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் மாட்டார். தோல்வியால் துவண்டும் போய்விடமாட்டார் என்று தன் தந்தையைப் பற்றிக் குறிப்பிட்ட விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் மேற்கண்ட தகவலை என்னிடம் கூறியிருக்கிறார்.

ஜெமினி தயாரித்த வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியும் வைஜயந்திமாலாவும் ஆடிய போட்டி நடனம் இன்றளவும் ரசிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் அவர்கள் இருவரையும் அப்படி நடிக்கவைக்க வாசன் ஒருவரால் மட்டுமே முடியும் என்ற கருத்து எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது!

பெரும் பொருள் ஈட்டும் மனோபாவம் மட்டும் உள்ளவராக அவரை நினைத்துவிட கூடாது. ரசனை மிக்கவர். இலக்கிய ஆர்வமும், இலக்கிய கர்த்தாக்களை மதிக்கும்  உணர்வும் உள்ளவர். ஆனந்தவிகடனின்  ‘எல்லோரும் இன்புற்றிருக்க’ என்கிற  வாசகம் அவர் சேர்த்தது. அதுவே விகடன் லட்சியம் என்பார்.

கவனியுங்கள்.  கல்கி, தேவன், மாலி, புதுமைப்பித்தன், ஆர்கே நாராயணன், ஆர்கே லட்சுமண், கொத்தமங்கலம் சுப்பு,  பி.எஸ். ராமையா போன்ற எண்ணற்ற மேதைகள் அவருடன் கைகோர்த்திருந்தார்கள்.  இதுவே அவரது  ரசனை உள்ளத்தைப் புரியவைக்கும்.

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது உலக தமிழ் மாநாடு நடந்தது. அதில் தமிழ் – தமிழர் சிறப்பு உணர்த்தும் அலங்கார ஊர்வலம் நடத்த விரும்பினார். ஜெமினியின் ‘அவ்வையார்’ படத்தில் அப்படி ஒரு காட்சி வரும். அதை நினைவு கூர்ந்த அண்ணா, அலங்கார ஊர்வல பொறுப்பை வாசனிடமே ஒப்படைத்தார். அந்த ஊர்வலம் லட்சக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘வாசன் சாதாரண மக்களின் மன ஓட்டத்தை எடைபோடுவதில் வல்லவர்’ என்று பேசும்போது சொன்னார் கொத்தமங்கலம் சுப்பு. படம் எடுத்து முடித்தபிறகு, தனது அலுவலகத்தில் பணிபுரியும் அத்தனை பேருக்கும் போட்டுக்காண்பிப்பார். கூடவே வினாத்தாள் ஒன்றும் தரப்படும். அதை படம் பார்த்தவர்கள் நிரப்பித் தரவேண்டும். சில கருத்துகள் எழுதவும் இடம் ஒதுக்கப்படும். இந்த வினாத்தாளில் எழுதப்பட்ட கருத்துகளுக்கு – மதிப்பு அளிப்பார்.

சாதாரண கடைநிலை ஊழியர் சொன்ன கருத்துக்கும் மதிப்பு தரப்பட்டு அது ஏற்கப்படும். கருத்துக்கு பரிசு உண்டு.

 வாசன் சரித்திரம் ஒரு அற்புத நாவல் போல எழுதக்கூடியது. காந்தி யுகம் அளித்த மாமனிதர்களில் ஒருவர். ஓய்வு நேரங்களில் அவர் படித்த புத்தகங்கள் முன்னேற்றத்தை தூண்டுவதற்கு உத்வேகம் தரும் புத்தகங்களாகும்.

வாசன் வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் ஊன்றி படிக்க வேண்டும். நம்பிக்கை, மன உறுதி இவற்றுடன் எதையும் ரசிக்கும் உள்ளம் இவற்றைப் பெற வழிகாட்டுவது வாசன் வாழ்க்கை. அடியேன் தினம் ஒருமுறை அவர் நினைவுக்குத் தலை வணங்காமல் இருப்பதில்லை. வாசன் அவர்கள் தோற்றத்துக்கு மட்டுமல்ல- எல்லாவகையிலும் ஒரு சிங்கம்தான்!

பிப்ரவரி, 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram