அது 1996 சட்டமன்றத் தேர்தல். திமுக, தமாக கூட்டணி, ரஜினியின் வாய்ஸ் என்று பலமான எதிர்வினைகளுடன் தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா. முன்னதாக வளர்ப்பு மகன் திருமணம், ஊழல் குற்றச்சாட்டுகள் என பல சர்ச்சைகளுக்கு அவர் ஆட்சி உள்ளாகி இருந்தது. தேர்தல் முடிவுகள் வந்தபோது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றார். அதிமுக- காங்கிரஸ் கூட்டணி நான்கு இடங்களில் மட்டும்தான் வெல்ல முடிந்தது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் அவரைப் புறக்கணித்தார்கள். 21.47% சதவீத வாக்குகளை மட்டுமே அதிமுக பெற்றது. இவ்வளவு படுதோல்விக்குப் பின் ஜெயலலிதா மீதான வழக்குகள் சூடுபிடித்தன. அவரது போயஸ் இல்ல வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டு அவரது உடமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையிலும் அடைக்கப்பட்டார். பொதுமக்கள், கட்சிக்காரர்களின் கோபத்தை அடுத்து சில நாட்கள் உடன் பிறவா சகோதரி சசிகலாவைக் கூட போயஸ் தோட்ட இல்லத்தை விட்டு விலக்கி வைத்தார்.
“ஜெயலலிதாவின் ஐந்தாண்டு காலத் தவறுகளுக்கு மக்கள் கொடுத்த தண்டனை தேர்தல் தோல்வி. திமுக அரசு தனக்கே உரிய ஓவர்கில் அணுகுமுறையால் 30 வழக்குகளை போட்டு 27 நாட்கள் சிறையில் அடைத்து, அவர் இல்லாத வீட்டில் டீவி கேமராவுடன் சோதனை நடத்தி சிறுமைப்படுத்தியது. அது மக்களைக் கோபப்படுத்தியது. ஜெயா தோழியை ஒதுக்கி வைத்து, தன்னை சூழ்நிலைக் கைதியாக முன்னிறுத்தினார். அரசின் அம்பு பூமராங் ஆனது. பின்வந்த தேர்தலில் அவர் அமைத்த மகா கூட்டணியும் ஓட்டுச் சிதறலை தடுத்து மீண்டும் வெல்வதற்கு உதவியது,’’ என அந்திமழையிடம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளர் கதிர்வேல்.
முதல் ஆட்சிக்காலத்தில் செய்திருந்த தவறுகளால் டான்சி வழக்கு, ப்ளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு என பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. நீதிமன்ற வாயில்கள் அவருக்கு அத்துப்படியாகியிருந்தன. பல சட்டப்புத்தகங்களைப் படித்து அவரே பெரும் சட்டநிபுணர் ஆகியிருந்தார் என்று கூடச் சொன்னார்கள். இவ்வளவுக்கும் நடுவில் அவர் அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற அமைதியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தார். எந்த இடத்திலும் திமுக மீதான தாக்குதலைக் குறைக்கவில்லை. கட்சியில் தன் வழக்கமான இரும்புப் பிடியையும் தளர்த்தவே இல்லை. அதிமுக தொண்டர்களிடையே இருந்த தன் செல்வாக்கின் மீது அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார்.
இடையில் டெல்லி அரசியலில் தனக்கு இருந்த எம்பிக்களின் எண்ணிக்கையைக் கொண்டு இஷ்டத்துக்கு வாஜ்பாய் அரசை ஆட்டிப்படைக்கவும் தயங்கவில்லை. இவ்வளவு சட்ட நெருக்கடியிலும் அவர் எப்படி தன் இயல்பில் மாறாமல் வளைந்துகொடுக்காமல் இருக்கிறார் என்று பார்க்கும் அளவில்தான் அவர் நடவடிக்கை இருந்தது.
2001 தேர்தலின் போது அவர் டான்சி வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தபடியால் நான்கு தொகுதிகளில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தும் அனைத்து தொகுதிகளிலும் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ‘சட்டம் தன் கடமையைச் செய்தது’ என்று கருணாநிதி கூறினார். ஆனால் இந்த நிராகரிப்பையே தான் பழிவாங்கப்படுவதாக முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தார் அவர். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது. அதன்பின்னர் அவர் முதலமைச்சர் ஆகவும் தடைகள் இருந்தன. பின்னர் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, சட்டரீதியான தடைகளைக் கடந்து முதல்வர் நாற்காலில் அமர்ந்துகாட்டினார் ஜெ. 1996 தேர்தல் தோல்விக்குப் பின்னால் அவர் எழுந்துவந்த வேகம் மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதோடு, தமிழகமே கொண்டாடும் தலைவராகவும் ஆக்கியது. அதன் பிறகு தேர்தல் தோல்விகளை அவர் சந்தித்தாலும் மக்கள் செல்வாக்கில் என்றுமே பின்தங்கி இருக்கவில்லை!