நகைச்சுவை நிரம்பிய, மனதுக்கு இதமான படங்கள் என்று பார்த்தால், என்.எஸ்.கேயின் நல்ல தம்பி, மணமகள், தொடங்கி தமிழில் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. ஏ.வி.எம்.மின் சபாபதி, செல்லப்பிள்ளை எல்லாம் ஐம்பதுகளில் வந்த நகைச்சுவைப் படங்கள். அதன் பிற்பாதியில் வந்த தரமான நகைச்சுவை என்றால் ஶ்ரீதரின் படங்களைச் சொல்லலாம்.
ஶ்ரீதர், அமரதீபம், கல்யாணபரிசு, (கல்யாணப்பரிசு என்று ஒற்று மிகுந்து எழுதினால் எட்டு எழுத்து வரும் அது சினிமாவுக்கு ராசியில்லாத எண் என்பதால் கல்யாணபரிசு என்றே டைட்டில் வைத்தார்கள்) மீண்ட சொர்க்கம் என்று சோகப் படங்களாகவே எடுத்த ஶ்ரீதர் தனது புதிய சித்ராலயா பேனரில் முதன் முதலாக தேன் நிலவு என்று பொழுது போக்குப் படமெடுத்தார். அவரது கல்யாணபரிசு போன்ற முந்திய சோகப் படங்களிலும் காமெடி ட்ராக் அருமையாகவே இருக்கும். அவர் வசனம் எழுதிய யார் பையன் படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் காமெடி அவ்வளவு சி(ற)ரிப்பாக இருக்கும். படத்தின் கதையும் சீரியஸ் ஆக இல்லாமல் பெரு வெற்றி பெற்ற படம்.
தேன்நிலவு கஷ்மீரில் எல்லாம் எடுக்கப்பட்டாலும் ஶ்ரீதரிடம் நல்ல கதையம்சத்தை எதிரபார்த்த ரசிகர்கள் தேன் நிலவு போன்ற லைட் சப்ஜெக்ட் படங்களை அவ்வளவாக ரசிக்கவில்லையோ என்னவோ படம் நன்றாக ஓடவில்லை. அடுத்தாற் போல் நெஞ்சில் ஓர் ஆலயம். அது ஒரு பக்கா சீரியஸான படம். அதில் நாகேஷ் அறிமுகமானாலும் அவ்வளவு காமெடி கிடையாது. தொடர்ந்து போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி, நெஞ்சம் மறப்பதில்லை என்று சோகமும் மர்மமுமாகப் படங்கள் எடுத்த பாவத்தினைத் தீர்க்க அவர் எடுத்தமுழு நீள நகைச்சுவைப் படம்தான் காதலிக்க நேரமில்லை. அதன் வித்தியாசமான தலைப்பைப் போல படமும் அதுவரை வந்திராத விதத்தில் பல படங்களின் முந்திய சாதனைகளைத் தகர்த்து வெள்ளி விழா ஓடிய படம். படத்தில் ஒரு கட்டம் கூட சீரியஸாக இருக்காது. ஈஸ்ட்மென் கலரில் வந்த இரண்டாவது தமிழ்ப்படம். ஜெமினி கலர் லேபின் முதல்ப்படம். நாகேஷும் டி.எஸ்.பாலையாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்த படம். அந்த பாலையா பாத்திரத்தை ஏற்று நடிக்க இதுவரை வேறு யாரும் பிறக்கவில்லை. மக்கள் திரும்பத் திரும்ப பார்த்த படம். அறுபது வருடங்கள் ஆன பின்னும் இன்னும், இந்தத் தலைமுறையும் ரசிக்க முடிகிற விதத்தில் இருக்கிறது. எத்தனை முறை பார்த்தாலும் கடைசிக் கட்டம் வரை பார்க்கிற படம்.
காதலிக்க நேரமில்லை படத்தின் வெற்றி,(27.2.1964ல் வெளியானது) அதற்கு முன்னும் பின்னும் வந்த பல நல்ல படங்களின் ஓட்டத்தைக் கூடப் பாதித்தது.(உதாரணம் கர்ணன், என்கடமை, பணக்காரக் குடும்பம், பச்சை விளக்கு) ஏன் தரின் அடுத்த நல்ல படமான வெண்ணிற ஆடையைக் கூடப் பாதித்தது. காதலிக்க நேரமில்லை போல ஒரு படத்தை எதிர்பார்த்துக் கொண்டு வந்த ரசிகர்களுக்கு வெண்ணிற ஆடை பெருத்த ஏமாற்றம். முதல் காட்சி படம் முடிந்து வருகிற ரசிகர்கள் உதட்டைப் பிதுக்கி விட்டார்கள்.
அதேபோல எங்க வீட்டுப் பிள்ளை பிரமாதமாக ஓடிய படம். அதில் பாட்டு, கதை, நடிப்பு கலர், எல்லா அம்சங்களும் இருக்கும். இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர். பிரமாதப்படுத்தி இருப்பார். அத்தோடு நாகேஷ் உளறல் மன்னனாக வந்து வெளுத்துக் கட்டுவார். நகைச்சுவையில்.அவருக்கு சரிக்குச் சரியாகச் செய்திருப்பார் தங்க வேலுவும். ஆனால் நம்பியாரின் வில்லத்தனமும் உண்டு.
எம்.ஜி.ஆர் படங்களில் வில்லன் இல்லாத படமென்றால் அன்பே வா படம்தான். `கம் செப்டம்பர்’ (செப்டம்பரே வா) படத்தின் தழுவல் என்றாலும் அப்படி ஒரு இசையும் பாட்டும் செட்டிங்ஸும், நடனங்களும் பிரம்மாண்டமாய் இருந்தது. ஒரு படத்தை மறுபடி மறுபடி பார்க்கத் தூண்டுபவை பாடல், நகைச்சுவைக் காட்சிகள். தொலைக்காட்சி இல்லாத காலங்களில் அவற்றைத் தியேட்டருக்குப் போய்த்தான் பார்க்க முடியும். அப்படிப் பலமுறை அலுக்காமல் பார்த்த படங்களில் அன்பே வாவும் ஒன்று. அந்தப் பாதிப்பில் ஏ.சி. திருலோகச்சந்தர் அன்பே ஆருயிரே படத்தை எடுத்திருந்தார். பெயர் கூட அதே போல அமைந்திருந்தது. அவ்வளவு பெரிய வெற்றியில்லை என்றாலும் அதுவும் ஒரு ஃபீல் குட் மூவிதான்.
வில்லனும் இல்லாமல் துளிகூட சோகமுமில்லாமல் தமிழில் முழு நீள நகைச்சுவையாக வந்த முதல் படம் என்றால் அது, அஞ்சலிதேவியின் அடுத்த வீட்டுப் பெண் படம்தான். கதாநாயக நடிகர்களே கிடையாது. டி.ஆர்.ராமச்சந்திரன், தங்கவேலு, ஏ.கருணாநிதி, பக்கிரிசாமி, ப்ரெண்ட் ராமசாமி, எம்.சரோஜா, டி.பி. முத்துலட்சுமி, எம்.ஆர்.சந்தானம், சாரங்கபாணி என்று ஒரு நகைச்சுவைப் பட்டாளமே நடித்திருக்கும். டைட்டிலில் கார்ட்டூன் சித்திரங்களைக் காட்டுவதிலேயே நகைச்சுவை தொடங்கி விடும். பின்னாளில் காதலிக்க நேரமில்லை அன்பேவா, உத்தரவின்றி உள்ளே வா படங்களின் டைட்டில்களிலும் அதே போல வரும்.
ஶ்ரீதர் குழுமத்திலிருந்து வந்த உத்தரவின்றி உள்ளே வா படமும் மனதை வருடும் படமென்றாலும் சின்னச் சின்ன திருப்பங்கள் வில்லத்தனம் கதாநாயக நடிகர்கள் உள்ள படம். இதை விட ஶ்ரீதரின் பெஸ்ட் மூவி என்றால் ஊட்டி வரை உறவு படம்தான். இதிலும் பாலையா அப்படி ஒரு நடிப்பு நடித்திருப்பார். இந்தப் படம் காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற பெயரில் ஜெயலலிதா கதநாயகியாகவும் கே.ஆர்.விஜயா இரண்டாவது நாயகியாகவும் நடிக்கத் தயாரானது. ஜெயலலிதா ஏனோ விலகிக் கொண்டு விட,, `வயது 16 ஜாக்கிரதை’ என்று பெயர் மாற்றி எடுத்தார்கள், அடுத்து `வயது 18 ஜாக்கிரதை’ என்று மாறிற்று. இவ்வளவு குழப்பங்களுக்குப் பிறகு ஊட்டி வரை உறவு என்ற பெயரில் வந்தது.கொஞ்சம் தாமதமாக வந்தாலும் சற்றும் சுவை குறையவில்லை. பாலையாவின் சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத திண்டாட்ட நகைச்சுவை படத்தின் ஹைலைட்டாக இருக்கும். பாட்டுக்களும் சூப்பராக அமைந்து விட்டது. படமும் மெகா ஹிட் ஆனது.
ஶ்ரீதர் குழுவில் உள்ள கோபுவும் சி.வி.ராஜேந்திரனும் அவருடைய நகைச்சுவையுணர்வை உள்வாங்கியவர்கள். சி.வி.ராஜேந்திரன் கோபு கம்பெனி இயக்கிய `அனுபவம் புதுமை’ படம் பாலையாவுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி. கொஞ்சம் த்ரில்லர் கலந்த கதை. ஆனால் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது. தர் குரூப்பின் அருமையான நகைச்சுவை நடிகர் மாலி ஒரு லைட்டான வில்லன் ரோல் பண்ணியிருப்பார். டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா செய்யும் காமெடி அலப்பரைகளில் தியேட்டரே குலுங்கும். ராஜேந்திரன்-கோபு இணையின் இன்னொரு வெற்றிப் படம் வீட்டுக்கு வீடு. இதில் நாகேஷும் சேர்ந்து கலக்கியிருப்பார். ஜெய்சங்கர் மனைவிக்கு அடங்கின கணவனாக அருமையான நகைச்சுவை நடிப்பை வழங்கியிருப்பார். தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டுக்கு ஒரு சண்டை கூடக் கிடையாது. ஜெய்சங்கரின் நவாப் நாற்காலி லேசான த்ரில்லர் என்றாலும் முழு நீள நகைச்சுவைப் படம்தான்.
ஜெய்சங்கரது நகைச்சுவை நடிப்பில் வெளியான இன்னொரு நல்ல படம் ``பொண்ணு மாப்பிள்ளே”. இதில் நாகேஷ் -வீரப்பன் இரட்டையர் காமெடி நன்றாக இருக்கும். பணத்தோட்டம், படகோட்டி, கலங்கரை விளக்கம் படங்களிலும் நாகேஷ்- வீரப்பன் ஜோடி நகைச்சுவை பிரமாதமாக வந்திருக்கும்.வீரப்பன் பின்னாளில் கவுண்டமணி செந்தில் ஜோடிக்குப் பல அருமையான காமெடி டிராக்குகள் எழுதினார்.
படத்துக்குப் போனோமா, ரெண்டு ரெண்டரை மணிநேரம் தன்னை மறந்து சிரிச்சு ஜாலியா, படத்தோட ஒன்றிப்போய் இருந்துட்டு வந்தோமா என்று மனதுக்கு இதமான பட வரிசையில் என்னைப் பொறுத்து முதலில் நிற்பது `மிஸ்ஸியம்மா’. 1955 பொங்கலுக்கு வந்த படம். எழுபது ஆண்டுகள் ஆகியும் இன்றும் சன் லைஃப் போன்ற சானல்களில் போட்டால் கவலைகளையெல்லாம் ஓரம் கட்டி விட்டு பார்த்துக் கொண்டிருக்கும் படம். நம்பியார் கூட காமெடி வில்லன் மாதிரி ஒரு ரோலில் நடித்திருப்பார். தங்கவேலு, ஏ.கருணாநிதி, ஏழுமலை, கே.சாரங்கபாணி, ரங்காராவ் என்று அனைவரும் நகைச்சுவையை அள்ளி வழங்குவார்கள். ஜெமினி- சாவித்ரியின் இளமையான ஊடலும் காதலுமான நடிப்பு, அருமையான ஒளிப்பதிவு, பாட்டுக்கள் என்று எத்தனை காலமானாலும் இனிமையான கலவை. இப்படி ஒரு முழுமையான(wholesome movie) படம் எப்போதாவதுதான் அமையும்.
சிவாஜி நிறைய காமெடி படங்களில் நடித்திருக்கிறார். மணமகன் தேவை, சபாஷ் மீனா, பலே பாண்டியா, அறிவாளி என்று பல படங்கள். இதில் பலே பாண்டியா படத்தில் மூன்று ரோல்களில் வந்து அசத்துவார். எம்.ஆர் ராதா இரண்டு ரோல்களில் வருவார். பாலாஜி கூட ஒரு அரை லூசான பாத்திரத்தில் அழகாக நடித்திருப்பார்.ஒரு வங்காளக் கதையின் தழுவல். பந்துலுவால் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட அற்புதமான கப்பலோட்டிய தமிழன் படம் நன்றாக ஓடாமல் அதன் நஷ்டத்தைச் சரிக்கட்டியது, அவரே குறைந்த பட்ஜெட்டில் தயாரித்த படமான பலே பாண்டியா.
சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி போன்ற படங்கள் சி.வி.ராஜேந்திரன் தந்த மேலும் சில காமெடி ஹிட்டுகள். சபாஷ் மீனா போலவே தயாரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சபாஷ் மாப்பிள்ளே ஒரு நல்ல காமெடி படம். எம்.ஜி.ஆர் சிறப்பாக நடித்திருப்பார். அதே போல தேடி வந்த மாப்பிள்ளையும் வழக்கமான எம்.ஜி.ஆர் மசாலாக்களுடன் ஒரு ஆஃப் டிராக் காமெடி படம்தான்.
ஶ்ரீதரைப் போலவே கே.பாலசந்தர் படங்களில் காமெடி நன்றாக வரும். அவர் காமெடிக்கென்றே எடுத்த அனுபவி ராஜா அனுபவி படத்தில் நாகேஷ் இரட்டை வேடத்தில் கலக்கி இருப்பார்.``முத்துக் குளிக்க வாரீயளா மூச்சை அடக்க வாரீயளா” என்று `திர்நெவேலி’ பாஷையில் பாட்டுப் பாடி, பேசி மனோரமாவும் நாகேஷும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். அருமையான முழுமையாக மனதுக்கு இதமளிக்கும் படம்.அடுத்து எடுத்த பூவா தலையா, சுமாராகப் போனாலும் பாமா விஜயம் படத்தில் பாலையா மீண்டும் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பார். எதிர் நீச்சல் கொஞ்சம் சீரியஸாக இருந்தாலும் வெற்றி பெற்ற நகைச்சுவைப் படம்.
தேன் மழை, நினைவில் நின்றவள் போன்ற படங்களின் கதை அமைப்பு முற்றாக நகைச்சுவை இல்லையென்றாலும் நாகேஷ் சோ காமெடிக்கு பிரபலமானது. முக்தா பிலிம்ஸ் தொடர்ந்து அப்படிப் படங்கள் எடுத்தார்கள். சோ வின் `மனம் ஒரு குரங்கு’, `முகம்மது பின் துக்ளக்,’, மிஸ்டர் சம்பத் எல்லாம் ஒருவகை அரசியல் நையாண்டி என்றாலும் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது. கே.எஸ்.கோபாலகிருஷணனின் சின்னஞ்சிறு உலகம் படத்தில் அவரது வழக்கமான சோக சப்ஜெக்ட் உண்டு என்றாலும் நாகேஷ், எல்லாவற்றுக்கும் கற்பனையாகப் பயந்து கவலைப்பட்டு காமெடியாக்குகிற ரோலில் நன்றாகவே நடித்திருப்பார். கோபாலகிருஷ்ணனின் வந்தாளே மகராசியும் இந்தக் கணக்கில் வரவு வைக்கக் கூடிய படம்தான்
ஐம்பதுகளிலும் அறுபது, எழுபதுகளிலும் வந்த சில மனதை வருடும் தமிழ்ப் படங்களின் மாதிரிப் பட்டியல் இது. ஆனால் சினிமாவுக்குப் பேர் போன பாலிவுட், டோலிவுட் , மாலிவுட் படங்களில் இருக்கவே செய்யாத நகைச்சுவையுணர்வு கோலிவுட் தமிழ்ப் படங்களில் தான் அதிகமும் உண்டு என்று சாட்சியம் சொல்பவை. கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாமல் சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த சில படங்களை நினைவிலிருந்து சொல்லி இருக்கிறேன். இதில் விடுபட்ட படங்கள் இன்னும் இருக்கலாம்.