நம் கை கால்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலப் பிரிவில் உயர் ரத்த அழுத்தம், முறையில்லாத பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் சிக்கல் ஏற்பட்டால், கைகால்கள் செயலிழந்து போய், நம்மால் நடக்கமுடியாமல் போய்விடும். அதைப்போல மனம் என்னும் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் உடல்ரீதியாகவும் வெளியிலும் உள்ள காரணங்களால் ஏற்படும் சிக்கல், நமது செயல், சிந்தனை, தூக்கம், குணம் ஆகியவற்றைப் பாதிக்கும். இதன் தன்மையைப் பொறுத்து மனநலச் சிக்கல், மனநோய் என்று கூறுகிறோம்.
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தொழில்களில் ஏராளமானவர்கள் நஷ்டத்தைச் சந்தித்தனர். தொழில் நடத்திவந்தவர்களும் தொழிலாளர்களும் தொழிலைச் சார்ந்திருந்த மற்ற பல பிரிவினரும் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை என்பது நிரந்தரமானதாக இல்லை என்றாகிவிட்டது. கூடுதலாக மருத்துவச் செலவுகளும் அதிகரித்துள்ளன.
கொரோனாவுக்குப் பிந்தைய பல பின்விளைவுகளில் குறிப்பாக நுரையீரல், சுவாசரீதியான பிரச்னைகள், மனநலச் சிக்கல்கள், சர்க்கரை நோய், மூளைச் செயல்திறன் பாதிப்பு போன்றவற்றால் இன்னும் மருத்துவச் செலவுகள் தொடர்கின்றன. மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
எத்தனையோ பேர் தங்கள் உறவுகளை இழந்துநிற்கின்றனர்.
தொற்றால் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், இன்னும் தங்கள் பழைய நிலைமைக்குத் திரும்ப வரமுடியாதபடிதான் இருக்கின்றனர். இதனால் அன்றாட வாழ்வில் அவர்களால் முன்னைப்போல செயல்பட முடியவில்லை. வேலை, உறவு, உணர்வுரீதியான சிக்கல்களைக் கொடுக்கிறது.
குழந்தைகளோ தொற்றின்போதும் இப்போதுவரையும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுவருகின்றனர். கற்றல் குறைபாட்டிற்கு ஆளாகியுள்ளனர். குணாதிசிய மாற்றங்களும் அவர்களிடம் உருவாகி இருக்கின்றன.
பொதுவாக, பரவலாக இரண்டு நிலைமைகள் காணப்படுகின்றன.
மனப்பதற்ற நோய்: (ANXIETY DISORDER)
கொரோனா காலத்தில், நமக்கும் நமது உறவுகளுக்கோ ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம் அனைவருக்குமே இருந்தது. சிலருக்கு அந்த பயம் மிகுந்த அதிக அளவில் இருந்தது. கொரோனா தொற்று காலம் முடிந்த பிறகு கூட பலருக்கு அந்த பயம் நீங்க வில்லை. உடலில் ஏதாவது ஒரு சிறு மாற்றம் தெரிந்தால் கூட ஏதாவது ஒரு பெரிய பிரச்னை ஏற்பட்டு விட்டதோ என்ற பயத்தில், பதற்றத்தில் அவர்கள் மீண்டும் மீண்டும் மருத்துவரை நாடுவதும், பல மருந்துகளை எடுத்துக் கொள்வதும் என இருக்கும். நமக்கோ நம் உறவினருக்கோ ஏதேனும் எதிர்மறையாக நடந்த விடுமோ என்ற எண்ணம், தூக்கமின்மை, பதற்றம், படபடப்பு தலைசுற்றல், மயக்கம், அதீத மூச்சு வாங்குதல் வயிற்று உபாதைகள், நடுக்கம், சோர்வு போன்ற அறிகுறிகளுடன் மனப்பதற்ற நோய் வெளிப்படும்.
மனச்சோர்வு நோய்: (DEPRESSION)
அதீத கவலை, உடல் சோர்வு, எதிலும் ஈடுபாடின்மை, தன்னம்பிக்கை குறைதல், கவனக்குறைவு, பசியின்மை அல்லது பசி அதிகமாக இருப்பது, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம், மறதி, எடை கூடுதல் அல்லது குறைதல், எதிர்மறைச் சிந்தனைகள், தற்கொலை எண்ணங்கள் போன்றவை மனச்சோர்வு நோயின் அறிகுறிகள்.
தடுப்பது எப்படி
அடிப்படையாக சத்தான உணவு, போதிய அளவு உடற்பயிற்சி, தேவையான ஓய்வு அவசியம்.
போதைப் பழக்கத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
உணவில் மைதா, சர்க்கரை போன்றவற்றைத் தவிர்த்தல் மிகவும் நல்லது.
தேநீர், காப்பி அதிகம் குடிப்பவராக இருந்தால் குறைத்துக்கொள்வதோ நிறுத்துவதோ நல்லது.
தொலைக்காட்சியோ கைபேசியோ கணினியோ தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்துவது நல்லது.
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி குறிப்பிட்ட நேரத்தில் உணவு குறிப்பிட்ட நேரத்தில் தூக்கம் எனக் கறாராக இருப்பது அவசியம்.
இவற்றில் ஈடுபடமுடியாத அளவுக்குச் சிக்கல் இருந்தால் மருத்துவரை நாடுவது கட்டாயம்.
வேலையின்மையால் ஏற்படும் மன அழுத்தம்
நாம் எப்படி இருந்தோம், அவர்களிடம் போய் உதவி கேட்பதா என்கிற எண்ணங்களை உதறிவிட்டு தயங்காமல் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் வேலைக்காக அணுகவேண்டும்.
மேலும் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வேலைதான் வேண்டும் என்றில்லாமல், தற்காலிகமாக ஒரு வேலையைத் தேர்வுசெய்து அதைச் செய்யத் தொடங்கலாம். உரிய வேலை கிடைக்கும்வரை சோர்ந்து வீட்டில் இருக்காமல் உடல்நலத்தைப் பேணிக் காத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்யவேண்டும். முடிந்தால் வேலைக்கு உதவும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.
நுரையீரல், சுவாசப் பிரச்னைகளுக்கு...
கொரோனா தொற்றால் நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டிருந்தால் மருத்துவரை நாடி சிக்கலை அறிந்துகொள்ளவேண்டும். மூச்சுத்திறன் குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதைப் படிப்படியாக அதிகப்படுத்த முயற்சி செய்யலாம்.
இதற்கு, முதலில் மனரீதியாகத் தயாராகுங்கள். நம் உடல் இந்த நிலைக்கு ஆகிவிட்டதே என்கிற எண்ணத்தைக் கைவிட்டு, என்ன செய்தால் மீண்டும் பழைய நிலைமைக்கு வரலாம் என சிந்தியுங்கள்.
மூச்சுத் திறனை அதிகரிக்க பலவிதமான சுவாசப் பயிற்சிகள் உள்ளன. மருத்துவர் ஆலோசனைப்படி எவ்விதமான சுவாசப் பயிற்சியை ஆரம்பித்தாலும், எடுத்த உடனேயே உங்கள் மூச்சுத் திறன் 100% முன்னேறி விடும் என்று நினைப்பதைக் கைவிடுங்கள். எல்லாவற்றிற்கும் காலம் எடுக்கும். அன்றாடம் ஒவ்வோர் அடியாக எடுத்துவைக்கும்போது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களின் மூச்சுத் திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.
உறவுகளை இழந்த துயர்
முதலில் நம் அன்புக்குரியவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நம் மீதோ கடவுள்மீதோ, மருத்துவர் மீதோ, சமூகத்தின் மீதோ மிகுந்த கோபம் இருக்கலாம். அந்த உறவினரைக் காப்பாற்ற முடியவில்லையே எனும் குற்ற உணர்வுகூட இருக்கலாம். அதற்குப் பதிலாக நம் வாழ்வில் வேறு ஏதாவது நடந்திருக்கலாமே என்கிற எண்ணமும் வரக்கூடும்.. மனச்சோர்வும் ஏற்படலாம். இதையெல்லாம் கடந்தபின்னர்தான், நம் மனம் இறந்துபோன நம் அன்புக்குரியவர் இல்லை என்கிற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும்.. இந்தப் படிநிலைகளைக் கடந்துவர ஆறு முதல் ஒன்பது மாதங்கள்வரை எடுக்கலாம். அதுவரை இயலாமை, கோபம், குற்ற உணர்வு, மனச்சோர்வு இவை அனைத்தும் இயல்பானவையே. சிறிது சிறிதாக நாம் இந்தத் துக்க உணர்விலிருந்து வெளியே வரவேண்டும். நண்பர்களோடு நேரத்தைப் பகிர்ந்து கொள்வது, உறவினர்களைச் சந்திப்பது, உங்களுக்கென்று தினமும் செயல்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்வது போன்றவை உங்களை அழுத்தத்திலிருந்து விரைவில் வெளிக்கொண்டுவர உதவும். இதையும் தாண்டி, ஒன்பது மாதங்களுக்குமேல் துக்க உணர்வு மேலோங்கி இருந்தால் நீங்கள் மனநல மருத்துவரை அணுகவேண்டும்.
குடி, போதை
குடி, மற்ற போதைப் பழக்கங்களுக்கு ஆட்டிருப்பவர்கள் போதைப்பழக்கம் தங்களது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து உடனடியாக சிகிச்சைக்குச் செல்வது அவசியமாகும்.
மூளையின் செயல்திறனை பழையபடி கொண்டுவர...
சத்தான உணவு, சீரான உடற்பயிற்சி, போதுமான ஓய்வு, நண்பர்கள், உறவினர்களோடு கலந்துபேசி மகிழ்வது, ஆக்கபூர்வமான பொழுதுபோக்கில் ஈடுபடுவது போன்றவை உங்கள் செயல்திறனை அதிகப்படுத்தும்.
சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டி, ஓவியம் வரைதல், கதை, கட்டுரை, கவிதை எழுதுவது, இசை கேட்பதோ பயில்வதோகூட மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும்.
இவற்றையெல்லாம் தாண்டி அரசு வகுக்கும் சுகாதாரக் கொள்கைகள் மனநலத்தைத் தீர்மானிக்கும் சமூகக் காரணிகளைச் சரிசெய்வதாக அமைந்தால் மனநலச் சிக்கலும் மனநோய்களும் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறையும்.