சிறப்புப்பக்கங்கள்

முதுமையிலும் இளமையாய் இருக்க...

முதியோர் நல மருத்துவம்

மருத்துவர் வி.எஸ். நடராஜன்

முதுமையின் இளமை 50 வயதிலிருந்து ஆரம்பம். உடல் நலத்தையும், மனநலத்தையும் பேணிக் காத்து முதுமையில் ஆரோக்கியமாக வாழ இதுதான் சிறந்த தருணம்.

கீழ்கண்ட வழிமுறைகளை சரியான முறையில் திட்டமிடுங்கள். அதன்படி செயல்படுத்துங்கள். காலம் செல்லச் செல்ல முதுமைப் பருவம் என்பது ஒரு புயல் அல்ல அது ஒரு பூங்காற்று என்பதை உணர்வீர்கள்.

காலமுறைப்படி பரிசோதனை

ஐம்பது வயதிற்கு மேல் பலருடைய உடல், பல நோய்களின் மேய்ச்சல் காடாக உள்ளது. எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல பல நோய்கள் தொல்லையின்றி மறைந்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது.

முதுமையில் மறைந்து இருக்கும் நோய்கள்

நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், புற்று நோய், எலும்பு பலவீனம் அடைதல், காச நோய், பிராஸ்டேட் சுரப்பியின் வீக்கம், கை விரல்களில் ஏற்படும் நடுக்கம், இரத்த சோகை, தைராய்டு சுரப்பியின் தொல்லைகள், பித்தப்பையில் கற்கள். ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதின் மூலம் மறைந்திருக்கும் பலநோய்களை கண்டுகொள்ள முடியும். ஆரம்ப நிலையில் உள்ள நோய்களை கண்டறிந்து அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க முடியும்.

உடற்பயிற்சியே உற்சாக டானிக்

முதுமைப்பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. முதியவர்கள் தங்கள் உடல்நலம், பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவற்றை மனதிற்கொண்டு உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம். நாள்தோறும் மூன்றிலிருந்து ஐந்து கி.மீ. தூரம் நடப்பது நல்லது அல்லது முப்பதிலிருந்து நாற்பத்து ஐந்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உணவு முறையை மாற்றுவோம்

உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: புரதச் சத்து அதிகமுள்ள பருப்பு வகைகள், கொத்துக் கடலை, பட்டாணி, சோயா, முட்டையின் வெள்ளைக் கரு, கோதுமை, சிறுதானியங்கள்.

உணவில் அதிகம் குறைத்துக் கொள்ள வேண்டியவை: அரிசி, கிழங்கு, எண்ணெய், நெய், வெண்ணெய், உப்பு. முதுமைக்காலத்திற்கு வேண்டிய எல்லா வகையான சத்துக்களும் சிறுதானியங்களில் இருப்பதால் அதை முடிந்தவரையில் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

முதியவர்களுக்கும் தடுப்பு ஊசி உண்டு

நோய்த் தடுப்பு என்றால் குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற காலம் போய், முதியவர்களுக்கும் உண்டு என்ற நிலை தற்பொழுது வந்துள்ளது. சில தொற்றுநோய்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் அந்நோய்களை வராமலே தடுத்து நலமாக வாழ முடியும்.

சொந்தக்காலில் நில்லுங்கள்

எவ்வளவு வயதானாலும் குழந்தை மனநிலையில் இருக்கவே பலரும் விரும்புவார்கள். "நம்மை மற்றவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். அரவணைத்துக் கொள்ள வேண்டும்” என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், நீங்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாய நிலையே உருவாகும். அதனால் உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பும் வந்துவிடும்.

எந்தவொரு சின்ன வேலையாக இருந்தாலும் அதை யாருடைய துணையும் இல்லாமல் நீங்களாகவே செய்யப் பழகுங்கள்.

தனிமையைத் தவிர்த்தல்

முதுமையின் முதல் விரோதி, தனிமை. எதைச் செய்தாவது தனிமையைத் தவிர்க்க வேண்டும். முதுமையின் மடியில் தனிமையில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு மூப்பின் மோசமான விளைவுகள் ஆறு மடங்கு அதிகமாக ஏற்படக் கூடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. முதுமைக் காலத்திற்காக நல்ல பொழுதுபோக்கு அம்சம் ஒன்றை நடுத்தர வயதிலிருந்தே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகம் படிப்பது, வானொலி கேட்பது போன்றவை.

பணம் அவசியம்

முதுமைக்காலத்தை நிம்மதியாக நகர்த்துவதற்கு பணம் மிக மிக அவசியம். வேகமான வாழ்க்கைமுறை மாற்றங்களைக் கண்டுவரும் இன்றைய உலகில் உண்மையான அன்பிற்கோ, பாசத்திற்கோ மதிப்பு இல்லை. ஆனால் பணம் இருப்பவர்களைத்தான் இந்த உலகம் மதிக்கிறது. அன்பான உறவினர்களும் அக்கறையான நண்பர்களும் இல்லாதவர்கள் தனிமையில் தவிப்பார்கள் என சொல்லப்படுவதுண்டு. இந்த இரண்டும் முக்கியம் தான். ஆனால் முதுமையில் உறவினர்கள், நண்பர்களைவிடவும் பணம் மிகவும் அவசியம். மற்ற எல்லாவற்றையும் விட அதை நம்பலாம். ஏனென்றால் பணம் பாதாளம் வரை பாயும்.

மனதை வலிமையடையச் செய்ய தியானம்

மனம் என்பது கட்டுங்கடங்காத ஒரு எண்ண அலைகளைத் தன்னுள் அடக்கிய சுரங்கம். ஒரே சமயத்தில் உடனுக்குடன் தாவும் குரங்குபோல் எதையெல்லாமோ எண்ணிக் கொண்டிருக்கும் அல்லது சிந்தித்துக்கொண்டு இருக்கும். தியானத்தால் மனம் அமைதி அடைகிறது. தெளிவான சிந்தனை கிடைக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தி, நாம் நினைத்ததைச் சாதிக்கக்கூடிய தெளிவு பிறக்கிறது. மனோபலம், சகிப்புத்தன்மை, எதையும் எதிர்நோக்கும் பாங்கு இவை கிடைக்கின்றன.

நல்ல உடல்நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மன உறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றோடு கொஞ்சம் பணமும் இருந்தால் போதும்... புயலாக வரும் முதுமைக்காலம் பூங்காற்றாக வீசும் !

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram