பிரபல ஆன்லைன் பங்குசந்தை வர்த்தக செயலியான ஜெரோதாவின் தலைவர் நிதின் காமத் சமீபத்தில் ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார். போலியான ஆன்லைன் செயலிகள் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 11000 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியர்களிடம் ஏமாற்றப்பட்டுள்ளது என்பது அவர் கொடுத்த தகவல்.
இப்போதுகூட நமது செய்தித்தாள்களில் வாரந்தோறும் பலர் பல லட்சரூபாய் அளவுக்கு இந்த பங்குச் சந்தை மோசடியில் இழந்ததாக செய்திகள் வருவதைக் காணலாம். சமீபத்தில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரி ஒருவர் சுமார் 2 கோடி ரூபாயை இந்த மோசடியில் இழந்ததாக புகார் அளித்து செய்தித்தாள்களில் இடம்பெற்றது.
இதை எளிமையாக சைபர் கிரைம் போலிசார் ஒரே வார்த்தையில் ஸ்டாக் மார்கெட் ஸ்கேம் என இனம் பிரிக்கிறார்கள். இந்த மோசடியில் சிக்கி 25 லட்ச ரூபாய் பணத்தை இழந்த ஒருவரை அந்திமழைக்காக சந்தித்து பேசினோம். தான் ஏமாந்த கதையை விவரித்தார் அவர்.
பல ஆண்டுகளாக ஒரு மொபைல் செயலியில் டி மேட் அக்கவுண்ட் வைத்து பங்குச் சந்தையில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு நாள் நண்பர் ஒருவர் ஒரு வாட்ஸப் குரூப் லின்க் அனுப்பினார். இது ஒரு சர்வதேச ப்ளாட்பார்ம். இதில் சேர்ந்தால் பயிற்சி தருவதுடன் உனக்கு நிறைய லாபம் கிடைக்க உதவியாக இருக்கும் என்றார்.
அதில் இணைந்தேன். ஒரு கணக்கும் அதில் இருந்த செயலியில் தொடங்கினேன். இந்த குரூப்பில் ஒரு ஹெல்ப் டெஸ்க் எண் இருந்தது. அதில் சந்தேகம் கேட்டு கேள்வி அனுப்பினால் பதில் அளிப்பார்கள். இந்த குழுவை வட இந்தியாவில் இருந்து இயங்கும் புகழ்பெற்ற ஒரு பங்குச்சந்தை செயலியின் தலைவர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் நடத்தினார். அவர் ஒரு நாள் தான் சர்வதேச முதலீட்டுப் போட்டி ஒன்றில் இந்தியா சார்பாக கலந்துகொள்வதாகவும் அதில் எல்லோரும் தனக்கு வாக்களிக்கவேண்டும் எனவும் கோரினார். வாக்களித்தால் வாராவாரம் இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் சொன்னார். வாக்களித்த பின் அவர்கள் கொடுத்த அந்த செயலியில் என் கணக்கில் பணம் ஏறி இருப்பதாகக் காட்டியது. இந்த கணத்தில்தான் என் தடுமாற்றம் தொடங்கியது என நினைக்கிறேன்.
பிறகு அவர் பல ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தார். தன்னுடையது சர்வதேச நிறுவனம் எனவும் தன் மூலம் பங்குகள் வாங்கி தான் சொல்வதுபோல் விற்றால் நிறைய லாபம் கிடைக்கும் என்றும் சொன்னார். நானும் நம்ப ஆரம்பித்தேன்.
முதல் கட்டமாக 40,000 ரூபாய் முதலீடு செய்தேன். அவர்கள் ஒரு வங்கிக் கணக்கு அனுப்பினார்கள். அதற்கு பணம் போட்டேன். என் போனில் இருந்த செயலியில் 40,000 ரூபாய் ஏறி இருந்தது. அவர் சொன்னமாதிரி யூ சி ஸ்டாக்ஸ் எனப்படும் பங்குகளை வாங்கி மறுநாள் காலையில் அதே செயலி மூலமாக விற்பனை செய்தேன். நல்ல லாபம் இருப்பதாக என் கணக்கு காட்டியது.
இன்னொரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க விண்ணப்பித்தேன். எனக்கு 8000 பங்குகள் ஒதுக்கப்பட்டன. அதற்கு 4.5 லட்சம் கட்டச் சொல்லி ஒரு வங்கிக் கணக்கு அனுப்பினார்கள். இந்த கணக்கு வேறு ஒரு பெயரில் இருந்தது. அதற்கு பணம் அனுப்பினேன். 8000 பங்குகள் ஒதுக்கப்பட்டன. அவற்றை அவர்கள் சொன்னமாதிரி விற்றேன். 99% லாபம். என் கணக்கில் இப்போது 9.5 லட்ச ரூபாய் இருந்தது.
இதற்கு அடுத்தவாரம் எனக்கு இன்னொரு நிறுவனத்தின் ஷேர்கள் எண்பது ரூபாய் விலையில் 35200 பங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. இதற்காக 28.6 லட்ச ரூபாய் கட்டவேண்டும். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. என் கணக்கில் இப்போது 12 லட்ச ரூபாய் ஏற்கெனவே இருந்தது. இந்த பணத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். மீதி?
என்னிடம் இல்லை என்றபோது, சார் உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். மீதியை நாங்கள் போட்டு அதை வாங்கித் தருகிறோம். நீங்கள் அவற்றை விற்று லாபம் கிடைக்கும்போது எங்களுக்குத் தரலாம் என்றனர். இந்த உலகத்தில் இன்னும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குள் தோன்றிவிட்டது! மூன்று லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய் அனுப்பினேன். அவர்கள் மீதி 13 லட்சம் போட்டு பங்குகளை வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். என் கணக்கில் இப்போது 56 லட்சம் ரூபாய்!
நீங்கள் கொடுத்த கடனை இதில் இருந்து கழித்து நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன்.
’அடடா.. இந்த செயலியில் நாங்கள் அப்படி செய்யமுடியாது. நீங்கள் தனியாக 13 லட்சம் எங்களுக்கு அனுப்பிவிடுங்கள்’ என்றனர்.
சரி,,,, அதான் 56 லட்சம் இருக்கிறதே.. அதில் இருந்து அனுப்பிவிடுவதுதானே என்றுதானே நினைக்கிறீர்கள்? நானும் அப்படித்தான் இருந்தேன். அந்த செயலியில் இருந்து பணத்தை மாற்ற முயன்றபோது முடியவில்லை.
’நீங்கள் கடனைக் கட்டினால்தான் பணத்தை எடுக்கமுடியும். அதுதான் கம்பெனி ரூல்ஸ்!’ என மெதுவாகக் கோரைப்பற்களைக் காட்டத்தொடங்கினர்.
இப்போது அந்த 56 லட்சத்தை எடுக்க, நாம் வாங்கிய கடனை செலுத்திவிடுவோம் என்று நண்பர்கள் உறவினர்களிடம் கடன் வாங்கி இரு தவணையில் 13 லட்சத்தைக் கட்டிவிட்டேன்.
இப்போது பங்குகளை வாங்கி விற்ற வகையில் என் கணக்கில் சுமார் ஒன்றரை கோடி இருப்பதாக அந்த செயலி காட்டியது. பின்னர் பணத்தை எடுப்போம் என முயன்றால் மீண்டும் முடியவில்லை. அடேய்களா என்று தொடர்புகொண்டால், ’சார், அந்தப் பணத்தை எடுக்க நீங்கள் வரி கட்டவேண்டும்.’ என்றவர்கள், ‘உங்களால் முடிந்ததைக் கட்டுங்கள். மீதியை நாங்கள் கடனாகத் தருகிறோம்’ என்றனர்.
அப்போது மீண்டும் கடனா என எனக்குத் தலை சுற்றியது. அதுவரை 21 லட்சரூபாய் கட்டி இருந்தேன். இந்த விவரங்களை நண்பரும் காவல்துறை அதிகாரியுமான ஒருவரிடம் சொன்னபோது அவர்’ நிறுத்து எல்லாத்தையும் இப்போதே நிறுத்திக்கோ’ என்ற சொல்லி எனக்கு இது மிகப்பெரிய சைபர் ஸ்கேம் என்று புரியவைத்தார்.
இவர்கள் கொடுத்தது போலி செயலி. கணக்கில் இருப்பதாக ஸ்கிரீனில் காட்டுமே தவிர ஒரு பைசா எடுக்கமுடியாது எனப் புரிந்தது. சைபர் கிரைமில் புகார் கொடுத்தேன். முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துவிட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என அமர்ந்து இருக்கிறேன்.’ என முடித்தார் அவர்.
பங்குகள் வாங்க கடன் தருகிறோம் என்று சொல்லி நம்ப வைக்கும் அளவுக்கு தொழில் சுத்தமான ஆட்கள் இதில் இருக்கிறார்கள். நாம்தான் சூதானமாக இருக்கவேண்டும்!