அந்த பெண் யாரிடமோ என் எண்ணை வாங்கி அழைத்திருந்தார். பேசும்போதே உடைந்து அழுதுவிட்டார். சில மாதம் முன்பு செலவுக்காக அவர் கடன் செயலி ஒன்றில் இருந்து 15000 ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அவசரத் தேவையை அதுதான் பூர்த்தி செய்தது. அதற்கான வட்டியையும் ஒழுங்காகக் கட்டிவந்தார்.
வட்டியும் அசலும் கிட்டத்தட்ட கட்டி முடித்துவிட்ட நிலையில் கூடுதலாக பணம் கட்டச் சொல்லி கேட்க ஆரம்பித்தார்கள். இவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “ வேறு வேறு எண்களில் இருந்து பேசுகிறார்கள். மிக ஆபாசமாகப் பேசுகிறார்கள். என் புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்து எனக்கே வாட்ஸப்பில் அனுப்புகிறார்கள். அதுமட்டுமல்ல, எனக்குத்தெரிந்தவர்கள் உறவினர்களுக்கெல்லாம் போன் போட்டு ஆபாசமாகப் பேசப்போவதாகவும் அவர்களுக்கு என் நிர்வாணப்படத்தை அனுப்பப்போவதாகவும் சொல்கிறார்கள்…’ அவரால் பேசமுடியவில்லை. சற்று நிறுத்தியவர்.’ எனக்கு எதாவது ஒரு வழி சொல்லுங்கள். இப்போதைக்கு தற்கொலை செய்வது தவிர எனக்கு வேறு பாதை தெரியவில்லை…’’ பேசிக்கொண்டே போனார்.
இடையில் என்னைப் பற்றி ஒரு அறிமுகம். இந்த கடன் செயலிகள் மூலம் கடன் வாங்கித் துன்புறுபவர்கள் பற்றி ஒரு திரைப்படத்தை நான் இயக்கி உள்ளேன். விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதை தெரிந்தவர்கள் மூலம் கேள்விப்பட்டுத்தான் அந்த பெண்மணி எனக்குப் பேசி இருக்கிறார்.
அவர் வாங்கிய பணத்தைவிட வட்டியெல்லாம் சேர்த்து பன்மடங்கு கட்டி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். உடனடியாக அருகே உள்ள சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவிக்கச் சொன்னேன். அவர் சென்றபோது ஒரு காவல்நிலையத்தில் உங்கள் மோசடிப் புகார் தொகை குறிப்பிட்ட அளவைத் தாண்டி இருக்கிறது,. எனவே இங்கே எடுக்கமாட்டோம். வேறொரு காவல்நிலையத்தைக் குறிப்பிட்டு அங்கே செல்லுமாறு கூறினர். அங்கே இவர் கணக்கைக்கேட்டு கூட்டிக்கழித்துப் பார்த்து, இல்லை இது அவ்வளவு பெரிய தொகை இல்லை. நீங்கள் அங்கேயே செல்லுங்கள் என அனுப்பி விட்டனர். மீண்டும் பழைய காவல்நிலையம். அங்கே இம்முறை புகார் எடுக்கப்பட்டது.
இதற்கிடையில் அவரது மொபைல் எண்ணை மாற்றுமாறும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பழைய எண்ணை மாற்றிவிடுமாறும் அறிவுறுத்தினேன். அத்துடன் உறவினர்கள் நண்பர்களுக்கு இந்த சிக்கல் பற்றி மேலோட்டமாக ஒரு தகவல் போட்டுவிடுமாறும் கூறினேன். எண்ணை மாற்றி, அதனுடன் தொடர்புடைய ஆவணங்களின் இணைப்பையும் மாற்றிய பின்னர் இந்த அழைப்புகள் தொல்லை நின்றது.
கடன் செயலிகளைப் பொறுத்தவரை ஏராளமான செயலிகள் உள்ளன. ப்ளேஸ்டோர், ஆப் ஸ்டோர் போன்றவற்றில் இருக்கின்றன. ஆனால் இவை பெருமளவுக்கு இப்போது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. இப்போது சமூக ஊடகங்கள் மூலம் செயலிகளின் ஏபிகே எனப்படும் மென்பொருள்கள் அனுப்பப்படுகின்றன. இந்த ஏபிகேகளை போனில் நிறுவிக்கொண்டு அதன்மூலம் பணம் உடனடியாக கடன் பெறலாம். கந்துவட்டி போல் ஏறிக்கொண்டே செல்லும். கட்டமுடியாமல் போனால் உங்கள் எண் கலெக்சன் ஏஜெண்டுகளிடம் அளிக்கமுடியும். ஏற்கெனவே போனில் உள்ள கேலரியில் இருக்கும் படங்கள், தகவல்களை அவர்கள் பெற்றிருப்பார்கள். அதைக் கொண்டு மிரட்ட ஆரம்பிப்பார்கள்.
சமீபத்தில் இதேபோல் செயல்பட்ட ஒரு கும்பலை அமலாக்கத்துறை பிடித்தது. அச்சமயம் 1651 கோடிரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக செய்திகள் வெளியாயின. சீன நிறுவனத்தின் செயலிகளின் ஏபிகேகளை உலவவிட்டு கடன் அளித்து, திரட்டிய பணம் இந்த அளவு. கடனுக்கு வசூலாகுக் வட்டி, தேவையில் இருக்கும் ஒரு சிலரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். அவர்களுக்கு சின்னதாக ஒரு கமிஷன் அளிக்கப்படும். இதை கோவேறுகழுதை (mule) அக்கவுண்ட்கள் என்கிறார்கள். இவற்றில் இருந்து பணம் வேறு சில நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து கிரிப்டோ கரன்சியாக சிங்கப்பூர், சீனா என்று வெளிநாட்டு கலெக்சன் ஏஜெண்ட் மூலமாகச் சென்று விடும்.
பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போன்றவர்களே இந்த செயலிகள் மூலம் கடன்வலையில் சிக்குகிறார்கள். எந்த டாகுமெண்டும் இல்லாமல் உடனே கிடைக்கும் கடன். அதைக் கட்டாவிட்டால் விளைவுகள் மிகக் கொடூரமாக இருக்கும்.
இந்த திரைப்படத்துக்காக ஓர் இடத்தில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தேன். முறையான அனுமதி வாங்கவில்லை. நண்பர் ஒருவர் பாத்துக்கலாம் என்று சொல்லி இருந்ததால் மொத்த டீமுடன் போய் களமிறங்கி படப்பிடிப்பின் ஒரு பகுதி முடிந்த நிலையில் அந்த இடத்தின் நிர்வாகி ஒருவர் வந்துவிட்டார். ‘யாரைக்கேட்டு படம் பிடித்தீர்கள்?’ என்று காச் மூசென்று கத்திவிட்டார். மொத்த படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. என்னை மட்டும் விட்டுவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். நிர்வாகியோ நீங்கள் என்ன படம் பிடித்தீர்களோ அதைக் காட்டுங்கள்…. எனக் கடுகடுத்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட என்னை சிறைப் பிடித்த நிலைதான். ‘சார்… நான் எடுக்கும் படம் ஒரு விழிப்புணர்வு சம்பந்தமானது. நீங்கள் எல்லாம் உதவவேண்டும்’ என்றேன்.
‘என்ன விழிப்புணர்வு?’
‘கடன் செயலிகள் மூலம் கடன் வாங்கிவிட்டு தவிப்பவர்கள் பற்றியது’
‘அப்படியா?’ நிர்வாகி குரலில் எங்கிருந்தோ ஒரு பவ்யம் வந்திருந்தது.
‘ டே.. சாருக்கு ஜூஸ் கொண்டுவா… உங்காருங்க சார்’
ஏன் இந்த திடீர் மாற்றம்? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நிர்வாகியும் கடன் செயலிமூலம் கடன் வாங்கி இருக்கிறாராம். கடனைக் கட்டமுடியாத நிலையில் மிரட்டலை தற்போது எதிர்கொண்டு வருகிறாராம். தப்பிப்பது எப்படி என்று வழி சொல்ல வேண்டுமாம்!
‘அதாவது.. நீங்க என்ன செய்றீங்கன்னா…?’ என்று கம்பீரமாக ஆரம்பித்தேன்.
(இயக்குநர் ஜோயல் விஜய், கடன் செயலிகள் மோசடி பற்றிய ஒரு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார். இவரது இன்னொரு படம் கூடு. மென்மையானதொரு கதைக்களம் கொண்ட இதுவும் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. )