ஒரு மனநல மருத்துவனாக ஏராளமான மனிதர்களின் தனித்துவமான உளவியல் சிக்கல்களையும், பிரத்தியேகமான அகப்போராட்டங்களையும் தினம் தினம் பார்த்து வருகிறேன். உளவியல் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாது, உறவுகளுக்கிடையேயான விரிசல்களுக்கும், ஒவ்வாமைகளுக்கும் கூட நான் பல்வேறு தருணங்களில் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். அந்த அனுபவங்களிலிருந்து என்னால் ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல முடியும், எந்த ஒரு உறவிற்கும் அடிப்படையானது நேர்மை. எந்த அளவிற்கு நேர்மையாக ஓர் உறவில் இருக்கிறோமோ அந்தளவிற்கு அந்த உறவு ஆரோக்கியமானதாகவும், நீடித்த ஒன்றாகவும் இருக்கும்.
ஓர் உறவில் நேர்மையாக இருப்பது எதை பொறுத்தது?
“நான் எப்போதெல்லாம் உண்மையை சொல்கிறேனோ அப்போதெல்லாம் எங்களுக்குள் சண்டை வந்துவிடுகிறது. அதனால் தான் நான் பெரும்பாலான நேரங்களில் உண்மையைச் சொல்வதை தவிர்க்கிறேன்” என நேர்மையாக இல்லாதது குறித்து சமாதானங்கள் சொல்லப்படுகின்றன. நேர்மையாக இருப்பது என்பது எல்லா நேரங்களில் நேர்மையாக இருப்பது, அப்படி இருப்பதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் பிடிவாதமாக நேர்மையாக இருப்பது. ஒரு தற்காலிக விடுபடுதலுக்காக நாம் நேர்மையாக இருப்பதிலிருந்து சமரசம் செய்துகொள்ளும் போது, அது அந்த உறவை பலவீனமாக்கத் தொடங்கிவிடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாகும் அந்த உறவு ஒரு கட்டத்தில் பொலபொலவென உதிர்ந்து விழுந்துவிடுகிறது.
ஒரு சிட்டிகை மிளகு, இஞ்சி, அவளுக்கே தெரிந்த இலைகளையும், காய்களையும் காய்ச்சிய நீரில் சேர்த்து தினமும் காலையில் அதை தனது கணவனுக்குக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள் அந்தப் பெண். கிட்டத்தட்ட திருமணம் முடிந்து இருபது வருடங்களாக தொடர்கிறது இந்த பழக்கம். அந்த கணவனும் எந்த வித புகாருமின்றி அதைக் குடித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவான். தனது கணவனின் ஆரோக்கியத்திற்கு பின்னால் அவள் கொடுக்கும் மருத்துவ குணங்கள் நிரம்பிய அந்த கசாயமே காரணம் என அவள் நம்பினாள். செல்லுமிடமெல்லாம் அதை மற்றவர்களுக்குப் பரிந்துரையும் செய்வாள். தனது கணவனை காட்டி “எப்படி இருக்கார் பார்த்தீங்களா, நீங்களும் காலங்காத்தால உங்க வீட்டுல எல்லாருக்கும் போட்டு கொடுங்க, ஒரு நோயும் கிட்ட வராது” என சொல்வாள். கணவனை போல மகனுக்கும் அதை கொடுக்க தொடங்கியபோது அவன் குடித்து பார்த்துவிட்டு அதை வேண்டாம் என சொல்லிச் சென்றான். அவளுக்கு அது அவ்வளவு வேதனையாக இருந்தது. கணவனிடம் சொல்லிப் புலம்பிய போது “இத்தனை வருஷம் என்னைய பாடுபடுத்துனது போதாதா? அவனையாவது நிம்மதியா இருக்க விடு” என கோபமாக சொல்லி சென்றான். அவள் சட்டென அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிய தொடங்கியது. அன்று முழுவதும் அமைதியாகவே யோசித்து கொண்டிருந்தாள், கணவன் வருவதற்கு முன்னால் மகனை கூட்டிக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாள். “இனி அவருடன் வாழப்போவதில்லை” என தனது வீட்டில் தீர்மானமாக சொன்னாள். இந்த சின்ன விஷயத்திற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என வீட்டில் உள்ள அனைவரும் சொல்லியும் கேட்கவில்லை. கணவன் வந்து மன்னிப்பு கேட்டான். அவனிடம் அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கணவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
“இப்ப என்ன நடந்துடுச்சினு இப்படி இருக்க, இனிமேல் உன் பையனையும் அந்த வீணாப்போன கசாயத்தை குடிக்க சொல்றேன் போதுமா?” என கத்தினான்
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “யாரும் எதையும் குடிக்க வேண்டாம். என்ன தனியா விடுங்க, உங்க வாழ்க்கையை பார்த்துக்கங்க” என சொல்லிவிட்டு அவனைத் திரும்பி பார்க்காமல் நடந்தாள்.
அவளைப் பொறுத்தவரை, அது வெறும் கசாயம் மட்டுமல்ல, அவன் மீது அவளுக்கு இருந்த காதலின் வெளிப்பாடு அது. அவன் மீதான பிரியத்தின் செயல் அது. அதை அவன் ஆரம்பத்திலேயே மறுத்திருக்கலாம், அப்போது அவளுக்கு அதில் சிக்கல் இருந்திருக்காது. ஆனால், இத்தனை வருடம் கழித்து தனது அத்தனை கால அன்பையெல்லாம் சிறுமைப்படுத்திய, உதாசீனப்படுத்திய அவனது அந்த ஒற்றை சொல்லை அவளால் சீரணிக்க முடியவில்லை, அதுவே அவளின் அத்தனை ஏமாற்றத்திற்கும் காரணம். அவளிடம் எந்த களங்கமுமில்லை, அவன் அவளிடம் நேர்மையாக இல்லை அதுதான் பிரச்சினை. அவளிடம் இத்தனை வருட காலமும் நடித்திருக்கிறான், அவளை ஏமாற்றியிருக்கிறான், இதைத் தான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன காரணம் என்பது முக்கியமல்ல, ஒருவன் இத்தனை காலம் ஒரு சாதாரண விஷயத்திற்காக தன்னிடம் நேர்மையாக இல்லை என்பதே அவளின் ஏமாற்றத்திற்கு போதுமானதாக இருந்தது. ஏதோ ஒரு விஷயத்தில் நேர்மையாக இல்லையென்றாலே மற்ற விஷயங்களிலும் அவன் நேர்மையாக இருந்திருக்க உத்தரவாதம் இல்லை என்பதும் அவளுடைய புரிதலாக இருந்தது.
எனது பேராசிரியரிடம், தற்செயலாக ஒரு மாணவன் சிறு விஷயத்திற்குப் பொய் சொன்னான். அது மிக சாதாரண ஒரு விஷயம் தான், அது பொய்யென்று தெரிந்துவிட்டது, அவன் சிரித்தான். அவர் அவனிடம் சொன்னார் “இதிலிருந்து நீ பொய் சொல்லக்கூடிய ஆள் என்பது எனக்கு தெரிந்துவிட்டது, இனி நீ சொல்லும் ஒவ்வொன்றும் அது உண்மையா, பொய்யா என நான் யோசிப்பேன், இப்படித்தான் மனிதர்கள் தங்களது நம்பகத்தன்மையை இழக்கிறார்கள்” எத்தனை உண்மையான வார்த்தை!
ஆன்லைன் விளையாட்டில் சில லட்சங்கள் செலவழித்த மகனை அழைத்துக்கொண்டு தந்தை வந்திருந்தார். அப்பாவின் வங்கிக்கணக்கை அவருக்கே தெரியாமல் இணைத்து கொஞ்சம் கொஞ்சம் பணத்தை எடுத்திருக்கிறான். அவருடைய வங்கிக்கணக்கில் பணம் குறைவதை தாமதாக தெரிந்து கொண்டவர் வங்கியில் சென்று புகாரளித்திருக்கிறார். உங்கள் வீட்டில் தான் யாரோ ஆன்லைனில் செலவழித்திருக்கிறார்கள் என வங்கியில் சொல்லியிருக்கிறார்கள். வீட்டில் வந்து மகனை விசாரித்ததில் அவன் இல்லவே இல்லை என மறுத்திருக்கிறான். வேறு வழியில்லாமல் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்ததற்குப் பிறகு மகன் செலவு செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறான். காவல் நிலையத்தில் உளவியல் நிபுணரிடம் பையனை அழைத்து செல்லுங்கள் என சொல்லியதால் தந்தை அழைத்து வந்திருந்தார். மகனிடம் பேசினேன், சிறு வயதிலிருந்தே அவன் கேட்டதையெல்லாம் தந்தை வாங்கி கொடுத்திருக்கிறார், அவனுடைய தாய் இதற்காக தனது கணவனுடன் அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் தந்தை “அம்மாவிடம் சொல்லாதே” என சொல்லி அவனுக்கு நிறைய செலவு செய்திருக்கிறார். அதையே பார்த்து வளர்ந்த மகன் அவரிடமும் சொல்லாமல் அவரின் பணத்தைச் செலவு செய்திருக்கிறான்.
உண்மையில் நம் குழந்தைகளிடம் நாம் கற்றுத்தர வேண்டியது என்ன? நேர்மையையும், நாணயத்தையும் தானே!. ஆனால், நாம் அதை அலட்சியப்படுத்துகிறோம். பொய் சொல்வதையும், ஏமாற்றுவதையும் வேடிக்கையாக குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறோம். அதன் நிமித்தம் எந்த குற்றவுணர்ச்சியையும் நாம் குழந்தைகளுக்கு உருவாகவிடுவதில்லை. அதனால், அந்த குழந்தைகள் வளரும்போது துளியும் நேர்மையற்று வளர்கிறார்கள், குறைந்தபட்சம் அதை தவறு என்றுகூட அவர்கள் உணர்வதில்லை. இதனால், அவர்களின் மீதான நம்பகத்தன்மையை அவர்கள் மிக சுலபமாக இழந்து விடுகிறார்கள். நவீன கால உறவுகளின் மிகப்பெரிய பிரச்சினையே இதுதான், யாரும் யாருக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதில்லை. அது தேவையுமில்லை என நினைக்கும் மனப்பான்மையை நமக்கே தெரியாமல் நாம் அவர்களுக்குள் வளர்த்துவிடுகிறோம். சமரசமற்ற நேர்மையை குழந்தைகளுக்குள் வளர்ப்பது தான் குழந்தை வளர்ப்பில் முதன்மையானது. அந்த நேர்மைதான் அவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு அடிப்படையாக அமையும். அந்த நேர்மையை குழந்தைகளுக்குள் வளர்க்க வேண்டுமானால் அதற்கு முதல்படி நாம் நேர்மையாக இருக்க வேண்டும், நம் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
இருபதுகளில் இருக்கும் கல்லூரி மாணவி ஒருவர் என்னை வந்து பார்த்தார். இளநிலை மருத்துவம் படிக்கும் அவளுக்கு பள்ளி காலத்திலிருந்தே நண்பன் ஒருவன் இருக்கிறான், இப்போது அவன் பொறியியல் படித்து வருகிறான். நண்பர்களாக தொடங்கி காதலர்களாக இருக்கும் அவர்களுக்குள் சமீப காலங்களில் ஏராளமான வாக்குவாதங்கள், சண்டைகள். காரணம் புரிந்துகொள்ள கூடியதுதான். அந்த பெண் வெளியூரில் நடக்கும் மருத்துவக் கருத்தரங்களுக்கு ஆண் நண்பர்களுடன் செல்கிறாள், அவர்களுடன் நெருங்கி பழகுகிறாள். அதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போகக்கூடாது என சொல்கிறான், இவளால் அப்படி போகாமல் இருக்கவும் முடியாது.
“மற்றபடி அவன் மிக நல்லவன் சார், என் மீது அத்தனை பிரியமாக இருப்பான், என்னைத்தவிர யாருடனும் பேச மாட்டான், பழக மாட்டான், எனக்காக எது வேண்டுமானாலும் செய்வான். ஆனால், என்னால் அவன் விரும்புவது போல யாருடனும் பேசாமல், பழகாமல் இருக்க முடியாது. அதுவும் எனது துறையில் ஆண், பெண் பழகுவது, வெளியூர் செல்வதெல்லாம் சாதாரணமானது. அவனுக்காக என்னை மாற்றிக்கொள்ளவும் முடியாது, அதே நேரத்தில் அவனை இழக்கவும் மனம் வரவில்லை. நான் இல்லையென்றால் அவன் நொடிந்து போய்விடுவான் என பாவமாகவும் இருக்கிறது. அதனால் அவனிடம் சொல்லாமல் சில முறை போய் வந்தேன், அதையும் அவன் கண்டுபிடித்து விட்டான், இப்போது இன்னும் பிரச்சினை அதிகமாகிவிட்டது, என்ன செய்வது என தெரியவில்லை, அதுதான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றாள்.
“ஒருவரின் மீது பிரியமாக இருப்பது என்பது நிபந்தனைகளற்றது. ஒருவரை முழுவதுமாக அப்படியே ஏற்றுக்கொள்வதே அவர் மீதான உண்மையான் அன்பின் வெளிப்பாடு. நீ இப்படி இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் என சொல்வது பிரியமும், காதலுமல்ல. அது ஒரு அதிகாரம். அதே போல, நாம் விரும்பும் ஒருவருக்கு நம்மிடமுள்ள சில பண்புகள் பிடிக்கவில்லை என்பதற்காக அதை அவரிடம் மறைத்துக்கொண்டு பழகுவது ஒரு வகையான ஏமாற்றுதலே. அப்படி இருப்பதால் அந்த உறவின் தொடக்கம் வேண்டுமானால் சீராக இருக்கலாம். ஆனால் நாளடைவில் அது அந்த உறவின் நம்பகத்தன்மையை சிதைத்து விடும். நிறைய நேரங்களில் உறவுகளின் தொடக்கம் இப்படித்தான் அமைந்துவிடுகிறது. அவனுக்குப் பிடிக்கவில்லையென்றோ அல்லது அவளுக்குப் பிடிக்கவில்லையென்றோ நாம் நம்மை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை, நமது பலவீனங்களை மறைத்துக்கொள்கிறோம், நமது இயல்பிலிருந்து வேறு வகையாக நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம். அது பின்னாளில் தெரிய வரும்போது நம் மீதான நம்பிக்கையை கெடுத்துவிடுகிறது. அது அத்தனை கால உறவையும் பலவீனமாக்கிவிடுகிறது. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ உங்களை முழுமையாக வெளிப்படுத்துங்கள், அது சில சிக்கல்களை ஏற்படுத்தலாம், அதிர்ச்சியை கொடுக்கலாம், அதைச் சரி செய்யுங்கள், புரிய வைக்க முயற்சி செய்யுங்கள், இதுதான் நான் என உங்களை வெளிப்படுத்த தயங்காதீர்கள். அதில் உறுதியாக இருங்கள். அதனால் வரும் விளைவுகளையெல்லாம் கடந்து உண்மையான பிரியமும், அன்பும் உங்களை ஏற்றுக்கொள்ள வைக்கும், அதற்குப் பிறகு உருவாகும் உறவுதான் ஆரோக்கியமானது, அது உங்களுக்கே உங்களுக்கானது, உங்களை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட ஒன்றாகிவிடுகிறது, அதனால் அங்கு எந்த ஏமாற்றத்திற்கும் இடமில்லை. அதனால் பிடிவாதமாக நேர்மையாக உங்களை அந்தப் பையனிடம் வெளிப்படுத்துவது தான் நீண்ட கால நோக்கில் சிறந்தது” என சொல்லி அனுப்பினேன்.
நேர்மை என்பது சூழல் சார்ந்ததோ அல்லது நபர்கள் சார்ந்ததோ அல்ல, அது ஒருவருடைய ஆளுமைப் பண்பு. இந்த சூழலில், இந்த மனிதர்களுடன் மட்டும் நான் உண்மையாக இருப்பேன், மற்றவர்களிடம் அப்படி இருக்க மாட்டேன் என்று ஒருவரால் சொல்ல முடியாது. ஏனென்றால் நேர்மை ஆளுமையுடன் பின்னிப்பிணைந்தது. அது சூழலுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டிருக்கும் ஒன்றாக எப்போதும் இருக்க முடியாது.
மனித உறவுகளை பொறுத்தவரை அது சிக்கலான ஒன்று. உறவுகளுக்கு பின்னால் பல எதிர்பார்ப்புகள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால் அத்தனையிலும் மிக முதன்மையானது நேர்மையாக இருப்பதுவே. உறவில் நேர்மையை நாம் பிடிவாதமாக கடைபிடிக்கும் போது அந்த உறவு எத்தனை விரிசல்களை சந்தித்தாலும், சவால்களை எதிர்கொண்டாலும் அத்தனையிலிருந்தும் மீண்டு வந்து விடும். அப்படி ஒவ்வொரு முறை மீண்டு வரும்போதும் இன்னும் ஆழமானதாகவும், உறுதியானதாகவும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அந்த நேர்மையைத்தான் நாம் எப்போதும் நமது உறவில் கைக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த நேர்மைதான் உறவிற்கு மட்டுமல்ல, நமக்கும் பெரிய அடையாளமாக விளங்கும்.