சிறப்புப்பக்கங்கள்

இனிப்பு சகோதரிகள்!

பாம்பே ஸ்வீட்ஸ், தஞ்சை

நா.விச்வநாதன்

வடக்கே இருந்து சென்னை வந்து இனிப்பு வியாபாரம் செய்த குருதயாள்சர்மா பின் தஞ்சாவூர் வந்து ரயிலடியில் சிறு ஸ்வீட் கடையைத் தொடங்கினார். தஞ்சாவூரில் ஸ்வீட் கடைகளுக்கு மிட்டாய்க்கடை என்றுதான் பெயர். குருதயாள் சர்மா பாம்பே ஸ்வீட்ஸ் என்று பெயரிட்டு இரண்டு புதியவகை ஸ்வீட்களை அறிமுகப்படுத்தினார். குஜபா என்ற வடநாட்டு இனிப்பை புதுச்சுவையில் சூர்ய கலா, சந்திரகலா எனக் கொடுத்தார். இந்த இனிப்புகள் அதுவரை மக்கள் அறிந்திராத சுவையில் இருந்தன.

கடையில் சிறு மலைபோல் குவிந்திருக்கும் இனிப்பு கார வகைகளுக்கு நடுவே அவர் அமர்ந்திருப்பார். சுவையான ஜாங்கிரி ஒருபக்கம் பிழிந்துகொண்டிருப்பார்கள். எண்பதுகளின் ஆரம்பத்திலும் தபால் துறை ஊழியனான நானும் என் நண்பரும் அந்த கடைப் பக்கம் செல்கையில் மிகுந்த ஆர்வத்துடன் அவற்றைப் பார்த்தவண்ணம் நிற்போம். சர்மா எங்களுக்கென்று சிறிதளவு அல்வா கொடுப்பார். அதை வாங்கிய வண்ணம் ரயில் படிக்கட்டுகளில் ரகசியமாக அமர்ந்து உண்போம். அந்த இனிப்புச் சுவை இன்னும் மறைந்திடவில்லை.

1949 இல் தொடங்கப்பட்ட சிறியகடை கிடுகிடுவென வளர்ந்து இன்று 15 கிளைகளுடன் விரிந்து செழிக்கச் காரணம் அவரது மகன் சுப்ரமணி சர்மா. அவர் காலத்திற்கேற்ப நவீனமாக்கினார் இங்கே கிடைக்கும் உலர் குலோப்ஜாமூன் விசேஷமானது. காரவகைகளும் அபாரமான சுவை. தென்னிந்திய உணவு வகைகளோடு வட இந்தியச்சுவையையும் இணைத்து மக்களை ஈர்த்தார். இன்று ஆன்லைன் வழி வெளியிடகங் களுக்கும் செல்கிறது. "இனிப்பு மனிதர்'' என்ற செல்லப் பெயரும் சுப்ரமணி சர்மாவிற்கு வந்து சேர்ந்தது

குரு தயாள் அறக்கட்டளை மூலம் கண்புரை இலவச அறுவைச்சிச்சை மற்றும் பல தர்மகாரியங்களை செய்து தஞ்சை மக்களிடம் மேன்மையான செல்வாக்கைப் பெற்றிருக் கிறது பாம்பே ஸ்வீட்ஸ்.

உ.பி யில் மதுரா அருகே ஆதர்ஸ் என்ற ஊரே தங்களுடைய பூர்வீகம் என்கிறார் சுப்ரமணி சர்மா. ஆதர்ஸ் என்றால் கைமணம் என்று பொருளாம். இந்த ஆண்டு புதிய ஸ்வீட் அறிமுகம்: பாதாம் பிஸ்தா கச்சலி! சுப்ரமணிசர்மாவிடம் பாம்பே ஸ்வீட்ஸ் வெற்றி பற்றிக் கேட்டால் சொல்கிறார். "நாங்கள் உணவின் மீது அன்பு செலுத்துகிறோம்"

சூர்ய கலா. சந்திரகலா சகோதரிகள். (இனிப்பாக இருப்பதால் பெண்பால் எனலாமே). சூரியகலா சூரியனைப்போல் வட்ட வடிவில் இருப்பது. சந்திரகலா அரைவட்ட நிலவு வடிவத்தில் இருப்பது. அப்பாடா பெயர்க்காரணம் புரிந்தது!

செய்முறை:

மைதா மாவு,சர்க்கரை நெய், உப்பு, கோவா, முந்திரி, பாதாம், ஏலக்காய், போன்றவற்றைத் தக்க அளவில் சேர்க்கவேண்டும். கோவாவைப் பூரணமாக உருட்டிக் கொள்ளவேண்டும். எண்ணெயில் மிதமான சூட்டில் பொறித்து எடுக்கவேண்டும். இதை ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் ஜீராவில் முக்கி 15 நிமிடம் ஊறப்போட்டு எடுத்தால் ரெடி!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram