1952 மார்ச். சென்னை தியாகராய நகரில் உள்ள பசுல்லா சாலையில் ராஜாஜியின் வீடு. முதல் மாடியில் ராஜாஜிக்கு முன்பாக அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், சி.சுப்ரமணியம், சஞ்சீவ ரெட்டி, காபந்து முதல்வர் குமாரசாமி ராஜா போன்றவர்கள் அமர்ந்துள்ளனர். ‘ராஜாஜிதான் சென்னை மாகாண முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவேண்டும்’ என காங்கிரஸ் சட்டமன்ற கமிட்டி போட்ட தீர்மானத்தை அளித்து அவர் சம்மதத்தைப் பெற வந்துள்ளனர். ஏற்கெனவே இம்மாதிரி கோரிக்கை வந்தபோது மறுத்திருந்தார் அவர்.
குமாரசாமி ராஜாவிடம் ‘ஏன் நீங்களே முதலமைச்சர் ஆகலாமே?’ என்றார் ராஜாஜி. ‘ வாய்ப்பே இல்லை. நீங்கள் ஆகவேண்டும் என வேண்டிக்கொள்ளத் தான் வந்திருக்கிறேன். நீங்கள் தான் சென்னை மாகாணத்தைக் காக்கவேண்டும்’ என்றார் ராஜா.
‘என்ன இது? எங்கு பிரச்னை என்றாலும் நான் தான் வரவேண்டுமா? இதே வேகத்தில் போனால் சேலத்தில் பிரச்னை என்றால் அங்கு முனிசிபாலிட்டி தலைவராக நான் தான் வரவேண்டும் என்பீர்கள் போலிருக்கிறதே…’ மறுத்துவிட்டார் ராஜாஜி. அதேசமயம் இதில் நேரு என்ன நினைக்கிறார் எனத் தெரியுமா? என்ற கேள்வியையும் கேட்டார்.
பதவி என்றால் யாரும் மறுப்பார்களா? ஏன் காங்கிரஸ்காரர்கள் தங்களுள் யாரையும் தேர்வு செய்யாமல் கவர்னர் ஜெனரலாக இருந்து, பின் மத்திய அமைச்சராக இருந்து ஓய்வுபெற்று சென்னைக்குத் திரும்பி இருக்கும் ராஜாஜியைப் போய், அதுவும் 73 வயதில், மாநில முதலமைச்சர் ஆகச் சொல்கிறார்கள்?
காரணம் எளிமையானது. வேறு யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. ஏனெனில் நடந்து முடிந்திருந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 375 இடங்களில்(309 சட்டமன்றத் தொகுதிகள்; 66 இரட்டைத் தொகுதிகள்; மொத்தம் 375) 152 இடங்கள் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. சுதந்தரத்துக்கு பிறகு நடந்த முதல் தேர்தலிலேயே அதுவும் நேரு காலத்திலேயே சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் டப்பா டான்ஸ் ஆடியது. இடதுசாரிகள் 61 இடமும் ஒன்பது சிறு கட்சிகள் சிற்சில இடங்களிலும் சுயேச்சைகள் 63 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தார்கள். அன்றைய சென்னை மாகாணம் என்பது இன்றைய ஆந்திரம், மலபார், தென் கர்நாடகம் போன்ற பகுதிகளைக் கொண்ட பெரிய மாகாணம்.
தெலுங்கு பேசும் பிரதேசத்தில் 143 இடங்கள். அங்கே 43 இடம் மட்டுமே காங்கிரஸுக்குக் கிடைத்தது. ஆந்திர மக்களின் பெருந்தலைவராக இருந்தவர் ‘மதறாஸ் மனதே’ கோஷ புகழ் பிரகாசம். அவர் கிருபளானி தொடங்கிய கிசான் மஸ்தூர் பிரஜா கட்சிக்குப் போய்விட்டார் என்பதால் காங்கிரசுக்குப் பின்னடைவு எனலாம். ஆனால் பிரகாசம் கூட இத்தேர்தலில் வென்றிருக்கவில்லை! துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுப்போனார். ஆனால் அவரும் இடதுசாரிகள் உதவியுடன் தனக்கு 166 எம் எல் ஏக்கள்(ஐக்கிய முன்னணி) ஆதரவு இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த குழப்பமான சூழல் அன்றைக்கு இந்தியாவுக்குப் புதிது. அப்போது இங்கே ஆளுநராக இருந்த பாவ் நகர் மகாராஜா கிருஷ்ணகுமார் சிங்ஜி, இதில் என்ன செய்வது என டெல்லிக்கு ஆலோசனை கேட்டு கடிதம் எழுதிவிட்டு ஓய்வு பெற்றார். அவர் இடத்துக்கு பிரகாசா என்ற நேருவுக்கு நெருக்கமான காங்கிரஸ்காரர் நியமிக்கப்பட்டார்.
ராஜாஜியை வலியுறுத்துமாறு நேருவிடம் கேட்க சென்னை காங்கிரஸ் சார்பாக
சி. சுப்ரமணியமும் சௌந்தரம் ராமச்சந்திரனும் அனுப்பப் பட்டார்கள். நேரு பயங்கரமான ஜனநாயகவாதி. ‘ சென்னை மாகாண காங்கிரஸ் என்ன சொல்கிறதோ அதுதான் என் முடிவு. நான் ஆலோசனை சொல்லமாட்டேன். ராஜாஜி முதல்வர் ஆனால் விரைவில் அவர் சட்டமன்றத்துக்கு தேர்தலில் நின்று தேர்வாகவேண்டும்’ என்று மட்டும் சொன்னார்.
ராஜாஜியாவது தேர்தலில் நிற்பதாவது? முடியாது என்று மறுத்துவிட்டார். நீங்கள் தானே தேடி வந்தீர்கள்? அதற்கொரு வழியை நீங்களே கண்டுபிடியுங்கள் என சொல்லிவிட்டார். ஆளுநர் பிரகாசாவும் மற்றவர்களும் நேருவிடம் அனுமதி பெறாமலே ராஜாஜியை மேல்சபை உறுப்பினர் ஆக்கி, முதலமைச்சர் பதவியில் அமர வைத்துவிட்டனர்! எல்லாம் முடிந்த பின்னர் சொல்லிக்கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு! இந்த விசயங்களில் எல்லாம் காமராஜர் பட்டும்படாமல்தான் இருந்தார்! ஏனெனில் அவர் ராஜாஜிக்கு எதிரணிக்காரர்!
சரி… கவர்னர் ஜெனரலாக இருந்தவர் முதலமைச்சர் மட்டும் ஆகலாமா? என்ற கேள்வியும் எழுந்தது. ராஜாஜியின் நண்பரும் ஆதரவாளருமான கல்கி, ‘ரமண மகரிஷியை திருவண்ணாமலை முனிசிபாலிட்டியின் தலைவர் பதவிக்கு அழைப்பது போன்றது இது’ என கல்கி சுட்டிக்காட்டியது.
முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்ட அன்று ராஜாஜி, ‘எனக்கு இது சரிவுதான், இப்படித்தான் என் பர்சனல் டைரியில் குறிப்பேன்’ எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.( Rajaji a Life, ராஜ்மோகன் காந்தி)
ரைட்டு.. இப்போது அவர் அமைத்த கூட்டணி அமைச்சரவை பற்றிப் பார்ப்போம். பதவியேற்று 9 நாள் கழித்துதான் மீதி 14 அமைச்சர்கள் பட்டியலை ராஜாஜி வெளியிட்டார். அவர்களே தங்களை ராஜாஜி அமைச்சர் ஆக்கியிருக்கிறார் என்பதை வானொலி மூலமும் செய்தித்தாள் மூலமும் தெரிந்துகொண்டார்களாம்!
இந்த பட்டியலில் காங்கிரஸ் அல்லாத ஒருவரும் இடம் பெற்றார். அவர் காமன்வீல் கட்சியின் தலைவர் மாணிக்கவேல் நாயக்கர்! அவருக்கு 6 எம்.எல்.ஏக்கள் இருந்தனர்.
’இடதுசாரிகள் தவிர மீதி அனைத்துக் கட்சியினரும் தன்னை ஆதரிக்கவேண்டும்’ என ராஜாஜி வேண்டுகோள் விடுத்தார். பல சுயேச்சை எம்.எல்.ஏக்களும் சிறுகட்சிகளும் ஆதரிக்க முன்வந்தனர். ராமசாமி படையாச்சியின் உழைப்பாளர் கட்சியின் 19 எம்.எல்.ஏக்களும் இதில் அடக்கம். மாணிக்கவேல் நாயக்கர் தவிர வேறு யாருக்கும் அமைச்சரவையில் இடம் இல்லை!
சட்டமன்றம் கூடிய முதல் நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு. ராஜாஜிக்கு ஆதரவாக 200 வாக்குகளும் எதிராக 151 வாக்குகளும் விழுந்தன! முதல் உரையிலேயே கம்யூனிஸ்ட் கட்சியினரை ராஜாஜி எச்சரிக்கத் தவறவில்லை. ‘உங்கள் பிடியிலிருந்து நாட்டைக் காக்கவே நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் முதல் எதிரி நான் தான். நீங்கள்தான் என் முதல் எதிரி’ என்றார் அவர். அன்றைய சூழலில் இடதுசாரிகளின் மீது நிலவிய பொது அச்ச உணர்வு, பல தரப்பாரையும் ராஜாஜி பின்னால் அணிவகுக்கச் செய்து அவர் ஆட்சியை நடத்த வழி செய்தது எனலாம்! அதுமட்டும் அல்லாமல் ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் ஓங்காமல் இருக்க ராஜாஜி பின் நிற்பதே சரியாக இருக்கும் என தமிழ்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நினைத்ததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல் ராஜாஜி அன்று அரசியல்வட்டாரத்தில் இருந்த மரியாதை!
இந்த நிகழ்வில் உச்சகட்ட காமெடி என்ன வென்றால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாதபோது பிற கட்சிகளின் ஆதரவைப் பெறத்தான் கட்சிகள் முயற்சி செய்யவேண்டும். அதுவே பெரும்பாடு! ஆனால் காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் ஆக ராஜாஜியைக் கொண்டுவரவே மூன்று மாதங்கள் போராடி சம்மதிக்க வைத்தது!
பின் குறிப்பு: ராஜாஜி முதலமைச்சராகப் பதவியேற்ற அன்று கடற்கரையில் பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. அன்று இரவு பெரும் மழை! அடுத்துவந்த கல்கி இதழின் தலையங்கத்தின் தலைப்பு: மகான் வந்தார் மழை பொழிந்தது!