இது நடந்து சுமார் ஐந்து ஆண்டுகள் இருக்கும்.
வடபழனியிலுள்ள நண்பர் ஒருவரின் உணவகத்திற்கு போயிருந்தேன். நல்ல சமையல்காரர். பத்திரிகையாளர் என்றும் அறியப்பட்டிருந்தவர். எழுத்து சலித்துப்போய் உணவகம் துவங்கியிருந்தார். சாப்பிட்டு முடித்து கல்லா அருகே சென்றபோது, “ ஒரு அஞ்சு நிமிஷம் கல்லாவுல உட்காருங்க ‘தம்’ அடிச்சுட்டு வந்துர்றேன்’’ என்று எஸ்கேப் ஆனார்.
சரி சாப்பிட்ட பில் தொகையை அவர் வருவதற்குள் கல்லாவில் போட்டுவிடலாம் என்று திறந்தபோது பேரதிர்ச்சி. சில சொற்ப ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் சின்னச் சின்ன கையடக்க நோட்டுகள் ஒரு ஓரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் திரும்பியதும் அவ்வளவும் ‘தண்டல்’ வாங்கிய நோட்டுகள் என்பது தெரிந்தது.
பிசியான உணவகம். சுவைக்குக் குறைவில்லை. விற்பனையும் அமோகம்தான். ஆனால் அடுத்த மூன்றாண்டுகளில், பெரும் கடனாளியாகி உணவகத்தை மூடிவிட்டு மீண்டும் ஒரு பத்திரிகை பணிக்கு திரும்பியிருந்தார்.
என்ன ஆச்சு எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவரைத் தேடிப்போய் சந்தித்தேன்.
இன்னொரு சிகரட்டை பற்றவைத்தபடி சொல்ல ஆரம்பித்தார்.
“ இங்கே வெற்றி, தோல்வின்னு தனித்தனியா எதுவுமே இல்லை. எல்லாமே ஒரு பயணம். அவ்வளவுதான். ’தீர்த்த ஸ்தலங்கள் நமக்கு இல்லை. ஆனால் தீர்த்த யாத்திரை நிச்சயம் உண்டு’ன்னு நீங்களும் படிச்சிருப்பீங்கதானே?
இந்த உணவகத்தை நான் தொடங்குறப்போ என்கிட்ட நயா பைசா கிடையாது. என்னை பெரிதும் நேசிக்கிற நண்பர் ஒருத்தர் இட அட்வான்ஸ், ஃபர்னிச்சர்கள், சமையல் சாமான்கள் உள்பட எல்லாத்துக்கும் ஸ்பான்சர் செஞ்சார். கிட்டத்தட்ட எட்டு லட்சம் ரூபாய்.
வேலைக்கு ஆட்களை எடுத்து உணவகத்தைத் துவங்கியாச்சு. இப்படி தொழில் தொடங்குறப்ப ரெண்டு முதல் மூணு மாசம் வரைக்கும் கையில ரொட்டேஷன் பணம் இருந்திருக்கணும். ஏனோ எனக்கு அது முதல்ல தோணலை. கேட்டிருந்தா அந்த நண்பர் இன்னொரு ரெண்டு லட்சம் கூட யோசிக்காம கொடுத்திருப்பார். உணவகம் திறந்தபிறகு நாமளே சமாளிக்கணுமே ஒழிய நண்பர் கிட்ட போய் பழையபடி நிக்கக்கூடாதுன்னு ஒரு வறட்டு வைராக்கியம்.
நம்ம மைண்ட் வாய்ஸ் சில சமயம் தூரத்துல இருக்கிறவங்களுக்குக் கூட சத்தமா கேட்கும்போல…
கடை திறந்த ரெண்டாவது நாள்… நெத்தி நிறைய குங்குமப்பொட்டோட ஒருத்தர் பைக்ல வந்து இறங்குனார். அவர்தான் வாழ்நாள்ல நான் சந்திச்ச முதல் தண்டல் பார்ட்டி. ‘ஹோட்டல் அட்வான்ஸ் உங்க பேர்லதான இருக்கு?’ங்குறதைத் தாண்டி அவர் ஒரு கேள்வியும் கேட்கலை. ஒரு லட்ச ரூபா தண்டல் தர முன் வந்தார்.
ஒரு லட்ச ரூபாய்ல வட்டி பத்தாயிரம் முதல்லயே எடுத்துக்கிட்டார். முதலாளி வேற ஒருத்தராம்(?). ரெண்டாயிரம் ரூபாய் அவருக்குன்னு எடுத்துக்கிட்டு 88 ஆயிரம் கொடுத்தார். இதை தினமும் ஆயிரம் வீதம் 100 நாள்ல கட்டி முடிக்கணும்.
அப்போதைக்கு அவர் கடவுள் மாதிரிதான் தெரிஞ்சார். கவுரவமான கடன். செக் தரவேண்டியதில்லை. சிபாரிசு கையெழுத்து தேவையில்லை. எந்த வெள்ளை பேப்பர்லயும் கையெழுத்து போட வேண்டியதில்லை. வியாபாரம் நடந்து முடியிற நேரம் நம்மளை தேடி வந்து வாங்கிட்டு நோட்ல என்ட்ரி போட்டுட்டுப் போயிருவாங்க… இப்படி அந்த தண்டல் குறித்து பல பாஸிடிவ் சிந்தனைகள். ஆனா அது ஒரு மரணக்கிணறுன்னு தெரிய எனக்கு ஆறு மாசங்களுக்கும் மேலாச்சு.
பிரச்சினைகளை சமாளிக்க அதே நபர் கிட்ட இன்னும் ரெண்டு தண்டல், அவருக்குத் தெரியாம மூனாவது நபர், மூனாவதுக்குத் தெரியாம நாலாவது அஞ்சாவதுன்னு நீங்க பாத்தீங்களே அப்படி கல்லா நிறைய தண்டல் நோட்டுகள்.
மதிய வியாபாரம் முடிஞ்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கிறப்ப இந்த வசூல் பார்ட்டிகள் வரிசையா வர ஆரம்பிப்பாங்க. ஒரு கட்டத்துல அன்றைய வியாபாரம் 25 ஆயிரம்னா அதுக்கு இணையா தண்டல் தொகையும் வர ஆரம்பிச்சிருச்சி.
சிலநாள் பிசினஸ் நாம கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவுக்கு படுபாதாளத்துக்குப் போகும். பக்கத்து தெருவுல யாரோ ஒரு புண்ணியவான் தன் பொறந்தநாளுக்காக இலவச பிரியாணிதானம் பண்ணியிருப்பார். அன்னைக்கு நம்ம நிலைமை செத்தாண்டா சேகருதான்.
25 ஆயிரம் தண்டல் கட்ட வேண்டிய நிலமையில 15 ஆயிரத்துக்குத்தான் வியாபாரம் ஆகியிருக்கும். வேற வழி. மத்தியான வசூல் பார்ட்டிகளுக்கு குல்லாதான். ஹோட்டலை விட்டு எஸ்கேப் ஆகி ஒரு ரெண்டு மணி நேரம் அடுத்த தெருவுல நின்னுட்டு திரும்புவேன். ஆனா அந்த பார்ட்டிங்க ராத்திரி ஏதோ ஒரு நேரத்துல பிசாசு மாதிரி வந்து நிப்பாங்க. ஏன்னா தண்டலோட தத்துவமே கடன்காரனுககிட்ட அன்னன்னைக்கே தட்டித் தூக்கிரணும்ன்கிறதுதான்.
ஆக தண்டல் வாங்கிட்டா உங்க வாழ்க்கையோட ஒவ்வொரு நாளுமே புதுமைப்பித்தனோட ‘ஒரு நாள் கழிந்தது’ கதையேதான். இன்னும் புரியிற மாதிரி வடிவேலு ஸ்டைல்ல சொல்றதா தினமும் செத்துச் செத்து பிழைக்கிற கதைதான்.
இப்பிடி மூணு வருஷம் ஓடுனவுடனே ஒரு நாள், ‘நம்ம வாழ்க்கை எதை நோக்கிப் போகுது?ன்னு யோசிச்சேன். அது எதை நோக்கியும் போகலை. 24 மணி நேரமும் இன்னைக்கு தண்டலை எப்பிடி கட்டி முடிக்கப்போறோம்ங்கிற எண்ணம் மட்டுமே இருக்கிறதைப் புரிஞ்சிக்கிட்டு அந்த தண்டல் பார்ட்டிகளை மொத்தமா வரச்சொன்னேன்.
“டியர் பிரதர்ஸ் இன்று இந்த உணவகம் கடைசி. உங்க எல்லாருக்கும் சேர்த்து மொத்தம் 7.5 லட்ச ரூபாய் பாக்கி இருக்கு. அதை ஆறு மாசத்துல என்னோட ரெண்டு கிட்னியை வித்தாவது செட்டில் பண்ணுறேன்னு சொல்லி எல்லோருக்கும் ஒரே கும்பிடு போட்டேன்.”
“உங்களை நம்பி எப்பிடி அதுக்கு ஒத்துக்கிட்டாங்க நண்பா?’’
“எம்மேல இல்ல. என்னோட கிட்னி மேல அவங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்துச்சி.’’