ஒரு போரின் பல்வேறு காட்சிகளை, அதன் நுண்ணிய அடக்குமுறைகளை, அதன் வேறுபட்ட முகங்களை பார்ப்பதென்பது ஒரு காலகட்டத்தின் சாட்சியாக இருப்பதற்கு ஒப்பானது. ஈழப்போர் ஒரு செய்தியாளராக அந்த வாய்ப்பை வழங்கியது.
போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நவம்பர் 2008ல் இலங்கைக்கு 11 நாள் பயணம் மேற்கொண்டேன். இலங்கைக்கு அது என் முதல் பயணம். 2014 வரையில் வருடத்திற்கு ஓரிரு முறை தொடர்ச்சியாக இலங்கைக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. நேரடியாக போர் நடந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும் முதல் பயணம் போரின் குரூர முகத்தை காட்டியது.
போர் நடைபெறாத கொழும்பில் பயம் தனது புலப்படாத பெருங்கரங்களைக் கொண்டு தெருக்களைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தது. ஒரு நாளெல்லாம் ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஓட்டுநர், தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் என்பதை அறிந்த பிறகு அந்நாளுக்கான கட்டணத்தை வாங்க மறுத்தது இன்னும் சுமந்து கொண்டிருக்கும் குற்றவுணர்வுகளில் ஒன்று. போர் அநீதியானது, சமத்துவமற்றது என்பதை வாசிப்பின் மூலம் அறிந்த எனக்கு தனிப்பட்ட அனுபவம் வாயிலாக உணர்த்தியது ஈழப்போர். அந்த ஆட்டோ ஓட்டுநர் தமிழ்நாட்டில் யாருக்கோ நான் தமிழில் பேசுவதை கேட்கும்வரையில் தன்னை தமிழராக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு தமிழ் ஊடக அலுவலகத்திற்குச் சென்றிருந்த போது, சிங்களத் தரப்பில் யாரைப் பார்க்க சென்றாலும் பொட்டு வைத்துக் கொண்டு செல்ல வேண்டாம் என்று அறிவுரை சொன்னார்கள். அரசின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட இன்னொரு ஊடகக்காரர், மூன்று கிமீ தொலைவில் உள்ள அலுவலகத்தை சென்றடைவதற்கு 27 வழிகளை கண்டுபிடித்து வைத்திருந்தார்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஈழப்போரின் தாக்கம் என்பது தமிழ்நாட்டில் அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் பரவியிருந்தது. போரின் துயரம் பேசிய நூற்றுக்கணக்கான கவிஞர்கள் தோன்றினார்கள். அனைவரிடத்திலும் சொல்லவொரு செய்தியும் தனித்துவமான குரலும் இருந்தது.
புலம்பெயர்ந்தவர் என்றோர் இனத்தையும் புலம்பெயர் இலக்கியம்/முகாம் இலக்கியம் என புது இலக்கிய வடிவங்களையும் போர், தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தியது. பண்பாட்டு ரீதியில், போர் தமிழ் ஓர்மையில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த எழுச்சி தமிழ்நாட்டில் அரசியல்ரீதியாக வெற்றிபெற்றதா என்பது கேள்விக்குறியே. மத்தியில் ஆளும் அரசுகளின் ஆதரவும் உறுதிப்பாடும் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அரசுகளும் எவ்வளவு குரல் எழுப்பினாலும் எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும் அது ஈழத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை/ ஏற்படுத்தவில்லை என்பதுதான் யதார்த்தம். ஆனால் ஈழம் இன்றுமொரு மங்காத உணர்வாய் இங்கு இருக்கிறது. முத்துக்குமார் தொடங்கி செங்கொடி வரையில் அந்த உணர்வின் வெப்பம் தகித்திருக்கிறது. அதன் தாக்கத்தில் பிறந்த நாம் தமிழர் கட்சி இன்று பல்வேறு பரிமாணங்களை அடைந்திருக்கிறது. இன்னொரு அரசியல் இயக்கம் இன்னமும் தீவிரமாக இயங்கி வருகிறது.
போரின் எச்சங்களைச் சுமந்து கொண்டு இன்னும் புலம்பெயர் முகாம்கள் இருக்கின்றன. மறுவாழ்வும் நீதியும் இன்னும் முழுமையாக சாத்தியப்படாத நிலையில், முடிந்துவிட்ட போரின் ஆறாத வடுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன.