சிறப்புப்பக்கங்கள்

நினைவில் நதி மட்டுமே உள்ள மனிதன்!

மரு.அகிலாண்டபாரதி

அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பா சபரிமலைக்கு மாலை போட்டிருந்த சமயம். திருநெல்வேலியில் இருந்து ஐயப்ப சாமிகள் அனைவரும் பாநாசத்தில் மேல் பொதிகைமலையில் இருக்கும் சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கு வேனில் கிளம்பினார்கள். நானும் போனேன்.

என் ஞாபகத்தில் இருக்கும் முதல் ஆற்றுக் குளியல் அதுதான். கோவிலின் அருகில் சுழித்து ஓடும் தாமிரபரணி நதியில் பாறையை ஓட்டினாற்போல் அமர்ந்து சந்தோஷமாகக் குளித்தேன். சுற்றுமுற்றும் பார்த்தால் பக்தகோடிகள் பலரும் அவரவர் அழுக்குத் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தனர். எனக்கும் துவைக்க ஆசை வந்தது. அதே மாதிரி என்னுடைய பிரவுன் கலர் சட்டையை சோப்பு போட்டுக் கொண்டிருந்தேன். கவனமற்ற ஒரு தருணத்தில் அது ஆற்றுடன் போய்விட்டது. நானும் பின்விளைவுகளை யோசிக்காமல் அதைப் பிடிக்கவென கிளம்பி, ஆற்றோடு போகப் பார்த்தேன். ஒரு ஐயப்பசாமி பார்த்துவிட்டு, தண்ணீருக்குள் குதித்து என்னைப் பிடித்து இழுத்து கரையில் போட்டார்.

அனைவருக்கும் பதட்டமாகிவிட்டது. நான் ‘சட்டை போச்சே!’ என்று சட்டை போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவுக்கானால் ரொம்ப நேரம் படபடவென்று இருந்தது. வழியெங்கும் அனைவரும் நான் ஆற்றோடு போகப் பார்த்ததையே பேசிக் கொண்டு வந்தார்கள். ஊருக்கு வந்தால் மின்சாரம் தடைபட்டிருந்தது. அப்போதெல்லாம் அடிக்கடி பவர் கட் ஆகிவிடும். போய்விட்டு ஓரிரு மணி நேரங்களில் வந்துவிட்டால், ‘போஸ்ட்ல (electric pole) போயிருக்கும்’ என்பார்கள் மக்கள். சற்றே தாமதமானால் ‘டிரான்ஸ்பார்மர்ல போயிடுச்சோ?’ என்பார்கள். சில சமயம் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் கூட மின்சாரம் வராமல் இருந்த நாட்கள் உண்டு. அப்படியென்றால் பாவனாசத்துல போயிருச்சாம் என்று மக்களாகவே ஒரு முடிவுக்கு வருவார்கள். பாபநாசத்தில் தான் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் ஸ்டேஷன் இருக்கிறது. அதனால் அங்கே பழுது ஏற்பட்டால் மின்சாரம் நாட்கணக்கில் வராமல் போகும்.

நான் சட்டையைப் பறிகொடுத்த அன்றும் ஒன்றரை நாட்களுக்கு மேல் கரண்ட் வரவில்லை. “பாரதியோட சட்டை போய் பாவனாசத்துல பவர் ஹவுஸ்ல சிக்கிக்கிச்சாம். அதுதான் கரண்ட் வரலையாம்” என்று அனைவரும் பல நாட்கள் வரை சொல்லிச் சிரித்தார்கள். வெகு நாட்கள் வரை அதுதான் உண்மை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சட்டை போனது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து விட்டோமே என்ற வருத்தம் எனக்கு.

அதன் பின் திருநெல்வேலி ஆறு, அம்பை ஆறு, சேர்மாதேவி ஆறு, என்று பலவற்றையும் பார்த்திருக்கிறேன். எல்லாமே ஒரே தாமிரபரணி தான் என்று என் சிற்றறிவுக்கு அப்போது எட்டவில்லை. பாபநாசத்திற்கு மேல் இருக்கும் போது பொதிகைமலையில் உற்பத்தியாகி பாய்ந்தோடும் தாமிரபரணியின் பல பகுதிகளில் கால் நனைத்திருக்கிறோம் என்பது புரிவதற்கே ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. சொல்லப்போனால் நாங்கள் வசித்த இடைகாலில் இருந்த குளங்களும், வருடம் முழுவதும் ஓடும் நதியும் வேறு வேறு வகையிலான நீர்நிலைகள் என்பதே தெரியாமல் இருந்திருக்கிறேன். இப்படியாக நதி குறித்த தகவல்களில் எனக்கு அறியாமை அதிகம்.

என் கணவரின் சொந்த ஊர் பாபநாசம் அருகில் விக்கிரமசிங்க புரம். மாமனார் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கே தான். தமிழகம் முழுவதும் உள்ள மின் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றி கடைசியில் பாபநாசம் பவர் ஹவுஸில் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். திருமணமாகி வந்த புதிதில், புகுந்த வீட்டினர் அனைவரும் பாபநாசத்தில் காரையார், சேர்வலார், லோயர் டேம், தலையணை, மெஜுரா கோட்ஸ் ஆறு என்று சொல்லும் போதெல்லாம் எனக்கு கண்ணைக் கட்டி ஆற்றில் விட்டது போல் இருக்கும். எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது யாராவது ஆற்றைப் பற்றிய பேச்சை பேசாமல் இருக்க மாட்டார்கள்.

குற்றாலத்தின் அருகில் பிறந்து அருவிக் கரையில் வளர்ந்ததால், அடிக்கடி குற்றால அருவிகளில் குளித்த அளவிற்கு ஆற்றுக் குளியல் பழக்கம் இல்லை. ‘நாங்கெல்லாம் ஒவ்வொரு லீவுக்கும் ஆத்துக்குள்ளேயே தான் கிடப்போம்’ என்பது போல கணவர் பெருமைப்படுகையில், பொறாமையாகத் தான் இருக்கும். பின்னொரு நாளில் குற்றால அருவி வழிந்து ஓடி, சிற்றாறாக மாறி, அதுவும் தாமிரபரணியில் தான் கலக்கிறது என்பது தெரிய வந்த போது மனம் ஆசுவாசம் கொண்டது.

என் பிள்ளைகள் இருவரும் பிறந்த ஓரிரு மாதங்களிலேயே ஆற்றுக் குளியலுக்குப் பழக்கி விட்டோம். அவர்களுக்கு அருவியை விடவும் ஆறு தான் பிடித்திருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் என்று யார் வந்தாலும் பாபநாசத்திற்கும், அம்பையில் தாமிரபரணிக்கும் தவறாமல் அழைத்துச் சென்று விடுகிறோம். மாமனார் ஒவ்வொரு முறையும் எங்கள் அனைவரையும் பவர் ஹவுசுக்குள் அழைத்துச் செல்வார். மின்சாரம் எப்படித் தயாரிப்பது என்பதையெல்லாம் விளக்குவார். தாங்கள் இரவு பகலாய் வேலை பார்த்த அனுபவங்களை கதை கதையாகச் சொல்வார். கரடியைச் சந்தித்தது, ஒரு நாள் புலியைப் பார்த்தது, வெள்ளம் வந்தபோது அலுவலகத்தில் மாட்டிக் கொண்டது எல்லாவற்றையும் ஒவ்வொரு முறையும் புதிதாகச் சொல்வது போலவே சொல்வார். ஆற்றுக்கு போகும் நேரங்களில் வேஷ்டியை எடுத்து தார் பாய்ச்சி கட்டிக்கொண்டு பெரிய பாறையில் இருந்து சாமர்சால்ட் அடித்து ஆற்றில் குதிப்பார். எத்தனை பிள்ளைகள் வந்தாலும் பத்திரமாகக் குளிக்க வைத்து, நீச்சல் பழக்கி, கரை சேர்க்க உதவுவார். தாத்தாவுக்கு எத்தனை வயசு என்று கேட்டு, “அடேயப்பா எழுவத்தியெட்டா?” என்று ஆற்றில் குளிக்க வந்திருந்த மற்றவர்கள் அனைவரும் வியந்து பார்ப்பார்கள்.

விதவிதமான உணவுகளுடன் கணவரின் பால்யகால நண்பர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அதில் ஒருவர் பாணதீர்த்தத்துக்கு மோட்டார் படகு ஓட்டினார். ஒருவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்தார். ஓரிருவர் வனத்துறையிலும் சேர்ந்திருந்தனர். சேர்வலாறு குவார்ட்டர்ஸில் சில நண்பர்களின் வீடுகள் இருந்தன. அங்கே சென்று பெரும் கூட்டமாகத் தங்கி சமையல் பொருட்களைக் கொண்டு போய் சமைத்து சாப்பிடுவோம். நினைத்த நேரத்தில் குளிக்கலாம். காலையில் முதல் படகில் பாணதீர்த்தம் போனால் கடைசி படகில் திரும்புவோம். இருபது ஆண்டுகளுக்கு முன், இன்று இருந்ததை விட காலமும் சூழ்நிலையும் அவ்வளவு அருமையாக இருந்தது. நண்பர்களும் நிறைய இருந்தார்கள். இப்போது வனத்துறையினர் பாணதீர்த்தம் பகுதிக்கு டிரெக்கிங் தொடங்கி இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

பெருந்தொற்றுக்காலத்தில் தீவிரமாக எழுத ஆரம்பித்திருந்தேன். எழுத்து ஒன்று தான் பணியிடச்சுமைகளையும், பதற்றங்களையும் சமன் செய்ய உதவியது. நண்பர்கள் சிலர் சேர்ந்து கொண்டு போட்டி அறிவிக்கும் இடங்களில் எல்லாம் போய் கதை எழுதுவோம். ஓர் இணைய தளத்தில் எக்ஸ்பிரஸ் நாவல் போட்டி என்று அறிவித்திருந்தார்கள். முப்பது நாட்களில் நாவலை முடிக்க வேண்டும். அத்தியாயங்களை எழுத எழுதப் பதிவேற்றலாம் என்று அறிவித்திருந்தார்கள். விரைவாக எழுதி முடிக்க வேண்டும் என்றால் எந்தக் கதைக் களத்தைத் தேர்ந்தெடுப்பது என்று யோசித்து கணவரின் பால்ய கால நினைவுகளை மையப்படுத்தி எழுதலாம் என்று தாமிரபரணி சார்ந்த கதையைத் தேர்ந்தெடுத்தேன்.

ஆறு உற்பத்தியாகும் இடத்தில் பிறக்கும் ஒருவனின் வாழ்க்கைக் கதையை காரையாற்றில் தொடங்கி, ஆற்றின் ஓட்டம் போல அதனுடனே பயணித்து, கடைசியில் ஆறு கடலில் கலக்கும் இடமான தூத்துக்குடியில் முடிவது போல் கற்பனையும் நிஜமும் கலந்து எழுதி இருந்தேன். ‘இருபுனலும் வருபுனலும்’ என்ற அந்தக் கதையை தாமிரபரணியைப் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் இருதரப்பினரும் படித்து சிலாகித்தார்கள்.

என் மாமனாருக்கு அப்போதே நினைவுகள் கொஞ்சம் மங்கத் தொடங்கி விட்டன. எது மறந்தாலும் இன்னமும் பாபநாசம் ஆற்றையும் விக்ரமசிங்கபுரம் வீட்டையும் மட்டும் அவர் மறக்கவில்லை. நாவல் எழுதிய காலத்தில் அவரிடமும் ஏதாவது சுவாரஸ்யமான சம்பவங்களைச் சொல்லுங்கள், கதையில் சேர்க்கிறேன் என்று எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தேன். அவரால் சொல்ல இயலவில்லை. நாவல் வெளிவந்ததும் இது தாமிரபரணியை பற்றியது என்று கூறி அவர் கையில் கொடுத்தேன். ஆசையாக வாங்கி வைத்துக் கொண்டார். படிக்க முயற்சி செய்தார். புரிந்ததா என்பது தெரியவில்லை. பின் அந்த நூலின் அட்டைப் படத்தை எங்கு பார்த்தாலும் அதை எடுத்து வைத்துக் கொள்வார். தலையணைக் கருகில், கைப்பையில், பீரோவில், புத்தகங்களுக்கு இடையில் என்று என் கையில் வந்த பிரதிகளில் பாதி அவருடைய உடைமைகளுடன் தான் இருக்கும். அவசரத்திற்கு யாராவது புத்தகம் கேட்டார்கள் என்றால் அவர் உடமைகளில் எங்கே கையை விட்டாலும் ஒரு நாவல் கிடைக்கும்.

இப்போது அவருக்கு 85 வயதாகி விட்டது. என்னையும் என் கணவரையும் தவிர பிறரை அடையாளம் தெரியவில்லை. கடந்த ஓரிரு மாதங்களாக இன்னமும் மறதி அதிகரித்து விட்டது. ஏதோ சொல்ல வருகிறார் என்னவென்று புரிவதில்லை. கடந்த தைப்பொங்கலுக்கு என் தங்கை குழந்தைகளுடன் வந்திருந்த போது, குழந்தைகளிடம் போய், “நாம மூணு பேரும், நாம மூணு பேரும்” என்று அடிக்கடி சொன்னார். அதன் பின் சொல்ல வருவதை மறந்துவிட்டார். பின் ஒரு முறை போய் “ஆத்துல குளிக்கப் போகணும்” என்றார். அதிலிருந்து ஓயாத பாபநாசம் நினைவுகள் தான்.

இதோ இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், கணவரும் மாமாவும் பாபநாசம் போய்விட்டு வந்திருக்கிறார்கள். பூர்வீக வீட்டில் ஒரு நாள் தங்கி விட்டு, ஆற்றையும் தொலைவிலிருந்து காட்டி விட்டு வந்திருக்கிறார். அங்கிருந்து கிளம்பும் போது அப்பா மனமே இல்லாமல் கிளம்பினார், வீட்டின் கதவைப் பிடித்துக் கொண்டே நின்றார் என்றார் என் கணவர். வீட்டிற்கு வந்தும் வெகு நேரமாக மாமா எதுவும் பேசவில்லை. இப்படியான தருணங்களில் உறவினர்கள் யாருக்காவது வீடியோ கால் போட்டு அவர்களைக் காட்டுவது வழக்கம். இன்று தங்கை குழந்தைகள் கபிலனையும், கவிநயாவையும் காட்டினேன்.

‘ஊர்ல இருந்து வந்தது மாமாவுக்கு சோகமா இருக்கு’ என்றேன் தங்கையிடம். அவள் ஏதோ கபிலனின் காதில் சொல்ல, “தாத்தா! அடுத்து நாங்க வரும்போது ஆத்துக்கு போவோமா?” என்றான் கபிலன். லேசாக நிமிர்ந்து பார்த்து, நன்றாகவே புன்னகைத்தார். அவருடைய நினைவில் அந்த நதியும், நதிக்கரை ஊரும் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது போலும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram