சிறப்புப்பக்கங்கள்

காதலின் புதிய முகம்!

இரா.பிரபாகர்

பதின் பருவத்தினரின் காதலை மையமாகக் கொண்ட கதைகளை ஆரம்பித்து வைத்தவர் எனக்குத் தெரிந்து பாரதிராஜாவாகத் தெரிகிறார். 80களின் தொடக்கத்திலிருந்து அந்த புதிய கதையுலகு தமிழ்த் திரையில் விரியத்தொடங்கியது.

60கள் 70கள் காலங்களில் முப்பதுகளைக் கடந்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், 50களைக் கடந்த சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்களெல்லாம் தொடையைக் கவ்வும் பாண்ட் அணிந்து ஒற்றை நோட்டுப் புத்தகத்தை சுழற்றிக்கொண்டு கல்லூரிகளுக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். தமிழ்சினிமாவில் காதலிக்கவேண்டிய வயதில் காதலித்த நாயகர்கள் 80களுக்குப் பின்னரே வந்தார்கள். அதனால் அதற்கு முன் பதின்பருவக் கதைகள் நுழைந்திருக்க வாய்ப்பில்லை. தமிழின் ஒரே சினிமா வரலாற்றாசிரியரான அறந்தை நாராயணனின் பருத்த நூலிலும் அதற்கான சான்றுகள் எதையும் கண்ட நினைவில்லை. ஆக இந்த விடலைகளின் காதலுக்கு ஒரு காவிய மதிப்பை உருவாக்கிய திருப்பணிக்குச் சொந்தக்காரர் நம் இயக்குநர் இமயம்தான். அலைகள் ஓய்வதில்லை வெற்றியைத் தொடர்ந்து அவ்வப்போது இத்தகைய பதின்பருவக் காதல் கதை ஒன்று வெற்றி அடைவதும், அதைத்தொடர்ந்து சிலபல படங்கள் தொடர்வதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள், 7G ரெயின்போ காலனி, காதல், லவ் டு டே தொடங்கி யூத் வரை படங்கள் உண்டு. மேற்குறிப்பிட்ட படங்களின் வணிக வெற்றி ஒரு புறமிருக்க, அந்தந்தக் கால இளையோர் மனநிலை, காதல், கற்பு மற்றுமான சமூக உறவுகளின் சிடுக்குகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் வெளிக்காட்டுவதாகவும், உரையாடுவதாகவும் சமீபத்தைய படங்கள் இருந்து வந்திருக்கின்றன. அலைகள் ஓய்வதில்லை பாரதிராஜாவின் வழக்கமான புனைவு மிகுந்த காதல் கதை. பன்னீர் புஷ்பங்கள் ஒரு மேல்தட்டு ஆங்கிலப்பள்ளியின் கலாச்சாரம் அதனூடான விடலைத்தனமான காதல், ஈர்ப்பு போன்றவற்றைப் பேசியபடம். அந்த வகையில் பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ புத்தாயிரத்திற்குப் பிந்தைய தமிழக சாதிய இறுக்கத்தின் பின்புலத்தையும், ஆணவக் கொலைகள் பரவலான சூழலையும் பதிவுசெய்ய முயற்சித்த படம். செல்வராகவனின் ‘7 ஜி ரெயின்போ காலனி’ ஒரு பெரு நகரச் சூழலில் பள்ளிகளில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் பின்புலத்தில் மனரீதியாக பாதிப்புகளுள்ள நாயகனின் காதலை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருந்தது. ‘லவ் டுடே’ இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அமரத்துவமான காதல் என்பதைக் கடாசிவிட்டு, காதலை ஒரு எளிய கையாளக்கூடிய அன்றாடப்பிரச்சனையாக மாற்றியிருக்கிறது. புத்தாயிரத்திற்கு முன்பு பிறந்து நடிகர் திலகம், மக்கள் திலகம் படங்களில் நாயகன் கை பட்டதும் நாயகிக்கு மின்சாரம் பாய்ந்து உதட்டைக் கடித்த காட்சிகளில் கிறங்கிக் கிடந்த எம்மைப் போன்ற பூமர்களை அதிர்ச்சியும் பொறாமையும் ஒருங்கே அடையச் செய்தவையாக சமீபத்தைய விடலைப் படங்கள் இருக்கின்றன.

காதல் தமிழ் சினிமாவின் தீராத கச்சாப்பொருளாக இருந்து வந்திருக்கிறது. முக்கியமாக காதலுக்கு ஒரு புனிதத்தையும் அமரத்துவத்தையும் அளிப்பதன் மூலம் அதை நீர்த்துப்போகாமல் நூறு ஆண்டுகள் வரை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கிறது தமிழ்சினிமா. இரண்டாயிரத்திற்குப் பிந்தைய சினிமாக்கள்

காதலுக்காக உயிரை விடுவது, கைகளை அறுத்துக்கொள்வது, நாக்கை அறுப்பது என்பவற்றையெல்லாம் அபத்தங்களாகிவிட்டன. காதல் என்பது அடிக்கடி வந்துபோகும் நகரப்பேருந்து போன்றது. கூட்டம் அதிகமாக இருந்தால் அடுத்த பேருந்தில் ஏறிக்கொள்ள வேண்டியதுதான். ஒருவேளை அவசரப்பட்டு ஏறியபிறகு உட்கார இடமில்லாவிட்டால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவும் சாத்தியமானதுதான். ஒரு வகையில் இது ஒரு ஆரோக்கியமான போக்குதான். கடந்த ஐம்பது ஆண்டுகளாகத்தான் தமிழ்நாட்டின் பொதுவெளிகளில் எல்லா சமூகங்களைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் கல்விக்காகவும், வேலையின் பொருட்டும் பொதுவெளிகளில் புழங்கத்தொடங்கியிருக்கிறார்கள். மேலும் கைபேசிகள், இணையத் தொடர்புகள் என உருவாகியுள்ள புதிய தொடர்பு வசதிகள் ஆண் பெண் நட்பு, காதல் என்பதன் பொருளை, புரிதலை மாற்றியிருக்கின்றன. சமீப காலப் படங்கள் அத்தகைய இளையோர் பண்பாட்டையே காட்சிப்படுத்த முயல்கின்றன.

அந்த வகையில் வெகுசன இளையோர் பண்பாட்டை வெளிப்படுத்தக் கூடியதாக சமீபத்தில் வெளிவந்த ‘யூத்’ இருக்கிறது. Sex Education, Never Have I Ever (Netflix) போன்ற இணையத் தொடர்கள் அமெரிக்க ஐரோப்பிய இளையோர் பண்பாட்டின் போக்குகளை காட்டுபவையாக உள்ளன. அமெரிக்க பதின்பருவத்தினரின் பாலியல் விருப்பங்கள், அந்த வயதினருக்கே உரித்தான குடும்ப உளவியல் பிரச்சனைகளையே அந்த நெடுந்தொடர்கள் பேசுகின்றன. அங்கு காதல் அல்ல. பாலியல் சார்ந்த பிரச்சனைகளே பிரதானமாக இருப்பதைப் பார்க்கமுடியும். உலகமயச் சூழலில் நாமும் மேற்குலகை நெருக்கமாகப் பின் தொடர வேண்டியுள்ளதல்லவா? ஆக நம் திரைப்படங்கள் பல்முனை காதல்கள், முறிவுகள், மீண்டும் காதல் என்ற சுவாரஸ்யமான கதைக் களங்களுக்குள் இறங்கத் தொடங்கியிருக்கின்றன. ஒரு வகையில் இன்றைய இளையோர் உலகைப் புரிந்து கொள்வதற்காகவாவது இத்தகைய படங்களை பார்த்தாக வேண்டும். அந்த வகையில் ‘யூத்’ ஒரு முக்கியமான வரவு என்று தோன்றுகிறது.

குறிப்பாக இந்தப் படத்தின் இயக்குநரும் நாயகனுமான கென் கருணாஸ் தன் நடிப்பாலும் இயக்கத்தாலும் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அவரும் அவருடைய நண்பர்களுமாக இணைந்து உருவாக்கிய திரைக்கதையில் நாயகனாக நடித்தும் இயக்கியுமிருக்கிற கென் தமிழின் வணிக சினிமா விரும்பக்கூடிய ஒருவராக மாறக்கூடும். மிகவும் இயல்பான நடிப்பு, உடல் மொழி, குரல் என தமிழ் சினிமாவிற்குப் பொருத்தமானவராக இருக்கிறார். கென் வருங்காலங்களில் தனக்குப் பொருத்தமான கதைக்களங்களை தேர்வு செய்யவேண்டும். மாறாக அடுத்த ஐந்தாண்டுகளில் சூப்பர் ஸ்டாராகி அடுத்த ஐந்தாண்டுகளில் ஆட்சியைப்பிடிக்கும் திட்டமில்லாமல் இருக்கவேண்டும்.