உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசான அமெரிக்கா, கடன் சுமையிலும் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்கு சுமார் 26 சதவீதமாக தற்போது உள்ளது. உலக பொருளாதாரத்தின் எஞ்சின் அமெரிக்கா என்று சொல்ல முடியும்.
2024இன் இறுதியில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி அளவு 29.35 லட்சம் கோடி டாலராக அதிகரித்தது. அதே சமயத்தில், அமெரிக்க அரசின் கடன் சுமை தற்போது 36.22 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதாவது, அமெரிக்க பொருளாதாரத்தின் அடிப்படையில், (ஜி.டி.பி அடிப்படையில்) கடன் சுமையின் விகிதம் 124 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் 57 சதவீதமாகவும், ஜப்பானில் 263 சதவீதமாகவும் உள்ளது ஒப்பிடத்தக்கது.
அரசின் கடன் சுமை அதிகரிக்க ஒரே காரணம், வரவுக்கு மேல் செலவு செய்து, பற்றாக்குறை பட்ஜெட்களை தொடர்ந்து முன்னெடுப்பது தான். பட்ஜெட் பற்றாக்குறைகளை ஈடுகட்ட கடன் பத்திரங்களை வெளியிட்டு, ரிசர்வ் வங்கி மற்றும் பொது மக்களிடம் இருந்து கடன்களை திரட்டி செலவு செய்வது தொடர்கிறது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்க அரசின் கடன் அளவு 25,900 கோடி டாலராக இருந்தது. ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் பல்வேறு மூன்றாம் உலக நாடுகளில் கம்யூனிச பரவலை தடுக்கவும், சோவியத் ரஷ்யாவின் ஆதிக்க பரவலை தடுக்கவும், அமெரிக்க அரசு பெரும் நிதியை நேரடியாகவும், மறைமுகமாகவும் செலவு செய்யத் தொடங்கியதால், பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் கடன் சுமை படிப்படியாக அதிகரித்தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு மூன்றாம் உலக நாடுகள் அன்று கடும் வறுமையில் இருந்த போது, அதன் காரணமாக கம்யூனிச பரவல் உருவாகும் என அஞ்சி, அந்நாடுகளில் வறுமையை குறைக்கவும், நலத்திட்ட உதவிகளுக்கும் பல ஆயிரம் கோடி டாலர்களை செலவு செய்தது.
உலகெங்கும் பல்வேறு நேச நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்களை அமைத்துள்ளது. அதுமட்டுமல்ல அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவிலும் முக்கிய உறுப்பினராக பெரும் தொகைகளை செலவு செய்தது. சோவியத் ரஷ்யாவுடனான பனிப் போரின் ஒரு அங்கமாக, வியட்நாம் போரை அமெரிக்கா முன்னெடுத்தது. இதில் பல பத்தாயிரம் கோடி டாலர்களை செலவு செய்ய நேர்ந்தது.
அதே சமயத்தில், 1960களில் கென்னடி மற்றும் லிண்டன் ஜான்சன் அதிபர்களாக இருந்த போது, முன்னெப்போதும் இல்லாத வகையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன்களை பேண ஏராளமான புதிய மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினர். மெடிக்கேர், மெடி எய்ட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவி திட்டங்கள் உருவாக்கப்பட்டு இன்று பூதாகரமாக வளர்ந்துள்ளன.
இவற்றின் நிகர விளைவாக அமெரிக்க அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அளவுகளும் கடன் சுமையும் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கின. 1971இல் நிக்சன் ஆட்சியில் இது 2,300 கோடி டாலராக, ஜி.டி.பியில் 2.1 சதவீதமாக உச்சமடைந்தது. இதனால் ஏற்பட்ட கடும் விலைவாசி உயர்வை சமாளிக்க, அமெரிக்க டாலரை தங்கத்துடன் இணைத்த gold standard முறையை நிக்சன் அதிரடியாக ரத்து செய்தார்.
அதுவரை, அமெரிக்க அரசுகள் கடன் வாங்குவதற்கும், டாலர் நோட்டுகளை ரிசர்வ் வங்கி மூலம் அச்சடித்து செலவு செய்யவும் ஒரு வித கட்டுப்பாடு இருந்தது. அதாவது அமெரிக்க அரசு வசம் உள்ள தங்கத்தின் அளவிற்கு ஏற்ப டாலர்களை அச்சடித்துக் கொள்ள முடியும். இந்த gold standard முறையை நிக்சன் ரத்து செய்த பின், எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல், விரும்பிய அளவுக்கு டாலர்களை அச்சடித்து, செலவு செய்ய வழி பிறந்தது.
இதன் பின் இந்த ’கடன் வாங்கி செலவு செய்யும் போக்கு’ கட்டுக்கடங்காமல் அதிகரிக்க தொடங்கியது. 1975இல் பட்ஜெட் பற்றாக்குறை 5370 கோடி டாலராகவும், அமெரிக்க அரசின் கடன் சுமை 69,900 கோடி டாலராகவும் உயர்ந்தன. விலைவாசி உயர்வும் உச்சமடைந்தது.
பின்னர் ரொனால்ட் ரீகன் ஆட்சியில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடன் சுமை 1981இல் 99,800 கோடி டாலராக மேலும் அதிகரித்தது. அடுத்த பத்தாண்டுகளில், 1991இல் ஜார்ஜ் புஷ் ஆட்சியில் இது 3.66 லட்சம் கோடி டாலராக மும்மடங்கு அதிகரித்தது. 2001இல் இது 5.87 லட்சம் கோடி டாலராக அதிகரித்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது அமெரிக்க படையெடுப்புகளினால், அமெரிக்காவின் ராணுவ செலவுகள் அதிகரித்தன. கடன் சுமை உச்சமடைந்தது.
2005இல் கடன் சுமை 7.733 லட்சம் கோடி டாலராக அதிகரித்தது. 2008இல் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தத்தின் விளைவாக திவாலான அமெரிக்க பெரும் வங்கிகளை மீட்டெடுக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பெரும் தொகைகளை அமெரிக்க அரசு செலவு செய்தது. இதனால் கடன் சுமை 2009இல் 11.91 லட்சம் கோடி டாலராகவும், 2011இல் 14.79 லட்சம் கோடி டாலராகவும் மேலும் அதிகரித்தது.
2017இல் டிரம்ப் அதிபரான பின், கார்ப்பரேட் வரி குறைப்பு, அவர் முன்னெடுத்த வர்த்தகப் போர் ஆகியவற்றால் கடன் சுமை 20.24 லட்சம் கோடி டாலராக அதிகரித்தது. கொரொனா தொற்றுக்கு முன்பு 2019இல் இது 22.71 லட்சம் கோடியாக உச்சமடைந்தது.
கொரொனா தொற்று, ஊரடங்குகளினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க, வழக்கம் போல கீயின்ஸிய பொருளாதார தீர்வான கடன் வாங்கி பெரும் செலவு செய்யும் வழிமுறையை டிரம்ப் மிகப் பெரிய அளவில் முன்னெடுத்தார்.
இதனால் 2021இல் 28.48 லட்சம் கோடி டாலராக உச்சமடைந்த அமெரிக்க அரசின் கடன் சுமை, அடுத்த வந்த ஜோ பைடன் ஆட்சியில் மேலும் அதிகரித்தது. உக்ரைன் போரினால் ஏற்பட்ட கடும் விலைவாசி உயர்வை குறைக்கும் நோக்கி ஜோ பைடன் 2022இல் முன்னெடுத்த நிதித் தொகுப்பின் விளைவாக கடன் சுமை 30.92 லட்சம் கோடி டாலராகவும், 2024 இறுதியில் 35.46 லட்சம் கோடி டாலராக உயர்ந்தது. தற்போது 36.22 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது.
பொதுவாக ஒரு நாட்டின் கடன் சுமை மற்றும் நிதிப் பற்றாக்குறை வெகுவாக அதிகரித்தால், அதன் கரன்சி மதிப்பு வெகுவாக சரியும். இது பொருளாதார கோட்பாட்டின் பொது விதி. ஆனால் எல்லா விதிகளுக்கும் விதி விலக்கு உள்ளது போல இதற்கும் விதி விலக்கு உள்ளது. மிக மிக அதீத அளவுக்கு டாலர் நோட்டுகளை அமெரிக்க ரிசர்வ் வங்கி அச்சடித்து, அமெரிக்க அரசுக்கு கடனாக அளித்துள்ளதால், டாலரின் மதிப்பு சரியாமல், உலக அளவில் இன்றும் பலம் வாய்ந்த கரன்சியாக தொடர்கிறது.
ஏனெனில் உலக அளவில் அனைத்து நாடுகளும் தங்களின் அந்நிய செலாவணி கையிருப்பை டாலரில் முதலீடு செய்துள்ளன. அதாவது அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை வாங்கி குவித்து வருகின்றன. உலக வர்த்தகத்தின் கரன்சியாகவும் டாலர் கோலோச்சுவது மற்றொரு காரணம். ஒரு பெரும் பொருளாதார மந்தம் அல்லது சிக்கல் உருவானால், ஆபத்து காலத்தில் தங்களின் அந்நிய செலாவணியை, சேமிப்புகளை டாலரில் முதலீடு செய்யும் அளவுக்கு அதன் மீது நம்பிக்கை தொடர்கிறது.
தற்போதை நிலவரப்படி அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் 8.5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உலக நாடுகள் முதலீடு செய்துள்ளன. ஜப்பான் 1.07 லட்சம் கோடி டாலர் அளவுக்கும், சீனா 76,000 கோடி டாலர் அளவுக்கும் முதலீடு செய்துள்ளன. இந்தியா 22,570 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளது.
உலக நாடுகளின் பொருட்கள் மீது அதீத இறக்குமதி வரிகளை சமீபத்தில் டிரம்ப் விதித்தால் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற அச்சத்தில், பங்கு சந்தைகள் மற்றும் அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களின் மதிப்பு பெரும் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க அரசின் 10 ஆண்டு கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக அதிகரித்து டிரம்பிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. சீனாவை தவிர்த்து இதர நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பை அவர் தற்காலிமாக வாபஸ் பெற இது தான் மூலக் காரணம்.
அமெரிக்க டாலர் மீதான அளப்பரிய நம்பிக்கை, சார்புநிலை இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடரும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஆனால் பருவநிலை மாற்றம் போல அமெரிக்க அரசின் கடன் சுமை என்ற டைம் பாம் உலக பொருளாதாரத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. என்றாவது அமெரிக்கா திவாலானால், அது உலக பொருளாதார அழிவுக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பெட்டிச் செய்தி: அதிபர் ட்ரம்புக்கு எவ்வளவு கடன் உள்ளது?
அமெரிக்காவுக்கு இரண்டாவது முறையாக அதிபராகி தன் வரிவிதிப்புகளால் உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டுக்கொண்டு இருக்கிறார் டிரம்ப். அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பதை நாம் அறிவோம். ரியல் எஸ்டேட் அதிபரான அவர் பல தொழில் முறை டீல்களில் வல்லவர் என்பது அரசியலிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்காவுக்கே கடன் இருக்கும்போது அதன் அதிபருக்கும் கடன் இருக்கும்தானே?
கடந்தமுறை தேர்தலில் தோற்று அதிபர் மாளிகையை விட்டு வெளியேறியபோது அவரது கடன் நிலவரம் மிக மோசம். அடுத்த நான்கு ஆண்டுகளில் அவரது நிறுவனங்கள் 900 மில்லியன் டாலர் கடனைத் திருப்பி செலுத்தவேண்டி இருந்தது. அவருக்குக் கடன் கொடுத்த வங்கிகள் இனி தரமாட்டோம் என சொல்லி இருந்தன. அவரது நிறுவனங்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டு நிலுவையில் இருந்தது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது நிறுவனங்கள் அனைத்தும் காலியாகி விடும் எனக் கருதப்பட்டது.
ஆனால் அவரோ அந்த 900 மில்லியன் டாலர் கடன்களை திறமையாக சமாளித்தார். நான்கு சொத்துகளின் மீது வாங்கிய கடன்களை சிலவற்றை விற்று அடைத்தார். மேலும் நான்கு சொத்துகளின் மீது வாங்கிய கடன்களை இன்னொரு கடன் வாங்கி அடைத்து திருப்பிக் கட்ட கால அவகாசம் பெற்றார். ஆக மொத்தம் அவரது நிறுவனங்களின் மொத்தக் கடன் மார்ச் 2022-இல் 1.1 பில்லியன் டாலர்களாக கருதப்பட்டது.
இதற்கிடையில்தான் அவர் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார். அவருக்கு மோசடி வழக்கில் தண்டனையாக நீதிமன்றம் 454 மில்லியன் டாலர்களை கடந்த ஆண்டு விதித்தபோது அவரது பேலன்ஸ் ஷீட்டில் 413 மில்லியன் டாலர்கள்தான் பணம் இருந்தது. அவர் காலி எனக் கருதப்பட்டது அதனால்தான். ஆனால் அதைக் கட்டமுடியாது என அப்பீல் செய்து அதுவரை சொத்துகளை பறிமுதல் செய்யாமலிருக்க 175 மில்லியன் டாலர்களாக பத்திரப் பணம் கட்ட உத்தரவு வாங்கி சமாளித்தார். அடுத்த நாளே தன்னுடைய சமூக ஊடக நிறுவனமான ட்ரூத் சோஷியலின் பங்குகளை விற்றார். ட்ரம்ப் ஆதரவாளர்கள் போட்டி போட்டு இந்த சுமாரான நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் அவருக்கு 2.6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சொத்துமதிப்பு எகிறியது. ஆனால் அவரது பங்குகளை விற்காததால் பணமாக கிடைக்கவில்லை. அவர் தன் பல பொருட்களை விற்றார். கிரிப்டோ கரன்சி விற்பனையில் திடீரென இறங்கி 275 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தார். அதிபர் நாற்காலியில் இரண்டாம் முறை ஜெயித்து அமர்வதற்கு சற்று முன்னால் டிரம்ப் டாலர் என்ற கிரிப்டோ காயின் விற்பனை செய்து, 110 மில்லியன் டாலர்கள் வரிகள் போகக் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அவரது சொத்துமதிப்பு 5.1 பில்லியன் டாலர்களை எட்டியதாக போர்ப்ஸ் பத்திரிகை மார்ச் 2025 –இல் கணித்தது. கடந்த ஆண்டு அவரது சொத்துமதிப்பு 2.3 பில்லியன் டாலர்களாக இருந்து இப்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது.
மோசடி அப்பீல் வழக்கில் இவருக்கு எதிராக தீர்ப்பு வந்தால் 500 மில்லியன் டாலர்களுக்கு மேல் வட்டியுடன் கட்டவேண்டி வரும். தற்சமயம் கையில் சுமார் 800 மில்லியன் டாலர்களுடன் இருக்கும் டிரம்ப், இந்த தொகையைப் பற்றி எல்லாம் கவலைப் பட மாட்டார். அவர்தான் இப்போது பெரிய கிரிப்டோ கிங் ஆயிற்றே…!
‘நாங்கள்லாம் ஆயிரம் ரெண்டாயிரம் கடன்வாங்கி திருப்பிக் கட்டமுடியாம லோல்படறோம். ‘மில்ல்ல்ல்லியன்' அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்து சொல்லிராதீங்க! ஹார்ட் அட்டாக்கே வந்துரும்!’ என்கிறார் நண்பர் ஒருவர்.
- ஜான் ஸ்னோ