இந்தியாவின் முதன்முதல் தனியார் மருத்துவமனையில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை, முதல் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை, முதல் பைபாஸ் அறுவைச் சிகிச்சை உட்பட்ட சுமார் 47000 இதய அறுவை சிகிச்சைகள் செய்த கைகளுக்குச் சொந்தக்காரர் உலகப் புகழ்பெற்ற இதய மருத்துவர் கே எம் செரியன். உலக மருத்துவத்துறையில் இந்தியாவின் பெருமை அவர். தற்போது 82 வயதாகும் டாக்டர் செரியன் இதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதை நிறுத்தி விட்டார். அந்திமழைக்காக எழுத்தாளர், நடிகர் ஷாஜி சென் அவரைச் சந்தித்தபோது தனது மருத்துவ வாழ்க்கையின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதில் இதய நோய் வராமல் காத்துக்கொள்வது எப்படி என்பது பற்றி அவர் கூறிய பகுதியிலிருந்து சில செய்திகள் இந்தக் கட்டுரையில்.
ஒரு நாள் விடிகாலை மூன்றரை மணி இருக்கும். எனக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டது. விழித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தேன். வீட்டில் எந்த மருந்தும் இல்லை. ஒரு டிஸ்பிரின் மாத்திரையை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்துக் குடித்தேன். ஒரு பத்து நிமிடம் காத்திருந்து பார்த்தேன். வலி குறையவில்லை. என் மருத்துவமனையான ப்ரண்டியர் லைப் லைனுக்குப் போன் பண்ணி 4 மணி அளவில் வருவதாகவும் இதய நோய் தொடர்பான பரிசோதனைகளுக்கு தயார் செய்யுமாறு கூறினேன். சொன்னபடி உடனே காரில் போய்ச் சேர்ந்தேன். ரத்தப் பரிசோதனை, ஈசிஜி எல்லா சோதனைகளும் ஹார்ட் அட்டாக் இல்லை என்றன. மருத்துவர்களும் அப்படியே சொன்னார்கள். ‘நான் தான் இங்கே நோயாளி. எனக்கு எதுவும் சரியாக இல்லை. ஆஞ்சியோ பரிசோதனை செய்யுங்கள்’ என உறுதியாகச் சொன்னேன். ஆஞ்சியோவில் ஒரு இதய ரத்தக்குழாயில் 90 சதவீதம் அடைப்பு எனத் தெரிந்தது. அன்றைக்கே ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. உடனே வலி காணாமல் போனது. மாலையே வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.
இதுதான் எனக்கு ஏற்பட்ட அனுபவம். இந்த காலகட்டத்தில் இளம் வயதில் பலருக்கு இதய நோய் ஏற்படுவதைக் காண்கிறோம். முக்கிய காரணமாக டிஸ்ப்ளின் இல்லாத வாழ்க்கை முறையைக் கூறலாம். புகை பிடித்தல் பழக்கம், மது அருந்துதல், உடல் எடை அதிகரிப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம், தூக்கம் குறைவு போன்றவை அடிப்படைக் காரணிகள். குடும்பத்தில் பரம்பரை வியாதியாகவும் இதயநோய் வரலாம். அதில் நாம் எதும் செய்துவிட முடியாது.
தினந்தோறும் எதாவது ஒரு உடற்பயிற்சி செய்துவருவது நல்லதாகும். நானும் கடந்த ஆண்டு வரை அரை மணி நேரம் தினமும் ட்ரெட்மில் நடைபயிற்சியை கட்டாயமாக மேற்கொண்டு வந்தேன்.
புகைப்பழக்கம் போன்றவை கட்டாயம் தவிர்க்கவேண்டியவை. சுமார் 4000 விஷப்பொருட்கள் சிகரெட்டில் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை கொண்டுவரப்படுவது இதனால்தான்.
நாற்பத்து ஐந்து வயதைத் தாண்டியவர்கள், ரிஸ்க் இருப்பதாக கருதுபவர்கள், அவ்வப்போது பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். ட்ரெட்மில் பரிசோதனை முக்கியமான அளவீட்டை அளிக்கும்.
ஹார்ட் அட்டாக் என்றால் வலி நெஞ்சின் முன் பகுதியில் ஏற்பட்டு, தாடைகளுக்குப் பரவி இடது தோள்பட்டைப்பக்கமாக செல்லலாம். சில சமயம் முதுகுப்பக்கமாகவும் வலி ஏற்படலாம். நீண்டகால சர்க்கரை நோய் இருக்கிறவர்களுக்கு இந்த வலியை உணரமுடியாது என்பது ஆபத்து. சர்க்கரை வியாதி நரம்புகளில் சிதைவு ஏற்படுத்தலாம் என்பதால் இந்த வலி அவர்களுக்குத் தெரிவது இல்லை. எனவே இவர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதனைகளை மேற்கொள்ளுவது நல்லது.
இதயநோய் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறவர்கள் டிஸ்பிரின் மாத்திரையை வைத்திருப்பது நல்லது. அறிகுறி ஏற்பட்டால் ஒரு மாத்திரையைக் கரைத்து அருந்தலாம். நைட்ரோ கிளிசரைடு மாத்திரையும் நல்லது. பதட்டப்படாமல் விரைவில் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். டிஸ்பிரின் மாத்திரை ரத்த தட்டணுக்கள் படிவதைத் தடுக்கும். இந்த மாத்திரையால் எந்த தொந்தரவும் ஏற்படாது. நைட்ரோ கிளிசரைடு ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யக்கூடியது. இவைகள் உடனடி சிகிச்சைகளே. மருத்துவர் ஆலோசனை தாமதிக்காமல் பெற வேண்டும்.
இதயநோய் வரும் ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் கடினமான உடற்பயிற்சிகள், வேலைகள் செய்வதைத் தவிர்க்கவேண்டும். இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வருவது அதிகரித்திருப்பதாக மருத்துவமனையில் பார்த்து வருகிறேன். இது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து, நோய் கண்டுபிடிக்கப்படுவதும் பதிவு செய்யப்படுவதும் அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
கொரோனா தடுப்பூசிகளைத் தொடர்ந்து இதயநோய் வருவதைப் பற்றி பலர் கேட்கிறார்கள். இது பற்றி ஆராய்ச்சி முடிவுகள் இன்னும் முழுமையாக வரவில்லை. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தடுப்பூசி பற்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் இன்னும் முடிவுகளையும் தரவுகளையும் வெளியே தராமல் இருக்கிறார்கள். தடுப்பூசியின் பக்கவிளைவால் ஏற்படும் இதயத் தாக்குதல்களுக்கான (myocarditis) சிகிச்சை முறைகளை உருவாக்க இன்னும் கூடுதலாக தரவுகள் தேவைப்படும் என நினைக்கிறேன்.