ராமதாஸ் 
சிறப்புப்பக்கங்கள்

இரு துருவங்கள்

கால்நூற்றாண்டு தமிழகம் - அரசியல்

ப்ரியன்

2005 ஆம் வருடம் மார்ச் மாதம். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற தளத்தில் பழ. நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், தொல். திருமாவளவன் ஆகியோர் களமாடிக் கொண்டிருந்த காலம் அது. தமிழை ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தது தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்.

இது தொடர்பாக ஒரு மாநாடு திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையிலிருந்து மருத்துவர் ராமதாஸ் அவர்களும் புதுவையிலிருந்து திருமாவளவன் அவர்களும் ஊர்திப் பயணமாக பிரச்சாரம் மேற்கொண்டு திருச்சியை நோக்கி சென்றார்கள். புதுவையிலிருந்து கிளம்பிய திருமாவளவன் கும்பகோணம் வழியாக திருச்சிக்கு சென்றார். கும்பகோணம் அருகில் நாலூர் என்ற கிராமத்தைக் கடக்கும் போது அந்த கிராமத்திலிருந்து பா.ம.க. செயலாளர் திருமாவிடம், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க கொடிகளை ஏற்றி வைக்கச் சொன்னார். திருமா கொஞ்சம் கூட தயங்கவில்லை. பெருத்த கைதட்டலுக்கிடையே அந்தக் கொடிகளை ஏற்றி வைத்தார். இந்த செய்தி ராமதாஸ் அவர்களுக்கு சொல்லப்பட்டதும் அவர் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். “மத்திய, வட தமிழகத்தில் இரு பெரிய சமூகங்களான வன்னியர் மற்றும் பட்டியல் இன மக்களிடையே அவ்வப்போது பல்வேறு காரணங்களால் நடந்து வந்த மோதல் இனி நிரந்தரமாக முடிவிற்கு வரும்” என்று இரண்டு தலைவர்களும் நம்பினார்கள். அதற்கு முன்னரே தொண்ணூறுகளின் இறுதியில் கும்பகோணம் அருகில் குடிதாங்கி என்ற கிராமத்தில் இறந்த பட்டியல் இன தோழர் ஒருவரின் உடலை இடைநிலை சாதியினர் அவர்கள் வசிக்கும் தெருவழியாக எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட மருத்துவர் ராமதாஸ் தானே அந்த கிராமத்திற்குச் சென்று அந்த தோழரின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தார். இந்த நிகழ்வு திருமாவை நெகிழ வைத்து விட்டது. ராமதாசுக்கு “தமிழ் குடிதாங்கி” என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தார் திருமா. ராமதாசுக்கும் திருமாவுக்கும் இடையில் ஏற்பட்ட தோழமை உணர்வு கிட்டதட்ட பத்து ஆண்டுகள் மத்திய, வட தமிழகத்தில் ஒரு சமூக அமைதி சூழலைக் கொண்டு வந்தது. ஆனால் இந்த நெருக்கம், 2006 மற்றும் 2009 தேர்தல்களில் அரசியல் ரீதியாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் இருவரும் திமுக அணியில் இணைந்தார்கள். அந்தத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது ஒரு பக்கம் இருக்க, 31 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. 3 தொகுதிகளில்தான் வென்றது. அதற்கு முன்னர் 2006இல் தி.மு.க. கூட்டணியில் 18 இடங்களும், 2001 இல் அ.தி.மு.க. கூட்டணியில் 20 இடங்களில் வென்றிருந்தது பா.ம.க. 2011 தேர்தல் முடிவு பா.ம.க.வுக்கு மட்டுமல்ல; விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அதிர்ச்சிதான்.

2001இல் தி.மு.க. கூட்டணியில் ஓர் இடமும், 2006 அ.தி.மு.க. கூட்டணியில் 2 இடங்களும் வென்றிருந்த வி.சி.க. 2011இல் பத்து இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. தலைவர்கள் நெருக்கமாக இருந்தாலும் அடித்தளத்தில் வாக்கு வங்கியில் ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகம் எதிரியாகவே பார்க்கிறது என்ற பேச்சு கிளம்பியது.

உறவில் விரிசல் விடத் தொடங்கியது. ஆகஸ்ட் 2011இல் எனக்கு அளித்த ஒரு பேட்டியில் “இரு சமுதாய மக்களும் நெருங்கி வந்திருக்கிறார்கள். பட்டியலின ஓட்டு 36 சதம் பா.ம.க.வுக்கு விழுந்திருக்கிறது. அது போல வன்னியர் ஓட்டுகள் 35 சதம் வி.சி.க.வுக்கு சென்றிருக்கிறது.” என்றார் அன்புமணி.

அதே மாதம் சென்னையில் ராமதாசும் திருமாவும் இணைந்து மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார்கள். ஆனாலும் தள்ளாட்டத்தில் போய்க் கொண்டிருந்த இரு தலைவர்களின் தோழமையும் ஒரு பெரும் சோதனையைக் கண்டது 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளவரசனும் வன்னியரான திவ்யாவும் செய்து கொண்ட சாதி மறுப்புத் திருமணம் தருமபுரி மாவட்டத்தையே இரண்டாக பிளந்தது என்று கூட சொல்லலாம்.

திவ்யாவின் தந்தை தற்கொலை, அதைத் தொடர்ந்து நடந்த பெரும் கலவரம், இளவரசனின் மர்ம மரணம் ஆகியவை இரு தலைவர்களுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்து பத்து வருட தோழமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. “நாடகக் காதல்” செய்கிறார்கள் பட்டியல் இன இளைஞர்கள்’ என்று கடுகடுத்தார் மருத்துவர். “வி.சி.க.வுடன் கூட்டணி வைத்தால் நம் சமூக மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை.” என்று பலமாகவே பேசத்தொடங்கினார்கள் பா.ம.க. நிர்வாகிகள். கலவர பூமியான தருமபுரியில் வன்னிய சக்திகள் ஒருங்கிணைய, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அங்கே வெற்றி பெற்றார் அன்புமணி. “இனி ஒரு காலத்திலும் பா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெற மாட்டோம்’’ என்று சிறுத்தைகள் முடிவெடுத்தனர்.

இப்போது துருவங்களாகப் பிரிந்து நிற்கிறார்கள் மருத்துவரும் திருமாவும். அடிப்படையில் பார்த்தால் இந்த இரு கட்சிகளுக்கும் சில ஒற்றுமைகளும் உண்டு. அம்பேத்கர், காரல் மார்க்ஸ், பெரியார் ஆகியோரை வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டதுதான் பா.ம.க. அவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்தபோது தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகிய பட்டியல் இனத்தவரை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். “சமூகநீதி கிடைத்தால்தான் சமத்துவ லட்சியம் நிறைவேறும்” என்று களமாடியவர் அவர்.

1989இல் பா.ம.க. தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பித்த வி.சி.க.வுக்கு அம்பேத்கர், பெரியார்தான் ஐகான்கள். “ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை, கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தோடு வலம் வருகிறது வி.சி.க. இரு கட்சிகளும் மாறி மாறி தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும், அந்த கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க தோள் கொடுத்து துணை சக்திகளாக இருக்கின்றன பா.ம.க.வும் வி.சி.க.வும். தனியாகப் போட்டியிட்டும் கூட்டணியாக போட்டியிட்டும் இன்னமும் ஆறு சதவீத ஓட்டுகளை பா.ம.க. தாண்ட முடியவில்லை.

1999இல் இருந்து தேர்தல் அரசியலில் இருக்கும் வி.சி.க. கடந்த மூன்று தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் கணிசமான இடங்களை வென்று வருகிறது. விசிக தலித் ஓட்டு வங்கியைத் தாண்டி பொதுத் தொகுதிகளில் சிறகை விரிக்கிறது. பல்வேறு பொதுப்பிரச்னைகளில் கவனம் செலுத்தி பா.ம.க. அரசியல் செய்தாலும் சாதி வட்டத்தை விட்டு வெளிவர பெரு முயற்சி செய்கிறது பா.ம.க.

இரு முக்கிய கட்சிகளும் தோள் கொடுக்கும் சக்திகளாக இருக்கும் பா.ம.க. – வி.சி.க. மீண்டும் இணைந்து ஒருமித்துச் செயல்பட வாய்ப்பிருக்கிறதா? அப்படி நடந்தால் அது அரசியல் தோழமையாக மட்டும் இல்லாமல், வட தமிழகத்தில் சமூக ஒற்றுமைக்கான பாதையை உருவாக்கும். நடக்குமா? “நடக்காது” என்று அரசியலில் எதையும் ஒதுக்க முடியாது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram