ஓவியம்: டிராஸ்கி மருது
சிறப்புப்பக்கங்கள்

வைகை என்பது ஆறு மட்டுமல்ல!

டிராட்ஸ்கி மருது

வைகையின் வடகரையில் அமைந்திருக்கும் மதுரையின் கோரிப்பாளையம்தான் நான் பிறந்து வளர்ந்த பகுதி. பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பம் என்னுடையது. நண்பர்களுடன் வீட்டுக்குத் தெரியாமல் சென்று நதியில் குளித்துவிட்டு கண்கள் சிவக்க வீட்டுக்கு வந்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டு திட்டு வாங்கும் காலம் அது. (ஏன் திட்ட மாட்டாங்க.. எனக்கு சரியாக நீச்சல் தெரியாதே). கோடைக்காலங்களில் அதன் மணல்பரப்பில் விளையாடி மகிழ்ந்த நாட்கள் அவை.

வைகை நதியின் மணல் பரப்புதான் என் தந்தையாரின் டிராட்ஸ்கிய நண்பர்கள் தம் தலைமறைவு வாழ்க்கையின்போது ரகசிய சந்திப்புக்கு களம் அமைத்துக் கொடுத்தது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து சந்திப்பார்கள் என தந்தை சொல்லி இருக்கிறார்.

வைகையின் மணல் பரப்பு பற்றி மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதன் இப்படிச் சொல்கிறார்:

இயங்கு புனல் கொழித்த வெண் தலைக் குவவு மணல்

கான் பொழில் தழீய அடைகரை தோறும்

தாது சூழ் கோங்கின் பூமலர் தாஅய்

கோதையின் ஒழுகும் விரி நீர் நல்வரல்

அவிர் அறல் வையைத் துறை துறை தோறும்

பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி

அழுந்து பட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்

மலையில் பிறந்து ஓடிவரும் வைகை வெண்மணலை ஒதுக்குவதாகவும் அதன் கரைகளில் இருந்த மரங்களின் மலர்கள் உதிர்ந்து கிடப்பதால் மலர்மாலை அணிந்திருப்பதுபோல் வைகை தோற்றம் அளிக்கிறது. இந்த பூந்தோட்டங்களைச் சுற்றி பெரும்பாணர்கள் வசிக்கிறார்கள் என்றும் மருதனார் குறிப்பிடுகிறார்.

வைகையின் வடகரையில் பெரும்பாணர்கள் வாழ்ந்த நிலப்பரப்பில் நானும் வாழ்ந்துள்ளேன் என்பதை நினைத்தாலே சிலிர்க்கிறது.

ஏழாம் வகுப்பு படித்தபோது கொஞ்சம் காசு சேர்த்து வைத்திருந்தேன். அதை எடுத்துக்கொண்டு தம்பி திலகரை அழைத்துக்கொண்டு ஒரு நாள் சினிமாவுக்குப் போய்விட்டேன். இம்பிரீயல் தியேட்டரில் வாழ்விலே ஒரு நாள் என்றொரு சிவாஜி கணேசன் படம். வீட்டில் யாருக்கும்தெரியாது. நீ கெட்டுப்போனதும் இல்லாமல் தம்பியையும் கெடுக்கிறாயா என்று என் அம்மா திட்டினார்கள். அந்த வயதில் எனக்கு ரோஷம் வந்துவிட்டது. வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டேன். மதுரையின் தெருக்களில் பகல் முழுக்க சுற்றிவிட்டு இரவு படுப்பதற்காக வைகையின் கரைக்கு வந்தேன்.

இப்போது மீனாட்சி கல்லூரி இருக்கும் இடத்துக்கு எதிரே அன்று ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. வைகையின் மேல் பாலத்துக்கும் கீழ்ப்பாலத்துக்கும் இடையில் அது இருக்கும். அதன் அடியில் பிச்சைக்காரர்களும் தொழுநோயாளிகளும் படுத்திருப்பார்கள். அவர்களுடன் படுத்து உறங்கிவிட்டேன். காலையில் எழுந்து வைகையில் முகம் கழுவி விட்டு, மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று விட்டேன். தனியாக அங்கே என்னைப் பார்த்த எங்கள் பகுதிக்காரர் ஒருவர். ‘டே.. என்னடா இங்க திரியறே.. ஊரே உன்னை ராத்திரி முழுக்க தேடிகிட்டிருக்கு’ என்று எச்சரித்தார். காலையில் பசிக்க ஆரம்பித்ததும் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். இரவு முழுக்க என்னை வைகையின் காற்றுதான் என்னைத் தாலாட்டித் தூங்க வைத்தது.

இரண்டாயிரமாவது ஆண்டு தொடங்கிய நாளன்று இராமநாராயணன் திரைப்படம் ஒன்றுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மாடியில் படப்பிடிப்புக்காகக் குழுமி இருந்தோம். மதுரையில் வைகையின் தென் கரையில் பிறந்து வளர்ந்தவரான நடிகர் வடிவேலு, ஒளிப்பதிவாளர் என்.கே. விசுவநாதன் உள்ளிட்ட நால்வரும் இருந்தோம். நாங்கள் அனைவருமே வைகைக்கரையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதால் அன்றிரவு முழுக்க அதைப் பற்றியேபேசிக்கொண்டிருந்தோம். வடிவேலு மிக மிக உணர்ச்சிவயப்பட்டிருந்தார். இராமநாராயணின் 22 படங்களில் நான் பணிபுரிந்துள்ளேன். எந்தப் படம் எடுத்தாலும் ஒருவாரம் அழகர் கோவிலில் படப்பிடிப்பு வைத்துவிடுவார்.

மதங்களின் வாயிலாக மக்களைப் பிரிக்க இப்போது நடக்கும் முயற்சிகளை எண்ணிப்பார்க்கும்போது மூன்று மதங்களையும் இணைக்கும் பகுதியாக நான் வளர்ந்த வைகையின் கரை இன்று வரை விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டியே ஆகவேண்டும். பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர் என மாறி வந்த ஆட்சியில் அனைத்து மதக் கலாச்சாரத்துக்கும் இடமிருக்கும் ஊராக மதுரை மாறி இருப்பதை வைகை நதி பார்த்துக் கொண்டே இருக்கிறது.

பத்துநாள் நடக்கும் சித்திரைத் திருவிழா வைகையை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வடகரையில் வைஷ்ணவ சம்பிரதாயங்களை யொட்டிய அழகர் வருகை நடக்க, தென்கரையில் மீனாட்சி திருக்கல்யாணம் சைவ சம்பிரதாயங்களின் அடிப்படையில் நிகழும். முன்னர் அழகர்கோவில் அருகே இருக்கும் தேனூர் என்ற கிராமத்தில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா சித்திரை மாதம் நடைபெற்று வந்தது. மதுரையில் மாசி மாதத்தில் சைவர்களால் மீனாட்சி கல்யாணம் நடைபெற்று வந்தது. தேர்த் திருவிழா ஆடி மாதத்தில் மாசி வீதிகளில் நடந்தது. சைவத்துக்கும் வைணவத்துக்கும் சமரசம் செய்விக்கும் விதமாக இந்த இரு விழாக்களையும் சித்திரையிலே நடைபெறச் செய்தது திருமலை நாயக்கர் காலத்தில்தான்.

இந்த திருவிழாவில் கலந்துகொள்ள அழகர் வரும்போது அவருக்கு அணிவிக்கப்படும் ஆடைகள், அணிந்திருக்கும் பிச்சுவா, வளரி எல்லாம் சேர்ந்துதான் என் தமிழ் மன்னர் ஓவியங்களில் வெளிப்படுகின்றன.

சித்திரைத் திருவிழாவின் போது லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர். மாட்டு வண்டிகளில் உப்புக்கண்டங்கள் காய்வதற்காக தொங்கும். கிடைக்கின்ற மண்டபங்கள், காலி இடங்களில் எல்லாம் மக்கள் வந்து தங்கி இருப்பார்கள். அடுப்புகள் ஏரியும். பாரம்பரிய நிகழ்த்துக் கலைகள், இசையொலிகள் நகரை நிரப்பும். இரவு வெளிச்சம் தரும் திரியாட்டக்காரர்கள், வெயில் தெரியாமல் இருக்க தோல்பையில் அடைக்கப்பட்ட நீரை மக்கள் மேல் பீய்ச்சி அடிப்பவர்கள், மக்கள் திரளுக்கு பெரிய விசிறிகளை இயக்குபவர்கள் என்று இளம் வயதில் நான் கண்ட அத்திருவிழாவின் வண்ணமயமான பிம்பங்கள் என்னை நிறைத்திருக்கின்றன. அவற்றையே நான் ஏராளமாக வரைந்துள்ளேன்.

எனக்குத் தெரிந்து வைகைக்குக் குறுக்கே இரண்டு பாலங்கள் இருந்தன. பின்னர் மேலும் இரண்டு ஊருக்கு வெளியே கட்டப்பட்டன. இப்போது நினைத்த இடமெல்லாம் பாலங்கள் வந்துவிட்டதாக எனக்குத்தோன்றுகிறது.

மதுரை குறித்்த என் ஓவியங்களில் ஒன்று ஆடிப்பெருக்கில் ஓடி வரும் முதல் வெள்ளத்தை ஒரு கலயத்தில் எடுத்து மீண்டும் ஆற்றில் ஊற்றும் காட்சி. பாண்டிய மன்னரும் ராணியும் உடனிருக்கும் பிரதானிகளும் மக்களும் நிற்கக்கூடிய காட்சியாக அதை வரைந்தேன். ஆற்றுக்குள்ளிருந்து படித்துறையைப் பார்க்கும் கோணத்தில் அது அமைந்திருக்கும். வைகைக்கு என்னளவில் நான் செய்யக்கூடிய மரியாதையாக அதைப் படைத்திருந்தேன். வைகை என்பது நீர் மட்டுமல்ல. அது எம் மண்ணின் தொல்கலாச்சாரங்கள் முகிழ்ந்து செழிக்கும் ஒரு சொல். அதை உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram