சிறப்புப்பக்கங்கள்

வரலாற்றில் ஓர் இடம்

மதிமலர்

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பினத்தவர் என்ற சாதனைக்குரியவர் பாரக் ஒபாமா. 18 லட்சம் பேர் கூடியிருந்த மாபெரும் மாநாட்டில் அவர் 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 44ஆவது அதிபராகப் பதவியேற்றார்.

தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்த போது சில வார்த்தைகளில் குளறுபடி ஏற்பட்டதால், மறுநாள் காலையில் வெள்ளைமாளிகையில் மீண்டும் ஒருமுறை உறுதிமொழி எடுத்துக்கொண்டார். துணை அதிபராக ஜோ பைடன், வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் என அவரது குழு அமைந்தது.

வெள்ளைமாளிகையில் தங்களுக்கு ஏற்றவிதத்தில் கொள்கை வகுக்கப்படுபவதற்காக லாபி செய்பவர்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவர் பல கட்டுப்பாடுகளை உடனடியாகக் கொண்டுவந்தார். முதல் வாரத்திலேயே கௌண்டனாமா பே என்ற தீவில் இருந்த சிறைச்சாலையில் பயங்கரவாதிகள் எனக் கருதப்பட்டவர்களை அடைத்துவைத்து விசாரிக்கும் ஆணையத்துக்கு தடை விதித்தார். 2001-இல் 9/11 தாக்குதலுக்குப் பின்னால் அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் உருவாக்கிய இந்த அமைப்பு பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுவந்தது. எனவே ஒபாமாவின் இந்நடவடிக்கை வரவேற்கப்பட்டது. ஒராண்டில் இச்சிறைச்சாலையை மூடவும் அவர் உத்தரவிட்டார். பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைதானவர்களை சித்திரவதை செய்வது என்பது அக்காலகட்டத்தில் வழக்கமாக இருந்தது. முகத்தில் தொடர்ந்து நீரை ஊற்றி மூழ்கும் நிலையிலேயே வைத்திருக்கும் வாட்டர்போர்டிங் போன்ற கொடுமையான நடவடிக்கைகளை நிறுத்தவும் அவர் பேனா கையெழுத்திட்டது.

ஒபாமா கொண்டுவந்த முதல் சட்டம் லில்லி லெட்பெட்டர் சம ஊதிய சட்டம் என்பதாகும்.

அலபாமாவில் குட் இயர் டயர் நிறுவனத்தில் லெட்பெட்டர் என்ற பெண்மணி பணிபுரிந்தார். தனக்கு பெண் என்பதால் குறைவான சம்பளம் கொடுத்ததை எதிர்த்து 1988-இல் அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக வழக்கு தொடர்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் இது மறுக்கப்பட்டது. சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட 180 நாட்களுக்குள் இதை எதிர்த்து புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும் என நீதிமன்றம் கூறியது. இதை அடுத்து இது தொடர்பாக அவர் போராடி வந்தார். ஒபாமாவின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த பிரச்னை சரிசெய்யப்படும் என்பதும் ஒன்றாகும்.

இதைஅடுத்து அந்த 180 நாள்களுக்குள் புகார் அளிக்கவேண்டும் என்பது ஆரம்பத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு சம்பளம் பெற்ற நாளில் இருந்தும் 180 நாட்களுக்குள் என மாற்றப்பட்டது. இந்த மசோதா சட்டமாக்கப்பட ஒபாமா கையெழுத்துப் போட்டபோது லெட்பெட்டரும் உடன் இருந்தார்.

காஸாவுக்கு நிதி உதவி, ஆப்கானிஸ்தானுக்கு அதிக படைகளை அனுப்புதல், ஈராக்கில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு அறிவித்தல் போன்றவற்றையும் அவர் மேற்கொண்டார். ஈரான் நாட்டை நோக்கிய ராஜாங்க நட்பு நடவடிக்கைகளையும் அவர் முயற்சித்தார்.

2008-இல் நிலவிய உலகப் பொருளாதார நெருக்கடிசூழலில் அவர் அதிபர் ஆனதால் அதைச் சரிசெய்யும் கடமையையும் அவர் எதிர்கொண்டார். அமெரிக்க மீட்பு மற்றும் மறுமுதலீட்டுச் சட்டம் இதற்காக உருவாக்கப்பட்டது. வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் ஆகியவை இதன் நோக்கமாக இருந்தது. 787 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருளாதார ஆதரவுத் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க நிதி நிறுவனங்கள் தள்ளாட்டத்தில் இருந்தன. அவற்றை மீட்க அமெரிக்கர்களின் வரிப்பணங்கள் செலவழிக்கப்பட்டதால், அந்த நிதி நிறுவன உயர் அதிகாரிகளின் சம்பளத்துக்கு அவர் 5 லட்சம் டாலர்களைத் தாண்டக்கூடாது என எல்லை வகுத்தார்.

கருவில் உள்ள ஸ்டெம் செல்களின் மீதான ஆய்வுக்கு அரசு நிதி வழங்குவதற்கு ஏழரை ஆண்டுகளாக இருந்த தடையையும் அவர் நீக்கினார்.

ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் மிகமுக்கிய சாதனையாகக் கருதப்படுவது அமெரிக்க மக்களுக்கு அவர் கொண்டுவந்த மருத்துவக் காப்பீடு முறையாகும். ‘மருத்துவச் செலவுகளால் இனி யாரும் நடுத்தெருவுக்கு வந்துவிடக்கூடாது’ என்பதையே தான் பதவியேற்ற முதல் மாதத்தில் காங்கிரஸ் கூட்டு அவையில் உரையாற்றியபோது அவர் வலியுறுத்தினார். இதன் நீட்சியாகவே 2010-இல் அவர் கொண்டுவந்து 2012-இல் அமலுக்கு வந்த இந்த திட்டம் அமைந்தது. அமெரிக்காவில் காப்பீடு இல்லாத குடிமக்கள் எண்ணிக்கை இதன் மூலம் பெருமளவு குறைந்தது.

தொடர்ச்சியாக இரண்டுமுறை அதிபர் பொறுப்புக்குத் தேர்வான ஒபாமா தனிப்பட்ட முறையில் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தாலும் அவரது கட்சியான ஜனநாயகக் கட்சி, மெல்ல ஆதரவை இழந்து, அடுத்த தேர்தலில் குடியரசுத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப், அதிபராக வருவதற்கு வழி வகுத்தது.

2011-இல் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தியாளர் விருந்தில் பார்வையாளராக அமர்ந்திருந்த ட்ரம்ப்பைப் பார்த்த ஒபாமா, மிகக் கடுமையாக தன் உரையில் கிண்டல் செய்தார். இதனால் தான் புண்பட வில்லை என்று ட்ரம்ப் மறுத்தாலும் அவர் அரசியலில் குதித்து அதிபர் பதவிக்குப் போட்டியிடவேண்டும் என முடிவெடுக்க வைத்ததே அங்கு ஒபாமா அடித்த அடிதான் என்ற பொதுவான கருத்து அமெரிக்க விமர்சகர்களிடம் உண்டு. பெரும்பாலான ஒபாமாவின் ஆட்சிப் பாரம்பரியம் அடுத்துவந்த ட்ரம்பால் காலி செய்யப்பட்டது என்பதை மறுப்போர் உண்டோ?