சிறப்புப்பக்கங்கள்

வெள்ளி திரை: பின்னும் முன்னும்

Staff Writer

நான் வைத்திருந்த இலக்குகளுடன் ஒப்பிடுகையில் நான் செய்த அனைத்து படங்களையும் தோல்விகள் என்றுதான் கருதுவேன். நாம் உருவாக்கிய ஒரு கதையை அப்படியே கடைசிவரைக்கும் கொண்டு சென்று படைப்பாக்குவது மிகவும் கடினம். இதற்கு நிறைய கவனமும் அதிர்ஷ்டமும் தேவை. அது என் திறமைக்கு எட்டாததாகவே எப்போதும் உள்ளது. படத்தை முடித்ததும்.. ‘நான் நினைத்ததில் 60 சதவீதம் மட்டுமே வந்திருக்கிறது.. கேவலமாக இருக்கிறதே..’ என்றுதான் சொல்லிக் கொள்ள முடிந்திருக்கிறது.

- ஹாலிவுட் இயக்குநர் வூடி ஆலன், நேர்காணல் ஒன்றில்.

.எல்லா கலைகளையும் விட மிக எளிதில் வசீகரிக்கக் கூடியது திரைப்படக் கலை. ஒருவிதத்தில் மானுடத்தின் ஆகச் சிறந்த கலைகள் அனைத்தையும் கலந்து உருவாக்கப்படும் படைப்பு திரைப்படம்.

வெள்ளித்திரையில் தோன்றும் பிம்பங்கள் மனதில் உருவாக்கும் அழுத்தமும் சமூகத்தில் அது ஏற்படுத்தும் விளைவுகளும் மிகப் பெரியவை. அதனால்தான் திரைப்படத் துறைக்கு லாரியில் ஏறியோ பேருந்தில் ஏறியோ சென்னையின் கோடம்பாக்கத்துக் கதவுகளைத் தட்டும் எல்லோரும் மனதுக்குள் ரகசியமாக திரையில் தோன்றும் ஆசைகளைக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழின் மாபெரும் இயக்குநரான பாரதிராஜா, சென்னைக்கு வரும்போது நடிகனாகும் கனவோடுதான் வந்தார். அதை நிறைவேற்றிக் கொள்ள அவர் ஒரு வெற்றிகரமான இயக்குநர் ஆகவேண்டி இருந்தது. நடிகராகவும் இயக்குநராகவும் பெரு வெற்றி பெற்ற பாக்யராஜ், பாரதிராஜாவின் சீடர். தமிழ் சினிமாவின் வெற்றிகரமான நடித்து இயக்கும் கலைஞர்களான பார்த்திபனும் பாண்டியராஜனும் இவரிடம் இருந்து உருவானவர்கள்தாம்.

தம் தோற்றத்துக்கு ஏற்ற பாத்திரங்களை உருவாக்கி நடித்தார்களா? கதைகள் இவர்களை நடிக்கக் கோரினவா? இவர்களே நடித்ததால் தாம் நினைத்ததுபோன்ற படைப்பை உருவாக்க முடியும் என எண்ணினார்களா? இதுபோன்ற பல கேள்விகளை இந்த அந்திமழையின் சிறப்புப் பக்கங்களில் அலசியிருக்கிறோம்.

உலகெங்கும் பல்வேறு மொழிகளில் இயக்குநர்களே தங்கள் படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் தமிழில் தான் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இயக்குநர்கள் நடிகர்களாகவும் பரிமளித்துள்ளனர் என்று தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, தற்போதைய புதிய தலைமுறை இயக்குநர்கள் அதிகமானபேர் நடிகர்களாகவும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் போக்கை தமிழில் அதிகம் காணமுடிகிறது.

ஒரு காலகட்டத்தில் காமிராவுக்குப் பின்னால் இருந்து ஆக்‌ஷன் சொன்னவர்கள் காமிராவுக்கு முன் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், பெரும்பாலான மூத்த இயக்குநர்கள் இன்று நடிகர்கள் ஆகிவிட்டார்கள்! குணச்சித்திரமோ, காமெடியோ எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

ஆனால் திரைப்பட இயக்கம் என்பது வெறும் வணிகரீதியில் மட்டும் பார்க்கவேண்டியது அல்ல. அது தீவிர கலையம்சம் கொண்டது. இயக்குநர் என்பவர் காமிராவுக்குப் பின் இருப்பதுதான் சரி என்கிற தீவிர பார்வை கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நூற்றாண்டு கடந்த தமிழ்த் திரையுலகில் இயக்குநராகவும் நடிகராகவும் இயங்கியவர்களை வரும் பக்கங்களில் காண்போம். விடுபடல்கள் இருக்கலாம். எங்களுக்கு எழுதுங்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram