சிறப்புப்பக்கங்கள்

வெற்றி அவருக்குக் கவலையைக் கொடுத்தது!

ராவ்

அது 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி. நான்காவது பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த செய்தி நாட்டின் நான்கு திசைகளையும் வியப்பில் ஆழ்த்தவே செய்தது. காமராஜர் புகழின் உச்சியில் இருந்த நாள்கள் அவை! அவரும் தோற்று காங்கிரசும் படுதோல்வி கண்டது இமயத்தையே அதிரச் செய்தது!

வெற்றிச் செய்திகள் வரவர ஒருவர் மட்டும் பெரும் கவலையில் ஆழ்ந்தார்! அவர் - திமுகவின் தலைவர்- வெற்றிக்குக் காரணகர்த்தாவான அறிஞர் அண்ணா!

தனது கட்சி தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருப்பதை அவர் அறிந்தே இருந்தார். ஆனாலும் ஆட்சியைத் தமிழர்கள் தம்மிடம் ஒப்படைப்பார்கள் என அவர் நினைக்கவில்லை!

அவரே சட்டசபைத் தொகுதியில் போட்டியிடாமல் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டது அதனால்தான்!

வெற்றி உறுதியான அன்று இரவு, அண்ணாவும் இதர திமுக தலைவர்களும் மெரினா கடற்கரையில்  வெளிச்சம் அதிகமில்லாத பகுதியில் அமர்ந்து இருந்தனர். எல்லோருக்கும் மகிழ்ச்சி! அண்ணாவின் முகத்தில் கவலை ரேகைகள் அழியவில்லை. குறிப்பாக காமராஜரின் தோல்வியை அவர் சற்றும் ரசிக்கவில்லை. ‘அது நடந்திருக்கக்கூடாது. எவ்வளவு பெரிய தலைவர்… உலகப் புகழ் பெற்றிருக்கும் நேரம்” என்றார். மற்ற திமுக தலைவர்கள் யாரும் அதை ஆமோதிக்கவில்லை!

உடனடியாக அண்ணா செய்த காரியம் திமுகவின் இதர தலைவர்களே எதிர்பாராதது!  நேராக பெரியார் ஈவேராவை சந்தித்து, “வெற்றியை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன்” என்று கூறினார். அது தலைவருக்கும் தளபதிக்கும் நடந்த உணர்ச்சிகரமான அற்புத சந்திப்பு! தன்னை வளர்த்து உலகுக்குக் காட்டிய தலைவருக்கு அண்ணா காட்டிய நன்றி!

தேர்தல் நேரத்தில் பெரியார் திமுகவையும் அண்ணாவையும் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தது -அடியோடு காணாமல் போயிற்று! “நீங்கள் கனவு கண்ட சீர்திருத்தங்கள் இனி சட்டமாகும்” என்ற வாக்குறுதியும் தந்தார். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலைகளிலும் அறிஞர் அண்ணா சில பண்புகளை மறந்ததே இல்லை.

ரகசியமாகத்தான் அமைச்சரவை ‘லிஸ்ட்’ தயாரானது. அதை நேராக  உடனே எம்.ஜி.ஆர். பார்வைக்கு அனுப்பி வைத்தார். குண்டடி பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் எம்ஜிஆர். அவரது செல்வாக்கு வெற்றிக்கு அளித்த பங்கு என்ன என்று அவருக்குத் தெரியுமே?

எம்ஜிஆர் லிஸ்டில் இருந்த ஒரு பெயரை அடித்துவிட்டார். அது சிபா ஆதித்தனார் பெயர்!

ஆதித்தனார் தினந்தந்தி நாளிதழ் மூலம் வெற்றிக்கு அடிகோலியவர். அண்ணா அவரை சபாநாயகர் ஆக்கினார்!

அந்தத் தேர்தலில் வித்தியாசமான கூட்டணி அமைத்திருந்தார் அண்ணா! ஆனாலும் கூட்டணிக் கட்சிகளை ஆட்சியில் சேர்த்து கூட்டணி அமைச்சரவை அமைக்கத் தயாராக இல்லை! ம.பொ.சி கூட கட்சியைக் கலைத்துவிட்டு அமைச்சரவையில் சேரத் தயாராக இருந்தார். அண்ணா ஏற்கவில்லை.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி! தமிழ்நாட்டில் திடீர் அரிசி பஞ்சம் ஏற்பட்ட காலகட்டம்! கியூவில் நின்று வாரம் ஒரு நாள் சில கிலோ அரிசி பெற வேண்டிய அவலநிலை. ‘’ ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்! ஒரு படி நிச்சயம்’’ என்பது திமுக தேர்தல் கோஷம்!

நிருபர்கள் அச்சமயம் அண்ணாவை சந்தித்தபோது அவரது மேசையில் விகடன் கேலிச்சித்திரம் படபடத்தது! மூன்று விரல்களைக் காட்டியவாறு இருக்கும் அண்ணாவின் படத்தைப் பார்த்து ‘நாமம் தான்” என்பது போல் கேலி செய்தது கார்ட்டூன்!

அன்று ஐசிஎஸ் அதிகாரிகள் இன்னும் ஓய்வுபெறவில்லை! கடுமையாக எதிர்த்தனர். அண்ணா விடவில்லை! படி அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷனில் வழங்கினார்! அதற்கு ஆறு மாதங்கள் ஆயிற்று! அதுவரையில் அமைச்சர்கள் யாரும் ஊதியம் வாங்கவில்லை. அரிசி நிலைமையை தனிகவனம் செலுத்தி சமாளித்துக் காட்டினார். வாக்குறுதியை மறக்கவில்லை.

சில திராவிட லட்சியங்களை காலம் கடத்தாமல் சட்டமாக்கினால்தான் சரியாக இருக்கும் என்பது அவரது வழி. நாள் கடத்தினால் வீண் விவாதங்கள் அவற்றைத் தடுமாறச் செய்துவிடும் என்பது பெரியாரிடம் அவர் முதல் சந்திப்பிலேயே பேசித் தெரிந்துகொண்டுவிட்டார்!

சாதி மறுப்புக் கொள்கையான சுயமரியாதைத் திருமணம் சட்டமாயிற்று! சடங்குகள் நிறைந்த திருமணம் அவசியமற்றதானது.

1967- ஜூலை மாதம் தமிழக சட்டமன்றத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர் நீக்கப்பெற்று ‘தமிழ்நாடு’ என்று தமிழர்கள் மகிழ பெயர் சூட்டப்பட்டது.

உடல்நிலை சரி இல்லாத நிலையில் அண்ணா அதற்கான பெயர்சூட்டுவிழாவில் கலந்துகொண்டது- கண்ணீர் வரவழைத்த காட்சி!

தி.மு.கழகத்தின் ‘இந்தி’ எதிர்ப்புக் கொள்கைகளையும் சட்டமாக்கினார். கல்விமுறையில் இருந்த மும்மொழிக் கொள்கை மாற்றப்பட்டு - தமிழும் ஆங்கிலமும் போதும் என்று இருமொழிக் கொள்கை ஆயிற்று! ‘இந்திக்கு’ நுழைவாயில் மூடப்பட்டது!

எங்கும் எதிலும் தமிழுக்கு முதல்மரியாதை அளிக்கும்  சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன அரசு முத்திரையில் ’சத்தியமேவ ஜெயதே’ என்ற வாசகம் ‘வாய்மையே வெல்லும்’ என்று மாற்றப்பட்டது! 

ஓர் இளமையான அமைச்சரவை பதவி ஏற்றது பழிவாங்கும் போக்கு எதுவும் கூடாது என்பதில் அவர் உறுதி காட்டினார் அப்போது காவல்துறை தலைமை அதிகாரியாக எஃப்.வி. அருள் இருந்தார். அவர் மீது திமுகவினருக்குக் காட்டம் அதிகம். விலைவாசிப் போராட்டம் நடந்தபோது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட அண்ணாவை உட்கார நாற்காலி தராமல் குற்றவாளியை நடத்துவதுபோல் நிற்கவைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. பத்திரிகைகள் கூட அண்ணா நிற்க வைக்கப்பட்ட தைக் கண்டித்தன. அருள் மாற்றப்படவேண்டும் என கலைஞர் கூட வாதாடினார், அண்ணா சம்மதிக்கவில்லை!

முதல்வராக பதவியேற்றதும் அதிகாரிகள் கூட்டம் கோட்டையில் நடந்தது. அப்போது பேசிய அண்ணா, “ நீங்கள் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியும்” என்று சொன்னபோது முதல் வரிசையில் இருந்த எஃப்.வி.அருள் சிரித்தார்.

அமைச்சர்கள் அத்தனைபேரும் ஏழை மக்கள் குறைகளுக்கு முதலிடம் அளிக்கவேண்டும் என்பது அவர் கட்டளை. அதனால்தான் குடிசை மாற்றுவாரியம் அமைக்கும் எண்ணம் பிறந்தது.

எல்லோரும் வியக்கும் அளவுக்கு உலகத் தமிழ்மாநாடு சென்னையில் நடந்தது. அரசியல் கலப்படமற்ற விழா அது! தமிழ் அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் முழங்கின! கடற்கரையில் தமிழர் மனங்கவர்ந்தவர்களின் சிலைகள் திறக்கப்பட்டன. எங்கும் தமிழ் முழங்கியது! தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் ஆட்சியாக அண்ணா நடத்திக் காட்டினார்.