சிறப்புப்பக்கங்கள்

விசுவாசமா... கிலோ என்ன விலை?

மிஸ்டர் முள்

‘அளவுக்கு அதிகமான செல்வம் கொட்டிக்கிடக்கிற நபரின் கைகள் முழுக்க துரோகத்தின் கறைகள் இருந்தே தீரும்’-சுவாமி சிக்லெட்டானந்தா.

சுவாசம்ங்குற வார்த்தையை கண்டுபிடிச்சவன் மட்டும் என் கையில சிக்குனான் அவனை அடிச்சே கொன்னுடுவேன். முதல் சான்ஸ் குடுத்தான்ங்குறதுக்காக வாழ்நாள் முழுக்க எப்பிடிறா அவனுக்கு விஸ்வாசமா இருக்க முடியும் ?’ கோடம்பாக்கத்தில் மிக அதிகமாகக் கேட்கக்கூடிய ஆதங்கக் குரல் இது.

யெஸ்… இங்கே சினிமாவில் ‘விசுவாசமே உன் விலை என்ன ?’ என்பதுதான் நிதர்சனம். விசுவாசம் மெல்ல காணாமல் போகிறபோது அது உதவி செய்தவரின் பார்வையில், நன்றி மறந்த செயலாக மாறி நாளடைவில் துரோகமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சினிமாவில் இந்த துரோகக் கதைகளின் எண்ணிக்கை பல்லாயிரங்களைத் தாண்டும் என்றாலும் சாம்பிளுக்கு மூன்று.

சம்பவம் 1

இந்த இருவருமே முன்ன ஒரு காலத்தில் அதாவது 80, 90 களில் தங்கள் துறைகளில் கொடிகட்டிப் பறந்தவர்கள். முதலாமனவர் தமிழ் சினிமாவின் ராஜாவாக இருந்த இயக்குநருக்கு முதன்மை மந்திரி போன்று இருந்தவர். அவர்களது தொடக்க காலப் படங்களில் இரண்டாமவர் நடிக்க வாய்ப்புக் கேட்டுச் செல்லும்போதெல்லாம் ராஜா அவரைத் துரத்தியடிக்க மந்திரிதான் அவரிடம் மல்லுக்கட்டி நடிக்க வைப்பாராம். வெறுமனே நாடகங்களில் மட்டும் நடித்து ஒரு நாளைக்கு 10, 20 கூட சம்பாதிக்க முடியாத அந்த நடிகர் ராஜ இயக்குநரின் அடுத்தடுத்த படங்களில் இடம்பிடித்துதான் உச்சிக்கே போனார். விதை மந்திரி போட்டது.

காட்சி மாறுகிறது. மந்திரியும் ஒரு கட்டத்தில் ராஜாவாகி தொடர்ந்து ஹீரோ மற்றும் இயக்குநராக, சில்வர் ஜூப்ளி படங்களைக் கொடுத்து பின்னர் கதைகளில் முடிச்சு எடுபடாமல் டல்லடிக்க ஆரம்பிக்க, அப்போது உச்சத்திலிருந்த நாம் வாய்ப்பு கொடுத்த நடிகரைப் போட்டால் படம் நல்லபடியாக பிசினஸ் ஆகுமே என்று தொடர்புகொள்ளும்போதெல்லாம், ‘அடே இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலையேடா’ என்று பழசை எல்லாம் மறந்து நக்கலடித்து தவிர்த்துவிட்டாராம்.

இருவருக்கும் பொதுவான பழைய நண்பர்களை சந்திக்கும்போதெல்லாம் ‘இப்பிடி ஒரு துரோகியை என் வாழ்க்கையில சந்திச்சதே இல்லை’ என்று சொல்லிவிட்டுத்தான் பாக்கி சமாச்சாரங்களைப் பேசவே ஆரம்பிப்பாராம்.

சம்பவம் 2

ஆபிஸ் பாயாக தங்கள் வாழ்க்கையைத் ஆரம்பித்து கனவிலும் நினைத்துப்பார்க்காத உயரத்தைத் தொட்டவர்கள் சினிமாவில் ஏராளம் உண்டு. பாய் ஒருவரிடம் அப்படி ஒரு ஆபிஸ் பாயாக வாழ்வைத் தொடங்கியவர் இந்த எட்டணா பார்ட்டி. அந்த பாயே ஒரு காலத்தில் ஆபிஸ் பாயாக வாழ்வைத் தொடங்கி அன்று தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குநராக, விநியோகஸ்தராக உச்சம் தொட்டு நின்றிருந்தார். அடுத்தடுத்து மூன்று சில்வர் ஜூப்ளிகளைக் கொடுத்து ரஜினியை விட அதிகம் சம்பளம் வாங்கிய ராசா என்றால் சுலபமாக யூகித்துக்கொள்ள முடியும்.

மேட்டருக்கு வருவோம். வத்தலும் தொத்தலுமாக இருந்த தனது ஆபிஸ் பாயை தனது படத்தில் அறிமுகப்படுத்தி, தொடர்ந்து வளர்த்தெடுத்து, ராஜாவிடம் அழைத்துப்போய் பாடல்களும் பாடவைக்க, நடிகர் ஒரு கட்டத்தில் கோடிகளில் சம்பாதிக்கும் அளவுக்கு கொழித்து நிற்கிறார்.

சினிமா, கோபுரத்தில் கொண்டுபோய் நிறுத்துகிற ஆட்களை சடாரென குப்பை மேட்டில் தள்ளிவிடுகிற இடமல்லவா? அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பாய், சில சகவாசங்களால் நடுத்தெருவுக்கே வந்துவிடுகிறார். அன்றாட வாழ்வை நகர்த்தவே வழி இல்லை என்பது போக திரும்பின திசையெல்லாம் கடன்காரர்கள்.

ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல், கோடிகளில் கொழிக்கும் தனது ஆபிஸ் பாய் முதலாளிக்கு உதவி கேட்டு தூது அனுப்புகிறார். வசதி வந்தவுடன் வசதியாக பழசை எல்லாம் மறந்துபோன நடிகர், ‘என் சொந்தத் திறமையால ஜெயிச்சு வந்தவன் நான். பத்துப்பைசா கிடையாது. ஓடிப்போ’ என்று துரத்தி அடித்திருக்கிறார்.

இந்த துரோகக் கதையை படமாக எடுத்திருந்தாலும் சில்வர் ஜூப்ளிதான்.

சம்பவம் 3

‘நன்றி கெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா ‘ பாடலை தான் சந்தித்த சினிமாக்காரர்கள் குறித்துதான் கவிஞர் எழுதியிருப்பார் என்று நினைக்கும் அளவுக்கு ஆயிரம் சம்பவங்கள் இருக்கின்றன கோடம்பாக்கத்தில்.

எப்போது நினைத்தாலும் நெஞ்சு விம்முகிற ஒரு தயாரிப்பாளரின் கதை இது.

பகவான் கிருஷ்ணரின் பெயரைத் தொடக்கமாகக் கொண்ட காந்தமான, சாந்தமான மனிதர் அவர். ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்து தனியாகப் படங்கள் தயாரிக்க களம் இறங்குகிறார்.

இன்றைக்கும் டாப் டென்னில் இருக்கிற மூன்று ஹீரோக்களை வைத்து நான்கு படங்கள் எடுத்தவர். ரசிகர்களின் மனசை திருடோ திருடென்று திருடிய முதல் படம் சரியாக போணியாகாமல் ரிலீஸுக்குப் பின் சரித்திரம் காணாத வசூலை அள்ளியதெல்லாம் வரலாறு. அடுத்து எடுத்த படங்கள் கூட ஓ.கே என்றாலும், ஹீரோக்களின் தலையீடுகளால் தயாரிப்புச் செலவு அதிகரித்து ஒரு கட்டத்தில் நிர்கதியாகிவிட்டார்.

சாலிகிராமத்தில்தான் அவரது இல்லமும் அலுவலகமும் இருந்தன. முதலில் அலுவலகத்தை மூடியவர், பின்னர் வாகன வசதியின்றி பாடாவதி டி.வி.எஸ்.50யில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துப்போனார். அடுத்து அவரது வாகனம் ஓட்டை சைக்கிளாக மாறி டவுன் பஸ்களிலும் பயணிக்க ஆரம்பித்து, நோய்வாய்ப்பட்டு மனம் உடைந்து ஒரு துயரநாளில் இறந்தே போனார்.

அவர் டி.வி.எஸ் 50 இல், சைக்கிளில் எத்தனையோ நாட்கள் பயணித்ததை நிச்சயம் அவரிடம் பெரும் சம்பளம் வாங்கியவர்கள் பார்க்காமலிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவர் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துப்போன அதே அருணாச்சலம் ரோட்டில் இவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக பயணித்தே ஆக வேண்டும். அவரைப் பார்க்க நேரும்போது நன்றி, விசுவாசம் என்பவை அவர்களிடம் உயிரோடு இல்லை போல.

இப்படி மனித துரோகத்தால் வஞ்சிக்கப்பட்ட எத்தனையோ மனிதர்கள் இன்னும் சென்னை வீதிகளில் டி.வி.எஸ் 50களிலோ, ஓட்டை சைக்கிள்களிலோ டவுன் பஸ்களிலோ கிழிந்துபோன தங்கள் வாழ்க்கையோடு பயணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram