சிறப்புப்பக்கங்கள்

விட்ட இடத்தில் பொருந்திக்கொள்ளுதல்

ரமேஷ் வைத்யா

இது ஒரு டயரிக் குறிப்புதான். பின்னாளில் புனைவு முலாம் பூசப்பட்டு விலாவாரியாக விளக்கப்படலாம்.

தேனி, பெரியகுளம், தென்மதுரை ஜில்லாவில் ஒரு சிறுவன் உற்சாகமாக வளையவந்தான். பள்ளிப் பருவத்திலேயே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டிகளில் பரிசு வாங்கினான். இதிலெல்லாம் மயங்கிய ஆசிரிய நடுவர்கள், பாட்டுப் போட்டியிலேயே இரண்டாம் பரிசு கொடுத்த கொடுமையெல்லாம்கூட நடந்தது. இதனால், ரூட்டுத் தல போல, லோக்கல் ஹீரோவாகத் திகழ்ந்தான். எட்டாம் வகுப்புத் தொடக்கமே பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தான். ஜோக்குகள், சின்னக் கதைகள், போட்டோப்படத்துக்குப் பாட்டு என எழுதிக் கொண்டிருந்தவன் தன் ஜோக்குகளுக்குத் தானே படம் வரையவும் தைரியம் கொண்டு அவையும் பிரசுரமாயின. தனக்கு ஓவியமெல்லாம் வரையத்தெரியாதே என்று கவலைப்படக்கூடத் தெரியாதவன் அவன்.

கல்லூரிக்குப் போனதும் தன் எல்லையை விஸ்தரிக்கும் வண்ணமாக இடதுசாரி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, பழைய பேச்சு, கட்டுரைச் செயல்பாடுகளோடு மாணவர் சங்கம் கட்டுவதிலும் இறங்கினான். பக்க விஷயமாக அந்த இயக்கத்தின் எழுத்தாளர் சங்கத்தில் இயங்கினான். செம்மலர் பத்திரிகையில் கதைகள் பிரசுரமாயின.

முதல் கதையை, சிறுகதை இலக்கியத்தை ரட்சிக்க வந்திருக்கிறோம் என்கிற பிரக்ஞையால் ‘ரட்சகன்’ என்ற புனைபெயரில் வெளியிட்டான். கவியரங்கங்களில் மாவட்டம் தாண்டி அவனது புகழ் விரிவடைந்தது. அவனே மெட்டமைத்து எழுதிய பாட்டுகள் எழுத்தாளர் சங்க மேடைகளில் கைதட்டல் வாங்கின.

வச்சா குடுமி சிரைச்சா மொட்டை என்கிற பாணியில் செயல்படும் அவன் கூடிய சீக்கிரமே அந்த மாணவர் இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் ஆகத் தேர்தலில் வென்றான்.

இது போன்ற இன்னபிற செயல்களில் சிறந்ததால் படிப்பு கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும், பட்டத்தை வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தபோதே பத்திரிகைத்துறை அவனுக்கான வாய்ப்புகளை நீட்டிக்கொண்டிருந்தது.

தான் வீட்டிலிருந்து எழுதி அனுப்பும் கதை கட்டுரைகள் வெளியாகினவா இல்லையா என்று தெரிந்துகொள்ள அந்தப் பத்திரிகையை வாங்கிப் பார்க்க வசதி வேண்டும். வேலை இல்லாப் பட்டதாரி. அப்போது இவனை ஆதரித்த அண்ணன், ‘தாய்’ வார இதழ்தான் வாங்குவான். அதனால் அதற்கு எழுத ஆரம்பித்தான். சிறு வயதிலிருந்து வாசிப்பு இருந்ததால், இவன் எழுதி அனுப்பும் விஷயங்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவமே இல்லை.

சில காலண்டர்களில் தேதித் தாள்கள் படபடப்பதைக் கற்பனை செய்துகொள்வோம்.

ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். வெளியான ஒரு வாசகர் கடிதத்தை ஆசையோடு வருடிக்கொண்டிருந்தவனுக்கு அந்தப் பத்திரிகையிலேயே ஆசிரியர் குழு அந்தஸ்து!

வச்சா குடுமி கோட்பாட்டின்படி அலுவலகச் சூழலில் அதிவேகத்தில் முன்னுக்கு வந்தான். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், க்ரியேட்டிவ் ஐடியாக்கள்... வெளியூரிலிருந்து வந்த ஒரு சீனியர் தனியாக இவனை அழைத்து, “கொஞ்சம் வேகத்தைக் கட்டுப்படுத்துங்க தம்பீ. சில பேர் கண்ணை உறுத்திட்டாச் சிக்கல்” என்று அறிவுறுத்தும் அளவுக்கு வளர்ந்தான். இருந்தும் படைப்பூக்க வெறிக்கு அவையெல்லாம் போதவே இல்லை. ஊரில் இவன் எழுதிய பாடல் ஒன்றைத் தற்செயலாக ஒரு திரைப்பட உதவி இயக்குநர் கேட்டார்.

அவருக்குப் படம் கிடைத்தது. அந்தப் பாட்டு படத்தில் வந்தது. தொலைக்காட்சியில் பதினைந்து ஆண்டுகளுக்கு தினமும் ஒளிபரப்பாயிற்று. அதிகாலையில் சேவலை எழுப்பி, இசைத்தட்டில் பம்பரம் சுழன்றுகொண்டே இருந்தது. பெரிய வெற்றி என்று அதைச்சொல்லலாம். இருபத்தேழு வருஷங்களுக்கு முன் சினிமா ஓர் இரும்புக்கோட்டை. இவனோ முரட்டுச் சிங்கம் அல்லன்; முயற்சியே இல்லாதவன். இவனுக்குக் கிடைத்த வாய்ப்பு நம்புவதற்கில்லை. ஆனால் நடந்தது. பழநிபாரதிக்கு மட்டும் அடுத்ததாக, நா.முத்துக்குமார், யுகபாரதிக்கு சீனியராக அப்படியே போயிருக்கலாம்...

இவன் மதுக் கடைக்குப் போனான்.

அதற்கு அடுத்து வந்த ஆண்டுகள், சாதாரண மனிதர்களால் அனுமானிக்க முடியாத சாராயச் சரித்திரம்.

என்ன நடக்கிறது, எதற்கு நடக்கிறது என்று தெரியாத நடவடிக்கைகள். பைக் நான்கு முறை காணாமற்போய்க் கிடைத்தது, மொபைல் பத்துப்பன்னிரண்டு தடவை தொலைந்தே போனது, பாதாளச் சாக்கடையில் விழுந்து பல் பறிபோனது, பல நூறு சாலை விபத்துகள் தவிர்க்கப்பட்டது, அடைத்து வைக்கப்பட்ட முதல் மாடியிலிருந்து குதித்துக் கடைக்கு ஓடியது, வேலையை எழுதிக் கொடுத்ததில் வந்த பணத்தை ப்ரூவரீஸுக்கும் ஐடிசிக்கும் கோத்தாரியின் பான்பராக் கம்பெனிக்கும் பங்கிட்டுக் கொடுத்தது, ஆயிரம் நண்பர்களிடமிருந்து போன் காலுக்கு எட்டாத தொலைதூரத்துக்கு விலகிப்போனது.

‘நடுவுல ஆறு வருசங்கள காணோம்.’

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, சினிமாக்காரர் கரு. அண்ணாமலை போன்ற சொற்ப நண்பர்கள் இவன் மீதான நம்பிக்கையை மிச்சம் வைத்திருந்தார்கள். உண்மையில் அது மூடநம்பிக்கைதான். விழுந்துவிட்ட இருட்பள்ளத்திலிருந்து இவன் மேடேறி வருவதற்கான வாய்ப்பே கண்ணுக்கெட்டிய தொலைவில் தென்படவில்லை. ஏதோ சோகத்துக்கு இவன் இழவு காத்துக்கொண்டிருக்க அந்த நண்பர்கள் இலவு காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், இலவும் பழுக்கும் அதிசயம் நடந்தது. எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை. அவனுக்கும் தெரியவில்லை.

ஆறாண்டுகள் சாதாரணம் இல்லை. சமூகத்தின் எல்லாத் திசைகளிலிருந்தும் அவன் தன்னை மறைத்துக்கொண்டான். டாஸ்மாக் கடைகளின் பக்கவாட்டு பார்களிலிருந்த படுதாக்கள் அவனை உலகின் கண்களிலிருந்து மறைத்தன. சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய ’மறைந்து திரியும் கிழவன்’ தலைப்பு போல ஒரு வாழ்க்கை. பிறரிடமிருந்து அல்ல, தன்னிடமிருந்தே அவன் மறைந்து திரிந்தான். இந்த விநாடியில் குடிக்க வேண்டும். கால்மணி நேரத்தில் போதை ஏறிவிட்டால் காலங்களைக் கடந்து அந்தர உலகில் திரியலாம்.

ஆண்டுகள் ஓடிவிட்டன. இழுத்துப் பிடித்துக் கேட்போரிடம், ‘நான் புத்தகயாவுக்குப் போய் சுக்கா ரொட்டி பிச்சை எடுத்து வாழ்வேன்; பாங் உட்கொள்வேன்; பக்கவாதம் வந்து செத்துப்போவது என் குறிக்கோள்’ என்று மனமாரச் சொன்னான். கால்களுக்கிடையில் சாலை நழுவுவதே தெரியவில்லை... காலம் கடந்துபோவது தெரியுமா?

அந்த வாழ்வில் அலுப்பு ஏற்பட்டுவிட்டது போலும். பொங்கு போதையிலும் மங்கு போதையிலும் பேசி மகிழலாம் என்றால், அழைப்பதற்கு ஓர் எண்ணும் போன்வசம் இல்லை.

ஒரு குடியரசு நாள். ஏதோ ஓர் எழுத்துக் கூலி வேலை பார்த்ததில் நூறு ரூபாய்க் கற்றை ஒன்று பாக்கெட்டில் இருந்தது. ஊரெல்லாம் மதுக்கடை அடைப்பு. எங்கே விற்பார்கள் எப்படி வாங்குவதென்று அறிவான். ஒரு கால் டாக்சியை ஒப்பந்தம் செய்துகொண்டு ஊரெல்லாம் சந்துக் கடைகளுக்குள் தீர்த்த யாத்திரை செய்தான். ஆயுளில் அதிகமான குடி.

மறுநாள் எழுந்து பார்க்கையில் தலையணை அடியில் முக்கால் குப்பித் திரவம் தளும்பியது. உற்றுப் பார்த்தான். ‘இதை அப்படியே வைப்போம். இன்று இரவு தூக்கம் வந்தால் காலையில் எழுந்து இதைத் தூக்கி எறிவோம்’ என்று ஓர் எண்ணம் ஓடியது.

நம்புங்கள் நண்பர்களே, வாழ்த்துங்கள் நண்பர்களே. அன்று படுத்த பத்தாம் விநாடியில் உறக்கம் வந்து விழிகளைப் போர்த்தியது.

மறுநாள் அந்தப் போத்தல் சுழன்று சுழன்று போய், காலிமனையின் புதரொன்றுக்குள் விழுந்தது. வாழ்வில் சில சம்பவங்கள் காரணம் தெரியாமல் நடந்துவிடுகின்றன.

அது அதிசயமல்ல, வாழ்க்கைக்குத் திரும்பிய அவனை, பழைய நண்பர்கள் கூட்டம் அப்படியே ஏந்திக்கொண்டது. ஜோதியின் சுடரைக் காக்கும் எல்.ஐ.சி. உள்ளங்கைகள் தெரியுமா... அப்படி ஓர் ஏந்தல்.

அப்படி வந்த ஒரு நண்பன் சொன்னான், “நாய்கூடத்தான் குடிக்காது. அதுக்காக நாய் பெரிய ஆளுன்னு அர்த்தமா? ஏதாச்சும் வேலை செய்யணுங்க.”

எல்லா இழிவுகளிலும் அவன் கைவிடாதிருந்தது ஒன்று. இலக்கிய வாசிப்பு. அதுதான் இப்போதும் துணை நின்றதா? போவதற்கு ஓர் அலுவலகம் வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனந்த விகடனின் பழைய நண்பர் இப்போது புதிதாக ஒரு பத்திரிகைக்குப் பணிக்குக் கூப்பிட்டார்.

எந்தத் திறமையும் அவனுக்கு மறந்திருக்கவில்லை. அப்படியே பொருந்திக்கொண்டான். இது ஓர் ஆச்சரியம். மது அடிமையாக இருந்து மீண்டவர்களின் சிந்திக்கும் வேகம் பத்தில் ஒன்றாகக் குறைந்துவிடுவதை இவனே பார்த்திருக்கிறான். அப்படிப்பட்ட அறிகுறி ஒன்றும் இவனுக்கில்லை. திரும்ப சிறார் கதைகள் எழுத ஆரம்பித்தான். பாட்டுகள் எழுதினான். நட்சத்திர ஹோட்டல்களில் குடிக்கும் கம்பெனி கொடுத்து, அது ஆபத்துக் கட்டத்தை அடைந்ததும் மருந்தும் வாங்கிக்கொடுத்த சங்கர் கணேஷ் என்ற இசை நண்பர் பாட்டுகள் எழுதச் சொல்லி வறுபுறுத்தி வாங்கிக்கொண்டே இருந்தார். எதுவும் தன்னை விட்டுப் போகவில்லை என்று உணர்ந்தான். பாஸ்கர் சக்தி இயக்கிய படத்தில் ஐந்து பாட்டுகள் எழுதினான். இலக்கியக் கூட்டங்களில் வரவேற்போடு பேச்சுக் கச்சேரிகள் நிகழ்த்துகிறான்.

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன் நண்பர்களே... அவனுக்கு என்னமோ கேட்காமலேயே சில விஷயங்கள் கிடைத்தன. பள்ளத்தில் விழுந்த பிறகும், விட்டதைப் பிடிக்க முடிந்தது. ஆனால், போதைப் பொருட்கள் பயன்படுத்தும் அனைவருக்கும் இப்படி நடக்காது. இது அனுபவ வாக்கு. ஜாக்கிரதையாக இருங்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram