சிறப்புப்பக்கங்கள்

தமிழ்நாடு அரசின் கடன்கள்: உண்மை நிலவரம் என்ன?

பேரா. கே. ஜோதி சிவஞானம்

தமிழக நிதிநிலை அறிக்கையை இந்த ஆண்டு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து தமிழக அரசின் கடன்கள் உயர்ந்துவருவது குறித்து அரசியல் அரங்கில் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. நிதியமைச்சரும் ‘ நீங்கள் சொல்வது தமிழ்நாட்டை விட அதிக கடன்சுமையில் இருக்கும் மத்திய அரசுக்கும் பொருந்துமா?’ என்று பதிலடி தந்தார்.

மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கு, நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிதி திரட்ட அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாக கடன்வாங்குவது என்பது சரியான வழி.

2004-இல் உருவாக்கப்பட்ட நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம், மத்திய அரசையும் மாநிலங்களையும், நிதி தொடர்பான சில விதிகளையும் இலக்குகளையும் விதித்துக் கட்டுப்படுத்துகிறது. நிதி விஷயத்தில் பொறுப்புடன் நடந்துகொள்கின்றனவா என்று ஒரு மாநிலத்தை இன்னொரு மாநிலத்துடன் ஒப்பிடுவது, ஒன்றிய அரசுடன் ஒப்பிடுவது ஆகியவற்றை இச்சட்ட அடிப்படையில் மேற்கொள்ளலாம்.

இச்சட்டம் சில எல்லைகளை வகுத்துள்ளது. நிதிப் பற்றாக்குறை (fiscal deficit) (ஜிடிபி அல்லது மாநில ஜிடிபியில் 3%,) வருவாய்ப் பற்றாக்குறை (0%), கடன் அளவு (ஒன்றிய அரசுக்கு ஜிடிபியில் 40%, மாநில அரசுக்கு மொத்த மாநில உற்பத்தியில் 20%) ஆகியவற்றுக்கான அளவுகள் இவை. ஒன்றியம், மாநிலம் ஆகிய இரு அலகுகளிலும் நிதிக் கட்டுப்பாட்டைக் கொண்டுவருகிறது இச்சட்டம்.

ஆகவே ஒரு மாநிலத்தின் நிதித் திறனை ஆய்வு செய்கையில் ஒன்றிய அரசு இந்த பொது இலக்குகளை எப்படிக் கடைப்பிடித்துள்ளது எனும் ஒப்பீடு வரவே செய்யும்.

வாக்காளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் சுயதேவையின் அடிப்படையில் ஜனநாயக அமைப்புகளில் அரசின் நிதி நிலையை தீர்மானிப்பார்கள். இந்த நடத்தையை ஆராயும் பொதுத் தேர்வு பொருளாதாரச் சிந்தனையின் (public choice school of economics) அடிப்படையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. அரசியல் காரணங்களால் அரசியல்வாதிகள் வரிகளை உயர்த்துவதைத் தவிர்ப்பார்கள். அதே சமயம் மீண்டும் தேர்தலில் வெல்வதற்காகக் கடன்வாங்கி அரசாங்க செலவுகளைச் அதிகரிப்பார்கள் என்று இந்த சிந்தனை முறை வாதிடுகிறது. இந்த பொறுப்பில்லாத நிதி நிர்வாகம், தற்போதைய செலவுகளின் சுமையை எதிர்கால சந்ததிகள் மேல் சுமத்துகிறது. உதாரணத்துக்கு இந்த விஷயத்தைப் பார்க்கலாம். 2019-இல் ஒன்றிய அரசு ஏற்கெனவே இருந்துவரும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதத்தை 30% இலிருந்து 22% ஆகக் குறைத்தது. புதிய நிறுவனங்களுக்கான இந்த வரியை 25% இலிருந்து 15% ஆகவும் குறைத்தது. இது தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க செய்யப்பட்டது. ஆனால் உள்நாட்டில் மறுமுதலீடு செய்வதற்குப் பதிலாக பெருநிறுவனங்கள் கிடைத்த லாபத்தை சுருட்டிக்கொண்டன. டிமாண்ட் குறைவாக உள்ளது, இந்தியாவில் வருவாய் குறைவு என காரணம் சொல்லி முதலீடுகளை வெளிநாடுகளுக்குத் திருப்பிவிட்டன. என்ன பொருளாதார நோக்கங்களுடன் இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டதோ அதை எட்டமுடியாமல் நிதி அழுத்தங்களை மேலும் அதிகரித்துவிட்டது. நிதிதொடர்பான இந்த வகையிலான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் நோக்கம்.

என்.கே. சிங் தலைமையிலான, இந்த சட்டத்தின் மறுபரிசீலனைக் குழு(2016), நிதிப் பற்றாக்குறைக்கு ஜிடிபியின் 3% என்கிற இலக்கை மார்ச் 31, 2020 வரைக்கும் நிர்ணயித்தது. மார்ச் 31, 2023 இல் இதை 2.8% ஆகக் குறைக்கவேண்டும் எனவும் இலக்கு நிர்ணயித்தது. இச்சட்டம் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க சுதந்திரமான நிதி கவுன்சில் ஒன்றையும் நிறுவ அது பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த சட்டமும் திருத்தப்பட்டு கடன் – ஜிடிபி விகித இலக்காக 40% ஒன்றிய அரசுக்கும் 20% மாநில அரசுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பதினைந்தாவது நிதிக்குழு (2020-2025), மேலும் திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன்படி ஒன்றிய அரசு நிதிப்பற்றாக்குறையை 2025-26 –இல் ஜிடிபியில் 4% ஆக குறைக்கவேண்டும். மாநிலங்கள் தங்கள் நிதிப்பற்றாக்குறையை மாநில மொத்த உற்பத்தியில் 3% ஆக 2023- 2026 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளலாம். 2021- 2025 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக மாநில மொத்த உற்பத்தியில் 0.5% வரைக்கும் ஆண்டுதோறும் கடன் வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கிறது. ஆனால் இந்தக் கடன் மின் துறை சீர்திருத்தங்களுக்கு மட்டுமே.

பதினைந்தாவது நிதிக்குழு, ஒன்றிய அரசு தன் கடன் பொறுப்புகளை (Liabilities) 2020-2021 இல் ஜிடிபியில் 62.9% இல் இருந்து, 2025-2026-இல் 56.6% ஆகக் குறைக்கவேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. இதே காலகட்டத்தில் மாநிலங்கள் 33.1% இலிருந்து 32.5% ஆக குறைக்கவேண்டும். ஆனால் வருவாய்ப் பற்றாக்குறைகளைக் குறைப்பது பற்றி இது பேசவில்லை. நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் முக்கிய நோக்கமே அதுதான். கடன் வாங்கிப் பெறப்பட்ட நிதியை, மூலதன சொத்து உருவாக்கத்துக்குப் பயன்படுத்தாமல் வருவாய் செலவினங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதே இதன் நோக்கம்.

திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி 2024-2025 காலகட்டத்தில் ஒன்றிய அரசு தன் மொத்த கடன்களில்(ஜிடிபியில் 4.8%) 40% ஐ வருவாய் செலவினங்களுக்குப் பயன்படுத்துகிறது. இந்த போக்கு நீடித்துப் பின்பற்றக்கூடியது அல்ல. ஒன்றிய அரசின் கடன் 2024-25 இல் ஜிடிபியில் 57.1% ஆக இருந்தது. 2025-26 நிதிநிலை அறிக்கைப் படி 56.1% ஐ எட்டும். இது நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் இலக்கான 40% என்பதைவிட மிக அதிகம்.

15-வது நிதிக்குழுவின் திருத்தப்பட்ட இலக்குக்கு உட்பட்டு இருப்பதாக இது தோற்றம் அளித்தாலும், பட்ஜெட்டுக்கு வெளியிலான கடன்களை சேர்த்தால் ஜிடிபியில் 60%க்கு இது உயரக்கூடும்.

இதில் இருந்து மாறுபட்ட முறையில் தமிழ்நாட்டின் கடன் அளவு என்பது மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 26.07% என்கிற சமாளிக்கக் கூடிய அளவில்தான் உள்ளது. இது 15 வது நிதிக்குழுவின் இலக்கான 32.5% என்பதைவிட மிகக் குறைவாகவே உள்ளது. ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 4.8% ஆக இருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை பரிந்துரைக்கப்பட்ட வரையறையான 3%க்கும் குறைவாகத்தான் உள்ளது. மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நிதிப்பொறுப்பின்மையுடன் ஒன்றிய அரசுதான் நடந்துகொள்கிறது.

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் பின்னால் மாநிலங்கள் பெருமளவுக்கு நிதி சுதந்திரத்தை இழந்துவிட்டன. தங்கள் வருவாய் ஆதாரங்களைக் கொண்டுதான் நிதித் தேவைகளை சமாளிக்கவேண்டி உள்ளது. தமிழ்நாடு தன் சொந்த வருவாய் ஆதாரங்களில் இருந்து மொத்தவருவாயில் முக்கால் பங்கைப் பெறுகிறது. வடமாநிலங்கள் தங்கள் வருவாயில் 50-75% ஐ ஈட்ட மத்திய அரசைச் சார்ந்துள்ளன. மக்கள் தொகைக் குறைப்பு, வளர்ச்சிக் குறியீடுகளில் உயர்வு ஆகியவற்றால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் நிதிப்பகிர்வு குறைகிறது. தமிழ்நாடு வளரவளர மத்திய அரசிடம் இருந்து பெறும் நிதிப்பகிர்வு குறைந்துகொண்டே வந்து இப்போது தன் மொத்த வருவாயில் கால்பங்குதான் அங்கிருந்து பெறுகிறது. இந்த குறைந்த பங்கீட்டிலும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. ஒன்றிய அரசின் நிதியால் நடைபெறும் நூறுநாள் வேலைத் திட்டம், சர்வசிக்‌ஷ அபியான் போன்ற திட்டங்களுக்கே ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிதியை அளிக்க ஒன்றிய அரசு மறுக்கிறது.

கடன் அளவுகளை ஆய்வு செய்யவேண்டுமானால் நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் இலக்குகளின் அடிப்படையில்தான் செய்யவேண்டும். பிற வழிகளில் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நிதிக்கொள்கை குறித்த பொதுவிவாதங்கள் தரவுகளின் அடிப்படையிலும் ஆழ்ந்த பொருள்பொதிந்த ஆய்வுகளின் அடிப்படையிலும் நடைபெறவேண்டும். மொத்தமாகப் பொதுமைப்படுத்திக் பேசக்கூடாது. பொதுநிதி செலவீனத்தின் திறன், நிதி நிர்வாகத்தின் தரம், நிதி ஓழுங்கைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டுமே தவிர நிதி எதார்த்தங்களை சிதைக்கும் எளிய குற்றச்சாட்டுகளில் இறங்கக்கூடாது.

ஒன்றிய, மாநில அரசுகள் எதிர் முகாம்களைச் சேர்ந்தவைகளாக இருக்கும் இன்றைய போட்டி கூட்டாட்சியில் இத்தகைய நிதி ஒப்பீடுகள் சரியானவை மட்டுமல்ல; தேவையானவையும் கூட.

நிதிப் பிரச்னைகள் தொடர்பான பொறுப்பான அணுகுமுறை என்பது வெற்று மேடைப்பேச்சுகளைக் கடந்து தமிழ்நாடு, இந்திய மக்களை பாதிக்கக்கூடிய நிஜமான பொருளாதாரப் பிரச்னைகளைப் பற்றியதாக இருக்கவேண்டும்.

(கட்டுரையாளர் கே. ஜோதி சிவஞானம், பொருளாதாரப் பேராசிரியர். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram