மெல்லிய வெளிச்சத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இருந்து திரையில் இணைந்தார் எழுத்தாளரும், DNA திரைப்பட வசன ஆசிரியருமான அதிஷா. பிஸியான நடிகராகிவிட்ட எழுத்தாளர் பாக்கியம் சங்கர், திரையில் தோன்றியதும், எதிரில் இருந்த அசிஸ்டெண்டிடம் "ஒரு மீட்டிங் இருக்கு. யாரா இருந்தாலும் ஒரு மணி நேரம் கழிச்சுப் பார்க்கறேன்" என்று சொன்னது எங்கள் எல்லாருக்கும் கேட்டது. வீட்டில் அன்பு மகளின் குறுக்கீடுகளைப் புறந்தள்ளிவிட்டு மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரனும் இணைய அந்திமழை ஜூம் விவாதம் களைகட்டியது. எழுத்தாளரும் திரை ஆர்வலருமான பரிசல் கிருஷ்ணா எல்லோருக்கும் முன்பாகவே இணைந்து காத்துக்கொண்டிருந்ததோடு 'சொன்ன நேரத்துக்கு வரமாட்டீங்களா?' என்று ஆசிரியர் அசோகனிடம் கேள்வி கேட்டு வேறு கடுப்பாக்கினார்.
எல்லோரும் அப்படி என்ன தலைபோகிற விசயத்தை ஆராய்ந்தோம்?
இந்த அந்திமழை இதழ் தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒரு சினிமா சிறப்பிதழாக மலர்கிறது. அதற்கான ஐடியா: தமிழின் மகிழ்ச்சியான திரைப்படம் எது என்பதுதான். அப்படியான சில படங்களை அந்திமழை ஆசிரியர் குழுவினர் மண்டையை உடைத்து ஒரு வழியாக முடிவு செய்துவிட்டனர். இது தொடர்பாக கட்டுரைகளும் வரத்தொடங்கிய நிலையில், தமிழின் மகிழ்ச்சியான திரைப்படம் எது எனக் கேட்டால் திரை ஆர்வலர்களுக்கு என்ன தோன்றும் என்பது பற்றிய உரையாடல்தான் மேலே சொன்னது.
ஸ்டார் ஹோட்டல் வெய்ட்டரிடம் மெல்லிய குரலில் எதையோ ஆர்டர் செய்துவிட்டு ஆரம்பித்தார் அதிஷா: "என்னால ஒரே ஒரு படத்தை மகிழ்ச்சியான படம்னு சொல்ல முடியாது. ஒரு பெரிய பட்டியலே சொல்ல வேண்டி இருக்கும். உதாரணத்துக்கு பாட்ஷா படத்தை எப்ப பார்த்தாலும் எனக்கு சந்தோசமா இருக்கும்."
பரிசல்: "என்னைப் பொறுத்தவரை எப்பப் பார்த்தாலும் நம்மை சிரிக்க வைக்கறதோட அரசியல் ரீதியா ஒரு சின்ன விஷயத்தையாவது பேசிருக்கற படத்தை மகிழ்ச்சியா பார்ப்பேன். அமைதிப்படை, 23ம் புலிகேசி மாதிரினு சொல்லலாம். அதே மாதிரி இந்த மகிழ்ச்சின்ற பட்டியல்ல வன்முறைக்காட்சிகளைக் கொண்ட படங்களை பொதுவா தவிர்த்துடலாம்னு நினைக்கறேன்"
கவிதா: "அப்படின்னா வெற்றிமாறன், பாலா, லோகேஷ் போன்ற இயக்குநர்கள் படம் இந்த பட்டியலிலேயே வராது."
பாக்கியம் சங்கர்: "சமீபத்துல வந்த பெரும்பாலான படங்களை இதில் சேர்க்க முடியாது."
அசோகன்: "இந்தப் படங்களை பொதுவாக பீல்குட், நகைச்சுவை- இந்த இரண்டும் கலந்த படங்களாக வகைப்படுத்தணும். அப்படியான சில படங்களைக் கொண்டு ஒரு பட்டியலை உருவாக்கினால் நல்லது."
அதிஷா: "என்னோட பட்டியலில் இருக்கிற படங்களை இங்க சொல்றேன் கேளுங்க. பாட்சா, உலகம் சுற்றும் வாலிபன், மைக்கேல் மதன காமராஜன், உள்ளத்தை அள்ளித்தா, அபூர்வ சகோதர்கள், லவ் டுடே, சூதுகவ்வும், வீராசாமி…"
பாக்யம் சங்கர்: "இருங்க.. வீராசாமின்னா நம்ம டி ஆர் படமா?"
அதிஷா: "அப்றம் வீராசாமி க்விண்டைன் டொராண்டினோவா டைரக்ட் பண்ணாரு? ஆமா. டி.ஆர்தான். எப்பப் பாத்தாலும் என்னை அறியாம சிரிச்சிடுவேன். அப்புறம் கரகாட்டக்காரன். அந்த லெஜெண்டரி வாழைப்பழ காமெடிக்காகவே அது இந்த பட்டியலில் இடம் பெறுது."
கவிதா: "அதுக்கு அதோட ஒரிஜினல் தில்லானா மோகனாம்பாளே சேத்துக்கலாமே"
அதிஷா: "மாயா பசார், சம்சாரம் அது மின்சாரம்.. அப்றம் தமிழ்ப்படம் நல்லா ஸ்பூப்… அதை இதில சேத்துக்கலாம்."
பரிசல்: "ஆமா, தமிழ்ப்படம் வரும்! ஆனா சம்சாரம் அது மின்சாரம்லாம் குடும்பப்படம்பா"
அசோகன்: "குடும்பத்துல மகிழ்ச்சி இல்லைனு சொல்ல வரீங்களா?"
பரிசல்: "அச்சச்சோ... வம்புல மாட்டி விடாதீங்க. என்னோட பட்டியலில் டாப்ல இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியை வைப்பேன். அதில் இருக்கும் வசனங்கள் இன்னிக்கு மக்களின் புழங்குமொழியாகவே ஆகிவிட்டன. அமைதிப்படையை நிச்சயமாக அதன் அரசியல் நகைச்சுவைக்காக சேர்த்தே ஆகணும். யாவரும் நலம் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியா இருக்கும்ணு என் நண்பர் ஒருத்தர் சொன்னார்."
கவிதா: "பாஸ். அது பேய்ப்படம்"
பாக்கியம் சங்கர்: "எல்லா பேய்ப்படமும் ரெண்டாவது தடவை பார்க்கும்போது காமெடி படம் ஆயிடும்."
பரிசல்: "நீங்க சுந்தர் சி-ய கிண்டல் பண்றீங்க. இதை விட்டால் விடிவி- விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைச் சொல்லலாம். மூடர் கூடத்தைக் கூட இதில் சேர்ப்பேன். சதுரங்க வேட்டை, சமீபத்தில் வந்த மெய்யழகன், லப்பர் பந்து… இதெல்லாம் சொல்லலாம் தானே…"
அதிஷா: "மெய்யழகன் மகிழ்ச்சியான படத்துல எப்படி சேத்தீங்க?"
கவிதா: "அதைப் பாத்துட்டு ரசிக்கலாம். ஆனா சிரிக்க முடியுமா? எமோஷனால படம் இல்லையா அது?"
பாக்கியம் சங்கர்: "கவிதா சொல்றது சரிதான். நான் என்னோட லிஸ்ட்லர்ந்து சில படங்களைச் சொல்றேன். அமைதிப்படை, அபூர்வசகோதரர்கள் இரண்டையும் சேக்கலாம். பழைய கிளாசிக் படங்களில் காதலிக்க நேரமில்லை, காசேதான் கடவுளடா இரண்டையும் சொல்லலாம். சுந்தர் சியின் உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு. அப்புறம் நடிகன் ஒரு ஜாலி படம். சூது கவ்வும் சேர்க்கலாம். மைக்கேல் மதனகாமராஜன் ஆல்டைம் பேவரைட். ரஜினி சார் படமான தில்லுமுல்லு."
கவிதா: "எனக்கு எப்பயுமே கண்டேன் காதலை படம் பார்த்தா ரிலாக்ஸா, மகிழ்வா இருக்கும்."
அசோகன்: "ஜப் வீ மெட் படத்தின் ரீமேக் தானே?"
கவிதா: "ஆமா. நான் மொழி படத்தைத்தான் மிக மகிழ்ச்சிகரமான படமாக முன் வைக்க விரும்புகிறேன்."
பா.சங்கர்/பரிசல்/அதிஷா மூவரும் கோரஸாக: "மொழி.. ஆமாமா.. அந்த லிப்ட் சீன், ப்ரம்மானந்தம் சீன்ஸ்.. அப்றம் அந்த ஸ்வர்ணமால்யா - ப்ரகாஷ்ராஜ் சீன்ஸ்..."
அசோகன்: "புலவர்களே.. சற்று சாந்தமாக உரையாடுங்கள். நான் பாய்ண்ட்ஸ் எழுத வேண்டுமல்லவா?"
கவிதா: "மொழில இருக்கும் பெண் பாத்திரப் படைப்புகள் மிக அழகா இருக்கும். யாரையும் காயப்படுத்தாத பீல் குட் மூவி. அப்புறம் காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள், சூதுகவ்வும்.. சதிலீலாவதியைக் கூட இதில் சேர்க்கலாம்னு தோணுது!"
அசோகன்: "நாம் சந்திப்பதற்கு முன்பாக எழுத்தாளரும் நடிகருமான அஜயன்பாலா கிட்ட சில படங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டிருந்தேன். அவர் தனக்கு சட்டென்று தோன்றிய சில படங்களின் பெயர்களைச் சொன்னார். அதை இங்கே சொல்கிறேன். காதலிக்க நேரமில்லை, சுவரில்லாத சித்திரங்கள், தம்பிக்கு எந்த ஊரு, ராஜாதிராஜா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், கல்யாண ராமன், வருஷம் 16, இதயத்தைத் திருடாதே, பாகுபலி, விடிவி…"
அதிஷா: "பாருங்க நான் ஒரு பேரை விட்டுட்டேன்..."
கவிதா: "நீங்க எழுதி இப்ப வந்துச்சே டிஎன்ஏ. அதுவா? அல்லது முன்னாடி வந்துச்சே ரத்தம்னு ஒரு படம் அதுவா?"
பாக்கியம் சங்கர்: "சே..சே…. அதிஷா அப்படியெல்லாம் சொல்லமாட்டாரு. செல்ப் ப்ரமோட் பண்ணத் தெரிஞ்சா அவர் ஏன் இங்க இருக்காரு?"
அதிஷா: "என்னை பரிசல் மட்டும்தான் கிண்டல் பண்ணுவாருன்னு நினைச்சா எல்லாரும் சேர்ந்திட்டீங்க.. நான் சொல்ல வந்தது ஆண்பாவம் படம்."
அசோகன்: "நல்ல படம்தான். இந்த வரிசையில் களவாணி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டையும் சேக்கலாம்னு சில நண்பர்கள் சொன்னார்கள்."
பரிசல்: "இந்தப் பட்டியலைப் பற்றி நாளை மீண்டும் பேசலாமா? இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம்."
-இப்படிச் சென்ற விவாதத்துக்குப் பின்னால் இரண்டு நாட்கள் தனித்தனியாக ஆலோசனை செய்த பின்னர் 15 படங்கள் கொண்ட பட்டியல் தயாரானது. அதில் இடம் பெற்ற படங்கள்:
மொழி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
அன்பே வா
மைக்கேல் மதனகாமராஜன்
காதலிக்க நேரமில்லை
இம்சை அரசன் 23 ம் புலிகேசி
தில்லானா மோகனாம்பாள்
அமைதிப்படை
உள்ளத்தை அள்ளித்தா
தில்லுமுல்லு
லப்பர் பந்து
இன்றுபோய் நாளை வா
தமிழ்ப்படம்
கரகாட்டக்காரன்
இதையடுத்து அந்திமழையின் சமூக ஊடகப்பக்கங்களிலும் இதற்கான ஒரு வாக்கெடுப்பை நடத்தினோம். அதில் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற படமாகத் தேர்வானது:
மைக்கேல் மதன காமராஜன்!
தமிழின் பல்வேறு காலகட்டங்களில் வந்த மகிழ்ச்சியான திரைப்படங்கள் பற்றிய பருந்துப் பார்வையுடனான கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த படம் இதில் இடம்பெறவில்லையே என நினைத்து நம்மைக் கழுவி ஊற்ற நினைக்கலாம்! இருக்கவே இருக்கிறது வாசகர் கடிதம் பகுதி. அதற்கு அனுப்புங்க. அடுத்த இதழில் வெளியிட்டு ஜமாய்த்துவிடுவோம்!