இளையராஜா 
சிறப்புப்பக்கங்கள்

இளையராஜாவைப் பதிலீடு செய்யுமா ஏ.ஐ.?

இரா.பிரபாகர்

தமிழ்த் திரையிசையில் ஒரு பெரும் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது.’

‘இல்லை. திரையிசையில் தேக்கம் என்பது இல்லை. மாற்றம் என்பதே சரி. ஜி.ராமநாதன் முதற்கொண்டு சாய் அபயங்கர் வரை இதுதான் நடக்கிறது. ஏனெனில் சினிமா என்பது சமகாலத்தில் இயங்குவது. அதில் நிரந்தரமாக யாரும் இருக்க முடியாது.’

‘மாற்றம் இருக்கலாம். ஆனால் பாடல் என்பது கேட்கும் படி இருக்க வேண்டாமா? ஏ.ஆர்.ரகுமானுக்குப் பிற்பாடு கேட்கும்படியான பாடல்கள் இருக்கின்றனவா?’

‘இது பூமர்களின் புலம்பல். அனியின் பாடல்கள் வெளியான இரண்டே நாட்களில் கோடிக்கணக்காணவர்கள் கேட்டு, சாரி பார்த்துவிடுகிறார்களே!’

‘ஆமாம். இது அணில் குஞ்சுகளின் காலம்தான். வேறென்ன சொல்ல…’

‘இளையராஜாவுக்கு அப்புறம் தமிழ்நாட்ல கம்போசர்ன்னு யாரு இருக்கா? ஏ.ஆர். ரஹ்மான் ஏதோ டெக்னாலஜிய வச்சு ஒப்பேத்திக்கிட்டு இருந்தார். இப்ப அதுவும் எடுபடல...’

‘அந்த டெக்னாலஜிய யாருவேணா பயன்படுத்தலாமே? ஏன் நடக்கல.... சும்மாவா ஏ.ஆர். உலகம் பூரா கொண்டாடப்படுறார்?’

‘இந்த மாதிரி வெட்டி விவாதங்களுக்கெல்லாம் இனி அவசியமே இல்ல. அதான் இந்த ஏ.ஐன்னு (AI) ஒண்ணு வந்திருக்காமே. நாம என்ன மாதிரி பாட்டு வேணும்னு சொன்னா அதுவே நிமிசத்துல போட்டு குடுத்துருமாமே..’

‘ஓகோ… அதவச்சுத்தான் இப்ப பொறந்த புள்ளைகள்லாம் மியூசிக் போடுதுகளா?’

சமீபமாக, எந்த தலைப்பிலான விவாதங்களும் ஏஐ யில் வந்து நின்றுவிடுகின்றன. குறிப்பாக இலக்கியம், ஓவியம், சினிமா, இசை ஆகிய நுண்கலைகளில் செயற்கை நுண்ணறிவு என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பற்றிய பேச்சுகள் நமது சூழலில் பரவலாக எழத்தொடங்கியுள்ளது. பொதுவான மேலோட்டமான புரிதலில், செயற்கை நுண்ணறிவு மனிதன் கொடுக்கும் தரவுகளிலிருந்துதானே ஒன்றை உருவாக்கும். அதிலும் கலைகளில் மனிதர்களை அது பதிலீடு செய்யவே முடியாது என்று பலரும் ஆணித்தரமாக சொல்லிவருகிறார்கள். அப்படித்தானா? கலைகளில் ‘ஏஐ’ மனிதர்கள் இட்ட பணிகளை மட்டுமே செய்யக்கூடியவைதானா? உண்மையிலேயே செயற்கை நுண்ணறிவு, கலைகளிலும் மனிதர்களுக்குப் போட்டியாக வந்துவிட்டதா? என்றைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனதோ அன்றைக்கே நாம் நுகரும் காட்சிப் படிமங்கள், வடிவங்கள், ஒலிகள் அனைத்தும் திருத்தப்படவும் மாற்றப்படவும் ஏதுவாகின. இன்று செயற்கை நுண்ணறிவு, இயந்திரக்கற்றல், தரவு அறிவியல் ஆகிய துறைகளின் இணைவு எல்லாத்துறைகளிலும் பாரதூரமான விளைவுகளை சாத்தியமாக்கியிருக்கின்றன. எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். இசைத்துறையில் செயற்கைநுண்ணறிவு என்னதான் செய்துவிடமுடியும் என்பதைப் பார்ப்போம்.

2004 ஆம் ஆண்டில் மாசூசெட்ஸ் மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழகங்களைச் சார்ந்த பேராசிரியர்கள் இருவர் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால், வேலைவாய்ப்புச் சந்தை பற்றிய ஆய்வொன்றை நடத்தினார்கள். எந்தெந்தத் துறைகளை எந்திரமயமாக்கலால் மாற்றமுடியாது என்று பட்டியலிடும்போது சாலைப் போக்குவரத்தின் ஓட்டுநர்களை செயற்கைநுண்ணறிவால் பதிலீடு செய்யமுடியாது என்று கணித்தனர். ஆனால் பத்தே ஆண்டுகளில் கூகுள் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் ஓட்டுநர்கள் இல்லா வாகனங்களை வெற்றிகரமாக சாலைகளில் ஓடவிட்டனர்.

இதுபோலவே செயற்கை நுண்ணறிவு, அதன் படிமுறைத் தீர்வு எனப்படும் அல்கோரிதம் மூலம் எதிர்கால வேலைச் சந்தை பற்றிய விவாதங்களில் கல்வி, மருத்துவம், மேலாண்மை, வங்கி, போக்குவரத்து, சேவை இப்படி பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் நிகழலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால் கலைத்துறைகளில் மனிதனோடு இயந்திரங்கள் ஒருபோதும் போட்டிபோட முடியாது என்று கூறிவந்தனர். காரணம் மனித உணர்வுகளை ஒரு இயந்திரம் எப்படி உணரமுடியும்? மனித ஆன்மாவின் விகசிப்பை செயற்கை நுண்ணறிவால் எப்படி வெளிப்படுத்த முடியும் என்று வாதிட்டனர். குறிப்பாக இலக்கியம், ஓவியம், இசை போன்ற துறைகளைச் சார்ந்த கலைஞர்களை இயந்திரங்கள் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது என்றே கருதினர்.

மற்ற கலைத்துறைகளைத் தவிர்த்துவிட்டு இசையை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஏனெனில் இசை கலைகளின் அரசியாகக் கூறப்படுவது. அதாவது அறிவியலின் அரசியாகக் கருதப்படும் கணிதவியல் முழுக்க தர்க்க முறையில் செயல்படுவதைப் போலவே இசை எளிதில் தர்க்கத்தால் விளங்க அல்லது விளக்கமுடியாத அரூபமான கலையாக இருக்கிறது. ஆனால் இசையும் ஒரு வகையில் முழுக்க கணித அடிப்படையிலானதே என்றாலும் அது கேட்பவனைச் சென்றடையும் இறுதி வடிவம் பூடகமானதாகவே இருக்கும். ஆகவே இசையை செயற்கை நுண்ணறிவின் படிமுறைத் தீர்வுகளால் அணுகமுடியாது என்றே கலைஞர்களும் ஆய்வாளர்களும் கருதி வந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக இசையியல் பேராசிரியர் டேவிட் கோப் என்பவர் ஒரு அதிரடியான பரிசோதனையைச் செய்துபார்த்தார். மேற்கத்தைய செவ்வியல் இசை ஆய்வாளரான இவர் கான்செர்ட்டோக்கள், கோரல்கள், சிம்பொனிகள், ஓப்ராக்கள் ஆகிய இசை வகைகளை உருவாக்கக்கூடிய கணினி நிரல்களை எழுதினார். ‘இசையியலில் செயற்கை நுண்ணறிவுப் பரிசோதனைகள்’ என்று அழைக்கப்பட்ட அம்முயற்சியில் குறிப்பாக ஜெர்மானிய இசை மேதையான செபாஸ்டியன் பாக்கின் பாணியை உள்வாங்கும் விதமாக அந்தக் கணினி நிரலை ஏழு ஆண்டுகள் உழைத்து உருவாக்கினார். அவர் உருவாக்கிய ‘ஈ எம் ஐ’ எனும் நிரல் மூலம் ஒரே நாளில் செபஸ்டியான் பாக் பாணியிலான 5000 கோரல்களை உருவாக்கினார். அத்தோடு நிற்காமல் ஒரு பெரும் இசை விழாவில் சில கோரல்களை ஒலிக்கச் செய்தார். பார்வையாளர்கள் அது அற்புதமான இசையாக இருந்ததாகவும் தங்கள் மனதின் ஆழத்தை எப்படித் தொட்டது என்பது குறித்தும் விளக்கினர். அந்த இசை கணினியால் இயற்றப்பட்டது என்பதை அறிவித்தபோது சிலர் அதிர்ச்சியில் மௌனமாயினர். பலர் கடும் எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.

அத்தோடு டேவிட் நிற்கவில்லை. தன் கணினி நிரலை தொடர்ந்து மேம்படுத்தி பீத்தோவன், சோப்பின் போன்ற செவ்வியல் மேதைகளின் இசைகளையும் நகலெடுக்கச் செய்தார். இவ்வாறு ‘கணினியால் இயற்றப்பட்ட செவ்வியலிசை’ எனும் பெயரில் ஒரு இசைத்தட்டையும் வெளியிட்டார். அது வரவேற்பையும் கண்டனங்களையும் ஒருங்கே பெற்றது. டேவிட்டின் தொடர்ந்த இச்செயல்பாடுகள் தீவிரமான செவ்வியல் இசை ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியது. அத்தகைய எதிர்ப்பாளர்களில் ஒருவரான மற்றுமொரு பேராசிரியரான ஸ்டீவ் லார்சன் டேவிட்டை ஒரு பரிசோதனைக்கு அழைத்து சவால்விட்டார். அந்தப்போட்டியில் தொழில் முறை பியானோ கலைஞர்கள் மூன்று வெவ்வேறு இசைத்துணுக்குகளை இசைக்கவேண்டும். அவற்றில் ஒன்று பாக் இயற்றியதாகவும், மற்றொன்று கணினியால் உருவாக்கப்பட்டதாகவும், இன்னொன்று லார்சன் இயற்றியதாகவும் இருக்கவேண்டும் என்று கூறினார். ஆரெகான் பல்கலைக்கழகத்தின் அரங்கில் இசை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் நிறைந்த ஒரு அவையில் அவ்வாறே மூன்று இசைத்துணுக்குகளும் இசைக்கப்பட்டன. நிகழ்வின் முடிவில் மூன்று இசைகளையும் தரப்படுத்த பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மனிதர்களால் இயற்றப்பட்ட ஆன்மாவைக் கிளர்ந்தெழச் செய்யும் இசையையும் கணினியால் இயந்திரத்தனமாக உருவாக்கப்பட்ட இசையையும் சுலபமாகப் பார்வையாளர்களால் இனம் கண்டுகொள்ள முடியும் என்று லார்சன் உறுதியாக நம்பினார். நிகழ்ச்சியின் முடிவில் நடத்தப்பட்ட கணிப்பில் கணினி உருவாக்கிய இசை உள்ளத்தைத் தொட்டதாகவும், பாக்கின் இசையை லார்சன் இயற்றியதாகவும், லார்சனின் இசையை கணினி உருவாக்கியர்தாகவும் பார்வையாளர்கள் கணித்தனர். ஆனாலும் இயந்திரங்கள் உருவாக்கும் இசையில் ஏதோ ஒரு குறையிருப்பதாகவும், அதில் ஜீவன் இல்லை என்பதாகவும் சில ஆய்வாளர்கள் கூறியபடியே இருக்கிறார்கள். இது ‘எங்கம்மா சுட்ட தோசை மாதிரி வராது’ என்பது போன்ற ஒரு மனச்சாய்வான கருத்தாகத்தான் இருக்கமுடியும். ஏனெனில் இது கணினியால் உருவாக்கப்பட்டது என்று முன்கூட்டியே தெரிவிக்காத பட்சத்தில் யாரும் அத்தகைய குறைபாடுகளைக் கூறவில்லை.

ஆக இசை வகைமைகளை பகுத்தாய்ந்து பார்க்கும்போது, தாளக் கட்டுகளின் வகைகள், மெட்டுகள்(melody), அரேஞ்மண்ட் எனப்படும் இசைச் சோடனை முறை(arrangment / orchestration), அதில் காணப்படும் அடுக்குகள் (layers), ஹார்மனி அமைப்புகள் (harmony) என்பன ஒவ்வொரு இசைக் கலைஞரையும் தனித்து அடையாளப்படுத்துகின்றன. ஒரு கலைஞரின் மேற்கண்ட இசைக்கூறுகளை தரவுகளாக அலசி கற்றுக்கொள்ளும் கணினி நிரலானது அத்தகைய இசையை எளிமையாக உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. அப்படியானால் மனிதர்களால் வழங்கப்படும் தரவுகளிலிருந்துதானே அது கற்றுக்கொண்டு திரும்ப வழங்குகிறது? என்று கேட்டால் அது உண்மைதான். ஆனால் அது கற்றுக்கொண்டு அப்படியே திரும்பக் கொடுப்பதில்லை. மாறாக படைப்பாற்றலுடன் நாம் எதிர்பார்க்கும் மனித ஆன்மாவைத் தொடும் உணர்ச்சிகரமான படைப்புகளை உருவாக்கும் ஆற்றலுடையதாக தன்னை அது தகவமைத்துக் கொள்கிறது.

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கருவி மட்டுமல்ல. அது ஒரு முகவராகவும்(agent) செயல்படக்கூடியது. அது விசயங்களை மாற்றவும் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக்கூடியதாகவும் இருக்கும் எனும் யுவால் நோவா ஹராரியின் ( இஸ்ரேலின் வரலாற்றாசிரியர்) கருத்து கவனிக்கத்தக்கது. அவர் ஒரு உதாரணத்தையும் தன் உரையொன்றில் கூறுகிறார். ஒரு கத்தியைக் கொண்டு காய்கறிகளை நறுக்கலாம். மனிதத் தலையையும் வெட்டலாம். அந்த முடிவைக் கத்தி எடுப்பதில்லை. கத்தியைப் பயன்படுத்தும் மனிதனே எடுக்கிறான். செயற்கை நுண்ணறிவில் கத்தியே எதை வெட்டுவது என்ற முடிவையும் எடுக்கத் தொடங்கும் என்பதே அதிலுள்ள சிக்கல் என்கிறார்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையிசை உள்ளிட்ட வெகுசன இசைத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மூலமான சாதனங்களின் வருகையையும் அதனால் இசை உருவாக்கமுறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்வதையும் அவதானித்து வருபவன் என்ற முறையில் தமிழக இசைத்துறையில் செயற்கை நுண்ணறிவின் புழக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். இணையத்தில் உலாவியதில் பத்திற்கும் மேற்பட்ட இசை உருவாக்க ‘ஏஐ’ செயலிகள் இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதில் ‘SUNO AI’ எனும் செயலியை பரிசோதிக்கத் தொடங்கினேன். ஆங்கிலத்தில் பாடல் வரிகளை உள்ளிட்டு, jazz, blues, pop, rock, hip-hop, country இப்படியான எண்ணற்ற வகைகளில் ஒன்றைத் தேர்வு செய்து அத்தோடு, ஆண்குரலா பெண்குரலா, என்ன இசைக்கருவிகள் (நைலான் கிதார், பியானோ, கிளாரிநட்) இன்னும் பலவகையான குறிப்புகளையும் பதிவிட்டு பொத்தானை அழுத்திய 30 நொடிகளிலிருந்து ஒரு நிமிடத்திற்குள் இரண்டு பாடல்களை முழுமையாக நம் முன்னால் எறிந்துவிடுகிறது. அது நம்ப முடியாத உலகத் தரத்தில் இருக்கிறது. பாடகர்கள் பாடும் முறை, ஹார்மனி அமைப்புகள், இசைக்கருவிகளின் துல்லியம், ஒலிக்கலவை ஏறத்தாழ அப்படியே ஒலிபரப்பு செய்யும் நேர்த்தியுடன் இருப்பதைக் கண்டு ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தே போனேன்.

ரகுமான்

சரி. மேற்கத்திய இசைக்குச் சரிதான். நமக்கு வேலைக்கு ஆகுமா என்று சோதிக்க முயன்றேன். ஒரு பாரதியாரின் பாடலை உள்ளிட்டு சில குறிப்புகளைக் கொடுத்தபோது மெட்டமைப்பு கன்னாபின்னாவென்றும் மற்ற அம்சங்கள் வெகு சிறப்பாகவும் இருந்தன. உச்சரிப்பு கொடூரமாக இருந்தது. தொடர்ந்து மீண்டும் மீண்டும் அந்த செயலியை விளங்கிக் கொள்ள முயற்சித்தேன். இப்போது அதே பாரதியாரின் பாடலுக்கு ஒரு மெட்டமைத்து அதை எந்த கருவியின் துணையுமில்லாமல் பாடி உள்ளிட்டபோது நம்ப இயலாத அளவுக்கு இரண்டு பாடல்களைத் துப்பியது. இப்போதும் ஒரு சிக்கல் இருந்தது. அது சிற்சில இடங்களிலான உச்சரிப்புக் குழப்பம் இது ‘ஏஐ’ உருவாக்கம் என்பதைக் காட்டிக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் தேடியதில் அந்தச் செயலி ஆங்கிலம் தவிர்த்து ஸ்பானிஸ், சீனம் ஆகிய சில மொழிகளோடு தமிழையும் வாசிக்கக்கூடியது என்பது தெரிய வந்தது. இப்போது அதே பாடலில் பாடல் வரிகளை தமிழில் எழுதி உள்ளிட்டபோது நூறு விழுக்காடு உச்சரிப்பு சுத்தமான பாடலாக வெளிவந்தது. இன்றைய இசைச் சந்தை நிலவரத்தில் ஏறத்தாழ ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சமும், சில பல நாள்களும் செலவாகக்கூடிய ஒரு பாடலை சில நிமிடங்களில் கொடுப்பதோடு அதில் திருத்தங்கள் செய்யவும் அனுமதிக்கிறது.

இப்போதும் அதே வினா எழுகிறது. நாம் / மனிதன் சொன்னதைத் தானே செய்கிறது என்று கேட்டால் ஆம் சொன்னதையும் செய்கிறது. சொல்லாததையும் செய்கிறது. அந்த மெட்டின் தன்மையை உள்வாங்கி அதுவே இசை ரீதியான சில முடிவுகளை எடுக்கிறது. அது நாம் எதிர்பாராத அற்புதமான தருணங்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது. மொத்தத்தில் இசை உருவாக்கம், இசைக் கலைஞர்கள் பற்றிய பல தொன்மங்களை செயற்கை நுண்ணறிவு ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறது என்று சொல்லலாம். இனிமேல் இசையைக் கற்றுக்கொண்டு, கூடுதலாக இறைவனின் அருளும் கைவரப்பெற்றவர்களே இசையமைக்க முடியும் என்ற சூழல் மாறும். எந்த இசையறிவும் இல்லாமல் மெட்டுக்களை மட்டுமே உருவாக்கத் தெரிந்த பலரும் (டி.ராஜேந்தர் போன்று) எளிதாக இசையமைக்க முடியும். ஏற்கனவே இணைய ஊடகம் சனநாயகப் பட்டதன் கொடுமைகளை நாம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எந்தக் கருத்தைக் கூறுவதற்கும் யாருக்கும் எந்த தகுதிகளும் தேவையில்லை என்பதால் எல்லோரும் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் சனநாயகப் பட்டதன் விளைவுகளைப் போன்றே கலைகளும் எல்லோரும் கையாளக்கூடியவைகளாக மாற்றம்பெற்றதன் விளைவுகளை நாம் அனுமானிக்க முடியாத இடத்தில் இப்போதைக்கு இருக்கிறோம். அப்படியானால் இளையராஜா போன்ற முழுமையான கம்போசர்கள் உருவாவதற்கான வாய்ப்பு இனி இல்லையோ? என்றால் இளையராஜாவின் அபிமான ‘பாஃக்கின்’ சிம்பொனிகளையே உருவாக்கும் ‘ஏஐ’ இளையராஜாவின் இசையையையும் உருவாக்கும் காலம் தூரத்தில் இல்லை என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.