அந்த இளைஞர்கள் அவரிடத்தில் தந்தையைப் போல அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர்கள் அந்தக் கருத்துக்களைப் பரப்ப தங்களது எழுத்தாற்றல், பேச்சாற்றல், படைப்பாற்றல், பலரைச் சேர்த்து அடித்தளத்திலே இயக்கத்திற்கு அமைப்புகளை உருவாக்கும் ஆற்றல் அனைத்தையும் அர்ப்பணித்திருந்தார்கள். தங்கள் இளமையும் வாழ்வும் அவருக்கே என்ற அர்ப்பணிப்பு அது. அவரது கருத்துக்களிலே ஒன்று பொருந்தாத் திருமணத்தை எதிர்ப்பது. பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக, சொத்துக்கு வாரிசுயில்லை
என்ற காரணத்துக்காக, வயது முதிர்ந்தவர்கள் மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே அவர் கண்டித்து வந்தார். பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.
அவர் ஒருநாள், எழுபது வயதைக் கடந்த பின், தனக்குப் பணிவிடை செய்து வந்த இளம் பெண்ணை மணந்து அவரைத் தன் வாரிசாக அறிவித்தார். அந்த அறிவிப்பைப்க் கண்ட அவரது இயக்கத்தினர் திகைத்துப் போனார்கள், திடுக்கிட்டார்கள். கண்ணீர் விட்டார்கள்
தலைவருக்குத் தங்களது உழைப்பு தம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்பதை அறிந்த தொண்டர்கள் அதைத் தங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதையாகக் கருதி சுயமரியாதையின் பொருட்டு அந்தத் இயக்கத்தை விட்டு வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கினார்கள்.
கட்சியைப் புதிதாகத் தொடங்கினாலும் முந்தைய இயக்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அந்த இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்று தனிநாடு கோருவது. அதையே தங்களது கொள்கையாகவும் ஏற்று அந்த லட்சியத்தை அடையமுடியாவிட்டால் மரணத்தைத் தழுவுவது என்று மேடைகளில் முழங்கினார்கள். அரசு ஒருநாள் பிரிவினை கோரும் இயக்கங்கள் தடை செய்யப்படும் என்று அறிவித்தது. தனிநாடு கோரிக்கையைத் தாங்கள் கைவிட்டுவிட்டதாக அந்தப் புதிய கட்சியினர் அறிவித்தனர். அறிவித்த கொள்கைகளை விட சட்டமன்ற நாற்காலிகளுக்கு அவர்கள் விசுவாசமாக இருக்கிறார்கள் என சரித்திரம் குறித்துக் கொண்டது
காலம் உருண்டோடியது. வாரிசுப் பிரச்னையில் வெளியேறி உருவான கட்சிக்கு இப்போது வேறு ஒருவர் தலைவர். அவர் முதுமையைத் தொட்ட போது முன்பு அவர் சார்ந்திருந்திருந்த இயக்கத்தின் பெரியவரைப் போலத் தனது வாரிசையே தன் கட்சியின் தலைவராக நியமித்துப் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். விருட்சம் தான் தோன்றிய விதைக்கு- வாரிசு அரசியலை எதிர்ப்பது என்ற கருத்தியலுக்கு- விசுவாசமாக இல்லை. தன்னுடைய விதைக்கு -குடும்பத்திற்கு- விசுவாசமாக இருந்தது வாரிசுக்குப் பட்டம் கட்டியதைக் கண்டு சினம் கொண்டு சீறியெழுந்த ஒருவர் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறி இன்னொரு கட்சி கண்டார். காலப் போக்கில் அந்த மலரின் மலர்ச்சி வாடியது. அவர் ‘வாரிசுக்கா பதவி?’ எனக் கேட்டு யாரை எதிர்த்தாரோ அந்த வாரிசையே அண்டி கோரிக்கை ஒன்று வைத்தார். என்ன கோரிக்கை? அதுவரை தனது கட்சிப் பொறுப்பிலோ, அரசியல் நடவடிக்கைகளிலோ ஈடுபட்டிருந்திராத தனது வாரிசுக்குத் தேசியப் பேரவையில் ஒரு உறுப்பினர் பதவி. அவரும் தனது எதிர்ப்பிற்கு விசுவாசமாக இருக்கவில்லை. தன் மகனுக்கு விசுவாசமாக இருந்தார்.
காலங்காலமாக அரசியலில் அரங்கேறி வரும் இந்த நாடகங்களைப் பார்த்து வந்த இன்னொரு தலைவர் தன் மகனோ குடும்பத்தினரோ தனது கட்சியில் இடம் பெற மாட்டார்கள் என்று அறிவித்தார். ஆனால் இன்று அவரது மகன் அந்தக் கட்சியின் தலைவர். அந்த மகன் கட்சித் தலைவரானதால் காலியான இளைஞர் பிரிவுத் தலைமையில் அவரது பேரன். அவர் தெளிவாக, நான் சொல்கிறவர்தான் கட்சியின் பொறுப்பில் இருக்க முடியும். அதை ஏற்காதவர்கள் வெளியேறலாம் என்று அறிவித்துவிட்டார். அவர் தனது ஆரம்பகால லட்சியங்களுக்கு விசுவாசமாக இல்லை. அவருக்குத் தன் வாரிசுகளின் நலமே தனது நலம்.
விசுவாசம் என்பது அதிகாரப் படிநிலையில் மேலே இருப்பவர்கள் தங்களுக்குக் கீழே இருப்பவர்களிடம் எதிர்பார்க்கும் விழுமியம். தொழிலாளி முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். முதலாளி தொழிலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டியதில்லை. முதலாளியின் நோக்கங்களுக்கு உதவியாக இருக்க மறுக்கும் தொழிலாளியை முதலாளி பதவி நீக்கம் செய்யலாம். பண்ணையாருக்கு பண்ணையாள் விசுவாசமாக இருக்க வேண்டும். பண்ணையாளுக்கு நிலச்சுவான்தார் விசுவாசமாக இருக்க வேண்டியதில்லை. தனக்குச் சரிப்படாதென்றால் அவர் குத்தகையை மாற்றி இன்னொருவரிடம் ஒப்படைக்கலாம். குடும்ப உறவில் தன்னை அதிகார வரிசையில் மேலானவனாக இருப்பதாகக் கருதும் கணவன் மனைவிக்கு விசுவாசமானவனாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் மனைவி பெய்யெனெப் பெய்யும் மழையாக இருக்க வேண்டும். அதே போல அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்களுக்கு அவர்கள் என்ன செய்தாலும் தொண்டர்கள் அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். தீக்குளிக்க வேண்டும். சிறை செல்ல வேண்டும். குடும்பத்தைப் புறக்கணித்துக் கட்சிக்குச் செலவிட வேண்டும். தலைவர் ஊருக்கு வருகிறார் என்றால் கடன்பட்டாவது பெரும் பொருட்செலவில் பிரமாதமான வரவேற்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் தலைவர்கள் தொண்டர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டியதில்லை தொண்டனா, குடும்பமா என்ற கேள்வி எழும் போது. குடும்ப உறுப்பினர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்தால் போதும்.
விசுவாசம், கடப்பாடு, மாறாப்பற்று, பற்றுறுதி என எந்தச் சொல்லால் குறிக்கப்பட்டாலும் அந்தக் கருத்தியல் நிலப் பிரபுத்துவத்தின் எச்சம். அரசர் காலத்து விழுமியம். அதன் ஆதாரம் பொருளாதாரம். பொருள் இல்லாருக்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் இல்லாதவர்கள் விசுவாசிகளாகவே வாழ்ந்து முடிய வேண்டும். இந்தக் கருத்தியல் ஏற்கத்தக்கது தானா?.
உங்களுக்கு நீங்களே விசுவாசமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.