சிறப்புப்பக்கங்கள்

அதிக பெண் குழந்தைகள் சேர்த்த பள்ளி!

ல.பெ.ராதிகா

சென்னை மாவட்டத்தில் ஒரே ஒரு அரசுதொடக்கப் பள்ளியாக விளங்கும்  வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி தனியார் பள்ளிகளை விஞ்சி நிற்கும் அளவிற்கு அடிப்படை வசதியிலும் கற்றல் கற்பித்தல் முறையிலும் தனித்துவமாகத் திகழ்கிறது.

1987ஆம் ஆண்டு 13 மாணவர்களுடன் ஓராசிரியர் பள்ளியாக தொங்கப்பட்டது. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் படிப்படியாக முன்னேறி மாணவர்களின் எண்ணிக்கை 500ஆகவும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 7ஆகவும் உயர்ந்தது. காலப்போக்கில் பெற்றோர்களின் ஆங்கில கல்வி மோகத்தால் 2008ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. 92 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்கள் என பணியாற்றினர். இதை சரி செய்ய, கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 2013-14 ஆம் கல்வி ஆண்டில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்த மனுவின் அடிப்படையில், பள்ளியின் பழைய கட்டடம் அகற்றப்பட்டு ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டது. அடுத்து, ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய சத்துணவுக் கூடம் கட்டப்பட்டது. இது மக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் 92ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 355ஆக உயர்ந்தது. மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மூன்று கூடுதல் ஆசிரியர்களை கல்வி அலுவலர்கள் பணியமர்த்தியுள்ளனர்.

ஒரு மாணவனுக்கு ஆரோக்கியமான கல்வியை கொடுக்க வேண்டுமென்றால் அடிப்படை தேவைகள் சரியாக இருக்க வேண்டும். அதில் உட்கட்டமைப்பு முதன்மையானது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் மூலம் விசாலமான வகுப்பறைகள், வேர்ல்டு விஷன், அரிமா சங்கம், டாடா கிளாஸ் எட்ஜ் ஆகிய அமைப்புகள் மூலம் இரண்டு டிஜிட்டல் வகுப்பறைகள், பெங்களூரு சிபிஎன் அறக்கட்டளை மூலம் ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 9 கணினிகளுடன் கூடிய  மையம்,  மேசைகள், உட்காரும் பலகைகள், வழங்கப்பட்டுள்ளன. கழிப்பறை புதுப்பிக்க நிதி வழங்கப்பட்டுள்ளது.

 பள்ளியில் தன்னார்வலர்கள் மூலம் தேசிய விழாக்கள், இலக்கிய மன்றம், ஆண்டு விழா, விளையாட்டு விழா, பெற்றோர்களுக்கான மகளிர் தினம், உணவுத் திருவிழா தவறாமல் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களையும் சுழற்சி முறையில் மேடையேற்றி பேச வைப்பதால் பெற்றோர்களின் விருப்பப் பள்ளியாக இது உள்ளது. மேலும் திறமையான ஆசிரியர்கள், வலுவான பள்ளி மேலாண்மை குழுவால் கல்வி அலுவலர்களுக்கு இது ஒரு கனவுப் பள்ளியாக திகழ்கிறது. அதற்கு சான்றாக தற்போதைய முதன்மை கல்வி அலுவலரின் முயற்சியால் ‘ஆதவா‘ அறக்கட்டளை மூலம் ரூ. 12,000 ஊதியத்தில் இரவுக் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த அறக்கட்டளை மூலம் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் மாணவர்களின் வாசிப்பு பயிற்சியை மேம்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக் குழு மூலம் Lending Library (வாடகை நூலகம்) உருவாக்கப்பட்டு மாணவர்களின் வீடுகளுக்கே சென்று புத்தகங்கள் வழங்கப்பட்டன. இச்செயல் அனைத்து கல்வி அதிகாரிகளாலும் பாராட்டப்பட்டது.

இந்தப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. இது கல்வியில் பின் தங்கிய மாணவர்களின் கல்வி நலனிற்கு உகந்ததாக உள்ளது. அதில் பயிலும் மாணவர்களுக்கான மாலை நேர

சிற்றுண்டியைத் தன்னார்வலர்களும் பள்ளி மேலாண்மை குழுவும் இணைந்து வழங்கி வருகின்றனர்.

இப்பள்ளிக்கு அதிக பெண் குழந்தைகள் சேர்த்தமைக்காக பாராட்டுச் சான்றிதழும், சென்னை மாநகராட்சியில் தூய்மையான பள்ளிக்கான பாராட்டு சான்றிதழும் 2017இல் வழங்கப்பட்டது.

ல.பெ.ராதிகா அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், சென்னை சிட்கோ நகர்

நவம்பர், 2022