காரைக்குடிக்கு பெண் பார்க்கப் போகலாம் என அப்பா கவிஞர் கண்ணதாசனும், அம்மா பார்வதியும் அழைத்தார்கள். நீங்களே பார்த்து முடிவு பண்ணிவிடுங்கள் என்று சொல்லியும், விடாப்பிடியாக என்னை அழைத்து சென்றார்கள். அப்பா, அம்மா, பெரியம்மா (அப்பாவின் முதல் மனைவி), அத்தைகள் என எல்லோரும் என்னை சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். நான் எதுவும் பேசவேயில்லை. அவர்களே எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டு, திருமண தேதியும் முடிவு செய்துவிட்டு, பெண்ணைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டார்கள்.
எல்லாவற்றையும் நீங்களே முடிவு செய்துவிட்டீர்கள். பிறகு எதற்கு என்னைக் கேட்கிறீர்கள் என்றேன். சொல்வதை கேள். பெண்ணைப் பிடித்திருக்கிறதா? இல்லையா? என்றார்கள். பிடித்திருக்கிறது என்றேன். அப்பா - அம்மா தேர்வின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. நல்ல பெண்ணாகத்தான் தேர்வு செய்வார்கள் என்று.
என்னுடைய வருமானத்தை அம்மா இறக்கும் வரை அவரிடம் தான் கொடுத்தேன். இதனால் எந்த மனக்குறையும் என மனைவிக்கு (மீனா) ஏற்படவில்லை. எங்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய மன ஒற்றுமையும், விட்டுக்கொடுக்கிற மனோபாவம் இருந்தது.
பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்வதில் சில பிரச்சனைகளும், கருத்துவேறுபாடும் வரலாம். ஆனால், குழந்தைகள் நலன் கருதியாவது பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இதுநாள் வரை கூட்டுக்குடும்பமாகத்தான் இருக்கிறோம்.
எங்கள் வம்சத்தின் பழக்க வழக்கங்களை முன்பு என் அம்மா பின்பற்றிக் கொண்டிருந்தார். இன்று என் மனைவி பின்பற்றிக் கொண்டிருக்கிறார். நாளை என் மருமகள் பின்பற்றுவார். இந்த மரபு தொடர்பே எனக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
எல்லா உறவுகளும் வேண்டும் என நினைப்பவர் என் மனைவி. அதனாலேயே எங்கள் வீட்டு விசேஷங்களில் நிறைய உறவினர்கள் இருப்பார்கள். அதேபோல், விசேஷங்கள் எதற்காவது போவதாக இருந்தால், அவர் தான் நினைவுபடுத்துவார். என் அம்மா எங்களுடன் கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் இருந்ததால், என் மனைவிக்கு இந்த நற்பண்புகள் இயல்பாகவே வந்துவிட்டது.
எனக்கு திருமணமாகி நாற்பத்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்று வரை எனக்கு நான் துணி எடுத்ததே கிடையாது. என் மனைவிதான் எடுத்துக் கொடுப்பார். உள்ளாடைகள் உட்பட. எனக்கு பிடித்த நிறைய விஷயங்களை என் மனைவி செய்திருந்தாலும், அவருக்கு நான் குறைவாகவே செய்திருக்கிறேன். அவருக்கு வாசனை திரவியம் மிகவும் பிடிக்கும். அதனால் எங்கு சென்றாலும் நல்ல வாசனை திரவியம் கிடைத்தால் வாங்கி வந்துவிடுவேன். பல ஆயிரம் ரூபாய் என்றாலும் பொருட்படுத்தமாட்டேன்.
அதேபோல், அவருக்கு அவரே வாங்கி வந்த சேலையை என்னிடம் காட்டுவார், அவருக்குப் பிடித்துத் தான் அதை வாங்கி வந்திருப்பார். அது எப்படி இருந்தாலும், நன்றாகவே இருக்கிறது என்று சொல்லிவிடுவேன்.
அதிகபட்சமாக வெளியே எங்கேயாவது கூட்டிப்போக சொல்வார். வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையே எங்கேவாது சுற்றுலா சென்று வருவோம். இத்தனை ஆண்டுகளில் அவர் என்னிடம் எதிர்பார்த்தது இதைத்தான்.
ஆகஸ்ட், 2022