1989 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. ராஜீவ் காந்திக்கு எதிராக போபர்ஸ் ஊழலை தூக்கிப் பிடித்து களமாடிக் கொண்டிருந்தார் வி.பி.சிங். அவர் அங்கம் வகித்த ஜனதா தளம் கட்சி தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்கும் என்று மீடியாக்கள் கணித்தன. அந்த சமயத்தில் தமிழக ஜனதா தளத்தின் தலைவராக இருந்தவர் சிவாஜி கணேசன். தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் துவக்கி, அதிமுகவின் பிளவுபட்ட அமைப்பாக இருந்த ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் மிக மோசமான தோல்வியை அடைந்திருந்தார் சிவாஜி. அரசியலில் அவர் பட்ட அடிக்கு மருந்தாக, தமிழக ஜனதா தள தலைவராக அவரை நியமித்து ஆறுதல் அளித்தார் வி.பி.சிங்.
அப்போது சேலத்தில் மாநில ஜனதா தள மாநாடு நடந்தது. கட்சியின் தலைவர் பொம்மை, வி.பி.சிங், ஹெக்டே போன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். அன்று நடந்த கூட்டமும் , ஊர்வலமும் சேலம் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பதிவாக இருக்கிறது. பத்திரிகையாளனாக அந்த நிகழ்வுகளைப் பற்றி எழுத நானும் போயிருந்தேன். ‘தொண்டனாக இருந்து மற்றவர்களுக்கு தோள் கொடுத்தே பழகிவிட்டது. அந்த என் பரிதாப நிலையைக் கேலி செய்யாமல் எனக்கு தமிழ்நாடு ஜனதா தள தலைவர் என்ற ரோலைத் தந்திருக்கிறார் வி.பி.சிங். உங்களுக்குத் தெரியுமே! எந்த ரோல் கொடுத்தாலும் நான் வெளுத்துக்கட்டி விடுவேன் என்று' இப்படித் துவங்கி சிம்மக் குரலில் கர்ஜித்தார் சிவாஜி. பின்பு நடந்த தேர்தலில் இங்கே தி.மு.க. - ஜனதா தள கூட்டணி படுதோல்வி அடைந்தது. டெல்லியில் வி.பி.சிங் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் சில மாதங்களில் அதுவும் கவிழ்ந்தது. சந்திர
சேகர் தலைமையிலான அரசு, தி.மு.க. ஆட்சியைக் கலைத்தது. இந்த சூழல்கள் சிவாஜியின் அரசியல் பயணத்திற்கு தடைகளை ஏற்படுத்த காயம்பட்ட மனதுடன் தன்னை அரசியலிலிருந்து விடுவித்துக் கொண்டார் சிவாஜி. அரசியல்வாதி என்ற ரோல் ஒரு வெற்றிகரமான ரோலாக அவருக்கு அமையவில்லை. திரையுலகம் கொடுத்த முதல் மரியாதையை அரசியல் தளம் கொடுக்கவில்லை.
ஜனதா தள தலைவர் பதவி என்பது அரசியல் கிரிக்கெட்டில் சிவாஜி ஆடிய கடைசி இன்னிங்ஸ். திராவிட இயக்க பற்றாளராக, தி.மு.க. உறுப்பினராக, காமராஜ் பக்தனாக, இந்தியாவின் விசுவாசியாக பல கட்டங்களை தனது அரசியல் வாழ்வில் கடந்து வந்தவர் சிவாஜி. 1946ல் ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற அண்ணா எழுதிய நாடகத்தின் மூலம் விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி, சிவாஜி கணேசனாக அவதாரம் எடுத்தார். 1952ல் முதல் படமான பராசக்தி, அதைத் தொடர்ந்து திரும்பிப் பார், மனோகரா என கலைஞர் கதை, வசனத்தில் பல வெற்றிப் படங்களில் சிவாஜி நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். அப்போது எம்.ஜி.ஆரும் தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார் பெரியார் வழி வந்ததால். தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் பலர் நாத்திகர்களாக இருந்தனர். அந்த சமயத்தில் இயக்குநர் பீம் சிங்குடன் சிவாஜி திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த விவகாரம் சிலரால் ஊதிப் பெரிதாகப்பட்டது. கடைசியில் சிவாஜி தி.மு.க.வை விட்டே விலக நேர்ந்தது. அதன் பிறகு திரையுலகில் தி.மு.க.வின் முக்கிய அடையாளமாக எம்.ஜி.ஆருக்கான பாதை விரிந்தது.
தி.மு.க.வில் இருந்து வெளிவந்த பிறகு சில வருடங்கள் படங்களில் கவனம் செலுத்தினார் சிவாஜி. சுயநலமில்லாத காமராஜரின் சேவை பிடித்துப் போக அவரது பாதையில் பயணிக்கத் துவங்கினார். 1975ல் காமராஜர் மறையும் வரை அவரது அரசியல், காமராஜ் அவர்களை சுற்றியே இருந்தது. 1967, 1971 தேர்தல்களில், சிவாஜி சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்தும் காங்கிரஸ் தோற்றது.
காமராஜ் மறைவுக்கு பிறகு ஸ்தாபன காங்கிரஸும், இந்திரா காங்கிரஸும் இணைந்தன. ஒன்றுபட்ட காங்கிரசில் தன் உழைப்பை சிவாஜி கொட்டினாலும், கோஷ்டி சகதியில் சிக்கி அவரும் அவரது ஆதரவாளர்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். டெல்லியில் மிக செல்வாக்கோடு வலம் வந்த மூப்பனார் சிவாஜியை ஓரங்கட்டுவதிலேயே குறியாக இருந்தார். இந்திராவுக்கும், சிவாஜிக்கும் நல்ல புரிதல் நெருக்கம் இருந்தாலும் தமிழக காங்கிரஸ் கோஷ்டி பூசலில் சிவாஜிக்கு நிவாரணமாக இந்திராவால் எதுவும் செய்ய முடியவில்லை. அதே சமயம்
சிவாஜிக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பொறுப்பு கொடுத்து கௌரவித்தார் இந்திரா.
1984 பிப்ரவரியில் தனது செல்வாக்கைக் காட்டுவதற்காக, ரசிகர்களின் மாநாட்டை சென்னையில் இரண்டு நாள் நடத்தினார் சிவாஜி. சிவாஜி ரசிகர்களின் ஆசை, அவரைத் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டுமென்பது. அந்த நோக்கத்திலேயே பலத்தைக் காட்டத் தீர்மானிக்கப்பட்டது. ‘முப்பதாண்டுக் காலம் உழைத்த எனக்கு சரியான மதிப்பு தரப்படவில்லை. எனக்கு பதவி தர வேண்டும் என்று கேட்பது தவறா?' என்று வேதனை, விரக்தியுடன் பேசினார் சிவாஜி. மாநாட்டில் ‘மாஸ்‘ காட்டியதால், தொடர்ந்து வந்த சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் சிவாஜி ஆட்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டன. இதன் விலை, ஏற்கனவே இருந்த கோஷ்டி பூசல் மேலும் தீவிரமாகியது. 1984 & 87 காலகட்டத்தில் இந்த மோதல் உச்ச கட்டத்தில் இருந்தது. காமராஜர், இந்திரா ஆகியோரின் மரணம் சிவாஜியின் அரசியலுக்கு பின்னடைவைக் கொடுத்தது. சிவாஜி மீது இருந்த அபிமானம் காரணமாக ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் காங்கிரஸில் இணைந்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
1987ல் எம்.ஜி.ஆரின் மறைவு, அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு ஆகியவை சிவாஜியின் அரசியல் பாதையை மாற்றின. அ.தி.மு.க. பிளவில், ஜானகி அணியை ஆதரிக்க வேண்டுமென்றார் சிவாஜி. ஆனால் காங்கிரஸ் தலைமை ஜெயலலிதாவை ஆதரித்தது. இந்தச் சூழலில் பிறந்தது தான் சிவாஜியின் ‘தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற தனிக் கட்சி. அந்த கட்சியின் அடிப்படை கட்டுமானம் என்பது சிவாஜி ரசிகர் மன்றங்கள் தான். ஜானகி அம்மையாரை சிவாஜி ஆதரிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்ற கேள்விக்கு பல விடைகள் இருக்கின்றன. அ.தி.மு.கவின் தனிப்பிரிவாக செயல்பட்டு வந்த ஜெயலலிதா திரைப்படத்துறையிலும், அரசியலிலும் மிக ஜூனியர். கலைஞருடன் நெருக்கமாக தனிப்பட்ட முறையில் இருந்தாலும், தி.மு.க.வை விட்டு விலகி நீண்ட தூரம் வந்தாகிவிட்டது. இதைவிட முக்கியமாக அமெரிக்காவிலிருந்து சிகிச்சைப் பெற்று திரும்பிய எம்.ஜி.ஆர் அவர்களை சிவாஜி ஒருநாள் தனிப்பட்ட முறையில் சந்தித்து நீண்ட நேரம் பேசியதும் கிசுகிசுக்கப் பட்டு வந்தது.
1989 ஜனவரியில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், சிவாஜியின் மணி விழாவை முன்னிட்டு, கட்சியின் பிரம்மாண்ட கூட்டம் மெரினா கடற்கரையில் நடந்தது. 175 இடங்களில் ஜானகி அணியும், 49 இடங்களில், தமிழக முன்னேற்ற முன்னணியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தான் போட்டியிட்ட திருவையாறு தொகுதி உட்பட தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்தார் சிவாஜி. சென்ற இடங்களில் கூட்டம் அள்ளியது. இந்த கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாலும் கண்ணியமான வெற்றியைப் பெறும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தன. கூட்டணி ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றது என்பதைத் தவிர, சிவாஜி அவர்களே திருவையாறு தொகுதியில், 10000த்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார் என்பது அரசியலைத் தாண்டி தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த தோல்வியின் தொடர்ச்சியாக, சிவாஜி துவக்கிய தமிழக முன்னேற்ற முன்னணி செயல்பாடுகள் தேக்கம் காண ஒரு கட்டத்தில் ஜனதா தளத்துடன் கட்சியை இணைத்து விட்டார் சிவாஜி.
‘சிவாஜி ஏன் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை?' என்ற கேள்விக்கு நிறைய பதில்கள் இருக்கின்றன. தி.மு.க.வில் இணைந்த எம்.ஜி.ஆர், கட்சிக்காகப் பாடுபட்டதுடன் தனது செல்வாக்கையும் வளர்த்துக் கொண்டார். பின்னர் தனிக் கட்சி துவங்கி வெற்றி பெற அது உதவியாக இருந்தது. சிவாஜி, ஸ்தாபன காங்கிரஸ், ஒன்றுபட்ட காங்கிரஸ் என்று கடுமையாக உழைப்பைக் கொடுத்தாலும் அந்த கட்சிகள் தமிழகத்தில் அதிகாரத்துக்கு வரமுடியவில்லை. கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர் என்பது உண்மை தான். ஆனால் இயற்கை பேரிடர், பாதுகாப்பு நிதி ஆகியவற்றுக்கு கணிசமாக உதவிய சிவாஜியின் பிம்பம் வேறு வகையாக கட்டமைக்கப்பட்டது. தனது அரசியல் வாழ்க்கையில் - குறிப்பாக காங்கிரஸ் - எதிர் கோஷ்டியினரால் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டார் சிவாஜி. ஜெயலலிதா - ஜானகி மோதலில், ஜானகியை ஆதரித்ததன் மூலம், பரந்துபட்ட தனது அரசியல் கட்சியின் நோக்கத்தை சின்ன வட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டார். அரசியல் அர்ப்பணிப்பு இருந்தாலும், அரசியலில் முழு ஈடுபாட்டுடன் அவரை இறங்க விடாமல், திரையுலகம் அவரை இழுத்துக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக நடிப்பில் அவரைக் கொண்டாடிய மக்கள், உரிய அரசியல் அங்கீகாரத்தைத் தரத் தயங்கினார்கள். எம்.ஜி.ஆரைத் தவிர தமிழகத்தில் தனிக் கட்சித் துவங்கிய பல நடிகர்கள் வெற்றி பெற முடியவில்லை என்பது வரலாறாக இருந்தாலும், செல்வாக்கு மிக்க சிவாஜி பளிச்சிட முடியாமல் போனது முக்கியமானது. இந்த நிலை சிவாஜிக்கே ஒரு புதிராகத் தான் இருந்தது.
தெற்கு உஸ்மான் சாலையில் அவரது அலுவலகம் அமைந்திருந்தது, நேரம் தவறாமல், சரியாகக் கூடிவிடுவார் சிவாஜி, ‘தலைவர் லேட்டாக வருவார்' என்று தொண்டர்களும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், சிவாஜியுடன் பழைய கதைகளைப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ‘காமராஜ், இந்திரா மரணம், காங்கிரஸ் கோஷ்டி பூசல் போன்றவை எனக்கு தடைக் கற்களாகப் போய்விட்டன. அரசியல் மூலம் ஒரு காசு சம்பாதித்ததில்லை. இழந்ததே அதிகம். சூழ்ச்சி, முதுகில் குத்துவது போன்ற அரசியல் களங்கள் எனக்கு தெரியாது. உண்மையாக, நேர்மையாக இருக்கிறேன். இது ஒரு வேளை அரசியல்வாதி என்ற பாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது' என்று சொல்லி பல நிமிடங்கள் அமைதி காத்தார் சிவாஜி.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நானும் அவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
செப்டம்பர், 2022