சிறப்புப்பக்கங்கள்

அர்ச்சனாவும் சுந்தரியும்

அய்யப்பன் மகாராஜன்

கை கூடும்போது தவறி உடைந்து நழுவுவது என்பது வாழ்க்கையின் கூறு தானே?. அதுபோன்ற கதை அம்சத்துடன் இரண்டு மலையாளப் படங்களைப் பார்க்க நேர்ந்தது.

‘இன்னமும் வாழ்வு மிச்சமிருக்கிறது' என்று தோற்றுக் கிடைத்த வலிக்குப் பிறகும் தன் இயல்போடு பயணிக்கும் சுந்தரி என்னும் பெண்ணின் கதை சுந்தரி கார்டென்ஸ்.

பள்ளிக்கூடத்தில் நூலகராக வேலைபார்க்கும் சுந்தரி ஏற்கெனவே குடும்ப வன்முறை காரணமாக மணமுறிவு பெற்றவள். குழந்தை பெற்றுக்கொள்ளும் உடல் கூறை இழந்தவள். அவள் புதியதாக வரும் ஆசிரியர் விக்டரை காதலிக்கிறாள். அவன் வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அதை உடைக்க விரும்பும் சுந்தரி அவனை அடைவதற்காக தன்னிலை மீறி ஒரு தவறினை செய்து விடுகிறாள்.

அதன் காரணமாக அவள் நினைத்த மாதிரியே விக்டர் தான் காதலித்துக் கொண்டிருக்கும் பெண் தான் அந்தத் தவறினை செய்ததாக நினைத்து அவளை விட்டு விலகி சுந்தரியை விரும்புகிறான். காதலுக்குப் பிறகு சுந்தரிதான் அந்தத் தவறினை செய்தவள் என்ற உண்மை அவனுக்குத் தெரியவருகிறது. அதை ஒரு துரோகமாக எண்ணி குற்றம் சாட்டும் விக்டர் சுந்தரியை விட்டுப் பிரிகிறான்.

வாழ்க்கை மீண்டும் ஒருதடவை இடறுகிறது. அம்மா இறக்கிறாள். சகோதரன் சொத்தை கேட்கிறான். ‘சுந்தரி கார்டென்ஸ்‘ என்னும் வீட்டின் பெயர்ப்பலகை மட்டும் தான் எஞ்சும் போல் இருக்கிறது. இரண்டாம் முறையாக வாழ்க்கையிடம் தோற்கும் சுந்தரி தன்னை மீட்க முனைகிறாள். பயணத்தை அதன் போக்கில் தொடர்கிறாள். அவளுக்கு மிச்சமிருக்கிறது வாழ்வு...

இந்தக் கதையை பலக் கோளாறுகளுடன் குறைபாடுகளுடன் எடுத்தும் கூட ரசிகர்களுக்குப் பிடித்திருப்பதில் ஓர் அதிசயம் இருக்கிறது. அது இதில் நடித்திருக்கும் அபர்ணா முரளி என்னும் நடிகை. துயரமாக எதுவுமே இல்லை என்பது போன்ற அவளது பாவனையின் நுட்பங்கள். வாழ்க்கை தொலைந்து விட்டதே என்பதற்காக கவலைப்படாமல் ஒரு முடி நரைத்து விட்டதற்காகவும் உடல் ஒரு சுற்று பருத்ததற்குமாகவும் கவலைப்பட்டு தன்னை தேற்றிக் கொள்ளும் கதாபாத்திரம்.

காதலனிடம் தான் செய்த தவறினை ஒப்புக் கொள்ளும் போதும் கூட, இனி அது சரியாவதற்கு வாய்ப்பு இல்லை என உணரும்போது அவர் காட்டும் காதலின் ஏக்கமும் உடைதலின் வலியும் நம்மால், பொது ரசிகர்களால் உணரக்கூடியது. அதற்குப் பின்னர் அவர் அடையும் தெளிவு, முதிர்ச்சியின் கனிவு கொண்டது.

இரண்டு காட்சிகளைக் கூறலாம். காதலன் விரும்பியதற்காக அவர் ‘செல்லோ' வாத்தியத்தினை இசைக்கும் தருணம். மேலும் அதனைக் காட்சிப் படுத்தியிருக்கும் வடிவம். மற்றும் நிறம். ஊதாரியாயிருக்கும் சகோதரன் சொத்தில் பங்கு கேட்கும்போது, அவன் அழித்து விடுவான் என மறுத்து விட்டு பின்பு ஒருகட்டத்தில் அவனை சந்தித்து ‘விற்று விடாதே!. குடும்பத்தோடு வாழக்கூடியவர்களுக்குத் தானே வீடு வேண்டும்‘ என்று சொல்லி ஈந்து விட்டு செல்லும் காட்சி என இதுபோன்று அபர்ணா நம்மை பலமுறை வசீகரணம் செய்கிறார்.

கூடுதலாக சொல்ல வேண்டியது ஒளிப்பதிவாளர் ஸ்வரூப் ஃபிலிப்பின் இசைமையான ஒளிப்பதிவு. இதை வைத்தே நம்மை ஏமாற்றி விட்டார்களோ என்று சொல்லும் அளவுக்கு படத்தினை ஒளிப்

பூச்சால் தாங்குகிறது. பிறகு அல்ஃபோன்ஸ் ஜோசப்பின் இசை. மொத்தம் ஏழு பாடல்கள். பின்னணியில் அது நம்மை அபர்ணாவோடு இணைக்கிறது. இயக்குநர் சார்லஸ் டேவிஸ். சார்லசிடம் கேட்க படம் பற்றிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. அவர் காட்சிப் போக்கின் மூலமும் வசனத்தின் மூலமும் அதனை மறைக்க முயல்கிறார்.

இரண்டாவது படம் அர்ச்சனா 31 நாட்அவுட் இருபத்தியெட்டு வயதான அர்ச்சனா தனியார் பள்ளிக்கூடத்தில் தற்காலிக பணி ஆசிரியையாக பணிபுரிகிறார். இவருக்கு எத்தனையோ வரன் பார்த்தும் ஒன்றும் அமையவில்லை. பெண் பார்க்க வருவதாக சொன்னால் வரமாட்டார்கள். வந்தால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வேண்டாம் என்று போய் விடுகிறார்கள். எப்படியாவது திருமணம் நடந்து விடாதா? என பெற்றோரும் அர்ச்சனாவும் காத்துக் கொண்டிருக்க, அவளது தற்காலிக வேலை பறிபோகிறது.

வேலை இருந்தபோதே பையன் கிடைக்கவில்லை, வேலையும் போய் இனி என்ன செய்வது என்ற நிறுத்தத்தில் நிற்கும் போது, முப்பத்தியோராவது முயற்சியின் பலனாக வெளிநாட்டில் ட்ராவல்ஸ் வைத்திருக்கும் ஒரு பையன் சம்மதிக்கிறான். நிச்சயமும் ஆகிறது. பையனும் பெண்ணும் அடிக்கடி ஃபோனில் பேசிக்கொள்கிறார்கள். வேலை போனது பற்றி பையனுக்கு வருத்தம் இல்லை. ஒருவரையொருவர் அறிந்து கொள்கிறார்கள். திருமண நாள் வருகிறது. முந்தைய நாள் கொண்டாட்டம் களை கட்டுகிறது. வந்திருப்பவர்களால் ஏதேனும் பிரச்னை வந்து விடுமோ என்கிற அளவிற்கு கும்மாளக் கூத்துகள். பதட்டம் ஏற்படுகிறது. பணமும் மதுவுமாக நேரம் கரைந்து ஓடுகிறது.

திடீரென ஓர் அதிர்ச்சியான செய்தி. மணமகன் தான் காதலித்த வேறு ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டான் இனி வர மாட்டான் என்பது. மணமகள் உடைந்து போகிறாள். வந்த மக்கள் கூட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், பெருசுகள், சிறுசுகள், என ஆளாளுக்கு பரபரப்பாக இருக்க, அர்ச்சனாவுக்கு இதற்கு மேல் என்ன செய்வது? என்ற பயம். பதட்டம். யாரிடம் சொல்வது? சொல்லி என்ன செய்வது? அதன் விளைவுகளை எப்படித் தாங்குவது? கடனை எப்படி அடைப்பது? இனி வேலைக்கு என்ன செய்வது? என ஒற்றை ஆளாய் நிலை குலைந்து நிற்கிறாள் அர்ச்சனா.

அர்ச்சனா என்ன செய்தாள்? என்பது தான் படத்தின் முடிவு. இயக்குநர் அகில்அனில்குமார். இவர் ஏற்கெனவே தான் எடுத்த குறும்படத்தினையே தான் மீண்டும் முழுநீள படமாக எடுத்திருக்கிறார். இந்தப்படமும் நம்பிக்கை தொலைந்து போதல் கதைதான். கொண்டாட்டம் கொண்டாட்டமாகவே முடியட்டும் என ஒரு பெண்ணாக அர்ச்சனா எடுக்கும் முடிவு  அசத்தலானது. ஆனால் பாராட்டு பெற்ற குறும்படம் நீளப்படமாக வளரும்போது வழியிலேயே தத்தளித்து விட்டது.

அதே சமயம் எதிர்பார்ப்பை தந்து கடைசி வரைக்கும் நம்மை அழைத்துச் செல்வது படத்தின் ஒரு சில கதாபாத்திரங்களும் அதில் நடித்த நடிகர்களும். அர்ச்சனாவாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நன்றாக நடித்திருக்கிறார். இனி இந்தத் திருமணம் நடக்காது என்று தெரிந்து அதிர்ச்சியில் இருக்கும்போது அது தெரியாத அர்ச்சனாவின் தந்தை அவளை தூங்கச் சொல்லும் காட்சி. இருவருக்குமே நடிப்பதற்கு நன்றாக அமைந்த காட்சி. பெரிய கட்டைகள் செய்யும் அட்டகாசங் கள் வாழ்வின் அட்சதைகள்.

இந்த்ரன்ஸ் நன்றாக நடித்தும் கூட கதையின் முடிவோடு இணைக்கப்பட்ட விதத்தின் காரணமாக அது ஒட்டாமல் போய் விடுகிறது. பொதுவாக மலையாளிகள் பெண்கதாபாத்திரங்களை வைத்து நல்லநல்ல படங்களை தரக்கூடியவர்கள். தற்போது சற்று ஓய்வை விரும்பி இருக்கிறார்கள் போல.

மார்ச், 2023