சிறப்புப்பக்கங்கள்

இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம்!

பேரா.கு.ஞானசம்பந்தன்

என்னுடைய தந்தையார் தான் எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். என்னுடைய மனைவி அமுதா சம்பந்தன் ஒருவகையில் உறவுக்காரப் பெண். நான் பி.எச்.டி., படித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு திருமணமாகிவிட்டது.

திருமணத்திற்குப் பிறகு என்னுடைய மனைவியை நானே படிக்க வைத்தேன். அவரும் எம்.பில். வரை படித்திருக்கிறார். நிறைய நிகழ்ச்சிகளுக்கு நான் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், அவர் வேலைக்கு செல்லவில்லை. குழந்தை வளர்ப்பு, குடும்பத்தை நிர்வகிப்பது போன்றவற்றைப் பார்த்துக் கொண்டார். இதுதவிர நான் எங்குச் சென்றாலும் அவரை அழைத்துச் சென்றுவிடுவேன். அப்படியொரு பழக்கம் எனக்குண்டு.

ஒருமுறை கமல்ஹாசன் அலுவலகத்திற்கு ப்ரிவியூ ஷோ பார்ப்பதற்கு ரஜினிகாந்த்  உள்ளிட்ட பலரும் வந்திருந்தார்கள். அப்போது கமல், ‘அவங்க வரவில்லையா' என என் மனைவியை விசாரித்தார். நான் உடனே சொன்னேன், ‘சந்நியாசம் போனாலும் குடும்பத்தோடுதான் போவேன்' என்றேன். அதைக் கேட்ட ரஜினி, உடனே வந்து என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘அது எப்படி' என ஆச்சரியமாக கேட்டார்.

மனைவி, பிள்ளைகள் என எல்லோரும் பழனிக்குப் பாதயாத்திரை போவோம். அதேமாதிரி தான், நான் எங்கு படப்பிடிப்பிற்குச் சென்றாலும் வெளிநாடு போனாலும் அமுதா கூட வருவார். தனிமை உணர்வே இருந்ததில்லை.

நான் நான்கு பேருடன் பிறந்தவன், அவர் மூன்று பேருடன் பிறந்தவர். எங்கள் வீட்டிற்கு பள்ளிக் கோடை விடுமுறையின் போது, உறவினர் பிள்ளைகள் என எல்லோரும் வருவார்கள். எப்போதும் எங்களிடம் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை. அவர்களும் இப்போது பெரியவர்களாகி,  திருமணம் செய்து கொண்டனர். நாங்கள் பேரன் பேத்திகளைப் பார்த்துவிட்டோம்.

குடும்பத்தில் சண்டையும், கருத்துவேறுபாடும் வரத்தான் செய்யும். நாம் எப்படியிருந்தாலும் எல்லாவிதமான மகிழ்ச்சியையும் இணையரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ‘இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும் இருவர்க்கும் பொதுவாக்கலாம்' என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் ஒன்று எழுதியிருப்பார். அதற்கு அர்த்தம் என்னவென்றால், இந்த உலகத்தில் இருக்கின்ற மகிழ்ச்சியான விஷயங்களை இருவருக்கும் பொதுவானது என முதலில் நினைக்க வேண்டும். கணவன் - மனைவி உறவில் புரிதலும், விட்டுக்கொடுத்தலும் முக்கியம் என்பேன். என்னுடைய 38 வருட திருமண வாழ்க்கையும் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.

குறை சொல்வதை தவிர்க்க வேண்டும்!

ஆகஸ்ட், 2022