சிறப்புப்பக்கங்கள்

இன்றுவரை தொடரும் முதல் நாளின் காதலுடன் இருப்பதுதான்

அ.வெண்ணிலா, கவிஞர்

ஆணுக்குப் பெண் மீதுள்ள பெருவிருப்பம், பெண்ணுக்கு ஆண் மீதுள்ள ஈர்ப்பு முதன்முறையாக குறையும் இடம் கணவன் - மனைவி உறவுக்குள்தான்.

வாழ்க்கை குறித்த அபூர்வ கனவுகளுடன், கற்பனைகளுடன் ஓர் அறைக்குள் அடைபடும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் நெருங்கி, முகர்ந்து, சுவைத்து, ரசித்து, ஒப்புக்கொடுத்து, சிறகுகளின்றி பறந்து, இணைவதின் பேரின்பத்திற்குள் திளைத்து, சுவாசத் தைச் சரிசெய்ய இடைவெளி விடும் கணத்தில் இருவரின் மனத்திற்குள்ளும் சமூகம் கற்பித்திருந்த பால்பாகுபாட்டின் நியமங்களெல்லாம் விசுவரூபம் எடுக்கும். இணைந்து பெறும் இன்பத்தின் கூட்டாளிகளாக இருந்தவர்கள் சமூகத்தின் ஆணாகவும் பெண்ணாகவும் மாறுகிறார்கள். முழுமையாக ஒப்புக்கொடுக்க, திருமண பந்தத்திற்குள் நுழைந்தவர்கள், திருமண பந்தத்தின் விதிகளை உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

பிறகென்ன? ஒருவரையொருவர் வீழ்த்த பார்க்கும் துவந்த யுத்தம்தான். இயல்பான குடும்பங்களிலேயே நாளொன்றுக்குச் சராசரியாக ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்ளும் தருணங்கள் நிச்சயம் இரண்டு, மூன்று கடந்து செல்லும். ஆழமான புரிதலின்மை கொண்ட ஆணோ, பெண்ணோ இருக்கும் இணைகளில் ஒவ்வொரு நிமிடமும் ஒருவரையொருவர் குத்திக் காயப்படுத்தும் தருணங்கள் நிச்சயம் உண்டு. இவையெல்லாமே சகஜம் என்று கடந்து செல்கிறவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்று சொல்ல முடியாது. நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதம் சொல்லலாம்.

கணவன்&மனைவி உறவில் சண்டையிட்டு நாள் முழுக்க, மாதம் முழுக்க, ஆயுள் முழுக்க கசந்திருக்க தயாராக இருக்கும் மனசு, ஒரே ஒரு கணம் ஒருவருக்காக ஒருவர் விட்டுக்கொடுக்க தயாராவதில்லை.

குடும்பம் என்பது, சமூகம் என்னும் அமைப்பின் சிறு அலகு. இந்தச் சின்னஞ்சிறு அலகுதான் வேராகச் சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. எனவே தான் சமூகம் மிகத் தீவிரமாக குடும்பத்தைக் கண்காணிக்கிறது. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை குடும்பத்தை ஜனநாயகப்படுத்துவது என்பதே சமூக விதிமீறல்தான். இறுகிய அதன் அறைக்குள் சாளரத்தைத் திறந்து வைக்கும் அத்துமீறல்.

இருபத்தைந்தாவது வருடத்தைத் தொட இருக்கிற எங்களுடைய திருமண வாழ்வின் முதல் முடிவே சமூக விதிமீறல்தான். இருவரின் இலக்கியப் போக்குகள் தனித்தனி. இருவரின் ரசனைகள் முற்றிலும் வேறானவை. நான் உணர்வெழுச்சிகளில் சஞ்சரிப்பவள். கணவர் முருகேஷுக்குத் திட்டமிட்ட சீரான நாள்கள். எனக்குக் கற்பனையும் புனைவுமான உலகம் தேவை ஒவ்வொரு கணமும். யதார்த்த உலகின் தெளிவான நபர் முருகேஷ். இருவரின் முரண்கள் வெறும் முரண்கள் மட்டுமே. அவற்றை அவரவரின் பலமாகவும், பலவீனமாகவும் எடுத்துக்கொள்வதில்லை நாங்கள். இருவருமே பொதுவாழ்வில் இயங்குவதில் எந்தக் கணத்திலும் அடுத்தவர் மீது தாக்குதல் நடத்துவதற்கான காரணங்கள் மிகுந்துவிடும். ஒருபோதும் அந்த ஆயுதத்தை நாங்கள் எடுக்காமல் இருப்பதின் காரணம், இன்று வரை முதல் நாளின் காதலுடன் இருப்பதுதான். காதல் தொடங்கிய நேரத்தைவிட, இப்போது அடுத்தவரின் சுயமரியாதையை, தனித்துவத்தைச் சேர்த்துக் காதலிக்கும் பொறுப்பும் கூடியிருப்பதில், வாழ்க்கை இனிமையாக இருக்கிறது.

பெண்களின்மீதான நடத்தை குறித்த தாக்குதல் எழுந்தால், உடனே குடும்பமும் கணவனும் பொங்கியெழுந்து கட்டுப்பாடுகள் எனும் சங்கிலியுடன் வந்துவிடுவார்கள். ‘எனக்கு உன்னைப் பத்தித் தெரியும், ஆனா ஊர்ல இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் விளக்க முடியாதே? நமக்கெதுக்கு இந்த வம்பு?' என்று நயமாகப் பேசி, சுதந்திரம் குலைப்பார்கள். முருகேஷுக்கு அப்படி நயமாகப் பேசத் தெரியாது என்பதே என் அதிர்ஷ்டம்.

ஆகஸ்ட், 2022