சிறப்புப்பக்கங்கள்

இரு படைப்புகள்

செங்கதிர்

நம்மை, நமது வாழ்வின் பாதையை, மனத்தின் விசாலத்தை, எண்ணங்களின் நுகரும் திறனை மாற்றுவதில், அதை பண்படுத்துவதில் மனிதர்கள் விரல் நீட்டலாம்; புத்தகங்கள் பக்கங்களை விரிக்கலாம்; நிகழ்ச்சிகள் மூடியிருக்கும் சாளரத்தை திறந்துவைக்கலாம். எனக்கோ அப்படி வாய்த்தது இரு புத்தகங்களில். ஜெயமோகனின் சில எழுத்துக்களைப் படித்து அவரின் வரிகள் பித்தேற்றியிருந்த காலம். அரூர் & சிறு நகரத்தின் தேனீர்க்கடையில் புரட்டிக்கொண்டிருந்த மாலைமுரசு நாளிதழில் இருந்து தெரியவந்தது தருமபுரியில் அன்று மாலையில் பாரதியைப் பற்றி ஜெயமோகன் பேசுகிறார் என. வடியாத பரவசத் தோடு டவுன் பஸ் ஏறி சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்து ஜெயமோகனைக் கேட்டதும், பார்த்ததும், பின் படிக்க நேர்ந்த ‘திசைகளின் நடுவே' சிறுகதைத் தொகுப்பும் என் சுயவரலாறு. அதேமாதிரி கல்லூரிப்படிப்பு நிமித்தமாக நாமக்கல்லில் இருந்து சென்னை போயிருந்தபோது, மின்சார ரயிலுக்காக

காத்திருக்கையில் வாசித்த சுகுமாரனின் ‘கோடைக்காலக் குறிப்புகள்' கவிதை தொகுப்பு. இந்த இரண்டு புத்தகங்களும், அதன் படைப்பு மனங்களும் எனக்குக் கொடுத்தது அநேகம். என் ஆளுமைமீது தேவையாயிருந்த சுயகௌரவம், அறிவுச் செயல்பாட்டின் மீதான கவர்ச்சி, கற்பனையின் நூதனக் கதவுகளின் திறப்பு, சுய அறம் சார்ந்த தெளிவு, வாழ்வின் மீதான தீவிரத்தன்மை, இளமையின் என் வறண்ட தெருக்களில் கசிந்த ஈரம், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை என சொல்லிக்கொண்டே போகலாம். அக்காலத்திற்கு பிறகு உலகின் மேலான படைப்பாளிகளின் ஆகச் சிறந்த படைப்புகளில் சிலதாவது படித்திருக்கிறேன். ஆனாலும், மீண்டும் மீண்டும் இந்த இரு படைப்புகளிடமும் அந்தப் படைப்பு மனங்களிடமும் போய்ச்சேருகிறேன். வாழ்வில்  எங்கு சென்றாலும் பிறந்த ஊரையும், வளர்ந்த தெருக்களையும் தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என ஒரு கூற்று உண்டு. எனக்கும் அப்படித்தான். எந்த படைப்பை படித்தாலும், நான் தேடுவது இந்த படைப்புகள் கொடுத்த எழுச்சியையும், வாசிப்பு அனுபவத்தையும்தான்.

ஜூலை, 2018.