சிறப்புப்பக்கங்கள்

உரைத்தவர்கள்

Staff Writer

கெட்டிஸ்பர்க் உரை

எண்பத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது தந்தையர்கள் இந்தக் கண்டத்தில் சுதந்திரத்தை மனதில் கொண்டும் எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்ற எண்ணத்துக்கு அர்ப்பணித்தும் ஒரு புதிய நாட்டை உருவாக்கினார்கள்.

அப்படி உருவாக்கப்பட்ட, அர்ப்பணிக்கப்பட்ட இந்த தேசமும் அல்லது எந்த தேசமும் நீண்ட காலம் நிலைபெற்றிருக்குமா என்று பரிசோதனை செய்யும் ஒரு பெரும் உள் நாட்டுப் போரில் நாம் இன்று ஈடுபட்டிருக்கிறோம். அந்தப் போரின் களத்துக்கு நாம் கொண்டு வரப்பட்டிருக்கிறோம். இந்த தேசம் வாழ்வதற்காகத் தமது உயிரைக் கொடுத்தவர்கள் இறுதியாக ஓய்வு கொள்வதற்காக இந்தப் போர்க்களத்தின் ஒரு பகுதி மண்ணை அர்ப்பணிப் பதற்காக இங்கே வந்திருக்கிறோம்.நாம் இதைச் செய்வதே பொருத்தமானதும் முறையானதும் ஆகும்.

ஆனால் விரிவான அர்த்தத்தில் நாம் இந்த மண்ணை வெறுமே அர்ப்பணிக்க முடியாது; புனிதப்படுத்தி விட முடியாது; தெய்வீகமாக்கி விடமுடியாது. உயிருடன் இருப்பவர்களோ அல்லது மரணமடைந்தவர்களோவான அந்த மாவீரர்கள் நமது அற்ப அதிகாரத்தை வலுப்படுத்தவோ அல்லது குறைக்கவோ தங்களது போராட்டத்தின் மூலம் முன்னரே இந்த மண்ணைப் புனிதப்படுத்தி விட்டார்கள். நாம் இங்கே என்ன சொல்கிறோம் என்பதை உலகம் கவனத்தில் கொள்ளாது அல்லது நீண்ட காலம் நினைவில் வைத்திராது. வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தான் போராடியவர்களின் முற்றுப் பெறாத பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் முன் நோக்கிச் செல்லவேண்டும். நம் முன்னால்தான் பெரும் பொறுப்பு இருக்கிறது. இங்கே நாம் கௌரவப்படுத்திய மரணமடைந்தவர்களின் பிரிவில் அவர்கள் தமது அர்ப்பணிப்பின் இறுதி அளவையும் முழுமையாகக் கொடுத்த நோக்கத்துக் காக நாம்தான் நமது அர்ப்பணிப்பை அதிகப்படுத்த வேண்டும். இறந்தவர்கள் வீணாக மரித்தார்கள் என்று ஆகிவிடாமல் நாம் தான் முனைப்புக் கொள்ள வேண்டும். கடவுளின் கீழே இந்த தேசம் ஒரு புதிய சுதந்திரத்தைப் பெற்றெடுக்க வேண்டும்; அதன் மூலமே மக்களுக்கான, மக்களுடைய, மக்களின் அரசு இந்த பூமியிலிருந்து அழிந்தொழியாமல் காப்பாற்றப்படும்.

-ஆப்ரஹாம் லிங்கனின் புகழ்பெற்ற  கெட்டிஸ்பர்கு உரை இது. இது வெறும் 272 சொற்கள்தான். மணிக்கணக்கில் முழங்கும் மகா பேச்சாளர்கள் கவனிக்கவும்.

ஜீவா

விஷயத்தை வண்டி வண்டியாகக் குவித்து சின்ன மூளைகளைக் குழப்பி வாதனைக்கு உள்ளாக்குவது பல பிரசங்கிகளுக்குப் பொழுது போக்கு. ஜீவா இதற்கு எதிரி. ஒரு சில கருத்துகள் விரிவாகச் சொல்லிப் புரியவைத்து விட்டால் போதும் என்பதே அவருடைய எண்ணம். வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல இரண்டு கைப்பிடி விஷயம்தான் எடுத்துக் கொள்வார்.மேடை மீது ஏறி அதற்கு நெருப்பு வைத்ததும் அதிலிருந்து வர்ண ஜாலங்கள் தோன்றும்; பச்சையும் சிவப்பும் மஞ்சளும் உதிரும். குடை குடையாய் இறங்கி வரும். மாலை மாலையாய் இறங்கி வரும். பேச்சுக் கலை அவருடைய காலடியில் விழுந்து கிடக்கும். சுந்தர ராமசாமி ... காற்றில் கலந்த பேரோசை பக் 39.

தமிழ் தெரிந்தவர் – பா.பாண்டியன்

பாரதி எழுதிய புதிய ருஷ்யா என்ற பாடலில் ஜார் புரட்சியைப் பற்றிப் பாடுகையில் ‘காடெல்லாம் விறகான சேதி போலே’ என்பார். இந்த வரியையும் ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன் என்ற வரியை இணைத்துப் பேச அவரை விட்டால் பாரதியில் தோய்ந்த வேறு யாரையும் நான் கண்டதில்லை. நெல்லைத் தமிழில் யாருக்கும் தொல்லை தராத எளிமையான நகைச்சுவைக்கு சொந்தக்காரர் அவர். முறையாகத் தமிழ் பயின்றவர். அலங்கார சொற்கள் இல்லாது எளிமையான தமிழில் அவர் பேச ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவர்தான் நெல்லைக் கண்ணன்! கம்பராமயணம் அவரது இன்னொரு சிறப்பு அம்சம்.

கிச்சுகிச்சு மூட்டுவதுபோல் இருக்கும் அவரது நகைச்சுவை! அதனுடன் நெல்லை வட்டார வழக்கும் சேர்கையில் அதுவொரு தனிச்சுவை தரும். அவரது ஆற்றொழுக்கான தமிழைக் கேட்கையில் அது எனக்கு திரு.வி.கவின் உரையை ஞாபகப் படுத்தும். கற்றவர்களுக்கே சினம் காக்க இயலாது. கண்ணனும் அப்படியே. நடுவராக வீற்றிருக்கும் மேடைகளில் பேசுவோர் பிழையாகப் பேசினால் அவை நாகரிகம் பார்க்காமல் கடிந்து கொள்வதிலும் நெல்லைக் கண்ணன் நிமிர்ந்து நிற்பார். அவருக்கு அந்த தகுதியும் இருக்கிறது. ஏனெனில் இன்றைக்கு வாழும் பேச்சாளர்களில் ‘தமிழ்’ தெரிந்த சிலரில் அவரும் ஒருவர் அல்லவா?

ரசிகமணி

ரசிகமணியிடம் ஒரு ரஸசுவாரஸ்யம் உண்டு.

சிவப்பழங்கள் வந்தால் திருவாசகப் பாடல். திருமண் இட்டுக்கொண்டு வந்தால் திவ்யப்பிரபந்தம். கதர்ஜிப்பாவானால் பாரதியின் பாடல்களிலிருந்து. ஈவேராமசாமிப் பெரியார் வந்தால் திருக்குறள்! யார் யாருக்கு எது பிடிக்குமோ அதிலுள்ள தேர்ந்த பாடல்களை அவர் சொல்லுவதற்கு இன்னொரு காரணம் அவர்கள் அதில் ஈடுபாடு கொண்டு நன்றாக அனுபவிப்பார்கள் என்பதுவும். நாட்டுப்பாடல்கள், முக்கூடற்பள்ளு, குற்றாலக்குறவஞ்சி, மலரும் மாலையும், முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி, சங்கப் பாடல்கள், திருமூலர் இப்படி நிறைய்ய. ஆனாலும் கம்பர்தான் டி.கே.சிக்கு மாஸ்டர் பீஸ். கம்பரைச் சொல்லும்போது அவரது முகம் தனிச்சுடர் விடும்.

-கி.ராஜநாராயணன், அன்னப்பறவை என்ற நூலில்.

கலித்தொகையும் பட்டுக்கோட்டையும் : பா.பாண்டியன்

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக லால்குடியில் திருத்தவத்துறை அறநெறிக்கழகம் என்னும் பெயரால் ஓர் இலக்கிய ஆய்வு மன்றம் இயங்கி வந்தது. திங்களொருமுறை இலக்கியக் கூட்டமும் கோடை மாதங்களில் மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆண்டுவிழாவுமாக இலக்கிய ஆர்வலர்களுக்கு செவி அமுதம் நல்கிய கழகம் அது.

 அங்குதான் நடுவயதைத் தொட்டிராத ஓர் இளைஞர் மாலை அமர்வில் பேசத் தொடங்கினார். பழகு தமிழில், இலகு தமிழில் அவர் பேசிக்கொண்டே போனார். ஐங்குறுநூறில் வரும் கலிழ்ந்த கண்ணள் என்ற தொடரை வைத்து அவர் தந்த விளக்கம் மிக அற்புதம். கலிழ்ந்த கண்ணள் என்றால் கண்ணீரால் நிறைந்த கண்களை உடைய பெண். கலித்தொகையில் ‘கண்பனி கலுழ்பவால்’ என்றொரு காதல் காட்சிக்கு அடுத்து வந்தார். காதலனுடன் இரவில் வீட்டை விட்டுச் செல்லும் காதலியின் கண்கள் கலுழ்ந்தனவாம். வீட்டு வாசலில் இருந்த ‘தேய்புரிப் பழங்கயிற்றை’ அதாவது ஆயர் வீட்டில் இருக்கும் தயிர் கடையும் மத்தைச் சுழற்றும் கயிறு தேய்ந்திருக்கிறதாம். அதன் தலைமுறைகள் தொடர்ந்த மாட்சியை விளக்கினார் அந்த இளைஞர். இந்த இலக்கியங்களுடன் விட்டாரா அவர்? திரைப்பாடல்களுக்கு வந்து ‘கண்களைத்’ தேடினார். தங்கப்பதுமை என்ற படத்தில் பட்டுக்கோட்டையார் எழுதிய ‘கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலை காண நாணும்’ என்ற பாடலை எங்களுக்கு விளக்கினார். பெண்ணின் கண்கள் நீரால் நிரம்பியிருக்கும் காட்சிகளை இப்படி வரிசைப் படுத்திய அவர், கண்ணீர்த் துளி மலராக, அம்மலர்களைத் தொடுக்கும் நாராக கற்பு உருவகப்படுத்தப் பட்டிருக்கும் நுட்பத்தையும் தொட்டார்.

அது அதே படத்தில் பட்டுக்கோட்டையாரின் பாடல்: ‘ கண்ணில் உதிரும் மலரெடுத்துக் கற்பு நாரில் சரம் தொடுத்த’ என்ற பாடல். மக்கள் கவிஞரின் உருவகத்தை ஐங்குறுநூறு, கலித்தொகை என்று எங்களுக்குக் காட்டிய அந்த இளம் பேச்சாளர் யாரென்று நினைக்கிறீர்கள்? சாலமன் பாப்பையா!

ஆகஸ்ட், 2013.